Home » பொது » சர்வதேச மகளிர் தினம்!!!
சர்வதேச மகளிர் தினம்!!!

சர்வதேச மகளிர் தினம்!!!

மகளிர் தின வரலாறு

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள்? வரலாற்றைப் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன! மார்ச் 8-ஆம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாளுக்குப் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் முதலிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடியதைக் குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சுப் புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டிப் போராடினார்கள்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள உற்சாகம் கரைபுரள, கோஷங்கள் வானைப் பிளக்க, அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரெனக் கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான்.

கோரிக்கைகளைக் கண்டிப்பாகப் பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களைச் சமாதானப்படுத்தினான்.அது இயலாமல் போகவே, அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவியது. அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்! தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட, ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் நாளாகும்! அந்த மார்ச் 8-ஆம் நாள்தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

1909-இல் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியால் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28-இல் கொண்டாடப்பட்டது. அதன்பின் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது. 1910-இல் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கூடிப் பெண்கள் தினத்தைச் சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்பின் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1911 மார்ச் 19-இல் முதல் சர்வதேசப் பெண்கள் தினம் இலட்சக்கணக்கானப் பெண்கள் அணிவகுத்த பேரணியால் அமர்க்களப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 140 பெண்கள் வேலைக்குச் சென்ற இடத்தில் கருகி இறந்தனர். இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் அமெரிக்காவில் இயற்றப்பட்டன.

1917-இல் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் பலியானார்கள். அந்தச் சமயத்தில் ரொட்டிக்காகவும், அமைதிக்காகவும் பெண்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பெண்கள் தினத்தன்று பெண்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர்படி அது பிப்ரவரி 23. ஆனால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8-ஆம் நாள். ஆகவேதான் மார்ச் 8-இல் பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.. ஐ.நா.-வும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் சமத்துவக் கோரிக்கைகளுக்காகவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

1945-இல் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி, பெண்களுக்குச் சம உரிமை என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேசக் கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், லட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உழைத்தது.

1975-ஆம் ஆண்டை சர்வதேசப் பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

1977-இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் சர்வதேசப் பெண்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் நலன் குறித்துச் சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில், உள்ளன்போடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.

சர்வதேச அளவில் பெண்களுக்கான இயக்கங்கள் வளரத் தொடங்கின. பெண்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை சட்ட நடவடிக்கைகள், பொதுக்கருத்து உருவாக்குதல், சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி, ஆராய்ச்சி நான்கு வழிகளில் வழிகாட்டி, முயற்சியும் செய்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும் அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் என்றும் பெண்களே இவ்வுலகின் கண்கள் எனவும் முண்டாசுக் கவிஞன் பாரதி முழங்கினான். இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும்! சில செய்திகள்!

இந்தியாவில் பெண்களின் நிலை:

வேத காலத்தில் பெண்கள் மெத்தப் படித்தவர்களாகவும், தங்கள் கணவன்மார்களுக்கு சரிசமமாக எல்லா விஷயத்திலும் மேன்மையாக வாழ்ந்து வந்ததாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். கார்கி, மைத்ரேயி போன்ற பெண் அறிவாளிகளைப் பற்றி உபநிடதம், ரிக் வேதமும் பேசுகின்றன.

ஆனால் பிற்காலத்தில் பெண்களின் நிலை சரியத் தொடங்கியது. சதி (கணவன் உயிர் துறந்த பின் பெண்ணும் அவனுடன் தீக் குளிக்கும் வழக்கம்) குழந்தை திருமணங்கள் பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்பது போன்ற சமுதாயச் சடங்குகள் பெண்களுக்கு எதிராக இருந்தன.

மிகவும் சிறிய வயதில் நடந்த திருமணங்களில் பெண் வயதுக்கு வரும் முன்பே கணவன் உயிர் துறக்க நேரிட்ட சந்தர்ப்பங்களில் அந்தப் பெண்கள் ஆயுள் முழுவதும் விதவை பட்டத்துடன் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு வாழ நேர்ந்தது. மறுமணம் என்பது அவர்களால் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தாராலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக கருதப்பட்டது. பெற்றோர் ஆதரவிலோ அவர்களது மறைவுக்குப் பின் கூடப் பிறந்தவர்களின் நிழலிலோ அவர்களது குடும்பங்களின் சம்பளமில்லா வேலைக்காரிகளாக இந்தப் பெண்கள் வாழ நேர்ந்தது.

கோவில்களில் நாட்டியமாடும் பெண்கள் தேவதாசி என்றழைக்கப்பட்டனர். நாட்டியக்கலையை வளர்த்ததில் இவர்களது பங்கு மிக முக்கியமானது.  கடவுளுக்கே என்று தாங்களாகவே ‘பொட்டு’ கட்டிக் கொள்ளும் இவர்கள் ‘நித்ய சுமங்கலி’ என்று அழைக்கப்பட்டனர். கடவுளுக்கு தாசிகளாக இருந்து, கோவிலின் வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தனர். கோவில்களின் வருமானம் குறையக் குறைய  இவர்களது நிலையும் சிறிது சிறிதாக மாறி மனிதர்களின் – குறிப்பாக பணம் படைத்த ஆண்களின் – ஆசை நாயகிகளாக மாறும் அவல நிலைக்கு ஆளாகினர். இதனால் சமுதாயத்தில் எந்தவித உயர்ந்த மரியாதையும் இவர்களுக்கு மட்டுமில்லை இவர்களது வாரிசுகளுக்கும் கிடைக்கவில்லை. உயர்ந்த நிலையில் இருந்த இவர்கள் விலைமாது என்கிற பட்டத்தை சுமக்க வேண்டியதாயிற்று.

இந்தியப் பெண்களின் இன்றைய நிலை:

சர்வதேச மகளிர் தினத்தை  (மார்ச் 8, 2013) கொண்டாடும்  நாம் இந்தியப் பெண்களின் இன்றைய நிலையைச் சற்று ஆராயலாம்.

வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் என்பதற்கு இந்திய நாட்டை உதாரணமாகச் சொல்வார்கள். பெண்களின் நிலையும் இந்தியாவில் முரண்பாடுகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டிருக்கும். இன்னொரு புறத்தில் ஏதோ ஒரு வெளிநாட்டில் அழகிப் போட்டிக்காக நம் பெண்கள் நீச்சல் உடையில் போட்டி போட்டுக் கொண்டு  வரிசையில் நின்று சிரித்துக்(!) கொண்டிருப்பார்கள்!

ஒரு பெண் பிரதமர், ஒரு பெண் ஜனாதிபதி, ஒரு பெண் சபாநாயகர், பல பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள்   என்று உலகம் பெருமைப்பட சொல்லிக் கொண்டாலும் பெண்களின் நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பசுமையானதாக இல்லை.

பால்ய விவாகங்கள் நடந்து, பால்ய விதவைகளும் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். வரதட்சணை கொடுமைகள், மரியாதை கொலைகள் என்று எல்லாமே பெண்களின் வாழ்வைத்தான் சூறையாடும் மேற்கண்ட கொடுமைகளை வாய்மூடி பார்க்கும் இந்திய சமூகம், நடிகைகள் தங்களுக்குக் கிடைத்த வாழ்வை முறித்துக் கொண்டு வருவதைப் பார்த்து ‘உச்’ கொட்டும்! இவர்களது பலமுறை மணங்களை செய்தித்தாள்கள் முதல் பக்கத்தில் போட்டு தங்கள் விற்பனையை உயர்த்திக் கொள்ளும்.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் பலர் சமுதாயத்தின் தீ நாக்குகளுக்குப் பயந்து கொண்டு தங்கள் துயரங்களை, அவமானங்களை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்து மன அமைதியை தொலைத்துவிட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆளும் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களும், நீதி மன்றங்களும் வாய்மூடி மௌனம் காப்பார்கள்.

மற்ற நாடுகளில் பெண்களின் நிலை என்ன?

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பெண்கள் முன்னேறியிருப்பது போலத் தோன்றினாலும் இது மிகவும் சிறுபான்மை தான். மூன்றாவது உலகம் என்று சொல்லப்படும் நாடுகளில் பெண்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது.

பெரும்பான்மையான பெண்கள் தங்களது தினசரி வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகவே அதிகப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு ‘பெண்கள் சுதந்திரம், பாலியல் விடுதலை’ என்பது புரியாத, அவர்களுக்கு சம்மந்தப்படாத ஒன்றாகவே இருக்கிறது. இன்னும் பல பெண்களுக்கு ‘கள்’ ளானாலும் கணவன், ‘ஃபுல்’ லானாலும் புருஷன் என்கிற நிலைதான்.

1975 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் அடித்தட்டுப் பெண்களுக்கும், மேல்வர்க்க பெண்களுக்கும் இடையே பூதாகாரமான இடைவெளி இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியது. இந்த அடித்தட்டுப் பெண்களில் பெரும்பாலோர் எழுத்தறிவு இல்லாமலும், போஷாக்கு குறைந்தவர்களாகவும், வளர்ச்சியடையாத கிராமப் பகுதிகளில் இருப்பவர்களாகவும், ஏழைமையிலும், உடல்நலக் குறைவிலும் சிக்கித் தவிப்பவர்களாகவும்  இருக்கிறார்கள்.

பெண் குழந்தை தங்களுக்கு கடன் சுமையை அதிகரிக்கப் பிறந்திருப்பதாகவும், ஆண் குழந்தை தங்களை காப்பாற்றுவான் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். உணவு, ஆரோக்கியம், படிப்பு என்று எல்லா விஷயத்திலும் இவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அடிப்படை உரிமை என்பதுகூட இல்லாமல் பெற்றோர் காட்டும் ஒருவனை மணந்து வாழ்க்கை முழுவதும் அல்லல் படுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையிலும்கூட வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, ஸ்ரீலங்கா முதலிய நாடுகளில் பொறுப்பான அரசியல் பொறுப்புகளை பெண்கள் ஏற்று நடத்தி வருவது ஒரு நல்ல அறிகுறியாகவே தெரிகிறது. இதனால் பெண்கள் சுதந்திரம் என்பது ஒரு மேற்கத்திய மந்திரச்சொல்லாக மட்டுமில்லாமல் வளர்ந்துவரும் நாடுகளிலும் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

2013 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கான உரிமையை உறுதிப் படுத்தவும், உலகெங்கும் உள்ள பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றவும் ஐக்கிய நாடுகள் சபை ‘ஒன் வுமன்’ (One Woman) என்ற ஒரு பாடலை மகளிர் தினத்தன்று வெளியிட இருக்கிறது.

சீனாவிலிருந்து கோஸ்டா ரிக்கா வரையிலும், மாலியிலிருந்து மலேசியா வரையிலும் இருக்கும் புகழ் பெற்ற பாடகர்கள், இசை வித்தகர்கள், பெண்கள், ஆண்கள் எல்லோரும் சேர்ந்து தங்களது ஒற்றுமை, ஐக்கியத்தை பற்றிய ஒரு செய்தியை அறிவிக்க இருக்கிறார்கள்: அந்தச் செய்தி தான் : நாங்கள் எல்லோரும் ஒருவரே என்று சொல்லும் ‘ஒன் வுமன்’ பாடல்.

‘பெண்களுக்கெதிரான கொடுமைகளை கண்டு அயர்ந்து போகாமல் எதிர்த்து நின்று பிரகாசிப்போம்’ என்பதுதான் இந்த வருட மகளிர் தினத்தில் பெண்கள் இந்த உலகத்திற்கு தெரிவிக்கும்  செய்தி.

* உலகில் உள்ள ஏறத்தாழ 3 கோடி அகதிகளில் 80 முதல் 85 சதவித்தினர் பெண்கள்.

* தினமும் பிரசவத்தின் போது 1,600 பெண்கள் மரணமடைகிறார்கள்.

* ஸ்வீடன், கனடா, நார்வே, அமெரிக்கா, பின்லாந்துப் பெண்கள் ஆயுள், கல்வி, வருமானம் முதலியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

* பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடுகளில் முதன்மை பெறுவது நியூசிலாந்து. 1893-ஆம் ஆண்டிலிருந்து அங்கு பெண்கள் ஓட்டளித்து வருகிறார்கள்.

* இதுவரை உலகில் 28 பெண்களே நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தியுள்ளனர். சர்வதேச நாடாளுமன்றங்களில் இதுவரை 14.1 சதவீதத்துக்கு மேல் பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

* ஸ்வீடனில் 1995-இல் அமைச்சரவையில் பெண்கள் சமவிகிதத்தில் இடம் பெற்றனர். அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் எதிர்கொள்ளும் சவால்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்!
உலகெங்கும் உள்ள பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top