Home » சிறுகதைகள் » கனவுகள் பலிக்கும்!
கனவுகள் பலிக்கும்!

கனவுகள் பலிக்கும்!

சாளுவ நாட்டை சங்கசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவர் காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலித்து விடும் என்ற மூடநம்பிக்கை கொண்டிருந்தான்.

அவனது மந்திரியும், “அப்படி நினைப்பது சரியல்ல என எவ்வளவு கூறியும்’ அவர் அதனை ஏற்கவில்லை.

மன்னன்தான் காணும் கனவுகளின் படியே பின்னர் நடக்கும் என நம்பியதற்கு ஏற்ப ஓரிரண்டு கனவுகள் பலித்தும் விட்டன.

“பார்த்தீர்களா, நான் பார்த்த கனவுகள் பலித்து விட்டன,” என்பார்.
அப்போதைக்கு அவர்கள் எதுவும் கூறவில்லை.

ஓரிரவில் மன்னன் தான் படுத்துத் தூங்கும் அறையில் ஒரு பாம்பு வந்தது போலவும், அதனை அந்த அறையைக் காவல் காத்த வீரன் கண்டு கொன்று விட்டது போலவும் கனவுக் கண்டான். மறுநாள் காலை தான் கண்ட கனவை அவன் மந்திரியிடமும் சேனாதிபதியிடமும் கூறி அந்தக் கனவு பலிக்குமே என்று கவலைப்பட்டார்.

மன்னன் தன் கனவைக் கூறிக் கொண்டிருந்தபோது மல்லப்பன் என்ற காவலாளி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் மனதில் மன்னரின் தயவைப் பெற அக்கனவை உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்தான்.

அவன் இதற்காக ஒரு பாம்பையும் பிடித்து வைத்திருந்தான். அவன் மன்னனின் படுக்கை அறையைக் காவல் புரியச் சென்றபோது நள்ளிரவில் தான் பிடித்து வந்த அந்தப் பாம்பைப் படுக்கை அறைக்குள் விட்டான். பிறகு அந்த அறையின் கதவை தடதடவென்று தட்டினான்.

மன்னனும் கதவைத் திறந்து என்ன என்று கேட்க, மல்லப்பனும், “ஒரு பாம்பு தங்கள் படுக்கை அறைக்குள் புகுந்ததைப் பார்த்தேன்,” எனக் கூறி சுற்றிலும் பார்த்தான். ஓரிடத்தில் தான் விட்ட பாம்பு இருப்பதைக் கண்டு அதை அவன் அடித்துக் கொன்றான். மன்னனும் அவனைப் பாராட்டித் தன் முத்து மாலையைப் பரிசாக அளித்தான். மறுநாள் காலை மன்னன் தான் கண்ட கனவு பலித்ததை மந்திரிக்கும், சேனாதிபதிக்கும் விவரமாகக் கூறினான்.

அவர்கள் இருவருக்கும் மல்லப்பன் செய்த ஏமாற்று வேலை அது என்பது தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் மன்னனிடம் எதுவும் பேசவில்லை. அவர்கள் சேனாதிபதியின் அறைக்குப் போய் மல்லப்பனை அங்கு வர வழைத்தனர்.

மந்திரி நயமாக மல்லப்பனைக் கேட்டும், அவன் உண்மையைச் சொல்லவில்லை. ஆனால், சேனாதிபதி அவனை மிரட்டி, அடிஅடி என அடித்த பிறகே மல்லப்பன் உண்மையைக் கக்கினான்.

மந்திரியும், “இந்த முறை உன்னை விட்டுவிடுகிறேன். மறுபடியும் இந்த மாதிரி ஏதாவது தில்லு முல்லு செய்தால் கடுமையாக தண்டிப்பேன்,” எனக் கூறி எச்சரித்து அனுப்பினான்.

மல்லப்பன் மந்திரியை பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் தன்னை அடித்த சேனாதிபதியைப் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்துக் கொண்டான். அதற்கான சந்தர்ப்பத்தை அவன் எதிர்பார்க்கலானான்.

ஒரு வாரத்திற்குப் பின் மன்னன் மந்திரியிடமும், சேனாதிபதியிடமும், “நான் நேற்று ஒரு கனவு கண்டேன். அதில் யாரோ ஒரு வீரன் என்னைக் குத்தியது போல இருந்தது. அந்த வீரனின் முகம் சரியாகத் தெரியவில்லை. அந்த வீரன் யார் எனத் தெரிந்தால் பிடித்து, தண்டித்து விடலாம். ஆனால், அதற்குள் என் கனவுப்படி நடந்து விட்டால் என்ன செய்வது?” என்றான்.

அப்போது சற்று தூரத்தில் நின்ற மல்லப்பன் மன்னன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தான். சேனாதிபதியை ஒழிக்க அவன் உடனே திட்டம் போட்டான். அன்றிரவு ஒரு மந்திரவாதியை ஊர் மயானத்தில் காளி உபாசனை செய்யச் சொன்னான். மந்திரவாதியும் மண்டை ஓடு, எலும்புத் துண்டுகள், எலுமிச்சம் பழங்கள் எல்லாம் ஒரு கோலம் போட்டு வைத்து மந்திரத்தை ஜெபிக்கலானான்.

மல்லப்பன் மன்னனிடம் போய், “அரசே! தங்களைக் கொல்ல முயல்பவர் யாரென்று தெரிந்து விட்டது. நம் சேனாதிபதிதான் நீங்கள் கனவில் கண்ட வீரன், நான் என் ஆடு ஒன்று காணாமல் போனதால் அதைத் தேடிக் கொண்டு மயானம் பக்கம் போனேன். அப்போது நம் சேனாதிபதியும், ஒரு மந்திரவாதியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்.

சேனாதிபதி மந்திரவாதியிடம், தங்களை ஒழிக்க காளி பூஜை செய்யச் சொன்னான். இப்போது அந்த மந்திரவாதி தங்கள் பெயரைச் சொல்லியவாறே மயானத்தில் பூஜை செய்து கொண்டிருக்கிறான். நீங்களே வந்து பாருங்கள்,” என்றான்.

மன்னன் முதலில் அதை நம்பவில்லை. ஆனால், மல்லப்பன் வற்புறுத்தியதன் பேரில் அவனோடு சென்றான். அங்கு மந்திரவாதி காளி பூஜை செய்வதையும், மந்திரங்களிடையே தன்னுடைய பெயரைப் பல தடவைகள் கூறுவதையும் கேட்டான். உடனே அவன் அரண்மனைக்கு வந்து சேனாதிபதியைக் கைது செய்து சிறையில் அடைக்குபடிச் கட்டளை இட்டான். சேனாதிபதியும் சிறையில் அடைக்கப்பட்டான்.

மன்னன் மந்திரியிடம், “நான் பார்த்த இந்தக் கனவும் பலிக்குமோ என்ற பயம் இருந்தது. நல்லவேளையாக இந்த மல்லப்பன்தான் சேனாபதியைக் கண்டுப்பிடித்துச் சொன்னான். தக்க சமயத்தில் போய் அவனைக் கையும் மெய்யுமாகப் பிடித்தேன்,” என்றான்.

மந்திரி அப்போதும் எதுவும் பேசவில்லை. என்ன சொன்னாலும் மன்னன் கேட்கமாட்டான் என்பது அவனுக்குத் தெரிந்ததே.

இது மல்லப்பன் சூழ்ச்சி என உணர்ந்த மந்திரி அவனை அழைத்து, “மல்லப்பா! ஆரம்பித்து விட்டாயா உன் வேலையை. உன்னை முதல் தடவை எச்சரித்தேன். அதை நீ லட்சியம் செய்யவில்லையா?” என்று கேட்டான்.

மல்லப்பனும் கர்வமாக, “உங்கள் எச்சரிக்கையை குப்பையில் போடுங்கள். என்னால் உங்களைக் கூட சிறையில் அடைக்க முடியும். மன்னர் நான் சொல்வதை நம்பி விடுவார்,” என்றான்.

இதற்குச் சில நாட்களுக்குப் பின் மன்னன் ஒரு கனவு கண்டான். அதில் மல்லப்பன் தன் எதிரியான ஒரு மன்னனோடு சேர்ந்து சதி செய்து தன்னைக் கொல்வது போல அவர் கண்டான். உடனே அவர் கண்விழித்துக் கொண்டு மல்லப்பனைக் பிடித்து சிறையில் அடைக்குமாறு கட்டளை இட்டான்.
இதை அறிந்த மல்லப்பன் பயந்து ஓடி விட்டான்.

மறுநாள் அவன் யாரும் காணாதபோது மந்திரியைக் கண்டு, “உங்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாததால் இப்போது எனக்கே ஆபத்து வந்து விட்டது. என்னைக் காப்பாற்றுங்கள்,” என்றான்.
மந்திரியும், “காப்பாற்றுகிறேன். ஆனால் நீ இரண்டு தடவைகளில் செய்த ஏமாற்று வேலைகளை மன்னனிடம் கூறி ஒப்புக் கொள்ள வேண்டும். அது எப்போது என நான் சொல்லும்வரை நீ என் வீட்டு அறையில் ஒளிந்து கிட,” என்றான்.

மல்லப்பனும் அதற்குச் சம்மதித்தான்.

சில நாட்கள் சென்றன.

மன்னன் தினமும் மல்லப்பன் தன்னைக் கொல்ல வருவானோ என்று பயந்து கொண்டிருந்தான்.

ஒருநாள் மந்திரி, “அரசே! மல்லப்பன் தன் ஊரில் பாம்புக் கடியால் இறந்து விட்டான்,” என்றான்.

மன்னனும், “அப்பாடா! இனி மல்லப்பன் வருவான் என்ற பயம் இல்லை. நிம்மதியாக இருக்கலாம்,” என்றான் மகிழ்ச்சியுடன்.

ஒருவாரம் சென்ற பின் மந்திரி மன்னனிடம், “மல்லப்பன் இப்போது உங்கள் கனவில் வருகிறானா?” எனக் கேட்டான். மன்னனும் சிரித்தவாறே, “இறந்தவன் எப்படி வருவான்?” எனக் கேட்டான்.

மந்திரியும், “மல்லப்பன் இறக்கவில்லை. உயிருடன்தான் இருக்கிறான். அவனை நான் பிடித்து அடைத்து வைத்திருக்கிறேன். நீங்கள் கனவுப்படி நடக்கும் என நினைத்தது தவறு,” என்றான்.

மன்னனும், “அப்படியானால் முன் இரண்டு கனவுகளின்படி நடந்ததற்கு என்ன சொல்கிறீர்?” என்று கேட்டான்.

மந்திரியும், “அது மல்லப்பன் செய்த ஏமாற்று வேலை,” எனக் கூறி மல்லப்பனை அழைத்து வரச் சொன்னான்.

மல்லப்பன் மன்னனின் கால்களில் விழுந்து தான் செய்த ஏமாற்று வேலைகளுக்காகத் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.

மன்னன் அவனை மன்னித்து, சேனாதிபதியை விடுதலை செய்ய உத்தரவிட்டான். அதன் பின் கனவுகள் அப்படியே பலிக்கும் என்ற மூடநம்பிக்கையை மன்னர் விட்டு விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top