Home » பொது » தமிழைக் காத்த தாத்தா
தமிழைக் காத்த தாத்தா

தமிழைக் காத்த தாத்தா

உ.வெ.சாமிநாத ஐயர்
பிறப்பு: 1855,  பிப். 19- மறைவு: 1942, ஏப். 28)

தமிழ்மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா!

1855,  பிப். 19-ஆம் நாள், நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில், வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு!

அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர், இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார்.

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.  இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கு மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.

அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன்சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் ‘சீவகசிந்தாமணி’. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான “பத்துப்பாட்டு’ என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’ போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அடுத்து ‘குறுந்தொகை’ என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். ‘சங்க நூல்கள்’, ‘பிற்கால நூல்கள்’,  ‘இலக்கண நூல்கள்’,  ‘திருவிளையாடற் புராணம்’ போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

இவர் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் தனது 17 வது வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் தமிழ் கற்றார். பின்னர் கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும்,  சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி  ‘மகா மகோபாத்யாயர்’ என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு ‘தமிழ் இலக்கிய அறிஞர்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, ‘இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது’ என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் ‘தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1940-ஆம் ஆண்டு ‘என் சரித்திரம்’ என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன.

இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942, ஏப். 28 -ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top