Home » பொது » தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்
தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

சுவாமி சகஜானந்தர்
(பிறப்பு: 1890, ஜன. 27- மறைவு: 1959, மே 1)

தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவசீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக்கொண்டும் இருந்த போது, தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர்.

இளம் வயதில்…

1890, ஜனவரி 27-ல் ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில் அண்ணாமலை – அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர் நமது முனுசாமி. இவரே பின்பு சகஜானந்தர் எனப் புகழ் பெற்றவர்.

சிறு வயதிலிருந்தே விளையாட்டை வெறுத்து மௌனத்தை நேசிக்கும் பாலகனாய்த் திகழ்ந்தார். அசைவ உணவை வெறுப்பதிலும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவதும் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன.

தனது தாயார் காடைப் பறவையைப் பிடித்து அரியப் போகும் நேரத்தில் தனது தங்கையை அரிவாளால் வெட்டுவது போல பாசாங்கு செய்தார். பதறிப்போய் தடுக்கவந்த தாயிடம், ‘இப்படித் தானே அந்தப் பறவையின் அம்மாவுக்கும் இருக்கும்?’ என்றார்.

அந்த விநாடி முதல் அந்தக் குடும்பமே சைவ உணவுக்கு மாறியது.

பள்ளிப்படிப்பு:

ஊரில் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்த முனுசாமி 1901-ல் ஆறாம் வகுப்பை திண்டிவனம் அமெரிக்கன் ஆற்காடு கிறிஸ்தவ உயர்நிலை பள்ளியில் துவக்கினார். சில மாதங்களிலேயே பைபிளை மனப்பாடமாக ஒப்புவித்தார். பூரித்துப்போன நிர்வாகம் அவருக்கு ஆறாம் வகுப்பிலேயே ‘சிகாமணி’ எனப் பட்டம் வழங்கியது.

அதோடு நிறுத்தாது அவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற தொடர்ந்து வற்புறுத்தியது. இரு ஆண்டுகள் கடந்தும் அவர்களது ஆசை நிறைவேறவில்லை. கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அமெரிக்கா சென்று படித்து பாதிரியாகத் திரும்பிவரலாம் என ஆசை காட்டினர்.

ஹிந்து மதத்தில் தீவிர பக்தி கொண்டிருந்த முனுசாமி மதம் மாற மறுத்ததால், எட்டாம் வகுப்பில் (1903) பாதியிலேயே அவரை பள்ளியை விட்டு நிர்வாகம் வெளியேற்றியது. மேலும் விடுதி பாக்கி ரூ. 60/- பெற்றுக்கொண்டு குடும்பத்தையும் கடன் தொல்லைக்கு ஆளாக்கியது.

ஞானப்படிப்பு:

படிப்பைத் துறந்து கூலி வேலை செய்யத்துவங்கினார் முனுசாமி. மாலை நேரங்களில் சமய சொற்பொழிவுகளைக் கேட்பதில் கவனம் செலுத்தினார். நீலமேக சுவாமிகள் என்பவரிடம் பல ஆன்மிகக் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

அவருடன் தமிழகத்தின் பல கோயில்களுக்குச் சென்றபோது எந்தக் கோயிலிலும் இவருக்கு ஆலயத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. தெய்வ தரிசனம் காண மனம் ஏங்கியது. கொதித்தது. ஆனாலும் சமுதாயத்தைத் திட்டாது காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.

தட்சிண ஸ்வாமி என்பவரிடம் ஆன்மீகத்தில் மேலும் பல விஷயங்களை பயின்றார். அவர் வியாசர்பாடியில் வாழ்ந்து வந்த கரப்பாத்திர சுவாமிகளிடம் அனுப்பி வைத்தார். கரப்பாத்திர சுவாமிகள் பிச்சை ஓடு கூட வைத்துக் கொள்ளாமல் கரத்தில் வாங்கி உண்டுவந்ததால் ‘கரபாத்திர சுவாமி’ என பெயர்பெற்றவர். அவர் துறவிகளை உருவாக்கும் ஒரு குருகுலத்தையும் நடத்திவந்தார். பலருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சமுதாயத்தை நல்வழிப்படுத்த அனுப்பி வந்தார். அவரிடம் வந்து சேர்ந்தார் நமது முனுசாமி.

சகஜானந்தர் ஆக:

குருகுலத்திலும் பிற துறவிகள் தாழ்ந்த குலத்தவன் என்று ஒதுக்குவதைக் கண்டு மனம் நொந்தார். ஆனால் தனது குரு அப்படிப்பட்டவர் அல்ல என்பதை உணர்ந்து அங்கேயே ஏழு வருடங்கள் தங்கி அனைத்து சாதிரங்களையும் கசடறக் கற்றார்.

கரப்பாத்திர சுவாமிகள் இவருக்கும் தீட்சை கொடுத்து ‘சுவாமி சகஜானந்தர்’ என நாமகரணம் செய்தார். மேலும் நடராஜப் பெருமானின், நந்தனின் நகரமான சிதம்பரத்திற்கு 1910 ஜூலை 7-ம் தேதி ஆருத்திரா தரிசனத்தன்று ஆதிதிராவிட மக்களுக்காக தொண்டு செய்ய அனுப்பி வைத்தார்.

கல்விப்பணியில் :

1911-ஆம் ஆண்டு மூன்று மானவர்களுடன் பள்ளியைத் துவக்கினார். மக்கள் பஜனை மடமென கேலி செய்தனர். மனம் தளராது தொடர்ந்து பணி புரிந்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எண்ணிக்கை இருபத்தைந்தைத் தொட்டது.

அதே சமயத்தில் அனைத்து சமுதாய நல்லிணக்கம் ஏற்பட முயற்சி செய்தார். அவர்களைக் கொண்டே 1916, ஜூலை 7-ம் தேதி நந்தனார் கல்விக் கழகத்தை ஆரம்பித்தார். இதில் வந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து சில வருடங்களுக்குள் பின்னத்தூர், ராதா விளாகம், கிள்ளை, கொடிப்பள்ளம் போன்ற ஏழு ஊர்களில் கிளைகளைத் துவக்கினார்.

மாணவர்களுக்கு படிப்பு மட்டுமல்லாது, ஆன்மிக ஞானத்தையும், தொழிற்கல்வியையும் சேர்த்து போதித்தார். மாணவர்கள் தலையில் குடுமி, கழுத்தில் ருத்திராட்சம் அணிய வைத்தார். மேலும் தமிழிசை சொல்லிக் கொடுத்தார்.

திருவிழாக்களின் போது நடராஜர் படத்தை எடுத்துக்கொண்டு தேவார, திருவாசகப் பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக வரச் செய்தார்.

1929-ல் மாணவர் இல்லமும், 1930-ல் மாணவியர் விடுதியும் துவக்கினார். மாணவர்களின் மேற்படிப்புக்காக மீனாட்சி கல்லூரியிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் இடம் வாங்கிக் கொடுத்தார்.

6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 28-க்கும் மேற்பட்ட உயர் பதவி வகித்த அரசு அதிகாரிகளும் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இந்தப் பள்ளியின் முன்னாள் மானவர்கள் என்பதிலிருந்தே அவரது கல்வித் தொண்டை அறிந்துகொள்ளமுடியும்.

இலக்கியத்தில் :

வ.உ.சி. எழுதிய ‘அகமே புறம், மெய்யறம்’ என்ற இரு நூல்களுக்கும் சுவாமி சகஜாந்தர் அணிந்துரை எழுதியுள்ளார்.

நாரத சூத்திரத்தை தமிழில் ‘யார் பிராமணன்?’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். ‘நமது தொன்மை’ என்ற நூலையும், ‘பரஞ்சோதி’ என்ற இதழையும், ‘ஆக்ஸ்போர்டு’ என்ற அச்சகத்தையும் நடத்திவந்தார்.

பொதுவாழ்வில்:

துறவு மேற்கொண்டாலும் தனது சமூக மக்களின் நலனுக்காக பலரின் வேண்டுகோளுக்கிணங்க அரசியலில் ஈடுபட்டார். இலவச மனைப்பட்டா, தீப்பிடிக்காத காங்கிரீட் வீடுகள், வாரக்கூலி, விவசாயக் கூலி நிர்ணயம் போன்றவை மட்டுமல்லாது, வெட்டியான், தலையாரி, தோட்டி போன்றவர்களுக்கு பல உரிமைகளையும், நிவாரணங்களையும் போராடிப் பெற்றுத்தந்தார். சுமார் 34 ஆண்டுகள் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார்.

ஆலயப் பிரவேசம் :

1939-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது, சட்டமன்றத்தில் அனைத்து ஜாதியினரும் ஆலயத்தினுள் நுழையலாம் என சட்ட மசோதா கொண்டுவந்தார். அந்த மசோதா தோல்வி அடைந்தது. ஆலய நுழைவுக்காக சகஜானந்தர் அணிதிரட்டி தொடர்ந்து போராடினார்.

1947 ஏப்ரலில் அவரது கனவு நனவாகியது. அனைவரும் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவரும் அவரது மாணவர்களும் ஆனந்த நடராஜனை ஆலயத்திற்குச் சென்று கண்ணாரக் கண்டு கண்ணீர் விட்டு அழுதனர்.

அன்று ஆனந்தத் தாண்டவம் ஆடியது நடராஜர் மட்டுமல்ல, 40 வருடங்களாக ஏங்கிய சகஜானந்தரது உள்ளமும் கூட.

கடைசி மூச்சுவரை (1959, மே 1) சமூக மேம்பாட்டுக்காக பணிபுரிந்த அவரை நினைவுகூர்வோம். இன்றும்கூட ஆங்காங்கே தொடரும் தீண்டாமைத் தீயை அணைக்க, நாமும் சகஜானந்தர் வழியில் செயல் புரிவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top