Home » சிறுகதைகள் » நளதமயந்தி பகுதி – 1
நளதமயந்தி பகுதி – 1

நளதமயந்தி பகுதி – 1

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார். எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், மனைவியையும் பணயம் வைத்து அவமானப்பட்டோம். என் ஒருவனது தவறான முடிவால், இன்று எல்லாரும் சிரமப்படுகின்றனரே! இதைத்தான் விதி என்பதோ! ஏன் மனிதனை இப்படி கஷ்டங்கள் வாட்டுகின்றன! கிருஷ்ணா! என்னைப் போல் கஷ்டப்பட்டவர் உலகில் யாரும் இருக்கமாட்டார்கள்.
இனியும் இருக்கக் கூடாது, என்று பெருமூச் செறிந்த வேளையில், சிரிப்பொலி கேட்டது. சிரித்தவர் வியாச மகரிஷி. தர்மராஜா அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். சாதாரணமான மகரிஷியா அவர்! பராசர முனிவருக்கும், யோஜனகந்தி என்னும் செம்படவர் குலத்தில் வளர்ந்த பெண்ணுக்கும் பிறந்த பிள்ளையான அவர், மகாபாரதம் என்னும் காவியம் எழுதும் பாக்கியம் பெற்றார். உலகில் தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பொக்கிஷம் அது.
இந்த கலியுகத்திலும், நமது பாரதத்தின் மூலை முடுக் கெல்லாம் ஒலிக்கும் தர்மம் என்னும் கோஷத்திற்கு காரணம் இந்த இதிகாசம் தான். இந்தக் காவியத்தை எழுத அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அக்காலத்தில், சில மகரிஷிகளுக்கு கதை சொல்லத் தெரியும். ஆனால், எழுதத்தெரியாது. எனவே, நல்ல எழுத்தர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
மகாபாரதம் தர்மத்தை நிலைநிறுத்த எழுதப்பட்ட இதிகாசமல்லவா! இதை எழுதும் பொறுப்பை விநாயகப்பெருமான் முன்வந்து ஏற்றுக்கொண்டார். யானைக்கு அழகே தந்தம் தான்! ஆனால், அந்த ஆனை முகத்தான் தன் தந்தத்தையே ஒடித்து, வியாசர் சொல்லச் சொல்ல எழுத ஆரம்பித்து விட்டார். எழுதுகோலாக தந்தத்தை ஒடித்துக் கொண்டவர், எழுதுவதற்காக அவர் தேர்ந்தெடுத்த பொருள் தெரியுமா? புராணங்களில் வர்ணிக்கப்படும் மேருமலை.
அப்போது, வியாசர் விநாயகருக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.
ஐயா, கணபதி! நீர் எழுதுவதெல்லாம் சரி! நான் சொல்வதை சற்றும் தாமதிக்காமல் எழுதி விட வேண்டும். ஏனென்றால், நான் ரொம்ப வேகமான ஆள். சற்று தாமதித்தாலும், திரும்பச் சொல்லமாட்டேன், சரியா? என்றார்.இவரே இப்படி என்றால், பார்வதி பாலகனான கணேசன் விடுவாரா என்ன!அதெல்லாம் இருக்கட்டும் ஓய்! நான் எழுதும்போது, நீர் நிறுத்திவிட்டால்,அப்படியே எழுந்து போய்விடுவேன்.
ஆனால், தான் எழுத்தராக இருக்க வேண்டுமானால், இந்த நிபந்தனைக்கு வியாசர் கட்டுப்பட வேண்டும் என்று சொல்லி விட்டார். ஆரோக்கியமான போட்டிதானே! வியாசர் விடாக்கண்டனாக ஸ்லோகங்களை அள்ளி விட, விநாயகர் வேகமாக எழுதித் தள்ளினார். ஒரு கட்டத்தில் வியாசருக்கு மூச்சு முட்டிவிட்டது.
எவ்வளவு ஸ்லோகங்களைச் சொன்னாலும், கணநேரத்தில் எழுதி விடுகிறாரே இந்தக் கணபதி! உஸ்… என்று மூச்சு வாங்கியவர், ஒரு தந்திரம் செய்தார்.கணேசா! நீர் எழுதுவதெல்லாம் சரி… சில சமயங்களில் நான் சில ஸ்லோகங்களைச் சொல்லி, அதற்கு விளக்கம் கேட்பேன், நீர், விளக்கத்தைச் சொல்லிக்கொண்டே, அடுத்து நான் சொல்லும் ஸ்லோகங் களையும் எழுத வேண்டும். என கண்டிஷன் போட்டார். இப்படி மடக்கப் பார்க்கிறீரா? என்று ஆனைமுகன் தலையை ஆட்டினார்.
வேதங்களைத் தொகுத்தவருக்கே இவ்வளவு தைரியம் என்றால், வேதநாயகனின் பிள்ளைக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்! இவர்களது போட்டி தொடர்ந்தது. சில கடுமையான பொருளுள்ள இப்போது, ஒரு சுவையான…ஆனால், கடினமான ஸ்லோகம் ஒன்றைச் சொல்லி விளக்கம் கேட்பார் வியாசர். கணபதி இதற்குரிய பொருளை அரை நொடிக்குள்சொல்லி விட, அதற்குள் அடுத்த ஸ்லோகத்தை சுதாரித்து  சொல்லத் தொடங்குவார் வியாசர். இப்படியாக பெரும் சிரமமெடுத்து வியாசர் தயார் செய்தது மகாபாரதம்.
அதில் தன்னையும் ஒரு பாத்திரமாக்கிக் கொண்ட வியாசர், தர்மராஜா முன் தோன்றினார். தர்மரின் மனக்குறிப்பை அறிந்த அவர், தர்மராஜா! நீ ஒருவனே உலகில் கஷ்டப்படுபவன் போலவும், உனக்கு மட்டுமே தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தது போலவும் நினைக்கிறாய். இது சரியல்ல! நமக்கு ஒரு கஷ்டம் வரும் போது, நம்மிலும் கஷ்டப்படுபவர் கøளைப் பார்த்து ஆறுதலடைய வேண்டும். உனக்கு நிடத மகராஜன் நளனைப் பற்றித் தெரியுமா? அவனும் உன்னைப் போலவே சூதாட்டத்தில் நாடிழந்தவன்.
சிறிய கடமை ஒன்றை செய்யாமல் விட்டதற்காக பெரும் இழப்பைச் சந்தித்தவன். அவனும் உன்னைப் போலவே நல்லவன். உனக்காவது, தெரிந்தே துன்பம் வந்தது. அவனுக்கோ, மக்களைக் காக்க வேண்டிய தேவர்களே சோதனைகளைக் கொடுத்தனர். அவனுடைய வரலாற்றைக் கேள். அதன்பிறகு, உனக்கு வந்துள்ள துன்பம் மிகச்சிறியது என்பதை உணர்வாய், என்றார். தர்மராஜா அந்தக் கதையைக் கேட்கத் தயாரானார். நளமகாராஜனின் கதையைக் கேட்பவர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் நடக்காது என்பது நீண்டகால நம்பிக்கை.
அது மட்டுமல்ல! இந்த சரிதத்தைப் படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நாமும் சனிபகவானை வணங்கி, இந்தக் கதையைத் துவக்குவோம். அன்று அதிகாலையில், குகைக்கு வெளியே கொட்டும் மழையில் பாதுகாப்புக்கு நின்ற தன் கணவன் ஆகுகனைக் காண வேக வேகமாக வெளியே வந்த அவனது மனைவி ஆவென அலறி விட்டாள். ரத்தச்சகதியாகி வெளியே கிடந்தான் ஆகுகன்.
என் அன்பே! தியாகத்தின் திருவிளக்கே! தர்மத்தின் தலைவனே! தங்களுக்கா இந்தக்கதி! பிறருக்கு உபகாரம் செய்த உங்களது உயிரையா இறைவன் பறித்துக் கொண்டான்! இறைவா! இதுதான் உனது அரசாங்கத்தின் தர்மமா! என்று கொதித்தாள். அவளது அலறல் கேட்டு, குகைக்குள் இருந்த துறவி ஓடி வந்தார். பாசபந்தங்களைத் துறந்த அவரது மனதில் கூட வேடனின் மரணம் சோக அலைகளை எழுப்பியது. கணவனின் உடல் மீது கதறியபடியே விழுந்த அவள் அதன் பின் எழவில்லை. என்னுடைய உயிர் காக்க இந்த வேடனும், அவனது மனைவியும் உயிர் துறந்தனரே, என்று கவலைப்பட்ட துறவி முதல்நாள் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தார்.
அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் தெரியாதவர் என்றாலும், அந்த முனிவரின் முகத்தில் இருந்த தேஜஸ் அவனைக் கவர்ந்தது. தவவலிமையில் சிறந்தவரே! வர வேண்டும், வரவேண்டும். தாங்கள் இந்த அடர்ந்த காட்டுக்குள் எப்படி வந்தீர்கள்? இங்கே கொடிய மிருகங்கள் மட்டுமல்ல, நாகங்களும் திரிகின்றன. இப்போது மாலை நேரம் வேறு. சற்றுநேரத்தில் இருட்டிவிடும். மிருகங்கள் இரவில் தான் உணவு தேடி அதிகமாக வெளியே உலவும்.
தாங்கள் அவற்றிடம் சிக்கிக்கொண்டால்…நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. உங்களுக்கு நல்ல நேரம் என்பதால் தான் என் கண்ணில் பட்டீர்கள். வாருங்கள். எனது குகையில் தங்கி காலையில் செல்லலாம். காட்டின் எல்லை வரை நானே பாதுகாப்பாக வந்து வழியனுப்பி வைக்கிறேன், என்றான். முனிவரும் அவன் சொன்னதிலுள்ள நியாயம் அறிந்து, அவனுடன் குகைக்குச் சென்றார். புலித்தோல் விரித்து அதில் அவரை அமரவைத்தான் ஆகுகன். அவனது மனைவி ஆகுகி, தேனில் ஊற வைத்த பலாச்சுளைகளை அவருக்கு அளித்தாள்.
மிருகங்களைக் கொன்று தின்னும் வேடர்களாயினும், அவர்களது உள்ளத்திலுள்ள இரக்க குணத்தைக் கண்டு மகிழ்ந்தார். அவனைப் பற்றி விசாரித்தறிந்தார். சுவாமி! நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்தக் காட்டில் தான். என் பெற்றோரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. எப்படியோ வளர்ந்தேன், இங்குள்ள மிருகங்களெல்லாம் எனக்கு நண்பர்கள் போல. ஏதாவது, ஒரு மிருகம் எனக்கு துன்பம் செய்ய வருகிறதென்றால் அதை மட்டுமே அடித்து உண்போம். இல்லாவிட்டால், பட்டினியாக இருந்து கொள்வோம், என்றான்.
முனிவர் அவனது நல்ல குணத்திற்காக சந்தோஷப் பட்டார். குழந்தைகளே! நீங்கள் இருவரும் மனமொத்து குடும்பம் நடத்துவது பற்றியும், முன்பின் தெரியாதவர்களையும் உபசரிக்கும் விதத்தையும் பார்த்து மகிழ்கிறேன். நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும். என்னை உபசரித்ததற்கு பதில் உபகாரம் ஒன்று செய்ய வேண்டும். துறவியான என்னிடம் பொருளா இருக்கும், உங்களுக்குத் தருவதற்கு! ஆனால், அருள் என்னும் பொருள் நிறைய இருக்கிறது. அதை உங்களுக்கு தருகிறேன். உங்களுக்கு ஒரு விஷயத்தை உபதேசிக்கிறேன், என்றார்.
அவர்கள் பணிவுடன் நின்றனர்.குழந்தைகளே! மாட்டு வண்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்றார். ஆம் என அவர்கள் தலையசைத்தனர். அந்த வண்டியில் மாடு தானாகவே போய் தன்னைக் கட்டிக்கொள்ளுமா? என்றார். இல்லை, வண்டிக்காரன் தான் கட்டுவான், என்றனர் அவர்கள். அதுபோல், வண்டி மாட்டின் மீது தானாக வந்து ஒட்டிக் கொள்ளுமா? என்றார். அதற்கும் அவர்கள், இல்லை, என்றனர். ஆக, ஒரு மாட்டை வண்டியில் பூட்டுபவன் வண்டிக்காரன். ஒன்றை ஒன்று தானாக பற்றிக் கொள்வதில்லை.
அதுபோல், உயிர் என்ற மாட்டை அதனதன் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, உடம்பு என்ற வண்டிக்குள் இறைவன் என்னும் வண்டிக்காரன் பூட்டி விடுகிறான். வண்டியைப் பயன்படுத்த தேவையில்லை என்றால், வண்டியையும், மாட்டையும் வண்டிக்காரன் எப்படி கழற்றி விடுகிறானோ, அதுபோல், உயிர்கள் அதனதன் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்த பிறகு., இறைவன் உயிரை உடலில் இருந்து எடுத்து விடுகிறான். எனவே உயிர் பிரிவதற்குள் ஒவ்வொருவரும் இறைவனைச் சரணடைய வேண்டும். நீங்கள் சிவாய நம என்றும், ஓம் நமோ நாராயணாய என்றும் இறைவனின் திருநாமத்தைச் சொல்லி மறுபிறவிக்குரிய பலாபலனை சேர்த்துவையுங்கள்,  என்றார் முனிவர்.
அரிய கருத்தொன்றை, படிக்காத தங்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்த முனிவருக்கு அவர்கள் நன்றி கூறினர். உறங்கும் நேரம் வந்துவிட்டது. ஆகுகன் அவரிடம்,முனிவரே! தாங்கள் அயர்ந்து உறங்குங்கள். இந்தக் குகையில் இருவர் தான் படுக்க முடியும். நானும், ஆகுகியும் உள்ளே படுத்தால் தாங்கள் வெளியே படுக்க நேரிடும். இரவில் மிருகங்கள் உங்களைத் தாக்கிவிடும்.
நீங்களும், நானும் உள்ளே படுத்து ஆகுகி வெளியில் இருந்தால் அவளுக்கும் ஆபத்து. எனவே, மிருகங்கள் வந்தாலும் அவற்றை வேட்டையாடும் திறனுள்ள ஆயுதபாணியான நான் வெளியில் படுப்பதே சரி! நீங்களும் ஆகுகியும் உள்ளே படுங்கள். இவள் பதிவிரதை. தாங்கள் அவளுக்கு தந்தை போன்றவர். இருவரும் உள்ளே உறங்குவதில் தவறில்லை. நான் ஆயுதத்துடன் பாதுகாவல் செய்கிறேன், என்றான்.
இத்தகைய பெருந்தன்மையை முனிவர் எதிர்பார்க்கவே இல்லை. எவ்வளவு உயர்ந்த பண்பு கொண்டவன் இந்த வேடன் என அசந்து போனார். அவனுடைய வேண்டுகோளை அவரால் மறுக்க முடியவில்லை. குகைக்குள் முனிவரும் ஆகுகியும் படுத்துவிட்டனர். ஆகுகன் வெளியே காவல் இருந்தான். நள்ளிரவில் சற்று கண் அயர்ந்து விட, ஆயுதம் கீழே கிடந்தது. இந்த சமயத்தில் சிங்கம் ஒன்று அவன் மீது பாய்ந்து அவனை ரத்தச்சகதியாக்கி விட்டு போய்விட்டது. இதைக் கண்ட ஆகுகி அலறினாள். கணவன் மீது பாசம் கொண்ட அவளது உயிரும் பிரிந்தது. தனக்காக தம்பதியர் இருவரும் உயிர் விட்ட பரிதாப நிலையைக் கண்டு  முனிவர் வருந்தினார்.
ஆனாலும், என்ன செய்ய முடியும்?அவர்களது உடல் மீது மந்திர நீரை தெளித்தார். கட்டைகளைப் பொறுக்கி வந்து அடுக்கி, அவர்களது உடல்களுக்கு தீ மூட்டினார். அவர்கள் எரிவதைப் பார்த்து மனம் பொறுக்கவில்லை. அருகில் இருந்த ஏரியில் மூழ்கி அவரும் உயிரை விட்டுவிட்டார்.
அந்த தியாகச்செம்மலான வேடனே நிடதநாட்டு அரசன் நளனாகப் பிறந்தான். அவனது மனைவி ஆகுகி, விதர்ப நாட்டின் அரசன் பீமனின் மகளாகப் பிறந்து தமயந்தி என்னும் பெயர் பெற்றாள். இவர்களால் பலன் பெற்ற முனிவர், முற்பிறவியில் தன்னால் உயிரிழந்து பிரிந்த அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க பிறவியெடுத்தார், ஒரு அன்னப் பறவையாக! இவர் மானிடராகப் பிறந்திருக்கலாமே! ஏன் ஒரு அஃறிணைப் பொருளாக வடிவம் கிடைத்தது?
முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் என்ன செய்திருக்க வேண்டும்? அப்பனே! நானோ முற்றும் துறந்தவன், நீயும், உன் மனைவியுமே வழக்கம் போல் உள்ளே படுத்துக் கொள்ளுங்கள். நான் வெளியே இருக்கிறேனே! என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல், இரண்டு உயிர்கள் பலியாகக் காரணமாகி விட்டதன் விளைவாக அவர் மனித நிலையில் இருந்து தாழ்ந்து அன்னமாகப் பிறந்தார்.
முற்பிறவியில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, இப்பிறவியில் அந்த தம்பதியரை மீண்டும் இணைத்து வைக்க உதவி செய்தார். நிடத நாடு…வயல்களில் செந்நெல் விளைந்து கயல்மீன்கள் துள்ளும் செழிப்பான பூமி. தேன் சிந்தும் பூக்களைக் கொண்ட ஏராளமான சோலைகள் பார்ப்பவர் கண்களைக் குளிர வைக்கும். தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமியைப் போல் லட்சணமான மங்கையர்கள் அங்கே நிறைந்திருந்தார்கள்.
மணம் மிக்க மலர்களை அவர்கள் கூந்தலில் சூடியும், மார்பில் சந்தனக்குழம்பு பூசியுமே வெளியே செல்வார்கள். அவ்வாறு அவர்கள் சூடிய மலர்களின் மிச்சமும், சந்தனக்குழம்பின் சொச்சமும் தெருவெங்கும் சேறு போல கிடந்தது. அந்தச் சேற்றிலே நடக்கும் யானைகள் வழுக்கி கீழே விழுந்தனவாம்.
அந்தளவுக்கு அங்கே செல்வச் செழிப்பு. எல்லாருமே பணக்காரர்கள் என்பதால் அங்கே இன்பம் மட்டுமே பொங்கி வழிந்தது. இப்படிப்பட்ட செழிப்பான நிடதநாட்டின் தலைநகரம் மாவிந்தம். இங்கே அறிஞர்களும், கவிஞர்களும் ஏராளமாக வாழ்ந்தனர். அதாவது, கலைமகளுக்கு சொந்த இடம் பிரம்மலோகம் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அவளது ஊர் எது எனக் கேட்டால் அது மாவிந்தம் என்று சொல்லக்கூடிய நிலைமை இருந்தது.
நமது ஊரில் மழை பெய்தால், தூறல் தரையிலே விழுந்து மண்வாசனை எழும். அந்த மண் மணமே நமக்கு ஒரு மயக்கத் தைத் தரும். ஆனால், நிடதநாட்டில் மழை பெய்தால் சாம்பிராணி போல் மணக்குமாம். ஏன் தெரியுமா? இளம்பெண்கள் நீராடிவிட்டு, கூந்தலை காயவைக்க அகில் புகை இடுவார்கள். அந்தப் புகை ஊரையே நிறைத்திருக்கும். மழை பெய்யும் போது, புகை நீரில் கரைந்து மழைநீருக்கே மணம் வந்துவிடுமாம். அந்த ஊரிலுள்ள பெண்களின் கற்புநெறியைப் பற்றி சொல்ல வேண்டுமே! கேட்டால், கண்களில் நீர் துளிர்க்கும்.
நளன் ஆண்ட நிடதநாட்டில் குடிசையே கிடையாது. எல்லாருமே மாடமாளிகைகளில் தான் வசித்தனர். மாளிகை மாடத்திலே நிற்கும் பெண்கள் எட்டி எட்டி பார்ப்பார்கள், வேலைக்கும், வியாபாரத்திற்கும் சென்ற தங்கள் கணவன்மார் திரும்பி வருகிறார்களா என்று! தூரத்தில் யாரோ ஒருவர் வருவது தெரிந்தவுடன், ஆஹா..அவர் தான் வருகிறார் என்று முகம் சிவக்க காத்திருப்பார்களாம். அருகில் வந்ததும், வேறு யாரோ எனத் தெரிந்ததும், அவர்கள் அழுதே விடுவார்களாம்.
ஏன் தெரியுமா? பிற ஆண்மகன் ஒருவனை தன் கணவன் என எண்ணி, இவ்வளவு நேரமும் எட்டி எட்டி பார்த்தோமே என்று! எத்தகைய கற்புத்திறனுக்கு சொந்தக்கார நாடாக நமது தேசம் இருந்திருக்கிறது! இப்படி ஒரு யுகத்தில் நம்மால் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் கூட பிறக்கிறதல்லவா! அந்த ஊரிலே அலறல் சப்தம் ஆங்காங்கே கேட்கும்…ஐயோ! பசிக்கிறதே, ஐயோ, என் கணவன் என்னை அடிக்கிறானே, ஐயோ! என் மனைவி இப்படி கத்துகிறாளே என்கின்ற அலறல் அல்ல அது! அவ்வூர் பெண்கள் தங்கள் கால்களில் அணிந்திருக்கும்  தங்கச் சலங்கைகளின் சப்தமே அது! அது இனிய இசை போல் ஒலிக்குமாம்!
அந்த நாட்டிலுள்ள குளங்களில் தாமரை மலர்கள் வேண்டுமானால் தத்தளிக்கும். ஆனால், மக்களின் மனம் தத்தளித்ததாக சரித்திரமில்லை. அங்குள்ள மக்களுக்கு தெளிவாகத் தெரிபவை நல்ல நல்ல புத்தகங்களிலுள்ள அறிவு சார்ந்த வரிகள். ஆனால் தெரியாத வரிகள் பெண்களின் இடுப்பு வளைவுகள். புடவை கட்டுவதில் அப்படி ஒரு ஒழுக்கம். அங்கு அம்மா தாயே என்ற ராப்பிச்சைக் குரலை யாருமே கேட்டதில்லை. எல்லாருமே பணக்காரர்கள் என்பதால் பொறாமைக்கும், வஞ்சனைக்கும் இடமில்லை.
எல்லா வீட்டாரும் மனதாலும் குணத்தாலும் ஒன்றுபட்டே வாழ்ந்தனர். இப்படிப்பட்ட சிறப்புடைய நிடதநாட்டின் மன்னனே நளன். பிற நாட்டு மன்னர்கள் இவனைப் பார்க்கவே அஞ்சுவார்கள். அந்தளவுக்கு மரியாதை…பயம். எதிரிகள் வருவதே இல்லை. தப்பித்தவறி ஆசைப்பட்டு வந்தால், வந்த வேகத்திலேயே புறமுதுகிட்டு ஓடி, தங்கள் நாட்டையும் இவனிடமே ஒப்படைத்து விட்டு உயிர் பிழைத்தால் போதுமென கண்காணாத இடத்திற்கு ஓடிவிடுவார்கள். வீரத்தில் மட்டுமல்ல, அழகிலும் மன்மதன். இவனை விரும்பிய கன்னிப்பெண்களுக்கு எண்ணிக்கையில்லை.இவன் பல சமயங்களில் வீதிவழியே தேரில் கம்பீரமாக உலா வருவான்.
பொதுவாக, பெண்களுக்கு வீரமான ஆண்கள் மீது நாட்டம் அதிகம். அவர்கள் பருந்தையும், கிளியையும் ஒரே கூட்டில் அடைத்து வைத்து, அவற்றுக்கு உணவூட்டியபடியே அவன் தேரில் செல்வதை ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். தங்கள் மேல் அவன் பார்வை பட்டு, அவனுடைய மனைவியாகும் பாக்கியம் தங்களுக்கு கிடைக்காதா என்ற ஏக்கம் அந்த அழகுக் கண்களில் வெளிப்படும். இங்கே, இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதெப்படி…பருந்தையும், கிளியையும் ஒரே கூட்டில் அடைத்து வைக்க முடியும்? கிளியின் வாழ்வு அதோகதியாகி விடாதோ என்று நீங்கள் நினைப்பது நியாயம் தானே!
அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். குருவியைப் பார்த்தால் காலையிலேயே உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். இப்படியாக, மனிதர்கள் இயற்கையைப் பார்த்து இந்தக் காலத்தில் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், மாறுபட்ட குணமே இல்லாத, நிடதநாட்டின் மக்கள் கொண்ட ஒற்றுமையைப் பார்த்து பருந்தும், கிளியும் கூட ஒற்றுமையாக இருந்தது. மனிதனின் வாழ்வைப் பார்த்து இயற்கை அங்கே பாடம் கற்றது.
எவ்வளவு உயர்ந்த நிலை பாருங்கள்! ஒருநாள், நளன் நந்தவனத்துக்கு மலர் பறிக்கத் தன் தேரில் சென்றான். தேர் எழுப்பிய புழுதியை அவனைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்களின் தலையில் சூடிய பூக்களில் இருந்து வழிந்த தேன் நனைத்து அடக்கியது. நந்தவனத்தை அவன் அடைந்ததும், அங்கிருந்த தடாகத்தில், இதுவரை அவன் பார்த்திராத அன்னப்பறவையை அவன் கண்டான். அதன் மாசுமருவற்ற வெண்மை நிறம், அங்கு நின்ற பச்சை செடிகளில் பிரதிபலித்து, தோட்டமே வெண்மையானது போல ஒரு தோற்றம் ஏற்பட்டது.
அதன் கால்கள் சிவப்பாக இருந்தன. அதன் பிரதிபலிப்பில் தடாகத்து நீரும் சிவப்பாக மாறியது போல் தோற்றம் கொண்டது. அந்த அழகை ரசித்த நளன், அந்த அன்னத்தைப் பிடிக்க ஆசை கொண்டான். அங்கு நின்ற பணிப்பெண்ணிடம், அழகு மங்கையே! அதோ! தடாகத்தில் மிதந்து கொண்டிருக்கும் அந்த அன்னத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், மெல்லிய உன் கைகளும் அதன் மீது பட்டு நோகாத வகையில் பிடித்து வா,  என்றான்.
பறவையைப் பிடிக்க ஆசை. அவனே கூட அதை எட்டிப் பிடித்து விடுவான். அன்னத்தின் இறக்கையைப் பிடித்து இழுத்தால் அவன் கையில் சிக்கிவிடாதா என்ன! ஆனால், அது தன் கைபட்டு நொந்து போவதை விரும்பாமல், ஒரு பெண்ணின் மென்மையான கையால் தூக்கி வரச்சொல்கிறான். இது நளனின் கருணையை வெளிப் படுத்துகிறது.
அவனது இரக்க சுபாவத்தைக் கண்ட அன்னம் அவனிடம் தஞ்சம் புக எண்ணியது. கரையோரமாக மிதந்து வந்து, தானாகவே அந்த பெண்ணின் கையில் அடைக்கலமானது. அவள் மகிழ்ச்சியுடன் தன் மன்னன் முன்னால் அதை விட்டாள். அது அவனைப் பார்த்து பேச ஆரம்பித்தது. ஒரு பறவை பேசுகிறதே! நம்ப முடியவில்லையே! கிளிக்கு எப்படி பேசும் சக்தி உண்டோ. அதுபோல், கலைவாணியின் சின்னமான அந்த அன்னமும் திக்கித் திக்கிப் பேசியது.
மகராஜனே! நான் சொல்வதைக் கேள்! எட்டுத்திக்குகளிலும் உன் பெயரும் புகழும் பரவியிருப்பதை நான் அறிவேன். அப்படிப்பட்ட மாவீரனான உன் தோள்களில் தவழ்ந்து விளையாட உனக்கேற்ற மனைவி வேண்டுமல்லவா! அப்படிப்பட்ட ஒருத்தியை நான் அறிவேன். அவள் பெயர் தமயந்தி. அழகில் சுந்தரி, என்று சொல்லும் போதே, யார் அந்த தமயந்தி? அந்த அன்னத்தைப் பற்றி இந்த அன்னம் சொன்னவுடனேயே அவள் என் மனதை ஆக்கிரமிக்கக் காரணம் என்ன? அவளை நான் முன் பின் பார்த்ததில்லையே! அதற்குள் எப்படி மனதில் புகுந்தாள் அந்த சொப்பனசுந்தரி, என்று திகைத்தான் நளன்.
நம் எல்லோர் வாழ்வும் முந்தைய பிறவியின் தொடர்ச்சி என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிந்தால், நம் சொந்தங்களைத் தேடி அவர்கள் எங்கிருந்தாலும் போய் விடுவோமே! இறைவன் ஏனோ அதற்கு அனுமதிப்பதில்லை. நளன் முற்பிறவியில் வேடனாகவும், தமயந்தி அவன்  மனைவியாகவும், அந்த அன்னம் தங்களைத் தேடி வந்த முனிவர் என்பதையும் அவன் அறியமாட்டானே!அன்னம் தன் பேச்சைத் தொடர்ந்தது.
நளனே! உன் முகத்தைப் பார்த்தாலே நான் சொல்லும் பேரழகி உன் மனதுக்குள் புகுந்துவிட்டாள் என்று தெரிகிறது. அவள் விதர்ப்ப தேசத்து இளவரசி. அவளது குணத்தைப்பற்றி கூறுகிறேன், கேள், என்றது. தன்னையும் மறந்து அந்தப் பறவை பேசுவதைக் கவனித்தான் நளன்.
அழகில் மன்மதனே! உன் ரதி தமயந்தி அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் நான்கு குணங்களும் அவளுக்கு நால்வகைப் படைகளாக காவல் நிற்கின்றன. அவளது மெய், வாய், கண், மூக்கு, செவியை ஐந்துவித அமைச்சர்களாகக் கருதி, அவற்றிடம் ஆலோசனை கேட்ட பிறகே எதையும் செய்வாள். ( புலன்களை அதன் வழியில் விடாமல், அவற்றை தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கிறாள் என்பது பொருள்) அவள் அணிந்துள்ள சிலம்பு முரசைப் போல் ஒலிக்கும். வேலையும், வாளையும் இணைத்துச் செய்யப்பட்டவையோ எனக் கருதுமளவு, அவளது கண்கள் கூர்மையானவை. அவளது முகம் நிலாவைப் போல் பிரகாசமாக இருக்கும். அவளை பெண்களின் அரசி என்று சொல்லலாம், என்ற பறவையை அன்புடன் தடவிக்கொடுத்தான் நளன்.
அவனது சூடான கைகள் பட்டு இதமும் சுகமும் அடைந்த அந்த அன்னப்பறவை, தமயந்தியின் அழகை மேலும் வர்ணித்தது. நளனே! அவளது இடையழகைப் பற்றி சொல்கிறேன் கேள்! வண்டுகள் பறந்தாலே போதும், அவற்றின் சிறகுகள் எழுப்பும் காற்றைத் தாங்காமல் அவளது சிற்றிடை வளைந்து போகும். அப்போது அவளது கால்கள் அசைந்து அதில் அணிந்துள்ள தண்டைகள் குலுங்கும். அவளது கூந்தல் அடர்ந்து நீளமாக இருக்கும். மன்மதன் காதல் கணை தொடுக்க வேண்டுமானால், அவளது பிறை போன்ற நெற்றியில் தான் தன் மலரம்பை கூர்மை செய்து கொள்வதாக ஊருக்குள் ஒரு பேச்சு. குரலைக் கேட்க வேண்டுமே! அவள் செந்தமிழ் தேன்மொழியாள், இவ்வாறு அன்னம் தான் கண்ட தமயந்தி என்னும் அன்னத்தைப் பற்றி சொல்லிமுடிக்கவும், அவளைப் பார்க்காமலே மனதுக்குள் காதல் கோட்டை கட்டி விட்டான் நளன்.
மணந்தால் தமயந்தி என்னும் நிலைக்கு வந்துவிட்ட அவனது மனம் அவளை நேரில் காண வேண்டுமெனத் துடித்தது. அத்துடன், அந்த அன்னம் அவளைப் பற்றி தன்னிடம் இந்தளவுக்கு சிபாரிசு செய்வானேன் என்று எண்ணி குழப்பமடைந்தது. அதைத் தீர்த்துக் கொள்ளஅன்னமே! தமயந்தியைப்  பற்றி இந்தளவுக்குப் புகழ்ந்தாயே! அவளுக்கும், உனக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டான் நளன்.
சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு கொண்டிருந்தோம். ஒருநாள், தமயந்தி நாங்கள் அலைந்து கொண்டிருந்த தடாகத்தின் பக்கமாக வந்தாள். அவளது அழகும், நடை எங்களையும் விட நளினமாக இருந்ததைக் கண்ட நாங்கள் வெட்கப் பட்டு தலை குனிந்தோம். ஆஹா…இவளல்லவோ உலகப் பேரழகி. இவளைப் போல இனிமேல் நாங்களும் நடக்க வேண்டும். இவளிடமல்லவா நடை பயில வேண்டும் என்று எண்ணினோம். இப்படிப்பட்ட பேரழகு பெட்டகத்திற்கேற்ற கட்டழகன் நீயே என்று முடிவெடுத்தோம். நீ தமயந்தியை மணந்து கொண்டால், உனது நந்தவனத்திற்கே வந்து அந்த பேரழகியின் செல்லப்பறவைகளாக இருந்து, அவளிடம் நடை கற்றுக் கொள்வோம், என்றது.
அந்தப் பறவையின் வித்தியாசமான விளக்கம் நளனை மிகவும் கவர்ந்தது. அந்த கட்டழகியை எனக்கு திருமணம் செய்து வைக்க உதவி செய்வாயா அன்னமே என்று தன்னை மறந்து கேட்டான்.நிச்சயமாக! உனக்காக நான் தமயந்தியிடம் தூது போகிறேன். அவளிடம் உன்னைப் பற்றி எடுத்துரைக்கிறேன். கண்டதும் வருவதல்ல காதல்! அது மனங்களின் இணைப்பில் விளைவது! உங்கள் மனங்களை இணைக்க நான் ஒரு பாலமாக இருப்பேன். தமயந்தி உன் மார்பில் சாய்வது உறுதி. அவளை மனைவியாக அடையும் பாக்கியம் உனக்கே கிடைக்கும், வருந்தாதே, எனக்கூறிய அன்னம், அவனிடம் விடைபெற்று விதர்ப்ப நாடு நோக்கி பறந்தது.
பறவையை அனுப்பி விட்ட நளன், தமயந்தியின் அழகை கற்பனை செய்து பார்த்தான். அவளை மனதிற்குள்ளேயே ஓவியமாக வடித்தான். அந்த ஓவியம் அப்படியே அவனது கண்களில் பிரதிபலித்தது. தமயந்தி…தமயந்தி… என புலம்ப ஆரம்பித்து விட்டான்.
ஏ அன்னமே! விதர்ப்பம் போய் சேர்ந்து விட்டாயா? என் தமயந்தியைப் பார்த்தாயா? அவளிடம் எனது காதலைச் சொல்லி விட்டாயா? அவள் என்ன சொன்னாள்? போ…போ… என் பேரழகுக்கு முன்னால், அந்த நளன் என்ன மன்மதனா என்று அவள் ஒதுக்கி விட்டால், என் நிலை என்னாகும்…என்னால் சிந்தித்தே பார்க்க முடியவில்லையே! அன்னமே! என் அன்னத்தைப் பார்த்து விட்டு உடனே வந்துவிடு. என் இதயம் உடைந்து நொறுங்கிப் போவதற்குள் விரைந்து வா, என்று உருகி உருகி தனக்குத்தானே பேசினான்.
அவனது இந்த புலம்பல் யார் காதிலாவது விழுந்தால், ஐயோ! நம் மகாராஜாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? என்பார்கள். தோகை விரித்த மயிலை அவன் பார்த்தால் தமயந்தி இந்த மயிலைப் போல இருப்பாளோ என்பான். குயிலின் குரல் கேட்டால், அவளது குரலும் இப்படித்தான் இருக்குமோ என்று எண்ணுவான். காற்றில் அசைந்தாடும் பூங்கொடிகளைப் பார்த்தால், கொடிகளே! உங்களைப் போல் தான் என் தமயந்தியின் இடையழகும் இருக்குமோ, வாருங்கள், என் அருகே வாருங்கள், என்று பித்துப்பிடித்தவன் போல அந்தக் கொடிகளை வருடி விட்டான்.
மலர்களின் வாசனையை நுகர்ந்த அவன், மலர்களே! நீங்கள் தரும் வாசனையை விட என் தமயந்தியின் கூந்தல் நறுமணம் மிக்கதாக இருக்குமா? என்று கேட்டான். இப்படி தமயந்தி தாசனாகி, நளமகாராஜா தவித்துக் கொண்டிருந்த வேளையில், அன்னப்பறவை தமயந்தியின் இல்லத்தை அடைந்தது. தமயந்தி என்று அழைத்தது. ஆ…பேசும் பறவையா, தமயந்தி ஆவலோடு ஓடிவந்தாள். அதன் அழகு அவளைக் கவரவே தன் மடியில் தூக்கி வைத்து வருடினாள்.
அன்னமே! நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என் பெயரை நீ எப்படி அறிவாய்! சொல்! என்று கேள்விகளை அடுக்கினாள். என் உயிர் உன் கையில், என்று சம்பந்தமில்லாமல் பதிலளித்தது அன்னம்.
ஐயோ! உன்னை யாரேனும் துன்புறுத்த எண்ணியுள்ளார்களா? இனி, அந்தக் கவலை வேண்டாம், நீ என்னுடனேயே இருந்துவிடு, என்ற தமயந்தியிடம், எனக்கு ஒன்றுமில்லை தமயந்தி! நான் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் நிடதநாட்டு மன்னன் நளன். ஏன் அவருக்கென்ன?  அவரது உயிர் யார் கையில் சிக்கியிருக்கிறதாம், என்றாள் ஏதும் அறியாமல்.
கேள் பெண்ணே! என்ற அன்னம், தமயந்தி! நளனின் மனது தங்கம். அவனது இதயத்திற்குள் ரத்தம் பாயவில்லை! அன்பும், இரக்கமும் மட்டுமே ஆறு போல் ஓடுகிறது. அவனது ஆட்சி தர்மத்தைக் கட்டிக்காக்கும் நல்லாட்சியாக விளங்குகிறது. அன்பில் மட்டுமல்ல! நான் பார்த்ததிலே அவன் ஒருவனைத் தான் நல்ல அழகன் என்றும் சொல்வேன்.
அவனது பரந்த தோள்களைப் பார்க்கும் இளம்பெண்களெல்லாம், அவன் நினைவாகவே கிடக்கிறார்கள். உம்…;நீயும் பேரழகி. அந்தக் கட்டழகனைப் போன்ற ஒருவன், உனக்கு கணவனானால், என்னைப் போன்ற அழகான அன்னங்களெல்லாம் காட்டுக்குள் போய் ஒளிந்து கொள்ள வேண்டியது தான்! அதன் பின் நாட்டுக்குள் அழகு காட்ட நாங்கள் தேவையில்லை, என்றது.
அன்னம் சொன்ன வார்த்தைகள் தமயந்தியின் நெஞ்சில் ஆழமாகப் பாய்ந்தது. பெண்ணுக்கு தேவை அன்புக்கணவன், அவனே அழகனாகவும் அமைந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சி. அவனுக்கு செல்வமும் கோடிகோடியாய் இருக்கிறதென்றால் இரட்டிப்பு சந்தோஷம். இப்படி எல்லாம் இணைந்த வடிவாக அல்லவா இந்த அன்னம் சொல்லும் வாலிபர் என் கண்ணில் தெரிகிறார்! அவரை மணந்து கொள்ளலாமே… தமயந்தியின் எண்ண அலைகளை அன்னம் புரிந்து கொண்டது.
கடந்த பிறவியில் என்ன செய்தோம், ஏது செய்தோம் என்பதை நாம் அறியமாட்டோம். ஆனால், நமக்கு ஒரு துன்பம் வருகிறதென்றால், அது கடந்த பிறவியில் செய்த பாவத்தின் பலனே! இன்பம் வருகிறதென்றாலும், கடந்த பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனே! அன்னப்பறவையின் செயல் இதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இதன் மூலம் மனிதப்பிறவி எடுத்துள்ள ஒவ்வொருவரும், இதுவரையில் ஏதேனும் தவறு செய்திருந்தாலும், அவற்றிற்கெல்லாம் பிராயச்சித்தமாக இந்தப் பிறவியிலேயே ஏதேனும் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும்.
தமயந்தி அந்த அன்னத்திடம், அன்னமே! நீ சொல்லும் அந்த ஆணழகனை நான் இதுவரைக் கண்டதேயில்லை. ஆனாலும், என்னவோ… அவனோடு பலகாலம் வாழ்ந்தது போன்ற உணர்வு என்னுள் எழுகிறது. என்னை அறியாமல் அவன்மேல் காதல் வயப்பட்டு விட்டேன். எனக்காக அவனிடம் தூது போய் என் காதலை அவனிடம் சொல்வாயா? என்று நாணத்துடன் சொன்னாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top