Home » படித்ததில் பிடித்தது » தமிழ் எண்கள்!!!
தமிழ் எண்கள்!!!

தமிழ் எண்கள்!!!

தமிழ் எண்களானவை தமிழ் மொழியின் எண் குறிகளும், அவற்றின் பயன்பாடுகளும், அளவை முறைகளுமான பரந்ததான ஒரு எண் வழக்காகும். தமிழ் எண்கள், தமிழுக்கு தனித்துவமானவை. பெரும்பாலும் தமிழ் எழுத்துக்களை ஒத்துள்ள தமிழ் எண் குறியீடுகள் தற்போது பயன்படுத்தப்படாமல், தமிழ் எழுத்துக்களோடு இந்தோ அராபிய எண் குறியீடுகளே பயன்படுகின்றன.

தமிழ் எண்களின் சிறப்பான அம்சம் என்னவென்றால் அந்த எண் முறைகள் பயன்படுத்கப்பட்ட காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்க முடியாத பின்ன அளவுகளுக்கும், பேரெண்களுக்குமேல்லாம் பெயர்கள் இருந்திருக்கின்றன.

உதாரணமாக பலகாலமாக பயன்பட்டுவரும் ‘இம்மி’ என்கிற சொல்லின் கருத்து 10,75,200 இல் ஒரு பங்காகும்.(சில இடங்களில் 21,50,400 இல் ஒரு பங்கு என குறிப்பிடப்படுகிறது.) ‘இம்மியளவுகூட இடைவெளி இல்லை’ என்றெல்லாம் படித்திருப்பீர்கள்.

இவ்வளவு நுண்ணிய அளவுகளெல்லாம் அளக்கும் வசதிகள் இல்லாத காலமது. அத்துடன் சங்கம் (1015)போன்ற பெரிய எண்களுக்கும் அப்போது தேவைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் எவ்வாறு? எதற்காக?

தமிழ் இலக்கியங்களை படித்தீர்களானால் ஒன்று புரியும். எதையுமே மிகைப்படுத்துவது, மீ…..மிகைப்படுத்துவது தமிழ் மக்களுக்கு பன்னெடுங்காலமாகவே இருந்துவரும் பழக்கம். இன்றுவரை நமக்கு அந்தப் பழக்கம் தொடர்வது தெரிந்ததே. நாற்பது யானைகளை கொன்று வாளேர் ஏந்தி வென்றிருப்பான் மன்னன்.

ஆனால் அரசவைக்கவி ஓராயிரம் யானை கொன்றார் என்று பரணி பாடுவார். அவ்வாறே மன்னனின் படையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை, மன்னனின் செல்வம், மனைவிகளின் எண்ணிக்கை போன்றவற்றை மிகைப்படுத்தி காட்ட கற்பனையில் கண்டுபிடித்த எங்களாகவே இவை இருந்திருக்க முடியும். தற்போது நாம் காலத்தோடு ஒத்து மில்லியன் பில்லியன் போன்ற SI எண் குறியீடுகளை பயன்படுத்தினாலும், நம் மொழியில் இந்த எண்களுக்கெல்லாம் எப்போதோ பெயர் வைத்தாகிவிட்டது என்பதற்காகப் பெருமைப்படலாம்.

உண்மையில் தமிழ் எண்கள் ஒரு முறைமையான எண் முறை அல்ல என்பது உங்களுக்கு ஏமாற்றமளிக்கலாம். இது எண்களுக்குரிய சொற்களின் குறியீடு மட்டுமே. அதாவது ஆயிரம் என்கிற சொல்லின் குறியீடு ‘௲’ என்பதாக இருக்கும்.

அவ்வளவே. மற்றபடி இடம் சார்ந்த பெறுமானத்தை கொடுக்கிற (தசம எண்கள் போல) முறைமை இல்லை. ஆனால் தற்காலத்தில் தசம முறையில் தமிழ் எண்கள் எழுதப்படுகின்றன. அதற்காகவே சுழியமானது (௦) தமிழில் பயன்படுத்தபடத் தொடங்கியது. முதன் முதலில் 1825 இல் கணித தீபிகை என்கிற நூலில் இவ்வாறான முறை அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டது. ஆகவே தற்போது ‘௧’ முதல் ‘௯’ வரையான இலக்கங்களும் (1 முதல் 9) சுழியமுமே போதுமானதாகவுள்ளது.

உதாரணமாக, ஆயிரம் (1000) என்ற எண்ணை எழுதும் பழைய முறை : ௲ ; புதிய முறை : ௧௦௦௦

ஒன்பது
தமிழில் இந்த ஒன்பதோடு யாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, அதன் பெறுமதிகளை எல்லா இடத்திலுமே பத்தால் வகுத்து வைத்திருக்கிறார்கள். உதாரணமாக … அறுநூறு, எழுநூறு, எண்ணூறு, தொண்ணூறு… என்று வரவேண்டிய தொண்ணூறை எண்பதுக்குப் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். என்ன நடந்தது?

உண்மையில் எட்டுக்கு அடுத்தது ‘ஒன்பது’ அல்ல, ‘தொண்டு’. 9 என்ற எண்ணின் பெயர் தொண்டு.
“… காலென பாகென வொன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறேன வேழென வெட்டெனத் தொண்டென.. “

இந்தத் தொடர் பரிபாடலில் வருகிறது. எட்டுக்கு அடுத்தது தொண்டென இது உள்ளிட்ட பல பழைய இலக்கியங்களில் வருகிறது . அதன்படி 90 என்பது ‘தொன்பது’, 900 என்பது ‘தொண்ணூறு’ என இவ்வாறே அமையும். காலம் தொண்டை அழித்து, தொன்பதை ஒன்பதாக்கி தரம் இறக்கிவிட்டது.

தமிழ் இலக்கியத்திலுமே எண்களுக்கு அசையாத முக்கியத்துவம் உள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று எல்லாம் எண்ணுக் கணக்குத்தான். அதுவும் இந்த நாலின்மேல் என்ன காமமோ தெரியவில்லை, பெரும்பாலானவை நாலுதான்.

புறநானூறு, அகநானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை, களவழி நாற்பது, நாலடியார் என. பிற்காலத்தில் தமிழ் எண்களுக்கான பதங்களும் அத்தகைய இலக்கியங்களிலிருந்தே பெறப்பட்டன. ‘எழுபது வெள்ளத்துள்ளார் இறந்தனர்…’ ‘நாற்பது வெள்ள நெடும் படை….’  ‘கொடிப்படை பதுமத்தின் தலைவன்….’ ‘அனந்தகோடி மேரும் விண்ணும் மண்ணும் கடல்களும்…’ ‘சங்கம் வந்துற்ற…’ இவ்வாறாக.

எண்களை எழுதும் முறை:

11 என்று எழுத வேண்டும் எனில், 10+1 என்று எழுத வேண்டும். அதாவது ௰க என்று எழுதினால் பதினொன்று என்று பொருள்.

225 என்று எழுத 200+20+5, அதாவது உ௱உ௰௫ என்று எழுத வேண்டும்.

௲௪௰ = 1040
௲௯௱௮௰௫ = 1985
௮௲ = 8000
௭௰௲ = 70,000
௮௱௲௲௯௱௮௰௫ = 801985

எனக்கு இந்த எண்களை எழுதவும், புரிந்து கொள்ளவும் மிகவும் கடுமையாக உள்ளது. இந்தோ-அரேபிய எண்கள் முறைக்கு சிறு வயதிலிருந்தே பழகிவிட்டதாலும், இந்த எண்களை இதற்கு முன்பு கண்டதேயில்லை என்பதாலும் இந்த கடினம் என்று நினைக்கிறேன். உபயோகிக்க தொடங்கினால் எளிதாகவிடும்.

கீழே எண்களுக்கு உரிய தமிழ் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் மட்டும்தான் மகாயுகம் (1022) வரையிலும் சொல்லுவதற்கு சொற்கள் உண்டு எங்கோ கோள்விப்பட்ட ஞாபகம். ஆனால் ஆங்கிலத்தில் Centillion (10303 ) வரையிலும் உள்ளது. ஆனால் இவை கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் சேர்க்கப்பட்டது என்று அறிகிறேன்.

தமிழ் எண்
தமிழ் சொல்
ஆங்கிலசொல்
ஒன்று
One
10
பத்து
Ten
100 (102)
நூறு
Hundred
1000 (103)
ஆயிரம்
Thousand
10000 (104)
௰௲
பத்தாயிரம்
Ten thousand
100000 (105)
௱௲
நூறாயிரம்
Hundred thousand
1000000 (106)
௲௲
பத்துநூறாயிரம்
Million
10000000 (107)
௰௲௲
கோடி
Ten million
100000000 (108)
௱௲௲
அற்புதம்
Hundred million
1000000000 (109)
௲௲௲
நிகற்புதம்
Billion
10000000000 (1010)
௰௲௲௲
கும்பம்
Ten billion
100000000000 (1011)
௱௲௲௲
கனம்
Hundred billion
1000000000000 (1012)
௲௲௲௲
கர்பம்
Trillion
10000000000000 (1013)
௰௲௲௲௲
நிகர்ப்பம்
Ten trillion
100000000000000 (1014)
௱௲௲௲௲
பதுமம்
Hundred trillion
1000000000000000 (1015)
௲௲௲௲௲
சங்கம்
Quadrillion
10000000000000000 (1016)
௰௲௲௲௲௲
வெல்லம்
Ten quadrillion
100000000000000000 (1017)
௱௲௲௲௲௲
அன்னியம்
Hundred quadrillion
100000000000000000 (1018)
௲௲௲௲௲௲
அர்த்தம்
Quintillion
1000000000000000000 (1019)
௰௲௲௲௲௲௲
பர்ரர்த்தம்
Ten quintillion
100000000000000000000 (1020)
௱௲௲௲௲௲௲
பூரியம்
Hundred quintillion
1000000000000000000000 (1021)
௲௲௲௲௲௲௲
முக்கோடி
Sextillion
10000000000000000000000 (1022)
௰௲௲௲௲௲௲௲
மகாயுகம்
Ten sextillion

பின்ன அளவுகள்

1 – ஒன்று

3/4 – முக்கால்

1/2 – அரை

1/4 – கால்

1/5 – நாலுமா

3/16 – மூன்று வீசம்

3/20 – மூன்றுமா

1/8 – அரைக்கால்

1/10 – இருமா

1/16 – மாகாணி

1/20 – ஒருமா

3/64 – முக்கால்வீசம்

3/80 – முக்காணி

1/32 – அரைவீசம்

1/40 – அரைமா

1/64 – கால் வீசம்

1/80 – காணி

3/320 – அரைக்காணி முந்திரி

1/160 – அரைக்காணி

1/320 – முந்திரி

1/102400 – கீழ்முந்திரி

1/1075200- இம்மி

1/23654400 – மும்மி

1/165580800 – அணு

1/1490227200 – குணம்

1/7451136000 – பந்தம்

1/44706816000 – பாகம்

1/312947712000 – விந்தம்

1/5320111104000 – நாகவிந்தம்

1/74481555456000 – சிந்தை

1/489631109120000 – கதிர்முனை

1/9585244364800000 – குரல்வளைப்படி

1/57511466188800000 0 – வெள்ளம்

1/57511466188800000 000 – நுண்மணல்

1/23238245302272000 00000 – தேர்த் துகள்.

நிறுத்தல் அளவுகள்

4 நெல் எடை – 1 குன்றிமணி

2 குன்றிமணி – 1 மஞ்சாடி

2 மஞ்சாடி – 1 பணவெடை

5 பணவெடை – 1 கழஞ்சு

8 பணவெடை – 1 வராகனெடை

10 வராகனெடை – 1 பலம்

40 பலம் – 1 வீசை

6 வீசை – 1 தூலாம்

8 வீசை – 1 மணங்கு

20 மணங்கு – 1 பாரம்

நீள அளவுகள்

10 கோன் – 1 நுண்ணணு

10 நுண்ணணு – 1 அணு

8 அணு – 1 கதிர்த்துகள்

8 கதிர்த்துகள் – 1 துசும்பு

8 துசும்பு – 1 மயிர்நுணி

8 மயிர்நுணி – 1 நுண்மணல்

8 நுண்மணல் – 1 சிறுகடுகு

8 சிறுகடுகு – 1 எள்

8 எள் – 1 நெல்

8 நெல் – 1 விரல்

12 விரல் – 1 சாண்

2 சாண் – 1 முழம்

4 முழம் – 1 பாகம்

6000 பாகம் – 1 காதம்

4 காதம் – 1 யோசனை

காதமும் யோசனையுமே இலக்கியங்களில் பல இடங்களில் வருகின்றன. ஒரு காத தூரம் என்பது 8 முதல் 16 கிலோமீட்டர் வரையான ஒரு நீளமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. (ஆறைங்காதம் நம்மகநாட்டும்பர் – சிலப்பதிகாரம்) யோசனை என்பது நான்கு காதம் அல்லது குரோசமாக இருக்கலாம் எனவும், ஏறத்தாழ 24-26 கிலோமீட்டர் நீளமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. (ஒரு நூற்று நாற்பது யோசனை – சிலப்பதிகாரம், நாலாயிரம் நவயோசனை நளிவண் திசை எவையும் – கம்பராமாயணம்)

மாதவி தனது நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்திய மேடையை கட்டுவதுபற்றிய சிலப்பதிகாரப் பாடலில் விரல், சாண், கோல் போன்ற பல நீள அளவைப் பெயர்கள் வருகின்றன.

“கண்ணிடை ஒருசாண் வளர்ந்து கொண்டு
நூநெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலளவிருபத்து நால்விரலாக
எழுகோலாகலத் தெண்கோல் நீளத்
தொருகோல்உயரத் துறுப்பினதாக்கி
உத்தரப் பலகையோ டரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோலாக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய
தொற்றிய அரங்கினில் தொழுதனரேத்த…”
–   அரங்கேற்றுக்காதை

கால அளவு

2 கண்ணிமை = 1 நொடி

2 கைநொடி = 1 மாத்திரை

2 மாத்திரை = 1 குரு

2 குரு = 1 உயிர்

2 உயிர் = 1 சணிகம்

12 சணிகம் = 1 விநாடி

60 விநாடி = 1 நாழிகை

2 1/2 நாழிகை = 1 ஓரை

7/5 ஓரை = 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் = 1 சாமம்

4 சாமம் = 1 பொழுது

2 பொழுது = 1 நாள்

15 நாள் = 1 பக்கம்

2 பக்கம் = 1 மாதம்

6 மாதம் = 1 அயனம்

2 அயனம் = 1 ஆண்டு

60 ஆண்டு = 1 வட்டம்

நாழிகை என்பதே பலவிடங்களில் பயன்படுகின்ற கால அளவையாகும். இரண்டரை நாழிகை ஒரு மணிநேரம் என கணக்கிடப்படுகிறது. எனவே ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். நாழிகை கடிகை எனவும் வழங்கப்பட்டது. நேரத்தை அளக்க தெரிந்தவர்கள் நாழிகை கணக்கர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் நாழிகை வட்டில் என்கிற கருவியை பயன்படுத்தி நேரத்தை அளந்தனர்.

மேலுள்ள தமிழ் அளவு முறைகளிலும், எண் முறைகளிலும் சில வடசொற்களும் கலந்துள்ளன. அது வட இந்தியாவுடன் வியாபாரம் செய்யும்போது ஏற்பட்ட தேவைகளின்பொருட்டு வந்திருக்கலாம். லட்சம், முகூர்த்தம், வட்டம், அற்புதம், நாகவிந்தம் போன்ற சொற்கள் வடசொற்களே. மற்றையபடி எண்ணியல் அளவு முறைகள் தமிழுக்குரியவை, தூயவை.

இப்போது உலகமெல்லாம் வழக்கில் இருக்கும் எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 தமிழ் எண்களே என்பதைத் தமிழ் மக்களும், சில தமிழ் அமைப்புகளும் அறியாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இதையறிந்த தமிழறிஞர்கள் மக்களிடம் பரப்பவில்லை; அதனால்தான் இதனை ஆங்கில எண்கள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த அறியாமையைப் போக்காதது அறிந்தவர்களின் குற்றம்தானே!மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று இந்திய வாகனச் சட்டம் 1989 கூறுகிறது. அதுபோலவே 1998-ம் ஆண்டு தமிழ்நாட்டிலும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. வாகன உரிமையாளர்கள் விரும்பினால் ஊர்திகளில் தமிழிலும் பதிவு எண்களை எழுதிப் பொருத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.தமிழக அரசு தமது ஆணையில் எண்களைப் பொறுத்தவரை உலக எண்களையே (அரபிக் நம்பர்ஸ்) பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் இந்த உலக எண்கள் அராபிய எண்கள் என்றே அரசும் கருதுகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

“எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்’ என்றும் “எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு’ என்றும் தமிழிலக்கியம் கூறுகிறது. “”உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களாகும். இதில் ஒரு கண்ணாகிய தமிழ் எழுத்தை எடுத்துக் கொண்டோம். ஆனால், மற்றொரு கண்ணாகிய தமிழ் எண்களை விட்டுவிட்டோம். அவற்றைப் பயன்படுத்த அரசு ஆவன செய்யுமா…? ” என்று சட்டப்பேரவையிலேயே கேட்கப்பட்டது; கேட்டவர் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் குமரி அனந்தன். “தமிழ் எண்கள் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வரப்படுமா?’ என்று அப்போது தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடம் கேட்கப்பட்டது.

“இதுகுறித்து முதல்வர், கல்வியமைச்சர் ஆகியோருடன் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மைல் கற்களில் தமிழ் இருந்துள்ளது. படிப்படியாகக் கவனிக்கலாம் என்று இருக்கிறோம்…” என்று அவர் ஒரு நேர்முகத்தில் விடை கூறியுள்ளார் (ராணி: 4-8-1996).

மறுக்க வேண்டிய சில தமிழ் அமைப்புகளும், “இப்போது வழக்கில் இருக்கும் எண்கள் தமிழ் எண்கள் இல்லை’ என்ற எண்ணத்தில், “தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும்’ என்றே தீர்மானங்கள் இயற்றின. இதனை மறுக்காமல் தமிழறிஞர்கள் ஏன் அமைதி காத்தனர் என்றே தெரியவில்லை.

இந்த எண்களைப் பற்றிய குழப்பம் இப்போதுதான் இப்படி எழுந்துள்ளது என்று எண்ண வேண்டாம். 1960-ம் ஆண்டு “மத்திய கல்வி ஆலோசனைக் குழு’க் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் எண்களையே பயன்படுத்துவது என்று மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று “கல்விக்கு அராபிய எண்களே – ஆலோசனைக் குழு முடிவு’ என்ற தலைப்பில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இதுபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், “”அவை அரபிய எண்கள் அல்ல தமிழ் எண்களே” என்று தம் இதழாகிய “குயில்’ ஏட்டில் 24-1-1960 அன்று எழுதினார். “அன்றைய தமிழகக் கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம் அந்தக் குழுவில் இந்த எண்கள் தமிழ் எண்களே என ஏன் சொல்லவில்லை?’ என கண்டனம் தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படியிருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித்துறையின் சுவடியில் கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக்கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்; அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்துக்கு உள்ளாயிற்று…!” என்று பாரதிதாசன் எழுதினார்.

டாக்டர் மு. வரதராசனார் தம் “மொழி வரலாறு’ என்னும் நூலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற எண்கள் தமிழ் எண்களே என்பதை கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார். அந்தக் கல்வெட்டுச் சான்று (படம்). அவர் எழுதுகிறார்: “1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், அராபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை.

தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் இந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது முன்பக்கத்தில் உள்ள பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும்.

இவற்றை நோக்கி எண்ண வல்லார்க்கு 1, 2, 3 முதலிய எண்களின் எழுத்து வடிவம் தமிழகம் உலகத்துக்கு அளித்த கலையே என்னும் உண்மை புலப்படும்…”- இவ்வாறு எழுதிய டாக்டர் மு.வ., கல்வெட்டு ஆதாரத்தையும் படமாக்கி வெளியிட்டுள்ளார் (ஆதாரம்: “மொழி வரலாறு’ – பக்கம் 358).

இந்த எண்களைத் “தமிழ் எண்கள்’ என்று உலகம் ஏற்றுக் கொண்டாலும், உள்ளூர் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஏதேனும் நல்லவை தென்பட்டால் அவை பிறமொழியிலிருந்து வந்ததென்று கூறுவதும், ஆங்கிலத்திலிருந்து கிடைத்ததென்று கருதுவதும் நம்முடைய மரபாகிப் போனது. இந்தத் தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும்.

இவை தமிழ் என அறிந்த பிறகும், இதன் மாற்று வடிவங்களையே தமிழ் எனக்கூறி புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வது சரியன்று; உலகம் ஏற்றுக் கொண்டதை நாமும் உவப்புடன் ஏற்போம்.

செம்மொழித் தமிழின் சிறப்புகளுள் தலையாய மணிமகுடம் இதுவென ஓங்கி ஒலிப்போம். தன் பிள்ளையை உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை எந்தத் தாயும் கண்ணீர் மல்க வரவேற்கவே செய்வாள்.

தமிழகம் உலகத்துக்கு அளித்திருக்கும் மாபெரும் கொடை இது. இதற்கு உலகமே தமிழ்மொழிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்மக்கள் பெருமைப்பட வேண்டும்; பெருமைப்படுவதற்கு அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருக்க வேண்டுமே!

இனிமேலும் ஐயம் வேண்டாம்; உலக எண்கள் தமிழ் எண்களே.

தமிழில் பேசுதலைக் குறிக்க உள்ள வார்த்தைகள்;

பேசுதல் =பொருள் கெடாமல் பேசுதல்

கூறுதல் =கூறு படுத்திச் சொல்லுதல்

பகர்தல் =அழகாகப் பேசுதல்

சொல்லுதல்=தரக் குறைவாகப் பேசுதல்

பொழிதல் =இனிமையாகப் பேசுதல்

இயம்புதல் =அழுத்தமாகப் பேசுதல்

அருளுதல் =தவத்தில் சிறந்தோர் பேசுதல்

அறைதல் =தொடர்பில்லாமல் பேசுதல்

செப்புதல் மொழிதல் பறைதல், பிறழ்தல்,உளர்தல் ஆகியவை கூட பேசுவதின் பிற தூய தமிழ்

சொற்கள் – நன்றி -ஹரிபாஸ்கர்

ஏசுதல் – கண்டிப்புடன் சொல்லல்

திட்டுதல்- அவதூறான சொற்களை பிறர் மனம் புண்படக்கூடியவகையில் சொல்லல்

கதைத்தல் – ஈழத்தமிழர்/இலங்கைத்தமிழர் வழக்கு

தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் 
வாழை மரம்,அரச மரம்,ஆல மரம் –இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை —பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை —புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை –தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள் –தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள் –மடல்
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள் –தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள் –ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள் –கீரை
காற்று 
தெற்கிலிருந்து வீசினால் –தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் –வாடை
கிழக்கிலிருந்து வீசினால் —கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் —மேலை
சாப்பிடுவது குறித்து தமிழில் எத்தனை நுட்பமான வார்த்தைகள்
அருந்துதல் =மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து)
உண்ணல =பசி தீர உட் கொள்ளல்
உறிஞ்சல் =வாயைக் குவித்து நீரியல் பண்டங்களை இழுத்தல்
குடித்தல் =சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்(கஞ்சி)
தின்னல் =சுவைக்காக ஓரளவு தின்னுதல்(முறுக்கு)
துய்த்தல் =சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்
பருகல் =நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்
விழுங்கல் =பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி தொண்டை வழி உட்கொள்ளல் (மாத்திரை)
“மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று யாரோ ஒரு பேதை உரைத்ததற்கே ஆத்திரம் கொண்டவர் பாரதி. அவர் வழியில் வந்த தமிழ் மறவர்கள் அதற்கு இடம் கொடார் என்று நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top