Home » சிறுகதைகள் » பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!!!
பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!!!

பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!!!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க தேசத்திற்குச் சென்று மிகப்பிரபலமடைந்து பெரும் புகழையும் பெற்றார்.

1896 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுவாமிஜி உரை நிகழ்த்தினார்.

இந்த சொற்பொழிவு அநேகரின் பாராட்டுதல்களைப் பெற்றது பல்கலைக் கழக மாணவர்களுக்கு சுவாமிஜியை மிகவும் பிடித்துப் போயிற்று.

கீழைத் தத்துவத் துறை தலைமைப் பதவியை சுவாமிஜிக்கு அளிக்க இப்பல்கலைக்கழகம் முன் வந்தது இது மிகவும் அபூர்வமான விஷயம். நூற்றாண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் உடைய ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இத்தகைய பதவி பெறுவதென்பது சாமான்யமானதல்ல.

ஆனால் சுவாமிஜியோ, நான் ஒரு துறவி துறவி பட்டமோ பதவியோ பெறுவது அழகல்ல என்று கூறி பல்கலைக் கழகத்தின் வேண்டுகோளை மறுத்து விட்டார்.

நாகரீகம் என்பது நன்னடத்தையில்

அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகர வீதியில் சுவாமி விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார் கையிலே ஒரு தடியுடன் உடலின் மீது ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சுவாமிஜி சென்றார்.

அப்போது எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி சுவாமிஜியின் தோற்றத்தைக் கண்டு மிகவும் சிரித்ததோடு மட்டுமின்றி கேலியாகவும் பேசினார்.

சிறிதாவது கோபம் வரட்டுமே சுவாமிஜிக்கு ஊஹும் புன்முறுவல் தவழும் முகத்துடன் அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை.

நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது என்று அப்பெண்ணிடம் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றார். தமது சொந்த மண்ணின் மீது சுவாமிஜிக்குத்தான் எத்துணை மதிப்பு!

என் உடல் புலிக்கு உணவாகட்டும்!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். இவ்விதம் அவர் நாலரை ஆண்டுகள் இருந்தார்.

அந்நாள்களில் பொதுவாக அவர் பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் உணவையே உட்கொண்டார். இந்த நிலையில் ஒருநாள் அவர், எனக்கு ஏழைகள் உணவு தருகிறார்கள். அந்த ஏழைகளுக்கு என்னால் என்ன நன்மை?

அவர்கள் எனக்குத் தரும் ஒரு பிடி அரிசியை மீதம் பிடித்தால், அது அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவாகுமே! அதெல்லாம் போகட்டும், நான் இந்த என் உடலைக் காப்பாற்றி என்ன ஆகப் போகிறது?

எனவே இனிமேல் நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்துகொண்டார். அந்த எண்ணம் அவரிடம் தீவிரமடைந்தது.

எனவே அவர், ஏதாவது ஒரு காட்டிற்குள் சென்று, உணவு எதுவும் உட்கொள்ளாமல் தவம் செய்தபடியே இறந்துவிடுவது! என்று தீர்மானித்தார். இந்த எண்ணத்துடன் அவர் ஒரு காட்டிற்குள் சென்றார்.

அங்குக் காட்டில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார். மாலை வேளை வந்தபோது, மயக்க நிலையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இறைவனைத் தியானம் செய்ய ஆரம்பித்தார்.

அவரது தியானம் சிறிது கலைந்தபோது… ஆகா… அதோ தெரியும் இரண்டு நெருப்புத் துண்டுகள்… ஆம்! அவை… சந்தேகமேயில்லை! ஒரு புலியின் கண்கள்தாம்! அதோ, அந்தக் கண்கள் அவரை நோக்கி நெருங்கி நெருங்கி வந்தன; இதோ அருகில் வந்துவிட்டன! விவேகானந்தரின் உடலும் சரி, உள்ளமும் சரி – இம்மிகூட அசையவில்லை.

அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்த அந்தப் புலியும், ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டது.

புலியை அன்புடன் நோக்கினார் விவேகானந்தர்:

சரிதான். என்னைப்போல் இந்தப் புலியும் இப்போது பசியோடு இருக்கிறது போலும்! இருவரும் பட்டினியாக இருக்கிறோம்.

இந்த என் உடலால் உலகத்திற்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்று எனக்குத் தோன்றவில்லை.

இந்த புலிக்காவது என் உடல் உணவாகப் பயன்படும் என்றால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டார்.

இந்த எண்ணத்துடன் அவர் அமைதியாக, அசைவின்றி மரத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டார்.

கண்களை மூடி அவர், இதோ! இப்போது புலி என்மீது பாயப் போகிறது! என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.

ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயவில்லை. அதனால் அவருக்குச் சற்று சந்தேகம் எழுந்தது.

கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை, அது அங்கிருந்து சென்றுவிட்டிருந்தது. அப்போது அவர், ஆகா! இறைவன் என்னை எப்படியெல்லாம் பாதுகாத்து வருகிறார்! என்று மனம் உருகி நினைத்துப் பார்த்தார்.

அன்றைய இரவை விவேகானந்தர் காட்டிலேயே தியானத்தில் கழித்தார். பொழுது விடிந்தது. முந்தின நாளின் களைப்பு, சிரமம் எவையும் அவர் உடலில் இல்லை. உடலும் மனமும் புதிய ஓர் ஆற்றலைப் பெற்றதுபோல் இருந்தன. அவர் மேற்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top