Home » பொது » நளதமயந்தி பகுதி – 5
நளதமயந்தி பகுதி – 5

நளதமயந்தி பகுதி – 5

பின்பு தன் கணவனிடம், மகாராஜா! நமக்கு துன்பம் வந்தால் தெய்வத்திடம் முறையிடலாம். ஆனால், தெய்வமே நமக்கு துன்பம் தர முன்வந்துள்ள போது, அதை யாரிடத்தில் முறையிட முடியும்! ஆம்..இது நம் விதிப்பலன். நடப்பது நடக்கட்டும். வாருங்கள். இந்த இடத்தை விட்டு கிளம்புவோம், என்றாள்.

நளனும் கிளம்பினான். காட்டுப்பாதையில் அவர்கள் நீண்டதூரம் சென்றனர். மாலை நேரமானது. சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது. அந்தக் கரிய இருளில் தன் மனைவியுடன் நடந்தான் நிடதநாட்டு மன்னன். தமயந்தியோ தடுமாறினாள். பேய்களுக்கு கூட கண் தெரியாத அளவுக்கு இருட்டு..எங்கே தங்குவது? நடுக்காட்டில் அங்குமிங்குமாய் முட்செடிகள் வேறு. பாதுகாப்பாக இருக்க இடமே கிடைக்கவில்லை. அந்நேரத்தில் ஏதோ நல்வினையின் பலன் குறுக்கிட்டது போலும்! பாழடைந்து போன மண்டபம் ஒன்று நளனின் கண்களில் பட்டது.

தமயந்தி! வா! இந்த மண்டபத்தில் இன்றைய இரவுப்பொழுதைக் கழிப்போம், என்றார். தூண்களெல்லாம் இடிந்து எந்த நேரம் எது தலையில் விழுமோ என்றளவுக்கு இருந்த அந்த மண்டபத்தில் அவர்கள் தங்கினார்கள். நளன் சற்றே பழைய நினைவுகளை அசைபோட்டான்.

பளிங்கு மாமண்டபத்தில், பால் போல் ஒளி வீசும் வெண்கொற்றக்குடையின் கீழ் தமயந்தியுடன் கொலு வீற்றிருந்த கோலமென்ன! கொடிய சூதாட்டத்தால், இந்த இடிந்த மண்டபத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை வந்ததென்ன! அந்த மண்டபத்தின் தரைக்கற்கள் பெயர்ந்து மண்ணாகக் கிடந்தது. சற்று சாய்ந்தால் கற்கள் உடலில் குத்தியது. காட்டுக்கொசுக்கள் ஙொய் என்று இரைந்தபடியே அவர்களின் உடலில் கழித்தன.

தமயந்தி கலங்கிய கண்களுடன், நிடதநாட்டு சோலைகளில் வண்டுகளின் ரீங்காரம் செய்ய, அதைத் தாலாட்டாகக் கருதி உறங்கினீர்களே! அப்படிப்பட்ட புண்ணியம் செய்த உங்கள் காதுகள், இங்கே இந்த கொடிய கொசுக்களின் இரைச்சலில் உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதே! என்று கணவனிடம் சொன்னாள்.

நளன் அவளிடம், கண்மணியே! கெண்டை மீன் போன்ற உன் கண்களில் இருந்து கண்ணீர் வழியலாமா? மனதைத் தேற்றிக்கொள்! முன்வினைப் பயனை எல்லாருமே அனுபவித்தாக வேண்டும்! இப்பிறவியில் நாம் யாருக்கும் கேடு செய்யவில்லை. முற்பிறவிகளில் என்னென்ன பாவங்கள் செய்தோமோ! ஆனால், அதை உன்னையும் சேர்ந்து அனுபவிக்க வைத்துவிட்டேனே என்பது தான் கொடுமையிலும் கொடுமை, என்று வருத்தப்பட்டான் நளன்.

ஆண்கள் என்ன தான் தேறுதல் சொன்னாலும், பெண்கள் ஒன்றை இழந்துவிட்டால், அவர்களின் மனதை ஆற்றுவது என்பது உலகில் முடியாத காரியம். தமயந்தியின் நிலையும் அப்படித்தான்.

அன்பரே! வாசனை மலர்களால் ஆன படுக்கையில், காவலர்கள் வாயிலில் காத்து நிற்க படுத்திருப்பீர்களே! இங்கே, யார் நமக்கு காவல்! என்று புலம்பினாள்.

உடனே நளன், தமயந்தி! இழந்ததை எண்ணி வருந்துவது உடலுக்கும் மனதுக்கும் துன்பத்தையே தரும். இதோ பார்! இந்தக் காட்டிலுள்ள பூக்களும், செடிகளும், மரங்களும் தனித்து தூங்கவில்லையா? திசைகள் இருளில் மூழ்கி உறங்கவில்லையா? பேய்கள் கூட தூங்கிவிட்டன என்று தான் நினைக்கிறேன். எங்கும் நிசப்தமாயிருக்கிறது. இப்படி இரவும் பகலும் விழித்தால் உன் உடல்நிலை மோசமாகி விடும். உறங்கு கண்ணே! என் கைகளை மடக்கி வைக்கிறேன். அதைத் தலையணையாக்கிக் கொண்டு தூங்கு, என்றான்.

அவளும் கண்களில் வழிந்த நீர் அப்படியே காய்ந்து போக, தலைசாய்த்தாள். இருவருக்கும் தூக்கம் வரவில்லை. தன் அன்பு மனைவியின் அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

பாவம் செய்தவள் நீ! இல்லாவிட்டால் எனக்கு வாழ்க்கைப்பட்டிருப்பாயா! வீமராஜனின் மகளாகப் பிறந்து, நட்ட நடுகாட்டில், மண் தரையில் உறங்குகிறாய். உன்நிலை கண்டு என் உயிரும் உடலும் துடிக்கிறது. இந்தக் காட்சியைக் காணவா நான் உன்னைக் காதலித்தேன்! இப்படியொரு கொடிய வாழ்வைத் தரவா உன் கழுத்தில் தாலிக் கொடியைக் கட்டினேன்! என் இதயம் இப்படியே வெடித்து விட்டால் என்னைப் போல் மகிழ்பவர்கள் உலகில் இருக்க முடியாது! நான் இப்படியே மரணமடைந்து விடமாட்டேனா! என்று அழுதான்.

பெண்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அழுவார்கள். ஆனால், கணவன் அழுதால் அவர்களால் தாங்க முடியாது.

அன்பரே! தாங்கள் கண்ணீர் வடிக்குமளவு நான் தான் உங்களுக்கு கொடுமை செய்தேன்! அற்ப பறவை மீது கொண்ட ஆசையால், உங்கள் ஆடையை இழக்கச் செய்தேன்! என் முந்தானை உங்கள் ஆடையானதால், அதை விரித்து உங்களைப் படுக்க வைக்க இயலாமல் போனேன். இப்படி ஒரு கொடுமை இந்த உலகில் எந்த ஒரு பெண்ணுக்கும் வரக்கூடாது, என்று புலம்பித் தீர்த்தாள்.

இப்படி புலம்பியபடியே அவள் தன் கைகளை அவனுக்கு தலையணையாகக் கொடுத்து, கால்களை குறுக்கே நீட்டி, அதன் மேல் அவனது உடலைச் சாய்க்கச் சொல்லி, மண்டபத்து மணலும், கல்லும் அவன் முதுகில் குத்தாமல் இருக்க உதவினாள். ஒருவழியாக அவள் உறங்கத் தொடங்கினாள். இப்படி இவள் படும் பாட்டைக் கண்கொண்டு பார்க்க நளனால் முடியவில்லை.

இவளை இங்கேயே விட்டுச்சென்று விட்டால் என்ன! இவள் காட்டில் படாதபாடு படுவாள் என்பது நிஜம்! ஆனாலும், அது நம் கண்களுக்குத் தெரியாதே! என்ன நடக்க வேண்டுமென அவளுக்கு விதி இருக்கிறதோ, அது நடக்கட்டும்! இவளை இப்படியே விட்டுவிட்டு கிளம்பி விடலாமா! நளனின் மனதில் சனீஸ்வரர் விஷ விதைகளை ஊன்றினார்.

நளன் கிளம்பி விட்டான். இரண்டடி நடந்திருப்பான், மனம் கேட்கவில்லை. மீண்டும் வந்து தமயந்தியை எட்டிப்பார்த்தான். ஏதுமறியா, அந்த பிஞ்சு இதயத்திற்கு சொந்தக்காரியான அவள், பச்சைமழலை போல், பால் மாறா முகத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாள். இவளை விட்டா பிரிவது? வேண்டாம்.. இங்கேயே இருந்து விடலாம்… என்று எண்ணியவனின் மனதில் கலியாகிய சனீஸ்வரன் மீண்டும் வந்து விளையாடினான்.

போடா போ, இவள் படும் பாட்டை சகிக்கும் சக்தி உனக்கில்லை, புறப்படு, என்று விரட்டினான்.ஆம்..கிளம்ப வேண்டியது தான்! அவள் படும்பாட்டை என்னால் சகிக்க முடியாது. புறப்படுகிறேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டவனின் மனம் தயிர் கடையும் மத்தை கயிறைப் பிடித்து இழுக்கும்போது, அங்குமிங்கும் கயிறு போய்வருமே…அதுபோல் வருவதும், போவதுமாக இருந்தான். ஒரு வழியாக, உள்ள உறுதியுடன் அங்கிருந்து வேகமாகப் போய்விட்டான்.

செல்லும் வழியில் அவன் தெய்வத்தை நினைத்தான். தெய்வமே! அனாதைகளுக்கு நீயே அடைக்கலம். என் தமயந்தியை அனாதையாக விட்டு வந்து விட்டேன். உன்னை நம்பியே அவளை விட்டு வந்திருக்கிறேன். அவளுக்கு ஒரு கஷ்டம் வருமானால், அவளை நீயே பாதுகாத்தருள வேண்டும். இந்தக் காட்டில் இருக்கும் தேவதைகளே! நீங்கள் என் தமயந்திக்கு பாதுகாவலாக இருங்கள். அவள் என்னிடம் பேரன்பு கொண்டவள், நானில்லாமல் தவித்துப் போவாள். நீங்களே அவளுக்கு அடைக்கலம் தர வேண்டும், என வேண்டியபடியே நீண்டதூரம் போய்விட்டான்.

நள்ளிரவை நெருங்கியது. ஏதோ காரணத்தால், தூக்கத்தில் உருண்ட தமயந்தி கண் விழித்துப் பார்த்தாள். இருளென்பதால் ஏதும் தெரியவில்லை. காட்டுப்பூச்சிகளின் ரீங்காரம், ஆங்காங்கே கேட்கும் மிருகங்களின் ஒலி தவிர வேறு எதுவும் அவள் காதில் விழவில்லை. இருளில் தடவிப் பார்த்தாள். அருகில் இருந்த மணாளனைக் காணவில்லை.

மன்னா…மன்னா… எங்கே இருக்கிறீர்கள்? இந்த இருளில் என்னைத் தவிக்க விட்டு எங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று, பக்கத்தில் எங்காவது அவன் இருப்பான் என்ற நம்பிக்கையில் மெதுவாக அவள் அழைத்தாள். சப்தமே இல்லை. சற்று உரக்க மன்னவரே! எங்கிருக்கிறீர்கள்? என்று கத்தினாள். பலனில்லை.

போய் விட்டாரா! என்னைத் தவிக்க விட்டு எங்கோ போய்விட்டாரே! இறைவா! நட்ட நடுகாட்டில் கட்டியவர் என்னை விட்டுச்சென்று விட்டாரே! நான் துன்பத்தை மட்டுமே அனுபவிப்பதற்கென்றே பிறந்தவளா? ஐயோ! நான் என்ன செய்வேன்? அவள் புலம்பினாள். பயம் ஆட்டிப்படைத்தது. நடனமாடிக் கொண்டிருந்த மயில் மீது, வேடன் விடுத்த அம்பு தைத்ததும் அது எப்படி துடித்துப் போகுமோ அதுபோல இருந்தது தமயந்தியின் மனநிலை. கைகளால் தலையில் அடித்துக் கொண்டு, கூந்தல் கலைய அழுது புரண்டாள்.

விடிய விடிய எங்கும் போகத் தோன்றாமல் அவள் அங்கேயே கிடந்து என்னவரே! எங்கே போய்விட்டீர்கள்! இது உங்களுக்கே அடுக்குமா! இறைவா! ஒரு அபலைப் பெண்ணென்றும் பாராமல் இப்படி கொடுமைக்கு ஆளாக்கிப் பார்க்கிறாயே! என்று அந்தக் காட்டிலுள்ள புலியின் கண்களிலும் கண்ணீர் வழியும் வகையில் அவள் உருகி அழுதாள். அவளது துன்பத்தை சற்றே தணிக்கும் வகையில் சூரியன் உதயமானான். அவள் முன்னால் சில மான்கள் துள்ளி ஓடின. மயில்கள் தோகை விரித்தாட ஆரம்பித்தன.

மான்களே! மயில்களே! நீங்கள் நீண்ட காலம் இந்தக் காட்டில் மகிழ்வுடன் வாழ வேண்டும். என் மன்னவரைக் கண்டீர்களா? அவர் எங்கிருக்கிறார்? என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள், என்று கதறினாள். அங்குமிங்கும் சுற்றினாள். அந்த நேரத்தில் வேகமாக ஏதோ ஒன்று அவளது கால்களைப் பற்றி இழுத்தது. தன்னை யார் இழுக்கிறார்கள் என்று பார்த்தபோது, மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்றிடம் சிக்கியிருப்பதே அவளுக்கு புரிந்தது. அவள் அலறினாள்.

மகாராஜா… மகாராஜா…இந்தப் பாம்பிடம் சிக்கிக் கொண்டேன். அது என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஓடி வந்து காப்பாற்றுங்கள், என்ற அவளது அலறல் சுற்றுப்புற மெங்கும் எதிரொலித்தது. இதற்குள் பாம்பு அவளது வயிறு வரை உள்ளே இழுத்து விட்டது. அப்போது அவளது பேச்சு மாறியது. தாங்கள் என்னை விட்டுப் பிரிந்த போதே என் உயிர் பிரிந்திருக்க வேண்டும். அவ்வாறு பிரியாத கல் மனம் கொண்டவள் என்பதால், இந்தப் பாம்பு என்னை விழுங்குகிறது போலும்! இருப்பினும், இந்த கல் நெஞ்சத்தவளை மன்னித்து என்னைக் காப்பாற்ற ஓடோடி வாருங் கள், என்றாள்.

கிட்டத்தட்ட இறந்து விடுவோம் என்ற நிலை வந்ததும், என் இறைவனாகிய நளமகராஜனே! இந்த உலகில் இருந்து பிரிய அனுமதி கொடுங்கள், என்று மனதுக்குள் வேண்டிய வேளையில், வேடன் ஒருவன், ஏதோ அலறல் சத்தம் கேட்கிறதே எனக் கூர்ந்து கவனித்தபடி அந்தப் பக்கமாக வந்தான். அவனைப் பார்த்த தமயந்தி, மனதில் சற்று நம்பிக்கை பிறக்கவே, ஐயா! இந்தப் பாம்பிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்,என்று கத்தினாள்.

உடனே வேடன் அந்த பாம்பை தன் வாளால் வெட்ட, அது வலி தாங்காமல் வாயைப் பிளந்தது. இதைப் பயன்படுத்தி அவளை வெளியே இழுத்துப் போட்டான். பாம்பு வலியில் புரண்டபடிதவித்துக் கொண்டிருக்க, அவளை சற்று தள்ளி அழைத்துச் சென்றான் வேடன். ஐயா! என்னைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றினீர்! இதற்கு பிரதி உபகாரம் என்ன செய்தாலும் தகும். தங்களுக்கு நன்றி, என்றாள்.

வேடன் அவளை என்னவோ போல பார்த்தான். இப்படி ஒரு பருவச்சிட்டா? இவளைப் போல் பேரழகி பூமிதனில் யாருண்டு, நான் ஒரு இளவஞ்சியைத் தான் காப்பாற்றியிருக்கிறேன்! என்று அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தவன், ஆம்..உன்னைக் காப்பாற்றியதற்கு எனக்கு பரிசு வேண்டும் தான்! ஆம்…அந்தப் பரிசு நீ தான்! என்றவன், அவளை ஆசையுடன் நெருங்கினான்.

வேடன் இப்படிச் சொன்னானோ இல்லையோ! அட தெய்வமே! இப்படி ஒரு சொல் என் காதில் விழுந்ததை விட, அந்தப் பாம்பின் பசிக்கே என்னை இரையாக்கி இருக்கலாமே! இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது? என யோசித்தவள், சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள். மனிதனை சூழ்நிலைகள் தான் மாற்றுகின்றன.

பஞ்சணையில் படுத்தவள்…தோழிகள் மலர் தூவ கால் நோகாமல் நடந்து பழகியவள்…ஒரு கட்டத்தில், கணவனின் தவறால் காடு, மேடெல்லாம் கால் நோக நடக்கவே சிரமப்பட்டவள்… இப்போது, ஓடுகிறாள்… ஓடுகிறாள்…புதர்களையும், காட்டுச்செடி, கொடிகளையும் தாண்டி… கற்பைப் பாதுகாக்க உயிரையும் பொருட் படுத்தாத நம் தெய்வப்பெண்கள் இன்றைக்கும் நம் தேசத்துப் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

வேடனுக்கோ அந்த காடு, அவன் வீடு மாதிரி… பழக்கப்பட்ட அந்த இடத்தில் அவனுக்கு ஓடுவது என்பது கஷ்டமா என்ன! வேட்டையாடும் போது, வேகமாக ஓடும் சிறுத்தையைக் கூட விடாமல் விரட்டுபவனாயிற்றே அவன்… மான்குட்டி போல் ஓடிய அவள் பின்னால் வந்து எட்டிப்பிடிக்க முயன்றான். தன்னால், இனி தப்பிக்க இயலாது என்ற நிலையில் தமயந்தியும் நின்று விட்டாள்.

அந்தப் பூ இப்போது புயலாகி விட்டது. கண்களில் அனல் பறந்தது. வேடனே அவள் தோற்றம் கண்டு திகைத்து நின்று விட்டான். அந்தக் கற்புக்கனலே வேடனை எரித்து விட்டது. அவன் பஸ்மமாகி விட்டான். வேடனிடமிருந்து அவள் தப்ப காரணம் என்ன தெரியுமா? தன் கணவன் தன்னைக் கைவிட்டுப் போனதால் தானே இந்த நிலை ஏற்பட்டது என்ற எண்ணம் அவள் மனதுக்குள் இருந்தாலும், அந்த நிலையிலும் கூட, அவள் தன் கணவனைத் திட்டவில்லை. இதெல்லாம் தனது தலைவிதி என்றே நினைத்தாள்.

நன்மை நடக்கும் போது கணவரைப் பாராட்டுவதும், கஷ்டம் வந்ததும் அதற்கு அவனையே பொறுப்பாக்கி திட்டுவதும் இக்காலத்து நடைமுறை. ஆனால், அக்காலப் பெண்கள் அவ்வாறு இல்லை. எந்தச்சூழலிலும் கணவனைத் தெய்வமாகவே மதித்தனர். அதனால் தான் மாதம் மும்மாரி பெய்தது. தங்களுக்கு துன்பம் செய்தவனை கற்புக்கனலால் எரிக்குமளவு பெண்கள் சக்தி பெற்றிருந்தனர்.

என்ன தான் சனியின் கொடியகாலத்தை அனுபவித்தாலும் கூட, தமயந்தி தன் கற்புக்கு வந்த சோதனையில் இருந்து தப்பித்தாள் என்றால், அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மம் தான் அவளைக் காத்தது. இந்த சமயத்தில் வணிகன் ஒருவன் அவ்வழியாக வந்தான். அவன் அவளைப் பற்றி விசாரித்தான். அவள் அழுவதற்கான காரணத்தைக் கேட்டான். நான் முன் செய்த பாவத்தின் காரணமாக காட்டுக்கு வந்தேன். என் கணவரைப் பிரிந்தேன். அவரைத் தேடி அலைகின்றேன், என்றாள்.

அந்த வணிகன் நல்ல ஒழுக்கம் உடையவன். பிறர் துன்பம் கண்டு இரங்குபவன். பெண்ணே! இந்தக் காட்டில் இனியும் இருக்காதே! இங்கிருந்து சில கல் தூரம் நடந்தால், சேதிநாடு வரும். அங்கே சென்றால், உன் பிழைப்புக்கு வழி கிடைக்கும். உன் துன்பம் தீரும்,என்றாள். மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று அவனுக்கு நன்றி சொன்ன தமயந்தி, வேகமாக நடந்து சேதிநாட்டை அடைந்தாள்.

கிழிந்த புடவையுடன் தங்கள் நாட்டுக்கு வந்த புதுப்பெண்ணைக் கண்ட சில பெண்கள், தங்கள் நாட்டு அரசியிடம் ஓடிச்சென்று, தாங்கள் கண்ட பெண்ணைப் பற்றிக் கூறினர். அவளை அழைத்து வரும்படி அரசி உத்தரவிடவே, தோழிகள் தமயந்தியிடம் சென்று, தங்கள் நாட்டு அரசி அவளை வரச்சொன்னதாகக் கூறினர். தமயந்தியும் அவர்களுடன் சென்றாள்.

அரசியின் பாதங்களில் விழுந்த அவள், விதிவசத்தால் தன் கணவனைப் பிரிந்த கதியைச் சொல்லி அழுதாள்.
அவள் மீது இரக்கப்பட்ட அரசி, அவளது கணவனைத் தேடிப்பிடித்து தருவதாகவும், அதுவரை பாதுகாப்பாக தன்னுடனேயே தங்கும்படியும் அடைக்கலம் அளித்தாள். ஒருவாறாக, தமயந்தி பட்ட கஷ்டத்துக்கு தற்காலிகத் தீர்வு கிடைத்தது. இதனிடையே, நளதமயந்தியால், அந்தணருடன் அனுப்பப்பட்ட அவர்களது பிள்ளைகள் விதர்ப்பநாட்டை அடைந்தனர். தங்கள் தாத்தா வீமனைக் கண்ட பிள்ளைகள் அரண்மனையில் நடந்த சம்பவங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

வீமன் அந்த அந்தணரிடம், அந்தணரே! நீர் வேகமாக இங்கிருந்து புறப்படும்! நளனும் தமயந்தியும் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து அரண்மனைக்கு அழைத்து வாரும், என உத்தரவிட்டார். அந்தணர் மட்டுமின்றி, பல தூதுவர்களை நாலாதிசைகளுக்கும் அனுப்பி நளதமயந்தியைக் கண்டுபிடிக்க அனுப்பி வைத்தார். அரசனின் கட்டளையை ஏற்ற அந்தணன், ஏழுகுதிரை பூட்டிய தேரில் நளதமயந்தியை தேடிச்சென்றார். பலநாடுகளில் தேடித்திரிந்த அவர், அழகு பொங்கும் தேசமான சேதிநாட்டை அடைந்தார்.

சேதி நாட்டு அரண்மனைக்குச் சென்ற அந்தணர், அந்நாட்டு அரசியுடன் இருந்த பெண்ணைப் பார்த்தார். அவள் தமயந்தி என்பது அவருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. அவள் முன் பணிந்து நின்ற அவர், அம்மா! தங்களைத் தங்கள் தந்தையார் அழைத்து வரச்சொல்லி உத்தரவிட்டார், என்றார். தமயந்தி அவரது பாதங்களில் விழுந்தாள்.

தமயந்தி வடித்த கண்ணீர் அவரது பாதங்களைக் கழுவியது. அவளது துயரம் தாங்காத அந்த மறையவரும் கண்ணீர் வடித்தார். இந்த சோகமான காட்சி கண்டு, சுற்றி நின்றோர் முகம் வாடி நின்றனர். இந்தப் பெண் மீது இந்த அந்தணர் எந்தளவுக்கு பாசம் வைத்துள்ளார், என தங்களுக்குள்பேசிக்கொண்டனர். அப்போது தான் சேதி நாட்டரசிக்கு அதிசயிக்கத்தக்க செய்தி ஒன்று கிடைத்தது.

சேதிநாட்டரசி முன் நின்ற அந்தணர், தேவியே! தங்கள் முன் நிற்கும் இந்தப்பெண்ணை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? என்றார். அவள் இல்லை என்பது போல தலையசைத்தாள். தமயந்தியிடம், இவர்கள் நாட்டில் இத்தனை காலம் இருந்தாயே! இந்த பேரரசியை யாரென்று நீயும் அறிந்து கொள்ளவில்லை. காரணம், நீ இவர்களை இளமையிலேயே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, என்றவர், அரசியை நோக்கி, அம்மா! இவள் உங்கள் மூத்த சகோதரியின் மகள். அதாவது, நீங்கள் இவளுக்கு சிற்றன்னை முறை வேண்டும், என்றார்.

அவள் அதிர்ந்து போனாள். தமயந்தியை அள்ளி அணைத்துக் கொண்டாள். அன்புமகளே! இளவரசியான நீயா, இத்தனை நாளும் எங்கள் இல்லத்தில் இருந்தாய்? உன் துயர் அறிந்துமா நான் தீர்க்காமல் இருந்தேன்! என்றவள் மயங்கியே விழுந்துவிட்டாள். அவளுக்கு சுற்றியிருந்தவர்கள் மயக்கம் தெளிவித்தனர். சேதிநாட்டரசன், தன் மனைவி மயக்கமடைந்த செய்தியறிந்து விரைந்து வந்தான்.

கண்விழித்த ராணி,அன்பரே! இவள் என் சகோதரி மகள். இந்த மறையவர் சொன்னபிறகு தான், இவள் நம் உறவினர் என்று தெரிய வந்தது. இவளைப் பத்திரமாக, விதர்ப்ப நாட்டுக்கு அனுப்ப வேண்டும். இவளுக்கு இனியாவது நல்ல காலம் பிறக்கட்டும். இவளது கணவன் நிச்சயம் இவளுடன் வந்து சேர்வான், என்றாள்.

சேதிநாட்டரசனும் மனம் மகிழ்ந்து அவளைத் தேரில் ஏற்றி அந்தணருடன் அனுப்பி வைத்தான். அவள் சென்ற தேர் விதர்ப்ப நாட்டுக்குள் நுழைந்ததோ இல்லையோ, மக்களெல்லாம் குழுமி விட்டனர். அழகே உருவாய் இருந்த தங்கள் இளவரசி, கணவனால் கைவிடப்பட்டு, குழந்தைகளையும் இதுவரைக் காணாமல், உருக்குலைந்து வந்தது கண்டு அவர்கள் அழுதனர்.

குறிப்பாகப் பெண்கள், அம்மா! உங்களுக்கா இந்த நிலை வரவேண்டும்! என வாய்விட்டுப் புலம்பினர். சிலர் மணலில் விழுந்து புரண்டு அழுதனர்.

நமக்கே இப்படி இருக்கிறது. அரண்மனையில் இருக்கும் இளவரசியின் தந்தை வீமராஜாவும், தாயும் இவளது இந்தக் கோலத்தைப் பார்த்தால் மனமொடிந்து போவார்களே! என்ன நடக்கப்போகிறதோ, என்று பயந்தவர்களும் உண்டு. பெண்ணே! உன் கணவன் உன்னை விட்டுப் பிரிந்து நடுக்காட்டில் தவிக்கவிட்டானே! அப்போது நீ என்னவெல்லாம் துன்பம் அனுபவித்தாயோ? என்று கதறியவர்களும் உண்டு.

இவ்வாறாக தமயந்தி நாடு வந்த சேர்ந்த அந்த சமயத்தில், அவளை விட்டுப் பிரிந்து சென்ற நளன் கால்போன போக்கில் சென்றான். ஓரிடத்தில் பெருந்தீ எரிந்து கொண்டிருந்தது. மன்னா, என்னைக் காப்பாற்று…என் உயிர் போய்க்கொண்டிருக்கிறது, காப்பாற்று, என்று அபயக்குரல் எழுந்தது. தன்னை ஒரு மன்னன் எனத்தெரிந்து அழைப்பது யார் எனத் தெரியாமல் நளன் சுற்றுமுற்றும் பார்த்தான். தீக்குள் இருந்து குரல் வருவது கேட்டதும், ஐயோ! யாரோ தீயில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள், என உறுதிப் படுத்திக் கொண்டான். கருணையுள்ளம் கொண்ட அவன் அங்கு ஓடினான்.

தீக்குள் புகுந்து உள்ளே சிக்கித்தவிப்பவரைக் காப்பாற்றுவது எப்படி என்று யோசித்த வேளையில், முன்பு அவன் தேவர்களின் திருமண விருப்பத்தை தமயந்தியிடம் தெரிவிப்பதற்காக தூது சென்ற போது, இந்திரன், அக்னி முதலானவர்கள் அளித்த வரம் ஞாபகத்திற்கு வந்தது. அதன்படி அக்னி அவனைச் சுடாது என்பது அவன் பெற்ற வரம். அந்த வரத்தைப் பயன்படுத்தி, அக்னி பகவானை மனதார துதித்தான்.

ஐயனே! இந்த நெருப்புக்குள் யாரோ சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும், என்றான். யாரென்றே தெரியாத, நல்லவனா, கெட்டவனா என்றே புரியாத முன்பின் அறியாதவர்களுக்காகச் செய்யும் உதவி இருக்கிறதே! இது மிகப்பெரிய உதவி! நல்ல மனமுடையவர்களால் தான் அதைச் செய்ய முடியும்!
அப்போது, முன்பு கேட்ட குரல் பேசியது.

மன்னா! நீ சிறந்த குணநலன்களைக் கொண்டவன் என்பதை நான் அறிவேன். நான் ஒரு பெரிய தபஸ்வி. வேதநூல் களைக் கற்றறிந்தவன். இந்த நெருப்பில் சிக்கித் தவிக்கிறேன். என்னை கார்க் கோடகன் என்பர். நான் நாகங்களுக்கு தலைவன், என்னைக் காப்பாற்று. நெருப்பில் இருந்து தூக்கி வெளியே விடு, என்றது. நளனும் அக்னியைத் துதிக்கவே, அவன் பாம்பைக் கையில் தூக்கினான். இந்நேரத்தில், சனீஸ்வரர் தன் பணியைத் துவக்கி விட்டார்.

பாம்பு அவனிடம்,மகாராஜா! என்னை உடனே வீசி விடாதே. ஒன்று, இரண்டு என எண்ணி தச (பத்து) என எண்ணி முடித்தபின் தரையில் விடு, என்றது. அப்பாவி நளனுக்கு, தச என்பதற்கு பத்து என்ற பொருள் தான் தெரியும். அதற்கு கடி என்ற பொருள் இருப்பது தெரியாது. இவனும் அந்த பாம்பு சொன்னது போல எண்ணவே, தச என்றதும் அவனைக் கடித்து விட்டது பாம்பு. அவ்வளவு தான்! நளனின் உடலில் விஷமேறி, காண்பவர் வியக்கும் வண்ணமிருந்த அவனது சிவப்பழகு, கன்னங்கரேலென்றாகி விட்டது.

கார்க்கோடகா! இது முறையா? ஆபத்தில் தவித்த உன்னைக் காத்த எனக்கு இப்படி ஒரு கதியைத் தந்துவிட்டாயே! நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? என்றான்.

மன்னவனே! உன்னைப் பாதுகாக்கவே இவ்வாறு செய்தேன். நீ இந்தக் காட்டில் மனைவியைப் பிரிந்து சுற்றுவதை நான் அறிவேன். மனிதனுக்கு எல்லா கஷ்டங்களும் விதிப்படியே வருகின்றன. இந்த கரிய நிறத்தில் மாறியதன் காரணத்தை நீ விரைவிலேயே தெரிந்து கொள்வாய். இந்த கருப்பு தான் உன்னைக் காப்பாற்றப் போகிறது. அதே நேரம், கொடிய வெப்பத்தை எனக்காக தாங்கிய உன் வள்ளல் தன்மைக்கு பரிசும் தரப்போகிறேன். இதோ! பிடி! என்று ஒரு அழகிய ஆடை ஒன்றை நீட்டியது. இந்த ஆடை எனக்கு எதற்கு? என்றான் நளன்.

அரசே! இந்த ஆடையைப் போர்த்திக் கொண்டால் நீ உன் உண்மை உருவை அடைவாய். ஆனால், இப்போதைக்கு இதை அணியாதே. உன் நன்மைக்கே சொல்கிறேன். இனி நீ வாகுகன் (அழகு குறைந்தவன்) என அழைக்கப்படுவாய். இங்கிருந்து அயோத்தி செல். அந்நாட்டு மன்னன் இருதுபன்னனுக்கு தேரோட்டியாகவும், சமையல் காரனாகவும் இரு, என சொல்லி விட்டு மறைந்து விட்டது.

நளனும் அயோத்தி வந்து சேர்ந்தான். அரசனை சந்திக்க அனுமதி பெற்றான். இருதுபன்னனிடம் பேசி சமையல்காரன் ஆனான். இதனிடையே கணவனைப் பிரிந்து தந்தை வீட்டில் இருந்த தமயந்தி, ஒரு புரோகிதரைஅழைத்து, நீர் என் கணவர் நளனை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து வாரும். அவர் ஒருவேளை மாறுவேடத்தில் இருந்தாலும், அடையாளம் காண ஒரு வழி சொல்கிறேன். காட்டிலே கட்டிய மனைவியை தனியே விட்டு வருவது ஒரு ஆண்மகனுக்கு அழகாகுமா? என்று நீ சந்தேகப்படுபவர்களைப் பார்த்துக் கேளும். இந்தக் கேள்விக்கு யார் பதிலளிக்கிறார்களோ அவர் யார் எனத்தெரிந்து அழைத்து வாரும், என்றாள்.

அவரும் கிளம்பி விட்டார். பல இடங்களில் சுற்றி, அயோத்தியை வந்தடைந்தார். பொது இடத்தில் நின்று கொண்டு, தமயந்தி தன்னிடம் சொல்லியனுப்பிய கேள்வியைச் சத்தமாகச் சொன்னார். அப்போது தற்செயலாக அங்கு நின்ற நளன் காதில் இது கேட்டது. அவன் புரோகிதர் அருகே வந்தான்.

புரோகிதரே! நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. விதிவசமாக நாங்கள் பிரிந்தோம்,என்று பதிலளித்தான். அவனது உருவத்தைப் பார்த்தால் அவன் நளனாக தெரியவில்லை புரோகிதருக்கு. யாரோ ஒருவன் நம் கேள்விக்கு பதிலளிக்கிறான் என நினைத்து நாடு திரும்பி விட்டார். அவர் வரவுக்காக காத்திருந்த தமயந்தி, புரோகிதரே! நான் சொன்ன கேள்விக்கு யாராவது பதிலளித்தார்களா? என்று கேட்டாள்.

அம்மா! ஒரே ஒருவன் தான் என் கேள்விக்கு பதிலளித்தான். அவனது உடல்வாகு மன்னன் போல இருக்கிறது. ஆனால், அவன் கருப்பு நிறத்தவன், மன்னனாகத் தெரியவில்லை, என்றார். அப்படியா? என்ற தமயந்தி,புரோகிதரே! ஒரு யோசனை. மீண்டும் அயோத்தி செல்லும்! எனக்கு மீண்டும் சுயம்வரம் நடக்கப்போவதாக அயோத்தி மன்னரிடம் சொல்லும். ஒருவேளை அங்கிருப்பவர் எனது கணவராக இருந்தால், அவர் பதறிப்போய் மன்னனுக்கு தேரோட்டி இங்கு வருவார், என்றாள்.

இரண்டாம் சுயம்வரமா? இது பெண்களுக்கு ஏற்புடையதல்லவே என்று இருதுபன்னன் யோசித்த வேளையில், நளன் மன்னனிடம், அரசே! கற்புடைய பெண் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவே மாட்டாள். நளன் பிரிந்து விட்டான் என்ற காரணத்துக்காக அவள் இப்படி செய்வாள் என என்னால் நம்ப முடியவில்லை, என்று மன்னனைப் போக விடாமல் நளன் தடுத்தான்.

வாகுகா! நீ சொல்வது பற்றி எனக்கு கவலையில்லை. அந்த தமயந்தி கடந்த சுயம்வரத்திலேயே எனக்கு கிடைத்திருக்க வேண்டியவள். அந்த நளன் அவளைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். இரண்டாம் தாரமாக இருந்தாலும் பரவாயில்லை. நான் அவளோடு வாழ முடிவு செய்து விட்டேன், எடு தேரை, என உத்தரவு போட்டுவிட்டான் இருதுபன்னன். நளன் வருத்தப்பட்டான். இருப்பினும், தன்னைப் பற்றி புரோகிதர் சொன்னதைக் கேட்டு சந்தேகப்பட்டு, தன்னை வரவழைக்க இப்படி செய்திருக்கலாம் என்று முடிவு செய்து கிளம்பினான்.

தேர் விதர்ப்ப நாடு நோக்கி மனோவேகத்தை விட வேகமாகப் பறந்தது. அயோத்தி மன்னன் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. இப்படி ஒரு தேரோட்டியா! இந்த வேகத்தில் தேரோட்ட யாராலும் முடியாதே. இவன் இப்படிப் போகிறானே! எதற்கும் இவன் யாரென சோதனை செய்து பார்ப்போம் என முடிவு செய்து, வாகுகா! அதோ! ஒரு மரம் தெரிகிறதே! அதில் பத்தாயிரம் கோடி காய் இருக்கும் என்கிறேன். சரியாவென்று எண்ணிப்பார்த்துக் கொள், என்றான். நளனும் அம்மரத்தின் கீழே தேரை நிறுத்தி அண்ணாந்து பார்த்து,நீங்கள் சொல்வது சரிதான், என்றான்.

அயோத்தி மன்னன் அவனிடம், நளனே! எதையும் எண்ணிப் பார்க்காமலேயே இதில் இத்தனை தான் இருக்கும் என்று சொல்லும் கலையில் நான் வல்லவன். நீயோ அதிவேகமாக தேரோட்டும் கலையில் வல்லவனாக இருக்கிறாய். நம் தொழில்களை ஒருவருக்கொருவர் சொல்லித் தருவோமா? என்று கேட்டான். கேட்டதுடன் நிற்காமல், நளனுக்கு எண்ணாமலேயே கணக்கிடும் கலையைச் சொல்லியும் தந்தான். பின் இருவரும் விதர்ப்ப நாட்டை அடைந்தன்.

தமயந்தியின் தந்தை வீமராசன் ஆச்சரியத்துடன், அயோத்தி மன்னா! நீ என்னைக் காண எதற்காக வந்தாய்? எனக்கேட்டார். உன்னைப் பார்க்கத்தான், என்று பதிலளித்தான் இருதுபன்னன். இதற்குள் குதிரைகளை இளைப்பாற வைத்தான் நளன். பின் சமையலறைக்குள் சென்றான். வந்திருப்பவனை தமயந்தியால் அடையாளம் காண முடியவில்லை.

இவன் இவ்வளவு கருப்பாக இருக்கிறானே! ஏதும் வர்ணம் பூசி மறைத்திருப்பானோ? எதற்கு சந்தேகம்? என நினைத்தவள், ஒரு பணிப்பெண்ணை அழைத்து, நீ மறைந்திருந்து அந்த சமையல்காரன் செய்யும் வேலைகளைக் கவனித்து வந்து சொல், என்றாள்.

இன்னொருத்தியை அழைத்து, நீ என் மகன் இந்திரசேனனையும், மகள் இந்திரசேனையையும் அந்த சமையல்காரனுடன் நீண்டநேரம் விளையாட வை, என்றாள். அந்தக் குழந்தைகள் நளன் அருகே சென்றனர். அவர்களை அழைத்த நளன்,நீங்கள் என் பிள்ளைகள் போலவே உள்ளீர்கள். நீங்கள் யார்? என்று கேட்டான்.

தாயை விட்டு தந்தை பிரிந்த கதையையும், தங்கள் தந்தை நளமகாராஜா என்றும் அவர்கள் சொல்ல அவன் மனதுக்குள் அழுதான். குழந்தைகளிடம் அவன் பேசியதை பணிப்பெண் வந்து சொன்னாள். இன்னொருத்தி வேகமாக வந்து, இளவரசி! அந்த சமையல்காரன் தீயின்றியே சமைத்தான். அவன் உள்ளே சென்றதுமே உணவு தயாராகி விட்டது, என்றாள். இதைக்கேட்டதும் தமயந்தி மயக்கநிலைக்குப் போய்விட்டாள்.

நெருப்பில்லாமல் சமைக்கிறான் என்றால், அவன் நிச்சயம் தன் கணவன் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள் அவள். நெருப்பினால் அவனுக்கு எந்த இடைஞ்சலும் வராது என்ற வரத்தைத் தந்த அதே அக்னி பகவான், நெருப்பின்றியே சமைக்கும் வரத்தையும் அவனுக்கு கொடுத்திருந்தார். இந்த விஷயம் தமயந்திக்குத் தெரியும். தன் தந்தையிடம் ஓடினாள்.

தந்தையே! இங்கே சமையல்காரராக இருப்பவர் என் கணவர் தான், என்று உறுதியாகச் சொன்னாள். இதைக்கேட்ட வீமராசன் மனம் பதைத்து சமையலறைக்கு ஓடினான். நளனிடம், உண்மையைச் சொல்! நீ யார்? உன் உண்மை உருவைக் காட்டு, என்றான்.

நளனும் இதற்கு மேல் எந்த உண்மையையும் மறைக்க விரும்பவில்லை. அவன், கார்க்கோடகன் தனக்கு தந்த ஆடையை எடுத்து தன் மேல் போர்த்தினான். பழைய உருவத்தை அடைந்தான். சிவந்த மேனியைப் பெற்றான். இந்த சமயத்தில் அவனைப் பிடித்திருந்த சனிபகவானும், தனது காலத்தை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார். நளன் புத்துணர்ச்சி பெற்றான்.

அவனைக் கண்ட தமயந்தி ஆனந்தக்கண்ணீர் வடித்தாள். தன் மேல் கொண்ட அன்பால், தன்னைக் கண்டுபிடிக்க அவள் எடுத்த முயற்சிகளை நளன் நாதழுக்க கூறி அவளை வாழ்த்திய நளன், காட்டிலே உன்னை விட்டுச்சென்ற இந்தக் கயவனைக் காணப் பிடிக்காமல், உன் விழித்திரைகளை நீர் நிறைத்து மறைக்கிறதா கண்ணே! என நளன் அவளிடம் கேட்டான்.

அவளோ அவனது பாதங்களில் விழுந்து, இல்லை அன்பரே! உங்களை மீண்டும் காண்போம் என்று நினைக்கவே இல்லை. இது ஆனந்தத்தில் வழியும் கண்ணீர், என்று அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். குழந்தைகளும் ஓடிவந்து தந்தையை அணைத்துக் கொண்டனர்.

வாழ்க்கையில் மனிதன் நிறைய துன்பங்களை அனுபவிக்க வேண்டும். ஏனெனில், துன்பத்திற்குப் பிறகு வரும் இன்பத்தைத் தான் மனிதன் சுவைத்து அனுபவிக்க முடியும்.

நளனும், தமயந்தியும், குழந்தைகளும் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமா! இப்போது, அவர்கள் இன்பமலையின் உச்சத்தில் இருந்தனர். வீமராசனும், தன் மகளுக்கு மீண்டும் நல்வாழ்வு கிடைத்தது குறித்து மகிழ்ந்தான். இந்த இன்பக்காட்சி கண்டு தேவர்கள் கூட மகிழ்ந்தார்கள். வானில் இருந்து பூமழை பொழிவித்தார்கள்.

நளனே! உன்னைப் போல் உயர்ந்த குணமுள்ளவர்கள் யாருமில்லை. எந்தச்சூழலிலும் நீ பிறர் உதவியைக் கேட்கவில்லை. ஏன்…உன் மாமனார் வீட்டில் கூட நீ தங்க மறுத்தாய்! கஷ்டங்களை மனமுவந்து அனுபவித்தாய். சனீஸ்வரன் உனக்கு தொல்லை கொடுப்பது தெரிந்தும், நீ ஆத்திரப்படவில்லை. உன்னிலும் உயர்ந்தவன் உலகில் இல்லை, என்று அசரிரீ எழுந்தது.

இந்த நேரத்தில் சனீஸ்வரரே அங்கு வந்துவிட்டார்.

நளனே! நல்லவனான ஒருவன், பாதை தவறும் நேரத்தில் அவனைச் சீர்படுத்த பல தொல்லைகளைத் தருகிறேன். அதை அனுபவப்பாடமாகக் கொண்டு அனுபவிப்பர்களை மீண்டும் நான் அணுகமாட்டேன். நீ நீதிதவறாத ஆட்சி நடத்தினாய் என்றாலும் சூது என்னும் கொடிய செயலுக்கு உடன்பட்டாய். இனி அத்தகைய நினைப்பே உனக்கு தோன்றக்கூடாது என்பதற்கே இத்தனை சோதனைகளையும் அனுபவித்தாய். இருப்பினும், சூதால் தோற்ற நீ போர் தொடுத்து உன் நாட்டைப் பெறுவது முறையல்ல. மன்னர்களுக்குரிய தர்மப்படி மீண்டும் சூதாடியே நாட்டை அடைவாய். உன் மனைவியின் கற்புத்திறனும் உன்னைக் காத்தது, என்றவர்,நீ என்னிடம் என்ன வரம் வேண்டுமானாலும் கேள், தருகிறேன், என்றார்.

நாமாக இருந்தால் என்ன கேட்டிருப்போம்? அந்த புட்கரனைப் போய் பிடி. அவனிடமிருந்து நாட்டை எனக்கு வாங்கிக் கொடு, என்று தானே! பொதுநலவாதியான நளனோ, அப்போதும், சனீஸ்வரரே! என் சரிதம் இந்த உலகத்துக்கு பாடமாக இருக்கட்டும். என் கதையை யார் ஒருவர் கேட்கிறாரோ, அவரை நீர் பிடிக்கக்கூடாது. அவருக்கு எந்த சோதனையும் தரக்கூடாது, என்றான்.

நளனே! உன் கோரிக்கையை ஏற்கிறேன். உன் கதை கேட்டவர்களை நான் எக்காரணம் கொண்டும் அணுகமாட்டேன், இது சத்தியம், என்ற சனீஸ்வரன் அங்கிருந்து மறைந்து விட்டார். பின், விதர்ப்பநாட்டரசன் வீமன் தன் மகள், மருமகன், பேரக்குழந்தைகளுக்கு விருந்து வைத்தான்.

அப்போது இருதுபன்னன் வந்தான். நளனே! உன்னை என்னிடம் பணி செய்ய வைத்த காரணத்துக்காக வருந்துகிறேன். உன் பணிக்காலத்தில் நான் உன்னிடம் ஏதேனும் கடுமையாகப் பேசியிருந்தால் அதைப் பொறுத்துக் கொள், நான் அயோத்தி கிளம்புகிறேன், என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

இதன்பிறகு, வேலேந்திய வீரர்கள் பின் தொடர, தன் சொந்த நாடான நிடதநாட்டுக்கு கிளம்பினான். புட்கரனுடன் மீண்டும் சூதாடினான். முன்பு சனீஸ்வரரின் அருளால் தான் சூதில் வென்றோம் என்பதைக் கூட மறந்து விட்ட புட்கரன், ஆசையில் பகடைகளை உருட்ட நாட்டை இழந்தான். மீண்டும் ஆட்சிப்பொறுப்பை நளனிடம் ஒப்படைத்து விட்டு, தனது நாட்டுக்கு போய்விட்டான்.

தன் தலைநகரான மாவிந்தத்தில் இருந்த அரண்மனைக்கு மனைவி, குழந்தைகளுடன் நளன் சென்றான். மக்கள் மீண்டும் நளனை மன்னனாகப் பெற்ற மகிழ்ச்சியில் அவனை வாழ்த்தினர். மக்களின் முகம் மேகத்தைக் கண்ட மயில் போலவும், பார்வையற்றவனுக்கு பார்வை கிடைத்தால் ஏற்படும் பிரகாசம் போலவும் ஆனது. நளனின் இந்த சரித்திரத்தை தர்மபுத்திரருக்கு வியாசமுனிவர் சொல்லி முடித்தார்.

தர்மபுத்திரா! கேட்டாயல்லவா கதையை! நளனின் இந்த துன்பத்தில் நூறில் ஒரு பகுதியைக் கூட நீ அனுபவிக்க வில்லை, அப்படித்தானே! இருப்பினும், சூதால் வரும் கேட்டை தெரிந்து கொண்டாய் அல்லவா! எனவே, நீயும் சூதால் தோற்றது பற்றி வருந்தாதே. உனக்கும் நல்ல நேரம் வரும், என்று சொல்லி விடை பெற்றார். நாமும் நளசரிதம் கேட்ட மகிழ்ச்சியுடன், சனீஸ்வரரின் அன்புத்தொல்லையில் இருந்து விடுபடுவோம். நல்ல பழக்கங்களை மேற்கொள்வோம். நல்லதை மட்டுமே சிந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top