Home » சிறுகதைகள் » என்னுயிர் நீதானே!!!
என்னுயிர் நீதானே!!!

என்னுயிர் நீதானே!!!

”சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!” என்றான் அவன்.

சாமி இளமை தொலையாத முகத்துடன், கருமை மறையாத தாடியுடன், சாந்தம் தவழும் கண்களுடன் அவனை, ‘சொல் குழந்தாய்!’ என்பது போல் பார்த் தார்.

”என் பேரு கோபால். ஊர் மதுரைப் பக்கம் ஒரு கிராமம். ஊர்ல எங்க குடும்பமும் எங்க மாமன் குடும்பமும்தான் பெரிய குடும்பங்கள். எல்லாரும் ஒண்ணுமண்ணா இருப்போம்!

என் மாமனுக்கு வித்யா பொறந்தப்ப முதல்ல அந்தப் பேச்சு விளையாட்டாதான் ஆரம்பிச்சது. ஆனா, கொஞ்ச நாள்ல அதையே ரெண்டு குடும்பங்களும் தீர்மானமா எடுத்துக்கிட்டாங்க. கல்யாண வயசு வந்ததும் வித்யாவுக்கு என்னைக் கல்யாணம் கட்டி வெச்சுப்புடணும்னு முடிவு எடுத் தாங்க. அவங்க ஊட்டுன ஆசையில நான் சின்ன வயசுல இருந்தே ‘வித்யா எனக்குத்தான்’கிற நினைப்போடவே வளர்ந்தேன்.

வாலிப வயசுல வித்யா பைத்தியம் முத்தி என் உயிர், உலகம் எல்லாமே வித்யாதான் இருந்தா. ஆனா, ஒரு கை மட்டும் தட்டுனா ஓசை வருமா?வித்யா வுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதுல இருந்தே என்கிட்ட ஓர் இடைவெளியோடுதான்நடந்துக் கிட்டா. அது எனக்குப் புரியாத அளவுக்கு வெறித்தனமா அவளை நேசிச்சுட்டு இருந்தேன். நான் எங்கப்பா மாதிரி மை கறுப்பு இல்லேன்னாலும் கொஞ்சம் கறுப்புதான். வித்யாவோ அப்பதான் பூத்த செம்பருத்தி மொட்டு கணக்கா எளஞ்சிவப்பு. எங்க கிராமம் அதோட ஆயுசுக்கும் வித்யா மாதிரி ஒரு அழகியைச் சுமந்திருக்காது.

அழகு ஒரு காரணம்… ரெண்டாவது படிப்பு. நான் ஆறாம் கிளாஸ் ஃபெயில். வித்யா டவுன் காலேஜுக்கு எல்லாம் போய் படிச்சது. கல்யாணப் பேச்சு எடுத் தப்போ, வித்யா ஒரே வரியில் என்னைக் கல்யாணம் கட்டிக்க இஷ்டமில்லைன்னு சொல்லிருச்சு.

அதைக் கேட்டுக்கிட்டு நான் எப்படி உயிரோடு இருந்தேன்னு இப்ப வரைக்கும் தெரியலை. அவளுக்கு அவங்க வீட்டுல நல்லா படிச்ச, சிவப்பா, அழகா ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்களாம்.

அவ கல்யாணம் அன்னிக்குக் கிளம்பி இலக்கில்லாம எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு, கடைசியா இந்த ஊர்ல செட்டில் ஆயிட்டேன். இத்தனை வருஷம் பொழைச்ச என்பொழைப்புக்கு ஏதாவது அர்த்தம் இருக்குதா சாமி?”

சாமி நிதானமாகக் கேட்டார், ”அது கிடக் கட்டும்… மணியஞ்சோலை கிராமத்து ரங்கசாமி, பாக்கியம் தம்பதியோட மகன்தானே நீ?”

சாமியின் ஞான தீர்க்கத்தை எண்ணி கோபால் புல்லரித்துவிட்டான்.

”சா… சாமி என் ஊரும் அப்பா, அம்மா பேரும் உங்களுக்கு எப்படி சாமி தெரியும்?”

”உன் மாமன் மகள் வித்யாவைக் கல்யா ணம் பண்ண அதிர்ஷ்டக்கட்டை நான்தான். அந்த ராங்கிக்காரிகூட மனுஷன் வாழ முடியாதுப்பா. அதான், நான் சாமியாராயிட்டேன்! நீயாவது நிம்மதியா இரு!” என்று கூறிவிட்டு கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் ‘சாமி’கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top