Home » படித்ததில் பிடித்தது » அறுமுகன் வருகைப் பதிகம்!!!
அறுமுகன் வருகைப் பதிகம்!!!

அறுமுகன் வருகைப் பதிகம்!!!

வருகைப் பதிகம்

அறுமுகன் ஆனவனே! கரிமுகன் சோதரனே!
ஒருமுகம் ஆகஉந்தன் திருமுகம் நாடுகின்றேன்!
மயில்முகம் முன்தோன்ற(வுன்) மலர்முகம் உடன்தோன்ற
அயில்வடி வேலேந்தி அழகுடன் வருவாயே!

குஞ்சரி இடையோடும், குறமகள் இதழோடும்
கொஞ்சிடும் மணவாளா! குவலயப் பரிபாலா!
தஞ்சமென் றுன்இருதாளைத் தயவுடன் பணிகின்றேன்!
விஞ்சிடும் அன்புடனே விரைவினில் வருவாயே!

தகதக மயிலேறித் தடைதகர் கொடியேந்தி
இகபர நலமருள எனதிடர் நீகளையச்
சுகநல வளமருளச் சூட்சும வேலேந்திப்
பகவதி பாலகனே! பாங்குடன் வருவாயே!

அரிதிரு மருகோனே! அரன்விழிச் சுடரோனே!
கரிமுகற் கிளையோனே! கிரிபல வளர்வோனே!
அருந்தமிழ் ஆர்வலனே! அழகிய வேலவனே!
வருந்திடும் எனைஆள வடிவுடன் வருவாயே!

சதுர்முகன் பணிபவனே! சதுர்மறை நாயகனே!
சதுர்புஜ மாலவனின் சாகச மருமகனே!
சதுரங்க வாழ்வினிலே சதிபகை போயொழியச்
சதுர்வேல் கரமேந்திச் சண்முகா வருவாயே!

எண்திசை சூழுகிற என்வினைப் பகைமாள
உன்திசை நான்பணிந்து உருகியே கவிபாட
விண்மிசை மயிலேறி வேலதைக் கரமேந்தி
என்கலி யதுதீர இறைவனே வருவாயே!

பன்முக வாழ்வினிலே பலமுகம் கொண்டுழன்றேன்
உன்முகம் ஒன்றினையே உள்முக மாக எண்ணிச்
சண்முகா உன்னழகில் சகலமும் நான்மறந்தேன்!
இன்முகம் நீகாட்டி எனைஆள வருவாயே!

உருகிடும் அடியவரின் உளமெலாம் நிறைபவனே!
மருகிடும் பக்தர்களின் மருளினைக் களைபவனே!
அருகினில் வந்தெனது அவலங்கள் போக்கிடவே
முருகெனும் பேரழகே ! மூர்த்தியே வருவாயே!

ஒருபெரும் வேலெறிந்து கிரிபல பிளப்போனே!
ஒருஎழில் மயிலேறி உலகெலாம் வருவோனே!
ஒருதனிக் கொடியேந்தி ஊழ்வினை களைவோனே!
ஒருமுறை என்மனதுள் ஒளியென வருவாயே!

குறமகள் தேனிதழின் சுவைதனை அறிவதற்குப்
பரண்மனை கீழிருந்து சேவகம் புரிபவனே!
திறமுடன் வேலெறிந்து தேவரைக் காத்தவனே!
பரிவுடன் எனைஆளப் பழனியே வருவாயே!

தேவரும் முனிவர்களும் தெளிர்ந்தநல் ஞானிகளும்
யாவரும் புகழ்ந்தேத்தும் ஓவியப் பேரொளியே!
ஆவலும் மிகக்கொண்ட டியவன் பணிகின்றேன்!
சேவலாம் கொடியேந்திச் சீக்கிரம் வருவாயே!

தண்டொடு பழனியிலே தனிமையில் நிற்பவனே!
பெண்டுகள் இருவரையும் பெருமகன் மறந்தாலும்
கன்றெனை மறப்பதுவோ ! கந்தனே சரியாமோ!
நன்றெனைக் காத்திடவே நலமுடன் வருவாயே!

உருவினில் அழகாகி, உணர்வினில் கனலாகி
அருளினில் நிறைவாகி அருணையின் ஒளியாகி
குருசிவன் குருவாகிக் குவலயம் காப்பவனே!
நிறைவுடன் எனைக்காக்க நிர்மலா வருவாயே!

முன்வினைப் பயன்யாவும் மூர்க்கமாய்ச் சூழ்ந்தாலும்
உன்பதம் நான்பணிந் துருகிடும் வேளையிலே
என்குரல் அதுகேட்டு இருதுணை புடைசூழக்
கன்றெனைக் காத்திடவே கடுகியே வருவாயே!

பிணியினால் உடல்சோரப் பெருமகன் உனைநாட
நனிபெரும் மயிலேறி நலமுடன் எனக்கருளக்
குணமிகு வள்ளியுடன் குழவியென் இடர்களைய
மணமிகு மலர்சூடி மகிழ்வுடன் வருவாயே!

கனவிலும் நனவிலுமுன் கழல்களை நான்பணிவேன்!
மனதிலும் செயலிலும் உன் மலரடி நான் தொழுவேன்!
எனதெனும் மமதையினை இறைவனே நான் களைவேன்!
குணமிகு மயிலேறிக் குமரனே வருவாயே!

சனியுடன் கோள்யாவும் சேர்ந்தெனை வதைத்தாலும்
கனிவுடன் முருகாவென் றுனதடி நான்பணிய
தனிமயில் மீதேறித் தயவுடன் எனைக்காக்கத்
துணையிரு மயிலுடனேத் துரிதமாய் வருவாயே!

மந்திர தந்திரமும் மாயையாம் வித்தைகளும்,
எந்திர சூனியமும் ஏவலும் ஏசல்களும்
எந்தனைச் சூழாமல் எந்தையே நீ காக்கச்
சுந்தர மயிலேறிச் சுடரென வருவாயே!

சிக்கலில் வேல்வாங்கும் செந்திலம் பதிவாழ்வே!
தெக்கணம் ஆளுகிற தென்னவன் திருமகனே!
இக்கலி யுகந்தனிலே என்கலிதனை நீக்கி
சிக்கலைப் போக்கிடவே சீக்கிரம் வருவாயே!

வினைவழிச் சாபங்களும் விதிவழிச் சோகங்களும்
எனைவழி மறித்தாலும் உனைவழி படும்போதில்
உடன்வழித் துணையாகி உன்னத மயிலேறித்
திடவழி எனக்கருளத் தெய்வமே வருவாயே!

தையலர் இருவருடன் தணிகையில் வாழ்பவனே!
பொய்வளர் பூமியிலே புழுவென வாழுகிறேன்
மெய்வளர் உயர்ஞானம் மேன்மையாய் எனக்கருளத்
தையலர் துணையோடு தயவுடன் வருவாயே!

தென்பரங் குன்றமதில் திகழ்கிற வடிவழகா!
என்மனக் குன்றமதில் எழுந்தருள் சிவபாலா!
கண்மணி ஆனவனே ! கார்த்திகை பாலகனே!
என்வினை அதுதீர எழிலுடன் வருவாயே!

கழல்அணி திருவடியும் கவின்மிகு எழில்முகமும்
இடைஅணி வெண்துகிலும் எழில்மிகு திருமார்பும்
என்மனத் திரைவானில் என்றுமே ஒளிரும்படி
சண்முகப் பேரழகே சரவணா வருவாயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top