கனவு!!!

கனவு!!!

கனவு காணுங்கள், கனவு காணுங்கள் என்று ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி கூறுவார்.கனவுகள் தான் நினைவுகளை உண்டாக்கும்…புதிய புதிய ஆய்வுகளைக் கண்டறியவும், புதிய புதிய உத்திகளை கையாளவும், புதிய புதிய பாதைகளை வழிவகுக்கவும் செய்யும். அந்த வகையில்தான் எத்தனையோ விஞ்ஞானிகள் தாங்கள் கண்ட கனவுகளின் மூலம் மனித இனத்திற்கே மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர்.

கனவு என்பது புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமின்றி கதைகள் எழுதவும் சிலருக்கு உதவியிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பர்ரோ. இவர் ஆரம்ப காலத்தில் சாக்லெட் முதல் மோட்டார் வண்டியின் பாகங்கள் வரை மொத்த மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.

வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

அதனால் வியாபாரத்தை நிறுத்தியவர் குமாஸ்தாவாக ஒரு அலுவலகத்தில் சேர்ந்தார். அலுவலகத்தின் கெடுபிடிகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர் அந்த வேலையையும் விட்டுவிட்டார். 

பின்பு தொழில் தொடங்கினார்… பல தொழில்கள் செய்தும் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் ஏற்படவே மனவேதனைப்பட்டவர், இனி என்ன செய்வது, வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று சதா சிந்தித்து கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தார். கவலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே இரவில் தூக்கம் அவருக்கு வருவதில்லை.

அப்படியே கொஞ்ச நேரம் தூங்கினாலும் கண் மூடிய சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்குப் பயங்கரக் கனவு தோன்றி தூக்கத்தைக் கலைத்துவிடும்.தினமும் காலை எழுந்தது முதல் இரவு வரை அந்தப் பயங்கரக் கனவு பற்றியே சிந்தித்துக் கொண்டேயிருப்பார். அப்படித்தான் வழக்கம் போல ஒருநாள் பயங்கரக் கனவு வந்தது. 

என்றும் போல் காலை வரை உருண்டு புரண்டு படுக்கையில் படுத்தேயிருக்காமல் அன்று வழக்கத்திற்கு மாறாக கனவு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். கண்ட கனவினை நினைவுபடுத்திப் பார்த்தார்.

ஆப்பிரிக்க காடு; அதில் ஒரு குரங்கு மனிதன். அவன் செய்யும் வினோதச் செயல்கள். இதை அப்படியே எழுதி சம்பவங்களாக்கினார்… பின்பு அதைக் கதை வடிவமாக உருவாக்கினார்.

பல தொழில்கள் செய்து நஷ்டமடைந்த பின் மீதமிருந்த பணத்தைக் கொண்டு புத்தகமாக வெளியிட விரும்பினார். விருப்பம் நிறைவேறியது. ஆனால் புத்தகங்கள் விற்பனையாகவில்லை. கற்பனைக்கும் எட்டாத கட்டுக்கதைகளாக இருக்கிறதென எல்லாராலும் பேசப்பட்டது.

புத்தகங்களை விற்றாலன்றி சாப்பாட்டுக்கு வேறு வழியில்லையென்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பர்ரோ, வீடு வீடாகச் சென்று காலில் விழாத குறையாகவும், குறைந்த விலையிலும் விற்று வயிற்றைக் கழுவி வந்தார்.

அத்தோடு முயற்சியினையும் விட்டுவிடவில்லை. தாம் கண்ட கனவின் கதைகளை சுவாரசியமாகவும், உண்மைச் சம்பவங்களுடன் இணைத்து மெருகுபடுத்தி கதைகளை வெளியிட நினைத்தார்.

அந்த நேரத்தில் “ஸ்டேன்லி’ என்ற எழுத்தாளர் எழுதிய, “இன் டார்க்கன்ட் ஆப்ரிக்கா’ என்ற புத்தகம் வெளிவந்தது.
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல அந்த புத்தகம்… தெய்வம் போல இவருக்கு வழிகாட்டியது.
சிந்தனையை மெருகூட்டினார். குரங்கு மனிதனை டார்ஜான் பெயரிட்டு புதுமெருகுடன் கதை எழுதத் தொடங்கினார்.

புதிய பத்திரிகை ஆசிரியர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு “டார்ஜான்’ கதையை தொடராக வெளியிட அனுமதி பெற்றார். 1912ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அக்கதை மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

புத்தகமாக வெளியிட்டால் நல்ல விலைக்குப் போகும் என்று நண்பர்கள் சொன்னார்கள். முதலில் வெளியிடத் தயங்கினார். நண்பர்களில் சிலர் பொருளுதவி கொடுக்கிறோம்… தயங்காமல் வெளியிடு என்று உற்சாகமூட்டினர்.

நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் புத்தகத்தை வெளியிட்டார். நண்பர்கள் சொன்னபடியே லட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே மூச்சில் விற்றுத் தீர்ந்தன.

இவ்விஷயத்தை அறிந்த சினிமாப் படக் கம்பெனிக்காரர்கள் மக்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்ட “டார்ஜான்’ கதைதனை திரைப்படமாக எடுத்தால் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். பர்ரோவின் அனுமதி பெற்று படம் எடுத்தனர்.
ஒரு படமல்ல, இரு படமல்ல… 25 படங்களை எடுத்தனர். அத்தனையும் வெற்றிகரமாக ஓடியது.

திரைப்படங்களில் வெற்றி பெற்ற காரணத்தினால் ஆப்பிரிக்க நாட்டிலுள்ள விற்பனைக் கூடங்கள் அனைத்திலும் விற்கும் பொருட்களான சாக்லெட், சோப்பு, சீப்பு, பள்ளிச் சிறுவர்கள் எடுத்துச் செல்லும் பைகள், உணவு வகைகள், துணி வகைகள், வாகனங்கள் அனைத்திலும் டார்ஜான் பெயர்களே வைக்கப்பட்டன.

பயங்கரக் கனவின் மூலம் புத்தகமாக எழுதி வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்த எழுத்தாளர் பர்ரோ தாம் இப்படி கோடீஸ்வரர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top