Home » பொது » மறக்கக்கூடாத மாமனிதர்
மறக்கக்கூடாத மாமனிதர்

மறக்கக்கூடாத மாமனிதர்

வீர சாவர்க்கர்

(பிறப்பு: 1883, மே 28-  மறைவு:1966, பிப். 26)

இந்திய விடுதலைப்போரில் மகத்தான தியாகம் செய்தவர்களுள் தலையாயவர் ‘வீர சாவர்க்கர்’ எனப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர். புரட்சியாளர், சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், பேச்சாளர், கவிஞர், அரசியல் தலைவர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்,… எனப்  பன்முக ஆளுமை உடையவர் சாவர்க்கர். அபிநவ பாரத சங்கம் முதல் ஹிந்து மகா சபா வரை, அவரது அரசியல் பயணம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது.

ஆங்கிலேயரின் சொந்த நாட்டிலேயே அவர்களுக்கு எதிராக முழங்கிய தீரர் சாவர்க்கர். மதன்லால் திங்ரா என்ற மாவீரன் லண்டனில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்று இந்தியர்களின் சுதந்திர தாகத்தை அந்நாட்டு மக்களுக்கு புரியச் செய்தார் (1, ஜூலை, 1909). அதற்கு பின்புலமாக இருந்த சாவர்க்கர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.

அப்போது கப்பலில் இருந்து தப்பி பிரான்ஸ் கடற்கரையில் ஏறிய அவரை பிரிட்டீஷ் போலீசார் துரத்திவந்து கைது செய்தனர். அந்தக் கைது காரணமாக, இரு ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சட்டப் போர் நடந்தது. இது உலக அளவில் அப்போது பலத்த வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசு அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது சகோதரர்கள் இருவரும் கூட விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதானார்கள். சாவர்க்கர் அந்தமான் சிறையில், செல்லுலர் அறையில் அடைக்கப்பட்டு  பயங்கர சித்ரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவித்தார் (1911 – 1924). பிறகு கடுமையான நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட அவர், வாழ்வின் பின்னாட்களை சமூக சீர்திருத்தத்தில் செலுத்தினார்.

தாழ்த்தப்பட்ட  மக்களுக்கான ஆலயம் அமைத்தல், தீண்டாமைக்கு எதிர்ப்பு, மதமாற்றத்துக்கு எதிர்ப்பு, சுய சரிதை, வரலாற்று ஆய்வு, என அவரது வாழ்க்கை அமைந்தது. பின்னாளில் ஹிந்து மகா சபா என்ற அரசியல் கட்சியை காங்கிரசுக்கு எதிராக அமைத்தார். மகாத்மா காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு, பிறகு குற்றமில்லை என்று விடுவிக்கப்பட்டார்.

ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டபோதெல்லாம் கலங்காத சாவர்க்கர், சுதந்திர பாரத அரசு தன்னை பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்துவிட்டதே என்று மனமுடைந்த நிலையில் இறுதிக்காலத்தைக் கழித்த சாவர்க்கர், அதற்காக சும்மாவும் இருக்கவில்லை. நாட்டின் அரசியலை வழிப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியபடியே இருந்தார்.

மே 28,  1883-இல் பிறந்த சாவர்க்கர், பிப். 26, 1966-இல் மறைந்தார். இங்கு கூறப்பட்டுள்ள  தகவல்கள் சாவர்க்கரை சிறிய அளவில் அறிமுகப்படுத்துபவை மட்டுமே. அவரது வாழ்வே ஒரு வேள்வி. அவரது வாழ்வை முழுமையாக அறிய, அவர் எழுதிய நூல்களையும் அவரைப் பற்றிய நூல்களையும் இளைய தலைமுறையினர் படிக்க வேண்டும்.

சாவர்க்கர் மிகத் தீவிரமான எழுத்தாளர். அந்தமான் சிறையில் இருந்தபோது தான் செய்த ஆராய்சிகளை மனதில் இருத்தி, அவர் எழுதிய இந்தியாவின் வரலாறு நமது மகோன்னதமான பெருமைகளை நமக்கு நினைவுபடுத்துவதாகும். எரிமலை அல்லது முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்ற அவரது நூலே, 1857 ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போர் பற்றிய முழுமையான பதிவாகும். அவரது வரலாற்று மேதமை குறித்து திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரை ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் உள்ளது.

நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தங்கள் ரத்தம் சிந்திப் போராடிய மறவர்களுள் சாவர்க்கர் முதன்மையானவர். அவரது நினைவே நமக்கு நாட்டைக் காக்கும் துணிவையும் தேசபக்தியையும் நல்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top