Home » உடல் நலக் குறிப்புகள் » தாமரையின் தனிச்சிறப்பு!!!
தாமரையின் தனிச்சிறப்பு!!!

தாமரையின் தனிச்சிறப்பு!!!

தாமரையின் சிறப்பு ……….

செல்வத்தின் கடவுளான திருமகள் சிவப்புத் தாமரையில் அமர்ந்திருப்பதாகவும், கல்வியின் கடவுளான கலைமகள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பதாகவும் நம் நாட்டில் சித்தரிக்கப் படுகிறார்கள். மகாவிஷ்ணுவின் நாபியில் இருந்து தாமரை வருவதால் மகாவிஷ்ணுவிற்கு பத்மநாபன் என்ற பெயரும் உண்டு. கண்ணனின் கண்கள் தாமரை போன்ற அழகுடன் இருப்பதால் கண்ணனுக்கு கமலக் கண்ணன் என்ற பெயரும் உண்டு.

தாமரை நம் நாட்டு தேசிய மலர் மட்டுமல்ல வியட்னாம், எகிப்து போன்ற நாடுகளுக்கும் அது தேசிய மலர் ஆகும். பண்டைய எகிப்தில் தாமரை நைல் நதிக்கரை ஓரத்தில் பரவலாகக் காணப்பட்டதாகவும், அக்கால எகிப்தியர்கள் தாமரை மலரைப் புனிதமாகப் போற்றியதாகவும் சொல்லப்படுகிறது. நம் நாட்டு தெய்வங்களைப் போலவே பண்டைய எகிப்திய கடவுள்களும் தாமரை மலரைக் கையில் வைத்திருப்பதாக பழங்கால எகிப்திய சிற்பங்கள் கூறுகின்றன. ஆனால் எகிப்திய தாமரை நம் நாட்டு தாமரையை விட தோற்றத்தில் சற்று வேறுபட்டிருக்கிறது.

இனி தாமரை மலருக்கு ஆன்மிக ரீதியாகவும், மற்ற விதங்களிலும் உள்ள தனிச்சிறப்புகளைப் பார்ப்போம்.

தாமரை மலர் சத்தியம், சிவம், சுந்தரம் என்ற முக்குணங்களின் இருப்பிடம். இறைவனும் இந்த முக்குணங்களையும் கொண்டவன் தானே? அதனால் தான் இறைவனின் பல அம்சங்களும் தாமரை மலருடனேயே ஒப்பிடப்படுகின்றன. தாமரைக் கண்கள், தாமரைப் பாதங்கள், தாமரைக் கைகள், இதயத்தாமரை என்றெல்லாம் சொல்கிறோம். தாமரை மலர் இறைவனைப் பூஜிக்க மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. தாமரை மலரைத் தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை.

நம் வேதங்களிலேயே தாமரை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. சோம என்பது தாமரையை குறிக்கும் என்பது டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மெக்டொனால்ட் என்ற தாவரவியலாளரால் நிறுவப்பட்டிருக்கிறது.

வேதம் சொல்லும் தாவரம் நிச்சயமாக இந்திய கண்டத்தில் மிக முக்கியமான, மையமான இடம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து பிற்காலத்திய சைவ, வைணவ, பவுத்த பண்பாடுகள் வரை ஆராய்ச்சி செய்தார். இத்தகைய முழுமையான பண்பாட்டு ஆராய்ச்சியின் விளைவாக அவர் சோமத் தாவரம் என்பது வேறெதுவும் அல்ல தாமரை (Nelumbo nucifera) தான் என முடிவு செய்தார்.

வேதங்களின் உருவகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் காணப்படும் சித்திரங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அவர் சுட்டிக்காட்டினார். சிந்து வெளி பண்பாட்டு முத்திரைகளில் காணப்படும் இலச்சினை சித்திரத்தில் புனிதத் தாமரை மிக அழகான முறையில் காட்டப்பட்டுள்ளது. தாமரைப்பூவின் தூண் போன்ற பீடம் முக்கியப்படுத்தப் பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாகக் காட்டி உள்ளார்.

இப்படி பழமைச் சிறப்பு வாய்ந்துள்ள தாமரையின் வேர் தரையில் சேற்றில் இருந்தாலும் அதன் மலர்கள் அத்தகைய சுற்றுப்புறத்தினால் பாதிக்கப்படாதவையாக அழகுடன் ஒளி வீசுபவையாக இருக்கும். அப்படியே நாமும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து மேல் எழுந்து தாமரையைப் போலவே உள்ளும் புறமும் தூய்மையுடனும், அழகுடனும் விளங்க வேண்டும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

அதே போல தண்ணீரிலேயே இருந்தாலும் தாமரை இதழ்கள் தண்ணீரினால் நனைவதில்லை. இது ஞானிகளின் மனநிலைக்கு உதாரணமாக இருக்கிறது. எத்தனையோ துன்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் நடுவே ஞானியின் உலக வாழ்க்கை அமைந்தாலும் ஞானி அவற்றால் சிறிதும் பாதிக்கப்படாமல், தன் மேலான இயல்பு மாறாமல் இருப்பதை தாமரை இலை – தண்ணீர் உதாரணம் மூலம் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தனியாக ஓரிடத்தில் இருப்பவன் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அது ஒரு கஷ்டமான காரியம் அல்ல. துன்பங்களும், பிரச்சினைகளும், கவர்ந்திழுக்கும் விஷயங்களும் நிறைந்த உலகின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருந்தும் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பது தான் பேருயர்வு. அது தான் உன்னத நிலை. அந்த நிலைக்கு ஒருவன் உயர்ந்திருக்க ஏண்டும் என்று சதா நினைவூட்டிக் கொண்டிருப்பது தாமரையின் தனிப்பெரும் சிறப்பு.

பகவத் கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா ஒரு சுலோகத்தில் தாமரை மலர் உதாரணத்தையே அர்ஜுனனிற்கு சொல்லி விளக்குகிறார். ”எவனொருவன் செயல் புரிகையில் அச்செயல்களிடத்தில் பற்றுதல் கொள்ளாமல் அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறானோ அவன் நீரில் இருப்பினும் நீரினால் நனைக்கப்படாத தாமரை இதழ்களைப் போல் பாவங்களினால் பாதிக்கப்படாமல் இருப்பான்”.

மனித உடலில் “சக்ரா” என்னும் சக்தி மையங்கள் ஏழு உள்ளன என்று யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. மூலாதார சக்ராவில் இருந்து சஹஸ்ரர சக்ரா வரை உள்ள அந்த ஒவ்வொரு சக்ராவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இதழ்கள் கொண்ட தாமரையாக உருவகப்படுத்தப் படுகின்றது.

உதாரணத்திற்கு மூலாதார சக்ரா என்னும் முதல் சக்ரா நான்கு இதழ் தாமரையான சக்ராவாகவும், ஏழாவது சக்ராவான சஹஸ்ரர சக்ரா ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் வடிவாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. இப்படி சக்தி மையங்களை உருவகப்படுத்தும் போது கூட தாமரை மலரைக் கொண்டே உருவகப்படுத்தும் அளவு தாமரை சிறப்புப் பெற்றிருக்கிறது.

இப்படி வேத காலத்தில் இருந்து ஆன்மிக மலராய் கருதப்படும் தாமரைக்கு மருத்துவத் தன்மைகளும் இருக்கின்றன. பழங்காலத்திலிருந்தே தாமரை ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்படுவதால், அதைப் பற்றிய விவரங்கள் ஆயுர்வேத நூல்களில் அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. கப, பித்தங்களை சீராக்கவும், பேதிக்கு மருந்தாகவும் தாமரை பயனாகிறது. முக்கியமாய் இதய நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்தாக தாமரை கருதப்படுகிறது.

பொதுவாக ஜுரங்களுக்கு மருந்தாகவும், தாகத்தை தணிப்பதாகவும், வயிற்றுப்பூச்சிகளை போக்கும் மருந்தாகவும், உடலில் உஷ்ணம், எரிச்சல் இவற்றை குறைக்க வல்லதாகவும் ஆயுர்வேதத்தில் தாமரை கருதப்படுகிறது. தாமரை விதைகள் தானியங்களை விட சத்துள்ள உணவாக கருதப்படுகிறது.

தாமரையின் வேர்கிழங்கு (Rhizome) உடல் வளர்ச்சிக்கு சத்துணவாகும். இது உடலுக்கு ‘டானிக்’ காக செயல்படும். கல்லீரல் நோய்கள், இருமல், மாதவிடாயில் அதிக ரத்தப்போக்கு, மூலத்தில் ரத்தம் வருவது போன்றவற்றுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. தாமரை பிராங்கைடீஸ் போன்ற நுரையீரல் நோய்களுக்கும் மருந்தாகும். செந்தாமரையை விட வெண் தாமரைக்கு மருத்துவ குணங்கள் அதிகம் என்கின்றனர்.

இப்படி மகாலட்சுமியின் உறைவிடமாகவும், மெய்ஞான நிலையின் உதாரணமாகவும், மருத்துவ குணங்களின் தொகுப்பாகவும் இருக்கும் நம் நாட்டு தேசிய மலரான தாமரையின் மகத்துவத்தை அறிந்திருந்து, முறையாகப் பயன்படுத்தி நாம் முழுப்பலன் அடைவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top