Home » படித்ததில் பிடித்தது » சென்னைக்கு பிறந்த நாள்!!!
சென்னைக்கு பிறந்த நாள்!!!

சென்னைக்கு பிறந்த நாள்!!!

தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி உருவானது. நீண்ட.. நெடிய.. வரலாற்றை கொண்ட சென்னை மாநகரம் இன்று (ஆக.22) தனது  பிறந்தநாளை கொண்டாடுகிறது. பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரம், தொடக்க காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து கிடந்தது.

அந்தப் பகுதிகளை பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்தனர்.   அந்த சமயத்தில், வெளிநாடுகளில் இருந்து வர்த்தகர்களும், மதபோதகர்களும் கப்பல் மூலம் வந்து சென்னை கடற்கரையில் இறங்கியுள்ளனர். சிறிய கிராமமாக இருந்த அந்தப் பகுதி ‘சென்னப்பட்டிணம்’ என்று அழைக்கப்பட்டது.

1639-ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், அந்தப் பகுதியை ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பு அமைக்க தேர்வு செய்தனர். அதன்பிறகு, ஓராண்டு கழித்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதை மையமாக வைத்து ஆங்கிலேயர்களின் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

1688-ம் ஆண்டு சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகரசபை என்ற புகழ் சென்னைக்கு கிடைத்தது.

1746-ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். அதன்பிறகு, 1749-ம் ஆண்டு இவைகள் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதன்பின்னர்தான், சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சியடைய தொடங்கியது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரெயில் பாதைகள் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.

எழும்பூர், திரு வல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்கள் மட்டுமே இருந்தன. இவை காலப் போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன. ஆங்கிலேயர் வசமிருந்த காரணத்தால் உலகின் புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்த வேகத்தில் சென்னைக்கும் வந்தன. தொலைபேசி, ரெயில், சினிமா, தபால் போன்றவை அடுத்த சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு அறிமுகமாகின.

1895-ம் ஆண்டு மே 7-ந்தேதி சென்னை நகர வீதிகளில் முதன் முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. ஆனால் அந்த சமயத்தில் லண்டனில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. தென்னிந்தியாவின் முதல் ரெயில் நிலையமாக ராயபுரம் அமைந்தது. அண்ணாசாலை தபால் நிலைய கட்டிடத்தில் அப்போது எலெக்ட்ரிக் தியேட்டர் இருந்தது. தமிழகத்திலேயே முதல் சினிமாக்கொட்டகை இதுதான்.

ஒருபுறம் எளிய மக்களின் பாட்டுப் புத்தகங்களை விற்பனை செய்த குஜிலிபஜார் பிரபலமாக விளங்கியது. மற்றொரு புரம் சாஸ்த்ரீய சங்கீதம் வளர்த்த இசை சபாக்கள் வேரூன்றி வளர்ந்தன.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மதராஸ் மாகாணத்தின் தலை நகரானது சென்னை. சென்னை மாகாணமாக இருந்தது கடந்த 1969ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னப்பட்டிணம் என்ற பெயரில் கிராமமாக இருந்த ஆரம்பகால சென்னை, அதன்பிறகு மதராஸ் பட்டிணம், மதராஸ் மாகாணம் என்ற பெயரைத் தாண்டியே சென்னை என அழைக்கப்பட்டது.   1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக சென்னை அமைந்தது.

1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களை பிரித்தபோது, மதராஸ் தமிழ்நாட்டின் தலைநகரமானது. அதன்பின்னர், 1996-ம் ஆண்டு மதராஸ், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை அனைத்து தரப்பு மொழிகள் பேசும் மக்கள் வசிக்கும் `காஸ்மோபாலிடன்’ நகரமாக சென்னை விளங்கிவருகிறது.

`வந்தாரை வாழவைக்கும் சென்னை’ என்ற சொல்லுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள நகராக சென்னை உருவெடுத்துள்ளது. நிறைவேறிக் கொண்டிருக்கும் மெட்ரோ மற்றும் மோனோ ரெயில் திட்டங்கள் சென்னையை மேலும் வளர்ச்சியுடையதாக்கும்.

இருந்தாலும், அன்றைய காலத்தில், சென்னையில் தெளிந்த நீராக ஓடிய கூவம், அடையாறு போன்றவை, இன்று மக்கள் நெருக்கத்தால் சாக்கடை செல்லும் கால்வாயாக மாறிவிட்டன. சென்னையின்  பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலாவது, கூவம், அடையாறு போன்றவற்றை சுத்தப்படுத்துவதற்கான முயற்சியில் அரசும், சமூக ஆர்வலர்களும் ஈடுபட வேண்டும். இந்த முயற்சி வெற்றியடைந்தால், சென்னை வரலாறு என்றும் மணக்கும்.

தொழில் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், இந்தியாவிலேயே அதிக வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் இங்குதான் உள்ளன. கம்ப்யூட்டர் சேவை, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் நிதி சேவைகள் உள்பட பல்வேறு துறைகளிலும் சென்னை சிறந்து விளங்குகிறது.

அன்றைய கால கட்டிடக்கலைக்கு சான்றுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், சென்னை பல்கலைக்கழக கட்டிடம், எழும்பூர் அருங்காட்சியகம், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, விக்டோ ரியா ஹால், மெமோரியல் ஹால், சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்டவைகள் இருக்கின்றன.

சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரெயில் மற்றும் விமான சேவையும், வெளிநாடுகளுக்கு விமான சேவையும், அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்தும் இருந்து வருகிறது.

மேயர் சைதை துரைசாமி : சென்னை மாநகரம், மக்கள் நிம்மதியாக வாழும் நிலையில் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை, ஒரேயடியாக நான் மறுப்பதற்கில்லை. முதல்வர் ஆலோசனை, உத்தரவுப்படி, மாநகர மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளன என்றார்.

முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்: எல்லா நிலைகளிலும் தன்னிறைவு பெற்ற, பசுமை நிறைந்த, நெரிசல் இல்லாத, மழைக்காலத்தில் பாதிக்காத சென்னை வேண்டும். இப்படி ஒரு சென்னையை தான், நான் மட்டுமல்ல, மற்றவர்களும் எதிர்பார்க்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.

எவ்வளவு குறைகள் இருந்தாலும், நான் சென்னையை மிகவும் நேசிக்கிறேன். நானொரு சென்னைவாசி என்பதில் பெருமைப் படுகிறேன். உலகத்தின் எந்த மூலையை சுற்றினாலும், என் மனம் சென்னையை தான் சுற்றிக் கொண்டிருக்கும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top