Home » சிறுகதைகள் » மகேந்திர பல்லவர்!!!
மகேந்திர பல்லவர்!!!

மகேந்திர பல்லவர்!!!

திருக்குறள் கதைகள்:

காஞ்சியை நோக்கித் தனது பெரும் படையுடன் போரிட வந்த புலிகேசி மன்னர், தனது பகைவரான மகேந்திர பல்லவரின் செய்கையைக் கண்டு வியப்புற்றார். வீரத்தில் சிறந்த மகேந்திரர் தன்னுடன் நேருக்கு நேர் மோதுவார் என்று எண்ணியதற்கு மாறாக, பல்லவச் சக்கரவர்த்தி கோட்டைக் கதவுளை மூடிவிட்டு உள்ளே பதுங்கிக் கொண்டது வியப்பை அளித்தது. மகேந்திரரின் செய்கை அவரது புதல்வரான நரசிம்மருக்கும் வியப்பை அளித்தது.
 
அவர் தனது தந்தையை நோக்கி, “தந்தையே! பகைவனுடன் நேருக்கு நேர் மோதாமல் கோட்டைக்குள் பதுங்கியிருப்பது கோழைத்தனம் இல்லையா?” என்று கேட்டான்.
 
இதைக் கேட்ட மகேந்திரர் தன் மகனை நோக்கி, “மகனே! இது கோழைத்தனம் அல்ல… இது ராஜதந்திரம்! புலிகேசியின் படையெடுப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில் போர் என்பதே கிடையாது. இசையிலும், நடனத்திலும், இறைபக்தியிலும் பொழுதைக் கழித்த நான், படைகளைப் போருக்குத் தயாரான நிலையில் வைத்திருக்கவில்லை.
 
இந்த நிலையில் போருக்குச் சென்றால், நாம் தோற்பது உறுதி. வீரம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை மாய்க்க நான் விரும்பவில்லை. நீ நினைப்பது போல் நாம் பதுங்கியிருக்கவில்லை. போருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நமக்கு உதவி செய்ய சோழ மன்னரையும், இலங்கை மன்னரையும் படைகள் அனுப்புமாறு ஓலை அனுப்பியுள்ளேன்.
 
அவர்களுடைய பல்லாயிரக்கணக்கான வீரர்கள் வந்து சேரும் வரையில், நாம் கோட்டைக்குள் பதுங்கியிருக்க வேண்டும். நமது பகைவன் நமது நோக்கத்தை அறிந்து கொள்ளாமல், அவனிடமுள்ள பயத்தால் நாம் பதுங்கியிருப்பதாக நினைத்துக் கொள்வான். ஆனால், நமக்கு வெளியிடங்களிலிருந்து படை பலம் கிடைக்கும் வரையிலும், நம்முடைய படைகளைத் தயார் செய்து கொள்ளும் வரையிலும், நாம் செயலற்றிருப்பதுபோல் நடிப்போம். தகுந்த நேரம் வந்தவுடன் அவர்களுடன் நேருக்கு நேர் மோதுவோம்!” என்றார்.
 
மகேந்திர பல்லவர் கூறியது போல், அவருடைய நோக்கத்தை அறியாமல் பல மாதங்கள் காஞ்சியை புலிகேசி மன்னர் முற்றுகையிட்டார்.

இறுதியில் மகேந்திரரின் ராஜதந்திரத்தில் சிக்கி, தன் முயற்சியில் தோற்று மகேந்திர பல்லவருடன் சமாதானம் செய்து கொள்ள நேரிட்டது.

காதலக் காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்

 
விளக்கம்: “தனது நோக்கத்தைப் பகைவர் அறிந்துகொள்ளாமல் செயற்படுபவரிடம் பகைவரின் சூழ்ச்சிகள் பலிக்காது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top