Home » படித்ததில் பிடித்தது » வரலாற்றுத் துணுக்குகள்!!!
வரலாற்றுத் துணுக்குகள்!!!

வரலாற்றுத் துணுக்குகள்!!!

பூமியை உருண்டையாகப் பார்த்த முதல் மனிதன்

பூமி உருண்டை என்பதை முதன்முதலாகப் பார்த்த மனிதன் ரஷ்யாவின் யூரிகாகரின்தான். இவர்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர். விண்வெளியில் இருந்து பூமியையும் அதன் உருண்டை வடிவத்தையும் முதன்முதலாகப் பார்த்த பெருமை இவரையே சாரும்.

20 நிமிடத்தில் நான்கு செய்தித்தாள்

அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் எப்.கென்னடி தினமும் 20 நிமிடங்கள் மட்டுமே செய்தித்தாள்கள் படிக்க ஒதுக்கி வந்தார். இந்த குறுகிய நேரத்திற்குள் அவர் நான்கு செய்தித்தாள்களை படித்துவிடுவார் என்பது ஆச்சரியமான செய்தி.

தோல் தொழிற்சாலை தலைமை செயலகமாக மாறிய விந்தை

விஜயநகர நாயக்க மன்னர்களின் கடைசி மன்னரான சந்திரகிரி மன்னரிடம், ஆங்கிலேயர் ஆட்டுத்தோலை பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு இடம் கேட்டு வாங்கினார். அந்த இடத்தில் பின்னாளில் புனித ஜார்ஜ்கோட்டையான தற்போதைய தலைமைச் செயலகம் அமைந்துள்ளது.

மன்னர்களின் அடையாளப்பூ

பண்டைய தமிழ் மன்ன‌ர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு அடையாளமாக சின்னங்களும், பூக்களும் வைத்திருந்தனர். சேர மன்னன் வில் அம்பு சின்னத்தையும், பனம் பூவையும், சோழ மன்னன் புலிச் சின்னத்தையும், அத்திப்பூவையும், பாண்டி மன்னன் மீன் சின்னத்தையும், வேப்பம்பூவையும் அடையாளமாக வைத்திருந்தனர்.

2கோடி ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அபூர்வ பவுர்ணமி

உலகின் மிகச் சிறந்த அதிசயங்களில் ஒன்று கி.பி.1866 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவுர்ணமியன்று முழு நிலவு இல்லை; குறைந்தும் இல்லை.அன்று சந்திரக்கிரகணமும் இல்லை. இதே போன்ற நிலை இரண்டு கோடி வருடங்களுக்குப் பிறகுதான் ஏற்படும் என வானவியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

உலகில் தோன்றிய முதல் வலைத்தளம்

ஜஸ்டின் ஹால் (Justin Hall) தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாளராக அறியப்படுகிறார். ஜனவரி 1994ல் தொடங்கப்பட்ட இவரின் http://www.links.net/ தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாகும்.

 

உலகில் தோன்றிய முதல் தேடுபொறி

இன்று தேடுபொறி (search engine) என்றாலே உடனே அனைவரின் எண்ணங்களிலும் பதிலாய் வருவது கூகுள்தான் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு பரவிக்கிடக்கிறது இதன் புகழ். ஆனால் நம்மில் எத்ததனை பேருக்கு உலகத்தில் முதன் முதலில் இணையத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் தேடுபொறி (search engine) பற்றித் தெரியும் !?  ஏப்ரல் 20, 1994ல் தொடங்கப்பட்ட  www.webcrawler.com தான் இணையத்தின் முதல் தேடுபொறியாகும் (search engine). யாஹீவும் (Yahoo), கூகுளும் (Google) இதற்கு பின்னால் வந்தவையே.

அரசியின் கோடை கால அரண்மனை

இந்தியாவிலேயே முதன்முதலாக 1950 ஏப்ரல் 15 இல் மதுரையில் ஜவஹர்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்டது மதுரை காந்தி மியூசியம். மியூசியம் அமைந்த பிரமாண்ட கட்டிடம் மதுரை அரசி ராணி மங்கம்மாள் கோடை கால அரண்மனை.

காந்தி சர்வ சமயப்பிரார்த்தனை செய்யச் சொல்லுவார். வழிபாட்டிற்காக கோயிலுக்குள் செல்லமாட்டார். ஆனால் மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் வந்திருக்கிறார். மதுரையில்தான் அவர் அரை ஆடை உடுத்தும் தீர்மானத்தைக் கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேசம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தான் நடந்தது. காந்தி மியூசியத்தில் மகாத்மா பயன்படுத்திய உண்மையான 14 பொருட்கள் மற்றும் அவர் குண்டடிபட்டு விழுந்தபோது அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த மேலங்கியும் இன்னும் பல பொருட்களும் உள்ளன. விடுதலைப் போராட்ட சித்திரங்கள், புகைப்படங்கள், ஆஸ்ரமம் மற்றும் அஸ்தியைக் கொண்ட மாதிரி நினைவிடங்கள் உள்ளன. 24 ஆயிரம் கடிதப் பிரதிகளைக் கொண்ட நூலகமும் காந்தி மியூசியத்தில் உள்ளன.

இந்தியாவின் நீண்ட வாக்குப்பதிவு

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள சுபான்சிரி மாவட்டத்தில் உள்ள சைரோ தொகுதியில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 31 மணிநேர வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. 2003 ஏப்ரல் 2ம்நாள் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மறுநாள் மதியம் 2 மணிக்குத்தான் முடிவடைந்தது. இந்தியாவின் நீண்ட வாக்குப்பதிவு இதுதான்.

கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல்

 உலகிற்கு முதன் முதலாக தண்டனை சட்டங்களை அறிமுகப்படுத்திய பெருமை மெசபடோமிய மன்னர் ஹாமுராபியைத் தான் சேரும்.

கி.மு.1764-ல் அரியணையில் அமர்ந்த போது இவர் கொண்டு வந்த சட்டங்கள் இன்றைக்கும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.இவரது சட்டப்படி ஒருவரை யாராவது அடித்தால் அடித்தவருக்கு அபராதம் உண்டு.அதுவே வி.ஐ.பி என்றால் அபராதம் அதிகமாகும்.
பெண்ணை  கற்பழித்தல்,கடத்துதல்,குழந்தைகளோடு உடலுறவு கொள்ளுதல்,போர்க்களத்தில் பயந்து ஓடுதல்,திருட்டு,வழிப்பறிக் கொள்ளை,லஞ்ச ஊழல்,இவற்றுக்கெல்லாம் நம்ம தலைவர் கொடுத்தது மரண தண்டனை.இது தவிர,பாபிலோனியர்கள் பீர் பிரியர்கள்.பீர் குடிப்பது அவர்களின் முக்கியமான சம்பிரதாயம்.அதனால் பீர் தயாரிப்பாளர்கள் தரமான பீரை தயாரிக்க வேண்டும்.தரம் குறைந்த பீர் தயாரித்தாலும் மரண தண்டனை அளிக்கப்பட்டது.
இப்போதும்  உலக நாடுகள் அதிகம் பயன்படுத்தும் ‘கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல்’ என்ற சித்தாந்தம் இவர் கொண்டு வந்ததுதான்.
இதன்படி பெற்றோரை கை நீட்டி மகன் அடித்தால்,அடித்த இடத்திலேயே திருப்பி அடிப்பது தான் அவனுக்கான தண்டனை.
ஒருவரை ஓங்கிக் குத்தி அவர் பல் உடைந்தால்,பதிலுக்கு குத்தியவரின் பல் உடைக்கப்பட்டது.அலட்சியமாக ஆபரேஷன் செய்து நோயாளி இறந்து போனால் டாக்டரின் விரல்கள் வெட்டப்பட்டன.அன்றாட வாழ்க்கை தொடர்பான சட்டங்களும் அப்போது நடைமுறையில் இருந்தன.வீடு கொள்ளையடிக்கப்பட்டு குறித்த காலம் கடந்த பின்பும் காவலர்கள் திருடர்களைப் பிடிக்காவிட்டால் காவலர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.திருடப்பட்ட தொகையை அரசாங்கமே பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும்.
மனித இனம் தோன்றி வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சட்டங்கள் அனைத்தும் 1900-ல் அகழ்வாராய்ச்சியின்  மூலம் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த கால கல்வெட்டு இப்போது பிரான்சின் உலகப்புகழ் பெற்ற லூவர் மியூசியத்தில் உள்ளது.

தாத்தாவின் கழுதை வண்டி

ஆஸ்கார் ஒயில்டு ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவன் எழுந்து கிண்டலாக, “உங்கள் தாத்தா ஒரு கழுதை வண்டியை ஓட்டியவர் என்பது ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டான். அதற்கு அவர் அமைதியாக, “என் தாத்தாவின் வண்டி தொலைந்துவிட்டது. கழுதை மட்டும் உயிரோடு இருப்பதை இப்பொழுதுதான் கண்டு கொண்டேன்” என்று பதில் சொன்னாராம்

வாழ்க ஹிட்லர்

ஹிட்லர் ஒருசமயம் மனநல மருத்துவமனை ஒன்றைப் பார்வையிடச் சென்றார். அப்போது ‘வாழ்க ஹிட்லர்’ என்று மனநோயாளிகள் கோஷம் எழுப்பினர். ஒரேயொருவர் மட்டும் அமைதியாக இருந்தார்.

ஹிட்லர் கோபமாக அவரிடம், ‘நீ மட்டும் ஏன் வாழ்க என்று கூறவில்லை’ என்று கேட்டார்.

அதற்கு அமைதியாக “நான் நோயாளி இல்லை, நான்தான் இங்கு டாக்டர்” என்று பதிலளித்தாராம்.

சார்லி சாப்ளினும் தபால் தலையும்

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஒரு முறை உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர் ‘நாக்கை நீட்டுங்கள்’ என்றார். சாப்ளின் நாக்கை நீட்டினார். “நாக்கின் நிறம் மாறி விட்டதே” என்று பதறிய டாக்டர், நாக்கை கூர்ந்து கவனித்து விட்டு, “பத்து செண்ட் தபால் தலை அல்லவா நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.” என்றார் நிதானமாக. “டாக்டர் சார்! இத்தனை நேரம் அதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். கண்டுபிடித்து தந்ததற்கு ரொம்ப நன்றி” என்று சாவாதானமாகக் கூறிய சாப்ளின் அந்த அஞ்சல் தலையை எடுத்து மேஜை மேல் இருந்த கவரில் ஒட்டத் தொடங்கினார்

ஜீன்ஸின் கதை

இன்று புழக்கத்தில் உள்ள உடையான ஜீன்ஸின் கதை தெரியுமா உங்களுக்கு? 1873 ஆம் ஆண்டுகளிலேயே ஜீன்ஸ் தைக்கும் துணி கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. அதனை லெவிஸ்டிராஸ் என்கின்ற ஜெர்மானியர் கண்டுபிடித்தார். கண்டு பிடித்த இடம் அமெரிக்கா. இந்த ஜீன்ஸ் துணி பிரான்ஸ் நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியை கொண்டு ‘செர்க் டெனிம்’ என்கின்ற முரட்டு துணி தயாரிக்கப்பட்டது. அதுவே ஜீன்ஸ் உடை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. இன்று யாரை கேட்டாலும் ஜீன்ஸ் உடை டெனிம் என்கின்ற முரட்டு துணியை கொண்டு தயாரிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். இந்த டெனிம் என்கின்ற பெயர் செர்க் டெனிம் என்கின்ற பெயரின் பின் பகுதியிலிருந்து வந்ததுதான். ஆரம்பத்தில் அமெரிக்காவில் டெனிம் துணியில் தைக்கப்பட்ட உடையை காவலர்கள் மட்டுமே அணிந்து வந்தனர். 1940 வாக்கில்தான் உலகம் முழுதும் இவ்வுடையை உற்று நோக்க ஆரம்பித்தினர். பெரும் புகழ் அடைந்து எல்லோரும் அணிய ஆரம்பித்தது 1980களில்தான்.

லிங்கனின் தேர்தல் பிரச்சாரம்

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிங்கன். ஆரம்பத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒரு பாதிரியார் போட்டியிட்டார்.

அந்த பாதிரியார் பேசிய கூட்டத்திற்கு லிங்கனும் போயிருந்தார். பாதிரியார் பேச்சின் இடையே, ‘உங்களில் எத்தனை பேர்கள் சொர்க்கத்திற்குப் போகப் போகிறீர்கள்? கையைத் தூக்குங்கள்!” என்று கூறினார். கூட்டத்தில் இருந்த எல்லோரும் கையைத் தூக்கினார்கள். லிங்கன் மட்டும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதைக் கவனித்த பாதிரியார். ‘என்ன லிங்கன், நீங்கள் சொர்க்கத்திற்கு போகவில்லையா?” என்று கேலியாகக் கேட்டார்.

லிங்கன் சொன்னார்: “நான் சட்டசபைக்கு போகப் போகிறேன்” என்று

 

நானும் படிக்காதவன்தான் 
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு முறை தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சிற்றுண்டி சாப்பிட ஆசைப்பட்டார். சர்வரிடம் இருந்து மெனு கார்டை வாங்கிவர், அதைப் படிக்க தான் பயன்படுத்தும் மூக்குக்கண்ணாடியைத் தேடினார். ஆனால் அது எங்கும் கிடைக்காமல் போக கண்ணாடி இல்லாமலேயே படிக்க முயன்றார். முடியவில்லை. கடைசியில் சர்வரிடமே கொடுத்து, “இந்தா நீயே படி” என்றார் ஐன்ஸ்டீன். அதற்கு சர்வர், “மன்னிக்க வேண்டும். நான்கூட தங்களைப்போல படிக்காதவன்” என்றாரே பார்க்கலாம்.

நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம், ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புக்கள் உள்ளன.

இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம் இழந்த காலத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது.

முன்னேற்றத்துக்கு சந்தர்ப்பம் வரும் என்று காத்திருப்பதில் அர்த்தம் இல்லை, சந்தர்ப்பங்களை நாம் தான் உருவாக்கி முன்னேற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top