Home » சிறுகதைகள் » காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி!!!
காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி!!!

காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி!!!

திருக்குறள் கதைகள்

காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி

மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னர் சபையில் தனது அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நிகழ்த்துகையில், மனோகரனும் அங்கு அமர்ந்து தனது கருத்துக்களை வெளியிடுவான்.

மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான்.
 
தனது சகோதரனின் போக்கு ராணிக்கு பிடிக்கவில்லை. பலமுறை அவள் மனோகரனைக் கண்டிக்கும் போது மன்னர் அவளைத் தடுத்து விடுவார்.

ஒருநாள் சபையில் புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார்.

அப்போது, “வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.
 
அமைச்சர்கள் அதைக் கேட்டு “ஆகா, அற்புதமான யோசனை” என்று பாராட்டினார்கள்.

ஆனால் மனோகரன் மட்டும், ” இது மதியற்ற செயல். உதவித்தொகை அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து, அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான்.

அத்துடன் மன்னரின் மற்ற நலத் திட்டங்களையும் விமர்சனம் செய்தான்.
 
சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து, “மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே வெளியேறு” என சீறி விழுந்தாள்.
 
ஆனால் அவளைத் தடுத்த மன்னர், “அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில் பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்போம்” என்றார்.
 
அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிந்தது.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

 
விளக்கம்: மக்கள் தன்னை ஏர் கொண்டு உழுதுக் காயப்படுத்தினாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் பூமியைப் போல, தன் மீது குற்றம் சாட்டி இகழ்பவர்களின் செயல்களைப் பொறுப்பது ஒரு தலைமகனுக்கு அழகு தரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top