Home » சிறுகதைகள் » நளதமயந்தி பகுதி – 4
நளதமயந்தி பகுதி – 4

நளதமயந்தி பகுதி – 4

சூதாட்ட வெறி கண்ணை மறைக்க, தன்னிடம் இதுவரை பணிசெய்த பெண்கள் என்று கூட பாராமல், அவர்களையும் வைத்து சூதாட முன்வந்தான் நளன். வழக்கம் போல் பகடை உருள, அவர்களையும் புட்கரனிடம் இழந்து விட்டான் நளன்.நளனின் எல்லாப் பொருட்களும் போய்விட்டன. ஆம்…நாடே போய்விட்டது. அசையாப் பொருள்களுடன் அரண்மனையில் அசைந்தாடிய பெண்களும் பறி போனார்கள். இனி அவர்கள் புட்கரனின் பணியாட்களாக இருப்பார்கள். விளையாட என்ன இருக்கிறது? நளன் திகைத்துப் போய் எழுந்தான்.
நளனே! ஏன் எழுந்திருக்கிறாய்? கையில் வெண்ணெய் இருக்கிறது. நெய்க்கு அலையலாமா? இன்னும் ஒரு முக்கியப்பொருள் உன்னிடம் இருக்கிறது. அந்தப் பொருள், இங்கே நீ என்னிடம் தோற்ற அத்தனைக்கும் சமம். அந்தப் பொருளை வைத்து நீ விளையாடு. அவ்வாறு விளையாடி ஜெயித்தால், உன் தேசத்தை உன்னிடமே தந்து விட்டு, அப்படியே திரும்பி விடுகிறேன். என்ன விளையாடலாமா? என்றான். தன்னிடம் அப்படி எந்தப் பொருளும் இல்லாதபோது, இவன் எதைப் பற்றிச் சொல்கிறான் என நளன் விழித்தான். புட்கரன் அட்டகாசமாக சிரித்தான்.
என்னப்பா இது! ஒரு கணவனுக்கு துயரம் வந்தால் மனைவி என்ன செய்வாள்? அதைத் துடைக்க முயல் வாள். உன்னிடம் ஒரு அழகுப்புயல் இருக்கிறதே! தேவர்கள் கூட அவளை அடைய முயன்று தோற்றார்களே! கருவிழிகள், மயங்க வைக்கும் பார்வை, தாமரைப் பாதங்கள், குறுகிய இடை… என்று இழுத்ததும், சே…பொருளை ஒருவன் இழந்து மதிப்பு மரியாதையின்றி நின்றால், அவனது மனைவிக்கல்லவா முதல் சோதனை வருகிறது.
எந்தத் தகுதியும் இல்லாத இவன், தன் தம்பியின் மனைவி என்று கூட பாராமல், அவளை வைத்து சூதாடச் சொல்கிறானே! இவன் ஒரு மனிதனா? என்று எண்ணி, அதே நேரம் ஏதும் பேச இயலாமல், இனி இந்தக் கொடிய சூதாட்டம் வேண்டாம். போதும், அதுதான் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டாயே! மகிழ்ச்சியாக இரு, என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாகப் போய்விட்டான்.
இந்தத் தொடரை ஆரம்பம் முதல் வாசிக்கும் வாசகர்களுக்குத் தெரியும். வியாச மகரிஷி, மனைவியையே வைத்து சூதாடித்தோற்ற தர்ம மகாராஜாவுக்கு நளனின் கதையைச் சொல்கிறார். நளன் என்பவன் எல்லாப் பொருட்களையும் தோற்றான். ஆனால், தன் மனைவியை மட்டும் வைத்து சூதாட மறுத்துவிட்டான். இழந்த பொருளை சம்பாதித்து விடலாம். ஆனால், மனைவியை சம்பாதிக்க முடியுமா? நளனைப் போல் இல்லாமல், நீ உன் மனைவியைத் தோற்றாயே! என்று தர்மனின் புத்தியில் உரைக்கும்படி சொன்ன கதையே நளபுராணம். அதையே நாம் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்.
தன் அன்பு மனைவி தமயந்தியிடம் சென்று நடந்ததைச் சொன்னான். கணவன் இப்படி பொறுப்பற்று நடந்து கொண்டால், இக்காலத்துப் பெண்கள் அவனை உண்டு, இல்லை என பண்ணி விடுவார்கள். ஆனால், அக்காலத்தில் அப்படியில்லை. தன் மணாளனுக்கு இப்படி ஒரு நிலை விதிவசத்தால் வந்ததே என தமயந்தியும் வருத்தப்பட்டாள். தமயந்தி! சூதாடி நாட்டை இழந்து விட்டேன். வா! நாம் வேறு ஊருக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம், என்ன சொல்கிறாய்? என்றான்.
அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. வருகிறேன் அன்பே, எனச்சொல்லி அவனுடன் கிளம்பி விட்டாள்.  இதைத்தான் வினைப்பயன் என்பது!  சிலர் புலம்புவார்கள்! நான் நல்லவன் தானே! எனக்குத் தெரிந்து யாருக்கும் இப்பிறவியில் எந்தப் பாவமும் செய்யவில்லையே! ஆனாலும், ஏன் எனக்கு சோதனை மேல் சோதனை வருகிறது என்று! நல்லவராக இருந்தாலும், முற்பிறவியில், நாம் யாருக்கு என்ன செய்கிறோமோ, அதன் பலனை இப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும். அதைத் தான் நளதமயந்தி இப்பிறவியில் அனுபவிப்பதாக எண்ணிக் கொண்டனர்.
நளமகாராஜா நாட்டைத் தோற்ற விஷயம் ஊருக்குள் பரவிவிட்டது. தங்கள் மன்னரை வஞ்சகமாக புட்கரன் ஏமாற்றிவிட்டானே என்று அவர்கள் புலம்பினர். மேலும், மன்னர் நாட்டை விட்டு அருகிலுள்ள காட்டுக்குச் செல்லப்போகிறார் என்ற விஷயமும் அவர்களுக்குத் தெரிய வரவே, அவர்கள் கண்ணீர் விட்டனர். நளதமயந்தி அரண்மனையை விட்டு வெளியேறி தெருவில் நடந்தனர்.
பணமிருப்பவர்கள் ஆட்டம் போடக்கூடாது. ஏனெனில், திருமகள் ஒரே இடத்தில் நிலைத்திருப்பவள் அல்லள்! எங்கே ஒழுக்கம் தவறுகிறதோ, அந்த இடத்தை விட்டு அவள் வேகமாக வெளியேறி விடுவாள். அதுவே அவள் செல்வத்தில் திளைத்து அட்டகாசம் செய்பவர் களுக்கு வழங்கும் தண்டனை. நேற்று வரை ராஜா, ராணியாக இருந்தவர்கள், இன்று அவர்களால் ஆளப்பட்ட குடிமக்களையும் விட கேவலமான நிலைக்குப் போய்விட்டார்கள்.
அரண்மனை அறையில் இருந்து வாசல் வரை பல்லக்கிலும், வாசலில் இருந்து தேரிலும் பவனி வந்து, தங்கள் கால்களைத் தரைக்கே காட்டாதவர்கள், இன்று நடக்கிறார்கள்… நடக்கிறார்கள்..மக்கள் இதைப் பார்த்து கண்ணீர் பொங்க அழுதார்கள். மகாராஜா! எங்கள் தெய்வமே! வேலேந்தி பகைவர்களை விரட்டியடித்த வேந்தனே! உன் வெற்றிக்கொடி இந்த தேசத்தில் நேற்று வரை பறந்தது. எங்களை நல்ல முறையில் கவனித்துக் கொண்டவர் நீங்கள். உடனே காட்டுக்குப் போக வேண்டாம். எங்களுடன் இன்று ஒருநாளாவது தங்குங்கள், என வேண்டினர்.
எங்களை தொடர்ந்து ஆளுங்கள், என்று மக்கள் கேட்குமளவுக்கு ஒரு ஆட்சி இருக்க வேண்டும். நளனின் ஆட்சி அப்படித்தான் இருந்தது. மக்களின் வேண்டுதலை ஏற்கலாமா? நளன் தமயந்தியின் பக்கம் திரும்பி, மக்கள் நாம் இங்கு ஒருநாள் தங்க வேண்டுமென விரும்புகிறார்கள். நீ என்ன சொல்கிறாய்? என்றான்.
இன்றிரவு தங்கிப் போகலாமே, என்று தமயந்தி சொல்லவில்லை, ஆனால், அவளது பார்வையின் பொருள் நளனுக்கு அவ்வாறு இருந்ததால், அவனும் மக்களுடன் தங்கலாமே என எண்ணி, அவர்களிடம் ஒப்புதல் அளித்தான். நளனின் பின்னாலேயே வந்த ஒற்றர்கள் மக்களும், நளனும் இவ்வாறு பேசுவதைக் கேட்டு உடனடியாக புட்கரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
சற்றுநேரத்தில் முரசு ஒலித்தது. நிடதநாட்டு மக்களே! நளன் இந்த நாட்டின் ஆட்சி உரிமையை இழந்து விட்டார். அவருக்கு யாராவது அடைக்கலம் அளித்தாலோ, அவருடன்  பேசினாலோ அந்த இடத்திலேயே கொல்லப்படுவார்கள். இனி உங்கள் ராஜா புட்கரன் தான். அவர் இடும் சட்டதிட்டங்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டாக வேண்டும். மீறுபவர்கள் மரணக்கயிற்றில் உங்களை நீங்களே மாட்டிக் கொள்ளத் தயாரானதாக அர்த்தம். இது மகாராஜா புட்கரனின் உத்தரவு…., என்று முரசு அறைவோன் சத்தமாக நீட்டி முழக்கினான்.
நளன் தனது நிலை குறித்து வருந்தினான். சூதாட்டம் என்ற கொடிய விளையாட்டில் இறங்கி, நாட்டை இழந்தோம், ஏதுமறியா அபலைப் பெண்ணான இந்த தமயந்தியின் கால்கள் பஞ்சுமெத்தையையும், மலர்ப்பாதையையும், சிவப்புக் கம்பளத்தையும் தவிர வேறு எதிலும் நடந்தறியாதவை.
இப்போது அவளை கல்லும், மண்ணும், முள்ளும் குவிந்த பாதையில் நடக்க வைத்து புண்படுத்துகிறோமே! இப்போது ஊரில் கூட இருக்க இயலாத நிலை வந்துவிட்டதே! தனக்கு ஆதரவளிப்பவர்களையும் கொல்வேன் என புட்கரன் மிரட்டுகிறானே! தன்னால் தமயந்தியின் வாழ்வு இருளானது போதாதென்று, இந்த அப்பாவி ஜனங்களின் உயிரும் போக வேண்டுமா! ஐயோ! இதற்கு காரணம் இந்த சூதல்லவா! என்று தனக்குள் புலம்பினான்.
பொழுதுபோக்கு கிளப்கள் என்ற பெயரில் நடக்கும் சூதாட்ட கிளப்களுக்கு செல்பவர்கள் நளனின் நிலையை உணர வேண்டும். சூதாட்டத்தில் கில்லாடியான ஒரு புட்கரன் பல நளன்களை உருவாக்கி விடுவான்.
சூதாடுபவர் மட்டுமல்ல…அவன் மனைவி, மக்களும் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள். மானம் போகும், ஏன்…உயிரே கூட போகும்! நளதமயந்திக்கு இரண்டு செல்லப் பிள்ளைகள் பிறந்தார்கள் அல்லவா! அந்த மகளையும், மகனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். ஊர் மக்கள் கண்ணீர் விட்டு கதறினர்.
ஒரு துக்கவீட்டில், இறந்தவரின் உறவினர்கள் எப்படி சோகத்துடன் இருப்பார்களோ, அந்தளவுக்கு துயரமடைந்தனர் மக்கள். இதையெல்லாம் விட மேலாக, பால் குடி மறவாத பச்சிளம் குழந்தைகள் கூட, அன்று தங்கள் தாயிடம் பால் குடிக்க மறுத்து, சோர்ந்திருந்தன. நளன் வீதியில் நடக்க ஆரம்பித்தான். தமயந்தியின் பஞ்சுப்பாதங்கள் நஞ்சில் தோய்த்த கத்தியில் மிதித்தது போல் தடுமாற ஆரம்பித்தது. குழந்தைகளின் பிஞ்சுப்பாதங்களோ இதையும் விட அதிகமாக தள்ளாடின. அம்மா…அப்பா என அவர்கள் அழுதபடியே நடந்தனர்.
இந்த இடத்தில் ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு என்னதான் ஆண்டவன் வசதியான வாழ்க்கையைக் கொடுத்திருந்தாலும், குழந்தைளுக்கு கஷ்டநஷ்டத்தைப் பற்றிய அறிவையும் ஊட்டி வளர்க்க வேண்டும். காலையில் நூடுல்ஸ், பூரி மசாலா, மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் சாம்பார் என விதவிதமாக குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்தாலும் கூட, பழைய சாதம் என்ற ஒன்று இப்படி இருக்கும் என்பதையும், கிராமத்து ஏழைக் குழந்தைகள் அதைச் சாப்பிட்டு விட்டு தான் பள்ளிக்கு  கிளம்புகிறார்கள் என்பதையும் சொல்லித் தர வேண்டும், எதற்கெடுத்தாலும் கார், பஸ், ஆட்டோ என கிளம்பாமல், நடக்கவும் சொல்லித் தர வேண்டும்.
வாழ்வில் யாருக்கும் எப்போதும் ஏற்ற இறக்கம் வரலாம். அதைச் சமாளிப்பது பற்றிய அறிவு நம் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருந்த வரை புத்தருக்கு ஒன்றும் தெரியாது. வெளியே வந்த பின் தானே மரணம், நோய் பற்றியெல்லாம் உணர்ந்தார்! அதுபோல நம் பிள்ளைகளை சுதந்திரமாக உலகநடப்புகள் பற்றி தெரிந்து கொள்ள அனுப்ப வேண்டும்.
நளனின் பிள்ளைகள் ராஜா வீட்டுப் பிள்ளைகள்! அவர்களுக்கு தெருமுனை எப்படி இருக்கும் என்று கூட தெரியாது! அப்படிப்பட்ட பிள்ளைகள் இன்று தெருவில் சிரமத்துடன் நடந்தனர். நீண்ட தூரம் நடந்து நாட்டின் எல்லையை அவர்கள் கடந்து விட்டார்கள். எங்கே போக வேண்டும் என்று நளனுக்குப் புரியவில்லை. குழந்தைகள் மிகவும் தளர்ந்து விட்டார்கள். தமயந்தியோ பல்லைக் கடித்துக் கொண்டு நடந்தாள். அப்பா! நாம் எங்கே போகிறோம்? கடக்க வேண்டிய தூரம் முடிந்து விட்டதா? இன்னும் போக வேண்டுமா? என்று அழுதபடியே கேட்டாள் மகள்.
மகனோ, அம்மாவின் கால்களைக் கட்டிக்ககொண்டு, அம்மா! என்னால் நடக்கவே முடியவில்லை. எங்காவது அமர்வோமா! என கண்ணீருடன் கெஞ்சலாகக் கேட்டான். பன்னீர் தூவி வளர்த்த தன் குழந்தைகளின் கண்களில் கண்ணீரா! தமயந்தியின் கண்களிலும் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. நளனுக்கு அவர்களின் துயரத்தைப் பார்க்கும் சக்தி இல்லவே இல்லை. வெட்கம் வேறு வாட்டி வதைத்தது.
ஆம்…எதைத் தொடங்கினாலும், ஒரு மனிதனுக்கு முதலில் தன் மனைவி, பிள்ளைகளின் முகம் நினைவுக்கு வர வேண்டும்..இதைச் செய்தால் அவர்களுக்கு நன்மை விளையுமா! கேடு வந்துவிடுமா என்று ஆராய வேண்டும்.
இதைச் செய்யாத எந்த மனிதனாக இருந்தாலும், தன் மனைவி, பிள்ளைகள் முகத்தில் கூட விழிக்க இயலாத நிலை ஏற்படும்! என்ன தான் சனி ஆட்டினாலும், சுயபுத்தி என்ற ஒன்று இருக்கிறதல்லவா! அந்த புத்தியை இறைவன் தந்திருக்கிறான் அல்லவா! அந்த இறைவனைப் பற்றிய நினைப்பு வந்திருந்தால், இந்த சனியால் ஏதாவது செய்திருக்க முடியுமா! காலம் கடந்த பின் நளன் வருந்துகிறான்.
வரும் முன்னர் தன்னைப் பாதுகாத்து கொள்ளாதவனின் வாழ்க்கை எரிந்து தானே போகும்!  நளன் தமயந்தியிடம், அன்பே! இனியும் பிள்ளைகள் கதறுவதை என்னால் தாங்க முடியாது. அதனால், நீ பிள்ளைகளுடன் உன் தந்தை வீட்டுக்குப் போ, என்றான். இதுகேட்டு தமயந்தி அதிர்ந்துவிட்டாள்.
அவள் தன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. அன்பரே! நீங்களா இப்படி சொன்னீர்கள்! காதல் வயப்பட்டு நாம் கிடந்த காலத்தில், கடைசி வரை பிரியமாட்டோம் என உறுதியளித்தீர்களே! அது காதல் மோகத்தில் சொன்னது தானா? என் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொல்கிறேன், கேளுங்கள்.
ஒரு பெண் குழந்தைகளை இழந்தால் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அவள் தன் கணவனை இழந்துவிட்டால் பாதுகாப்பற்ற நிலையை அடைவாள். அவளது கற்புக்கு களங்கம் கற்பிக்கப்படும், அல்லது பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். எனவே, எந்த ஒரு பெண்ணும் தன் கணவனை இழக்க சம்மதிக்கவே மாட்டாள், என்றாள்.
தன் மனைவியின் உறுதியான மனநிலை கண்டு, அந்த துன்பமான சூழலிலும் நளன் உள்ளூர மகிழ்ந்தான். ஆனாலும், மற்றொரு உண்மையை அவன் அவளுக்கு எடுத்துச் சொன்னான். தமயந்தி! உனக்குத் தெரியாததல்ல! இருப்பினும் சொல்கிறேன் கேளுங்கள். ஒருவன் மரணமடைந்து விட்டால், அவனுக்கு இறுதிச்சடங்கு செய்ய பிள்ளைகள் வேண்டும். அப்படியானால் தான் அவன் சொர்க்கத்தை அடைவான் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. நீ கேட்கலாம், புண்ணியம் செய்தால் சொர்க்கத்தை அடைய முடியாதா என்று! நிச்சயம் அது முடியாது. எந்த வித தவறும் செய்யாமலும், பிறருக்கு வஞ்சனை செய்யாமலும் இருப்பவராக இருந்தாலும் கூட, எவ்வளவு நல்லறிவு பெற்ற உயர்ந்தவரானாலும் கூட, நல்ல பிள்ளைகளைப் பெறாத பெற்றோருக்கு சொர்க்கம் கிடைக்காது.
என்றவனை இடைமறித்த தமயந்தி., ஐயோ! என்ன சொல்கிறீர்கள்! நீங்களே எனது சொர்க்கம், நான் வாழும் போது சொர்க்கத்தைத் தேடுகிறேன். நீங்கள் வாழ்க்கையின் முடிவுக்கு பிறகுள்ள விஷயங்களைப் பேசுகிறீர்களே! என இடைமறித்தாள்.
நளன் அவளைத் தேற்றினான்.
அன்பே! எவ்வளவு தான் பணமிருந்தாலும் சரி! புகழின் உச்சத்தில் இருந்தாலும் சரி! இன்னும் இந்த உலகத்தில் எவ்வளவு நற்பெயர் பெற்றிருந்தாலும் சரி! ஒருவனுக்கு இவையெல்லாம் மகிழ்ச்சி தராது. சாதாரண தட்டில் சோறிட்டு, அதை தன் பிஞ்சுக்கரங்களால் அளைந்து சாப்பிடுமே குழந்தைகள்! அந்தக் குழந்தைகளின் செய்கையும், அவை குழலினும் இனியதாக மழலை பேசுமே! அந்தச் சொற்களுமே இவ்வுலக சொர்க்கத்தை மனிதனுக்கு அளிக்கின்றன.
தமயந்தி! பல அறிஞர்களும், புலவர்களும் அரிய பல கருத்துக்களை பேசுவதை நீ கேட்டு மகிழ்ந்திருப்பாய். ஆனால், அவற்றையெல்லாம் விட, பால் குடித்து அது வழிந்தபடியே, நம் குழந்தைகள் பேசும் பேச்சு தானே காதுகளை குளிர வைக்கிறது! எனவே குழந்தைகள் தான் நமக்கு முக்கியம். அவர்களை அழைத்துக் கொண்டு உன் இல்லத்துக்குச் செல். தயவுசெய்து நான் சொல்வதைக் கேள், என தன் கருத்தில் விடாப்பிடியாக இருந்தான் நளன். பிள்ளைகளும், மனைவியும் இனியும் தன்னால் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
இப்போது, தமயந்தி வேறுவிதமாக கிடுக்கிப்பிடி போட்டாள். என் தெய்வமே! அப்படியானால் ஒன்று செய்வோம். நீங்களும் எங்களுடன் என் தந்தை வீட்டுக்கு வாருங்கள். அங்கே, நாம் வாழத் தேவையான பொருள் உள்ளது. அவர் என் சிரமத்தைப் பொறுக்கமாட்டார். உதவி செய்வார். புறப்படுங்கள், என்றாள். நளன் இந்த இடத்தில் தான் தன் உறுதியான மனப்பான்மையைக் காட்டினான்.
இப்போதெல்லாம் ஒருவனுக்கு கஷ்டம் வந்துவிட்டால் போதும். மனைவியை தந்தை வீட்டுக்கு அனுப்பி ஏதாவது வாங்கி வாயேன், என கெஞ்சுகிறான். இன்னும் சிலர், அடியே! உன் அப்பன் சம்பாதிச்சு குவிச்சு வைச்சிருக்கான். அதிலே நமக்கு கொஞ்சம் கொடுத்தா குறைஞ்சா போயிடும்! போ! அந்த கல்லுளி மங்கனிடம் ஏதாச்சும் வாங்கிட்டு வா, என திட்டுகிறான். இன்னும் சிலர் மனைவியை அவர்களது வீட்டுக்கே அனுப்பி, இவ்வளவு தந்தால் தான் உனக்கு வாழ்க்கையே! இல்லாவிட்டால் விவாகரத்து, என மிரட்டி பணிய வைக்கிறான்.
நளமகாராஜா அப்படி செய்யவில்லை. என் அன்புச்செல்வமே! பைத்தியம் போல் பேசாதே! இந்த உலகத்தில் பணம் உள்ள வரையில் தான் ஒருவனுக்கு மதிப்பு! ஏதோ நோய் நொடி வந்தோ, பிள்ளைகளை கரை சேர்க்கவோ ஆகிய நியாயமான வழிகளில் பணத்தைக் கரைத்தவன் கூட, ஒருவனிடம் உதவி கேட்டுச் சென்றால், அவன் இவனைக் கண்டு கொள்ள மாட்டான்! நானோ, சூதாட்டத்தில் பணத்தைத் தொலைத்தவன். உன் தந்தையின் முன் நான் தலைகுனிந்து தானே உதவி கேட்க வேண்டியிருக்கும்.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்! பணமில்லாதவன், ஒரு செல்வந்தனிடம் போய், எனக்கு உதவு என்று கேட்டால், அவன் அவமானத்துக்கு ஆளாவான். அது அவனது புகழை அழிக்கும். தர்மத்தின் வேரை வெட்டி வீழ்த்தி விடும். அதுமட்டுமல்ல! அவனது குலப்பெருமையையும் அழித்து விடும், என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினான். அப்போதும் தமயந்தி விடவில்லை. அன்பே! நாம் கஷ்டத்தில் அங்கு வந்திருக்கிறோம் என்பதைக் கூட யாருக்கும் தெரியாமல் செய்துவிடலாம். வாருங்கள், என்றாள்.
என்னைக் கோழையாக்க பார்க்கிறாயா தமயந்தி. நான் அரசனாக இருந்தவன். உன் தந்தை எனக்கு மாமனார் என்பது இரண்டாம் பட்சம் தான். அவரும் ஒரு அரசர்! ஒரு அரசன், இன்னொரு அரசனிடம் உதவி கேட்பதா! சூதில் தோற்று, ஒன்றுமில்லாமல் நிற்கும் என்னை ஆண்மையற்றவன் என்றும் எண்ணி விட்டாயா? பிறரிடம் உதவி கேட்பவன் பைத்தியக்காரன் என்கிறார்கள் பெரியோர். அப்படியானால், நானும் பைத்தியக்காரனா? நளன் ஆவேசப்பட்டான்.  இவர்களுக்குள் வாதம் வலுத்தது.
தமயந்தி நளனிடம்,  தாங்கள் செங்கோல் ஏந்தி முறை தவறாத ஆட்சி நடத்தினீர்கள். அப்படிப்பட்ட தர்மவானான உங்களிடம் ஒரு யோசனை சொல்கிறேன். இதையாவது, தயவு செய்து கேளுங்கள். நாம் காட்டு வழியில் வரும் போது, நம்முடன் ஒரு பிராமணர் சேர்ந்து கொண்டார் அல்லவா! அவருடன் நம் குழந்தைகளை அனுப்பி குண்டினபுரத்திலுள்ள எங்கள் தந்தை வீட்டில் சேர்க்கச் சொல்லிவிடுவோம். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பது தானே உங்கள் நோக்கம்! அது நிறைவேறி விடும். நான் உங்களைப் பின்தொடர்கிறேன். உங்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது, வாழவும் முடியாது. இந்த யோசனையை ஏற்பீர்களா? என்னைக் கைவிட்டு சென்று விடாதீர்கள், என தமயந்தி, கல்லும் கரையும் வண்ணம் அழுதாள். செல்லப்பெண்ணாய் இருந்து, காதலியாகி, மனைவியாகி மக்களையும் பெற்றுத்தந்த அந்த அபலையின் கதறல் நளனின் நெஞ்சை உருக்கியது. அதேநேரம், பிள்ளைகளைப் பிரிய வேண்டுமே என்ற எண்ணம் இதயத்தை மேலும் பிசைந்தது.
தேவை தானா! இவ்வளவு கஷ்டங்களும். கெட்ட வழியில் செல்லும் ஒவ்வொரு ஆணும் நளனின் இந்த நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். சம்பாதிப்பதை விட, அதை நல்ல வழியில் கட்டிக் காக்கலாம். கெட்ட வழிகளில் செலவழித்து தானும் அழிந்து, குடும்பத்தையும் அழிப்பதை விட, இருப்பதில் பாதியை தர்மம் செய்திருந்தால் கூட புண்ணியம் கிடைத்திருக்கும். எதையுமே செய்யாமல், புட்கரன் உசுப்பிவிட்டான் என்பதற்காக அறிவிழந்த நளன் போல, எந்த ஆண்மகனும் நடந்து கொள்ளக்கூடாது. கெட்ட வழிகளில் ஈடுபடும்படி நம்மை வலியுறுத்தும் உறவுகள் மற்றும் நட்பிடமிருந்து விலகி நிற்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துச் சொல்கிறது.
அதேநேரம், பெற்ற பிள்ளைகளைக் கூட ஒரு பெண் ஒதுக்கி வைக்கலாம். ஆனால், கட்டிய கணவனை எக்காரணம் கொண்டும், அவனது துன்பகாலத்தில் கைவிடவும் கூடாது. அவன் மனம் திருந்திய பிறகும், என்றோ செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவனை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கவும் கூடாது. தமயந்தி தன் கணவனிடம், ஏன் இப்படி செய்தீர்கள்? பகடைக்காயை தொடும்போது என் நினைவும், உங்கள் பிள்ளைகளின் நினைவும் இருந்ததா? என்று ஒருமுறை கூட கேட்டதில்லை. நல்லவனான அவனை விதி என்னும் கொடிய நோய் தாக்கியதாக நினைத்து, அவனது கஷ்டத்தில் பங்கேற்றாள்.
இன்றைய தம்பதிகள், நளதமயந்தி போல் சிரமமான நேரங்களில் ஒருவருக்கொருவர் குத்திக்காட்டி சண்டை போடாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். இனியும் பழைய தவறைச் செய்யக்கூடாது என்று உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். நளனுக்கு இந்த யோசனை நல்லதாகப்பட்டது. ஒருவழியாய், பிள்ளைகளை தாத்தா வீட்டுக்கு அனுப்புவதென முடிவாயிற்று. ஆனால், புதுபூதம் ஒன்று கிளம்பியது.
தங்களை பெற்றோர் பிரிந்து செல்லப் போகிறார்கள் என்பதை அறிந்த பிள்ளைகள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பா! எங்களைப் பிரியப் போகிறீர்களா! எங்களை தாத்தா வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள். இனிமேல், நான் நடந்தே வருவேன். என் கால்களை முட்கள் குத்தி கிழித்தாலும் சரி. என்னைத் தூக்கச் சொல்லி உங்களிடம் நான் இனி சொல்லவே மாட்டேன். அமைதியாக உங்களைப் பின் தொடர்ந்து வருவேன், என்று கல்லும் கரைய அழுதாள் மகள்.
மகனோ அம்மாவைக் கட்டியணைத்துக் கொண்டு,அம்மா! உன்னிடம் நான் இனி உணவு கூட கேட்கமாட்டேன், பசித்தாலும் பொறுத்துக்கொள்வேன். நீ என்னைப் பிரிந்து விடாதே. என்னை உன்னோடு அழைத்துச்செல், எனக் கதறினான்.
அப்போது, அந்த காட்டில் இருந்த பூக்களில் இருந்து சிந்திய தேன், இவர்களது துயரம் கண்டு கண்ணீர் வடித்தது போல் இருந்ததாம். பிள்ளைகள் தங்கள் மீது கொண்டுள்ள பாசம் கண்டு கலங்கிய தமயந்தி வடித்த கண்ணீர், அவளது உடலில் அபிஷேக தீர்த்தம் போல் ஓடியது. பிள்ளைகளை மார்போடு அணைத்துக் கொண்டாள். என் அன்புச் செல்வங்களே! நீங்கள் இனியும் எங்களுடன் கஷ்டப்பட வேண்டாம். தாத்தா உங்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்வார். நாங்கள் விரைவில் அங்கு வந்துவிடுவோம். மீண்டும் வாழ்வோம் ஓர் குடும்பமாய், என்று ஆறுதல் மொழி சொல்லித் தேற்றினாள்.
அந்தணரை அழைத்த நளன், சுவாமி! தாங்கள் இவர்களை குண்டினபுரம் அரண்மனையில் சேர்த்து விடுங்கள். நாங்கள் மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம், என்றான். அவர்களது துயரநிலை கண்ட அந்தணரும், அதற்கு சம்மதித்தார். பிள்ளைகளுடன் குண்டினபுரம் கிளம்பிவிட்டார். நளனும், தமயந்தியும் கண்ணில் நீர் மறைக்க, தங்கள் குழந்தைகள் தங்கள் கண்ணில் இருந்து மறையும் தூரம் வரை அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றனர்.
பின்னர், பிரிவு என்னும் பெரும் பாரம் நெஞ்சை அழுத்த, அதைச் சுமக்க முடியாமல் தள்ளாடியபடியே சென்றனர். அந்தக் கொடிய காட்டில் கள்ளிச்செடிகள் வளர்ந்து கிடந்த ஒரு பகுதி வந்தது. அந்த இடத்தைக் கடந்தாக வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த கொடிய காட்டை எப்படிக் கடப்பது என நளன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், சனீஸ்வரர் இவர்களைப் பார்த்தார்.
ஆஹா! வசமாகச் சிக்கிக் கொண்டாயடா! வாழ்வில் ஒருமுறை தப்பு செய்தவனை நான் அவ்வளவு லேசில் விடமாட்டேன். தப்பு செய்தவர்கள் மீது எனக்கு இரக்கமே ஏற்படாது.. புரிகிறதா! பிள்ளைகளைப் பிரிந்தாய். உன் மனைவி என்னவோ புத்திசாலித்தனமாக உன்னைப் பின் தொடர்வதாக நினைக்கிறாள்! உன்னை மனைவியோடு வாழ விடுவேனா! இதோ வருகிறேன், என்றவர், தங்கநிறம் கொண்ட ஒரு பறவையாக மாறினார். வேகமாகப் பறந்து வந்து கள்ளிச்செடி ஒன்றின் மீது அமர்ந்தது அந்தப்பறவை.
பெண்களைஎந்தச் சூழலிலும் தங்கத்தின் மீதான ஆசை விடாது போலும்! கணவனுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையிலும், அந்த தங்கநிற பறவை மீது தமயந்தியின் கண்பட்டது. ராமபிரான் காட்டுக்குச் சென்ற போது, அந்தச் சிரமமான வாழ்க்கை நிலையிலும், தன் கண்ணில் பட்ட தங்க நிற மானைப் பிடித்துத் தரச்சொன்னாளே! சீதாதேவி…அது போல, தமயந்தியும் தன் கணவனிடம் குழைந்தாள். அன்பரே! அந்தப் பொன்னிற பறவையைப் பார்த்தீர்களா! எவ்வளவு அழகாக இருக்கிறது! அதை எனக்குப் பிடித்துத் தாருங்களேன், என்றாள் கொஞ்சலாகவும், கெஞ்சலாகவும்.
மங்கையரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் மாமலையும் ஆடவர்க்கு ஓர் கடுகாம் என்பார்களே! இவனுக்குப் பொறுக்குமா? தன் காதல் மனைவி, தனக்காக நாட்டையும், சுகபோகங்களையும், ஏன்…பெற்ற பிள்ளைகளைக் கூட மறந்து தன்னோடு காட்டில் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என நடக்கிறாளே! அவளது துன்பத்தை மறக்க இந்த பறவை உதவுமென்றால், அதை பிடித்தாக வேண்டுமல்லவா! அவ்வளவு தானே! சற்றுப் பொறு தமயந்தி! நீ இங்கேயே இரு! அதை நான் நொடியில் பிடித்து வருகிறேன், எனச் சொல்லி கிளம்பிவிட்டான் நளன்.
கெட்ட நேரத்தின் உச்சக்கட்டமாய் வந்த அந்தப் பறவையை, சனீஸ்வரன் என அறியாமல் அதை நோக்கி பூனை போல் நடந்தான் நளன். அது கையில் சிக்குவது போல பாவனை காட்டியது. அவனது கை இறக்கைகளின் மேல் படவும், சுதாரித்துக் கொண்டு பறந்து போய் வேறு கள்ளிச் செடியில் அமர்ந்தது. நளன் அங்கே ஓடினான். அது மீண்டும் பழைய செடிக்கேவந்து அமர்ந்தது. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் சற்றுநேரம் தொடர்ந்தது.
என்னிடமா பாவ்லா காட்டுகிறாய்? உன்னைப் பிடிக்கும் கலை எனக்குத் தெரியும், என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவன், தன் இடுப்பில் கட்டியிருந்த பட்டு வேட்டியை அவிழ்த்தான்.
தமயந்தியை அழைத்தான். பூங்கொடியே! உன் ஆடையை நாம் இருவரும் உடுத்திக் கொள்வோம். என்னுடைய ஆடையை இந்தக் கள்ளிச்செடியில் அமர்ந்துள்ள பறவையின் மீது போட்டு பிடித்து விடுவோமா! என்றான். அவளும் ஆர்வமாக சரியெனத் தலையாட்டினாள். தன் பட்டாடையை பறவையின் மேல் போட்டான். அவ்வளவு தான்! பறவை பட்டாடையுடன் உயரே பறக்க ஆரம்பித்து விட்டது. கவுபீனம் (கோவணம்) மட்டுமே அணிந்திருந்த நளன், ஐயோ! பறவை எங்கோ பறந்து போகிறதே! என்றவன், ஹோ…ஹோ… என கூச்சலிட்டு நின்றான்.
அந்தப் பறவை நடுவானில் நின்றபடியே, ஏ மன்னா! பொருளின் மீது கொண்ட பற்று காரணமாகத்தானே ஏற்கனவே நாட்டை இழந்தாய். இப்போதும், அந்த ஆசை விடவில்லையோ! தேவர்களைப் பகைத்து இந்த இளம் நங்கையை மணம் செய்து கொண்டவனே! புட்கரனுடன் சூதாடும் மனநிலையை உனக்கு உருவாக்கி,  உன்னை நாடு இழக்கச் செய்த சனீஸ்வரன் நானே! யார் ஒருவரை நான் பற்றுகிறேனோ, அவர்களின் மன உறுதியைச் சோதிப்பதே என் பணி. மனைவி, பொருட்களின் மீது ஆசைப்பட்டாலும், அவர்களுக்கு உரிய புத்திமதியைக் கனிவுடனும், கண்டிப்புடனும் சொல்வது கணவனின் கடமை. இல்லாவிட்டால், அந்தக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்ற சிறிய இலக்கணம் கூட தெரியாமல் இருக்கிறாயே! வருகிறேன், என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டது. விதியை எண்ணி வருந்தினான் அவன்.
ஒரு குடும்பத்தை அழிக்க மூன்று போதைகள் உலகில் உள்ளன. சூது, மது, மாது என்பவையே அவை. அதற்கு அடிமையானவர்கள் உடுத்திய துணியைக் கூட இழப்பது உறுதி. போதையில் தெருவில் ஆடையின்றி உருளும் எத்தனையோ ஜென்மங்களை இன்றும் பார்க்கத்தானே செய்கிறோம்! பணத்தாசையால் இன்றும் கூட விளையாட்டுகள் கூட சூதாக மாறி, இடுப்புத்துணியைக் கூட இழப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! இவர்களுக்காகத் தான் நளதமயந்தியின் வரலாற்றை வியாசர் மகாபாரதத்தின் கிளைக்கதையாக எழுதி வைத்தார்.
இதைப் போன்ற கதைகளை பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனதில் இளமையிலேயே நல்லெண்ணங்கள் பதியும். இதையெல்லாம் விட்டு, குழந்தைகளுக்கு போலிச்சான்று வாங்கக் கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனம் விஷமாகித்தானே போகும்! அவர்களெல்லாம், இன்று சனீஸ்வரனின் பிடிக்குள் சிக்கிக் கொண்டார்களே! கட்டிய துணியை இழந்த நளன், மனைவியின் ஆடையில் பாதியை வாங்கி உடுத்திக் கொண்டான். உடல் இரண்டாயினும் உயிர் ஒன்றாகட்டும் என்பார்களே! அப்படித்தான் நளதமயந்தி தம்பதியர் இருக்கிறார்கள். இப்போது ஆடையாலும் ஒன்றானார்கள்.
தமயந்திக்கு வயிற்றெரிச்சல் தாங்கவில்லை. சனீஸ்வரரையே சபிக்க ஆரம்பித்து விட்டாள். தர்மம் தவறி நடப்பவர்கள், பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வளர்பவர்கள், நெஞ்சில் ஈரமில்லாதவர்கள், மானத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாதவர்கள், தெய்வத்தை பழிப்பவர்கள், உழைப்பை நம்பாமல் பிச்சை கேட்பவர்கள்…இவர்களெல்லாம் நரகத்திற்குப் போய்ச் சேர்வர் என்கிறது சாஸ்திரம். ஏ சனீஸ்வரா! நீயும் இப்போது இந்த ரகத்தில் சேர்ந்துவிட்டாய். நீயும் நரகத்துக்குப் போவது உறுதி, என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top