Home » சிறுகதைகள் » தாய் மனம்!!!
தாய் மனம்!!!

தாய் மனம்!!!

அம்மா அழைத்தாள் என்பதற்காக, திருவிழாவிற்கு ஏன்தான் வந்தோமோ என்றாகி விட்டது வசந்திக்கு.

`சென்னையிலிருந்து வந்திருந்த தங்கை புவனா விடம் தான் அம்மா அதிக பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறாள். எங்கே தன்னை கவனிக்காமல் விட்டால் மனம் வேதனைப்படுவாளே என்று அவ்வப்போது பாசமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள்’

உள்ளுக்குள் புழுங்கினாள் வசந்தி.

கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து வசந்தி, புவனா இருவரையும் நன்றாக படிக்க வைத்து, வசந்தியை அருகிலிருக்கும் ஈரோட்டிற்கும், புவனாவை சென்னைக்கும் மாப்பிள்ளைகளை பார்த்து மணமுடித்து விட்டிருந்தாள் அம்மா.

ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா என்பதால், இருவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள். மனைவிகளை அழைத்து வந்து ஒரு நாள் தங்கியிருந்து விருந்து சாப்பிட்டு விட்டு, மருமகன்கள் இருவரும் தங்களது வேலைகளை கவனிக்க கிளம்பி விட்டார்கள். மேலும் இரண்டு நாள் தங்கிவிட்டு வருவதாக இவர்கள் கூறிவிட்டனர். குழந்தைகளும் கூடவே இருந்து விட்டார்கள்.

வசந்தி குடும்பம் நடுத்தரமானது. அவள் கணவர் தனியார் மில்லில் வேலை பார்க்கிறார். சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை ஓட்டி வரும் நிலை. ஆண் குழந்தை, பெண் குழந்தை என இரண்டு வாரிசுகள்.

புவனாவின் குடும்பம் வசதிக்கு பஞ்சமில்லை. இவள் கணவருக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. கை நிறைய சம்பளம். ஒரு பெண் குழந்தை மட்டும்.

திருவிழாவிற்கென முதலில் வருகை தந்தவள் வசந்தி தான். வந்ததுமே, `இன்னும் புவனா வரலையாம்மா?’ எனக்கேட்டு அவள் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவள் தான்..

புவனா குடும்பத்தோடு வந்ததும் நலம் விசாரிப்பதில் தொடங்கி, பழைய நினைவுகளைப்பேசி என பொழுது நன்றாகதான் கழிந்தது. ஆனால், அம்மாவின் பாசத்தில் ஓரவஞ்சனை இருப்பதாக நேற்றிலிருந்து தான் உணர்ந்தாள் வசந்தி.

`புவனா.. நல்லா சாப்பிடும்மா… ரொம்பவும் இளைச்சுப்போயிட்டே?’

`இல்லம்மா.. நார்மலா தான் இருக்கேன்.. ரொம்பநாள் பார்க்காமல் இருந்ததால் உனக்கு அப்படி தெரியுது’

தன்னைக் கேட்கவில்லையே என மனதுக்குள் சஞ்சலமானாள் வசந்தி. அவளைப்புரிந்து கொண்டது போல், `என்னம்மா வசந்தி.. நீயும் கூட இளைச்ச மாதிரி தான் தெரியறே..’ எனக்கேட்டாள் அம்மா.

`எனக்கென்ன.. நல்லா தான் இருக்கேன்’ என்றாள் வெடுக்கென. `அவள் வசதியாக இருக்கிறாள் என்பதற்காக முதலில் அவளைக் கேட்டு விட்டு, ஒப்புக்கு சப்பாணியாக என்னையும் கேட்கிறாள்’ என நினைத்துக் கொண்டாள்..

`இந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைக்க, கொஞ்சம் ஒத்தாசை பண்ணு வசந்தி.

`வேலை செய்ய மட்டும் நான்.. அவளும் வந்து பாத்திரம் கழுவினால் தேய்ஞ்சா போயிடுவாள்’ அம்மாவிடம் சொல்ல வாய் எழவில்லை மனப்புழுக்கம் அதிகரித்தது.

இதுபோல சின்னச்சின்ன செய்கைகள் வசந்தி மனதில் புகைச்சலை அதிகப்படுத்தியது.

`வசதி இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லாவிட்டால் ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்ளும் அம்மாவை புரிந்து கொண்டாயிற்று. இனி இங்கிருந்து என்ன செய்யப்போகிறோம்… கேட்டால், அவள் எப்போதாவது வருபவள்.. நீ அடிக்கடி வந்து போறவள்னு நியாயம் பேசுவாள்… ஏன் கேட்டு வருத்தப்பட செய்வானேன்…அவளையே கொஞ்சட்டும். நாம் கிளம்புவோம்’ என்றெண்ணியவள் தாயிடம் கூறினாள்.

`அம்மா.. இன்னைக்கு மதியம் ஊருக்கு கிளம்பறேன்’

`என்ன அவசரம் வசந்தி.. மாப்பிள்ளையே இன்னும் நாலைஞ்சு நாள் இருந்துட்டு வாங்கன்னு சொல்லிட்டாரே.. அதுக்குள்ள கிளம்பாட்டி என்ன?’

`அவர் அப்படித்தாம்மா சொல்வாரு.. அங்கே தனியா இருந்து ரொம்பவும் சிரமப்படுவார்.. வீட்ல நான் இல்லைன்னா சரியா சாப்பிடவே மாட்டார்.. போதாதற்கு, தைக்கிறதுக்குனு வாங்கி வச்ச துணிகள் நிறைய சேர்ந்து கிடக்கு.. வர்றேம்மா… புவனா ஊருக்கு கிளம்பும் போது அப்படியே வீட்டுக்கு வந்துட்டு போ..’

`இருக்கா.. அம்மா நாளைக்கு கறி எடுக்கிறாங்களாம்.. சாப்பிட்டு ஒண்ணாவே கிளம்பலாம்..’

`இல்ல புவனா.. நீ சாப்பிடு.. நீ சாப்பிட்டா, நான் சாப்பிட்ட மாதிரி’ என சிரித்துக்கொண்டே தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு விடைபெற்றாள் வசந்தி.

வெளித்தோற்றத்தில் தான் சிரித்தாளே தவிர, உள்ளுக்குள் பொருமல் இருந்தது.

“அக்காவை கண்டுக்காமல், அம்மா என்னை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கும்போதே நினைச்சேங்க.. அம்மா எதையோ எதிர்பார்க்கிறாள்னு…” போனில் கணவனிடம் கூறினாள் புவனா..

`என்ன கேட்டாங்க?’

`முன்ன மாதிரி சமையல் வேலை இல்லையாம்.. கஷ்டமா இருக்குதுன்னு புலம்பினாங்க.. அதனால, வச்சுக்கம்மான்னு சொல்லி ஐயாயிரம் ரூபாயை கையில் குடுத்துட்டு வந்தேன்.. இதுக்கு தான் அக்கா நைசா முதல்நாளே கிளம்பிட்டா போலிருக்கு..’

`பரவாயில்லை விடு புவனா.. அம்மாவுக்கு கொடுக்கிறதுல தப்பில்லை.. உங்கக்கா வீட்டுக்கு போகலையா?’

`நீங்க இல்லாம நான் மட்டும் போனா மரியாதையா இருக்காதுங்க.. அதனால, இன்னொரு நாள் குடும்பத்தோட வர்றேன்னு போன் பண்ணி சொல்லிட்டேன்..’…

இந்தா வசந்தி.. இதுல ஐயாயிரம் ரூபாய் இருக்கு.. இப்ப நீ கஷ்டத்துல இருக்கிறே.. வச்சுக்க’ என வசந்தியிடம் கொடுத்தாள் அம்மா.

`ஏதும்மா?’

`நான் கஷ்டத்துல இருக்கேன்னு சொல்லி புவனா கிட்டே வாங்கினேன் வசந்தி.. உன்னை சரியா கண்டுக்கவே இல்லைன்னு வருத்தப்பட்டிருப்பே தானே.. அடிக்கடி உன்னை நேர்ல பார்த்து நலம் விசாரிக்க முடியும்மா.. ஆனா, அவளை எப்பவாவது விசேஷம்னா தானே பார்க்க முடியும்.. தவிர, பக்கத்துல இருக்கிறதால தான் அக்கா மேல பாசம் காட்டறாங்கன்னு அவள் மனசுல தப்பான எண்ணம் வந்துடக்கூடாது பாரு.. பொதுவா ரெண்டு பேர் கிட்டேயும் ஒரே மாதிரி தான் அன்பு காட்டினேன்.. நீ தான் மனசுக்குள்ளே சலனத்தை ஏற்படுத்திக்கிட்டு வெறுப்போட வந்துட்டே.. உன் கஷ்டம் தெரிஞ்சு தான் எனக்காக பணம் கேட்டேன்.. தங்கச்சி கிட்டே கஷ்டம்னு சொல்லி நீ கேட்டா கவுரவக் குறைச்சல் ஆகும் வசந்தி.. ஆனா, மக கிட்டே தாய் கேட்கறதிலே கவுரவம் குறைஞ்சிடாது..’

தாயை புரிந்து கொண்டவளாக, `என்னை மன்னிச்சுடும்மா.. நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்’ என்றாள் வசந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top