Home » படித்ததில் பிடித்தது » நன்றி கூறுவது!!!
நன்றி கூறுவது!!!

நன்றி கூறுவது!!!

01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும்.

02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம்.

03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள்.

04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.

05. ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.

06. நமக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு தந்தவனுக்கு பெரிதாக நன்றி கூறுகிறோம், ஆனால் இந்த வாழ்க்கையை நமக்கு தந்த இறைவனுக்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

07. நன்றியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் இறைவன் மேலும் மேலும் வெகுமதியளித்து உதவுகிறான்.

08. கடவுளின் எல்லையற்ற அன்புக்கு நன்றி கூறுவோம். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். கடவுள் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

09. கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும் : அ. உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம். ஆ. நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய். இ. உன் உதவி எனக்கு தேவை. ஈ. நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்.

10. நன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம்.

11. மக்கள் எப்போதுமே அரசை குறை சொல்வார்கள் அவர்கள் அரசால் அனுபவிக்கும் இலவசக்கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல காரியங்களுக்காக அரசுக்கு நன்றி கூறுவதில்லை.

12. வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.

13. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.

14. நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன்,நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.

15. ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் லிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட் சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.

16. நண்பர்கள் இருக்கும்வரை எவரும் பயனில்லாதவர் ஆகிவிடுவதில்லை.

17. பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.

18. நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.

19. மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள். முகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.

20. தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.

21. கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

22. பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள்.தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

23. மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.

24. ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.

25. கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top