Home » சிறுகதைகள் » வாத்து மடையன்!!!
வாத்து மடையன்!!!

வாத்து மடையன்!!!

“அக்கா வாத்து, தங்கை வாத்து’ என்ற இரண்டு வாத்துகள் ஒரு குட்டைக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.

குட்டிகுட்டியான சில மீன்களும், கொசு முட்டைகளும்தான் அவற்றுக்கு உணவாகக் கிடைத்தன. பிளாஸ்டிக் கவர்களில் படர்ந்திருக்கும் அழுக்குகள் என்றால், தங்கை வாத்துக்கு கொண்டாட்டம்தான்! ஆனால், இது அக்கா வாத்துக்கு சுத்தமாக பிடிக்காது.

“நீ செய்வது தவறு. மடமனிதனைப் போலவே இருக்கிறாயே………?! சாப்பிடும்போது பிளாஸ்டிக் கவரின் சிறு பகுதி உன் வயிற்றுக்குள் போனால்கூட மரணம் நிச்சயம்” என்று எச்சரித்தது அக்கா வாத்து.

“மடமனிதன் என்று என்னைச் சொல்கிறாயே……?! மனிதர்கள்தானே “வாத்து மடையன்’ என நம்மை வைத்து அவர்களாகவே சொல்லிக் கொள்வார்கள்?'” என்று சற்று கோபமாகக் கேட்டது தங்கை வாத்து.

“மடையர்கள், இந்த மனிதர்கள்தான்…..’ என நீ சொல்லும்போது எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. இந்தக் கதையை நான் சிறு வயதாக இருக்கும்போது நம் பாட்டி வாத்து எனக்குச் சொன்னது” என்றது அக்கா வாத்து.

“அப்படியா………?! நம் பாட்டி சொன்ன கதையா…?! சீக்கிரமாகச் சொல்லு” என்று ஆர்வமானது தங்கை வாத்து.

“ஒரு ஊரில் ஒரு மனிதன் இருந்தான். வீட்டில் பல வாத்துகளை வளர்த்து வந்தான். அதில் பொன் நிறத்தில் ஒரு வாத்து இருந்தது. இந்த வாத்து நீரில் நீந்தும்போது சூரியக்கதிர்கள் அதன் இறகுகளில் பட்டுத் தெறித்து பளபளக்கும்.

அவனிடம் பல தவறான பழக்கங்கள் இருந்தன. அதில் ஒன்று கஞ்சத்தனம்! நம் வாத்துக் கூட்டத்துக்கு சரியாக உணவே கொடுக்க மாட்டான். எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலக்காரன். இந்த மனிதனைத் திருத்துவதற்காக மற்ற தோழர்களோடு சேர்ந்து பொன் நிற வாத்து ஒரு திட்டம் தீட்டியது. திட்டப்படி, பொன் நிற வாத்து முட்டைகளைப் பளபளப்பாக பொன் நிறத்தில் இட்டது.

அந்த முட்டைகளை விற்று நிறைய லாபம் பார்த்தான். அந்த லாபத்தில் நன்றாகத் தின்று அவன் கொழுத்தே போய்விட்டான். அப்போதும் வாத்துகளுக்கு நன்றாக உணவு கொடுக்க வேண்டும் என்று அவன் நினைக்கவே இல்லை.

இந்த நிலையில், ஒரு நாள் பேராசைப்பட்டு பொன் நிற வாத்தின் வயிற்றில் நிறைய முட்டைகள் இருக்கும் என எண்ணி அந்த வாத்தின் வயிற்றைக் கிழித்தான். அவனது பேராசையால் அந்த வாத்து இறந்ததுதான் மிச்சம்! இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அவன் திருந்தினான். பேராசைப்படுவதால் யாருக்கும் லாபமில்லை என்பதை உணர்ந்தான். பின்னர் ஏனைய வாத்துகளை நன்றாகப் பராமரித்தான்” என்று கதையைச் சொல்லி முடித்தது அக்கா வாத்து.

“அக்கா, இப்போது நினைத்தாலும் வருத்தமாக உள்ளது. அந்தப் பொன் நிற வாத்து எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறது” என்று உணர்ச்சிவசப்பட்டது தங்கை வாத்து.
“இது போன்ற அறிவில்லாத செயல்களில் ஈடுபடுபவர்களைத்தான் வாத்து மடையன் என மனிதர்கள் அழைக்கிறார்கள்” என்றது அக்கா வாத்து.

சரி. வாத்தை கொன்ற அந்த மனிதனுக்கு ஏதாவது தண்டனை கிடைத்ததா?! என்றது தங்கை வாத்து.

அந்த மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் சேர்த்து நாம் ஒரு தண்டனையை வழங்கி இருக்கிறோமே……… அதாவது, நாம் முட்டையை அடைகாத்து குஞ்சுகள் பொறிப்பதையே விட்டுவிட்டோம்.

நம் முட்டைகளை கோழிகளின் முட்டைகளோடு வைத்து அவற்றை ஏமாற்றித்தான் மனிதர்கள் வாத்துக் குஞ்சுகளைப் பெறுகிறார்கள். இதில் கோழிகளுக்கு இருக்கும் பெருந்தன்மையையும் மனிதர்கள் அறியமாட்டார்கள்” என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டது அக்கா வாத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top