Home » சிறுகதைகள் » நீதி தவறிய மன்னன்!!!
நீதி தவறிய மன்னன்!!!

நீதி தவறிய மன்னன்!!!

திருக்குறள் கதைகள்:

மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும்ம் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், “அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன். தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அவள் மீது எங்கிருந்தோ வந்த அம்பு தைத்து உயிரிழந்து விட்டாள். எங்களுக்கு எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான். அவன் தான் என் மனைவியைக் கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும்” என்றான்.

ஆனால் அந்த வேடனோ, “அரசே, நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை” என கதறினான். கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள் மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

“வேடனே, நீ வேறு விலங்குக்கு குறி வைத்து தவறுதலாக இந்தப் பெண் மீது பட்டிருக்கலாம் அல்லவா?” எனக் கேட்டான். ஆனால், அப்போது தானும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாக வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான்.

இந்த சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின், வெளியூர் சென்றிருந்த முதலமைச்சர் ராஜவர்மனைச் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அவரிடம் விவாதித்தான். அந்தப் பெண்ணின் மீது தைத்த அம்பினைப் பார்த்த முதலமைச்சர், “அரசே, இந்த அம்பினை கவனித்தீர்களா…துருப்பிடித்திருக்கிறது. வேடர்கள் துருப்பிடித்த அம்பைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பெண் உறங்கிய மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு தற்செயலாக அந்தப் பெண் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே தோன்றுகிறது” என்றார்.

இதைக் கேட்டுப் பதறிய மன்னன், தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தான்.

இதற்கான திருக்குறள் சான்று:

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

விளக்கம்: தன் உடலிலிருந்து ஒரு ரோமம் உதிர்ந்தாலும் உயிர் துறக்கும் கவரிமானைப் போல, தன் பெயருக்கு இழுக்கு நேர்ந்தால் சான்றோர்கள் தன்னுயிரையே மாய்த்துக் கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top