Home » படித்ததில் பிடித்தது » மாதங்கள் பிறந்தது எப்படி?
மாதங்கள் பிறந்தது எப்படி?

மாதங்கள் பிறந்தது எப்படி?

காலண்டர் கண்டுபிடித்தது எங்கு?

கிரேக்கர்கள் தான் முதன்முதலில் காலண்டரை உருவாக்கினர். அவர்களிடம் இருந்து ரோமானியர்கள் இதைக் கற்றுக்கொண்டனர். ஆரம்ப காலத்தில், இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை.

மார்ச் முதல் டிசம்பர் வரையான பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன. கி.மு.700ல் ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் ஜனவரி, பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து 12 மாதங்களாக்கினார்.

ஆனால், இந்த இரண்டு மாதங்களும் ஆண்டின் கடைசி இருமாதங்களாக (11,12வது மாதங்கள்)இருந்தன. கி.மு.46ல் ஜுலியஸ் சீசர் சில திருத்தங்கள் செய்து, ஜனவரி, பிப்ரவரியை ஆண்டின் முதல் இருமாதங்கள் ஆக்கினார். இதற்கு ஜுலியன்காலண்டர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

மாதங்களின் பெயர்க் காரணம்:

ஜனவரி:

 ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் இந்த மாதம் அமைந்தது. இவருக்கு கடந்தகாலம், எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருந்தன.

பிப்ரவரி: 

ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.

மார்ச்: 

ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் மார்ஸ். ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும் இவரது பெயரால் தோன்றியது மார்ச்.

ஏப்ரல்:

ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.

மே:

உலகத்தை சுமக்கும் அட்லஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவரது மகளே மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதம் மே.

ஜூன்: 

ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக ரோமானியர்கள் வழிபட்டனர். இந்தப் பெயரால் வந்தது தான் ஜுன்.

ஜூலை:

ஆரம்ப காலத்தில் இது ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார். 19ம் நூற்றாண்டு முதல் ஜுலை என்றானது.

ஆகஸ்ட்:

ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இதை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என மாறியது.

செப்டம்பர்:

மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர்.ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழையபெயரே நிலைத்து விட்டது.

அக்டோபர்:

அக்ட்டோ என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.

நவம்பர்:

நவம் என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் பெயர்மாற்றம் செய்யப்படவில்லை.

டிசம்பர்: 

டிசம் என்றால் பத்து பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப் பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top