Home » சிறுகதைகள் » திடமான மனம்!!!
திடமான மனம்!!!

திடமான மனம்!!!

விதர்ப்ப நாட்டு அரசவைக்கு வில் வித்தை வீரன் ஒருவன் வந்தான். “அரசே நான் வில்வித்தை அனைத்தும் கற்றுத் தேர்ந்த வீரன். என்னை ஜெயித்தவர் எவருமில்லை. உங்கள் நாட்டில் யாராவது என்னுடன் போட்டியிட விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன் என்னுடன் போட்டியிட்டு நான் ஜெயித்துவிட்டால்  என்னை இந்த விதர்ப்ப நாட்டிலேயே சிறந்த வில்வீரன் என்று போற்றிபுகழவேண்டும். போட்டிக்குத் தயாரா” என்றான்.

மன்னன் அவனைப் பார்த்து சிரித்தார். நீர் சிறந்த வில்லாளிதான் போட்டிக்கு ஏற்பாடு செய்வோம் அதற்கு முன் காட்டினுள் ஒரு தவசி வாழ்ந்துவருகிறார் அவரும் வில்வித்தைகளில் கைதேர்ந்தவர். நீ அவரிடம் சென்று மேலும் சில வில்வித்தைகளை கற்றுத் தேர்ச்சி பெற்று வா” என்று கூறி அனுப்பி வைத்தார்.

அப்படியே சென்றவன் மன்னர் கூறிய தவசியைக் கண்டுபிடித்தான். வில்வித்தையில் தனக்குத் தெரியாத சூட்சமங்கள் பல அவருக்குத் தெரிந்திருப்பதை உணர்ந்தான். அதனால் மூன்று வருடங்கள் அவருடன் இருந்து எல்லா வித்தைகளையும் கற்றுக்கொண்டான். இனி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எதுவுமில்லை என்று தீர்மானத்துக்கு வந்தான். இந்த சூட்சமங்களை வேறு யாருக்காவது கற்றுத் தந்துவிட்டால் என்ன செய்வது? யோசித்தான் வில் வீரன். குருவைக் கொன்றுவிட்டால் நமக்குப் போட்டி எவரும் இருக்கமாட்டார்கல் என நினைத்தான்.

மறு நாள் காலையில் தவசி சுள்ளிகளை பொறுக்கிக் கொண்டிருந்தபோது ஒரு மரத்தின் மறைவில்  நின்று குருவை நோக்கி அம்பை எய்தான். அம்பு வருவதை உணர்ந்த குரு தன் கையிலிருந்த சுள்ளியால் அந்த அம்பைத் தட்டி திருப்பி விட்டார். அது வந்த வழியே திரும்பி வீரனின் மார்பில் போய் தைத்தது. குரு அவனருகில் வந்து தைத்திருந்த அம்பை பிடுங்கிவிட்டுக் கூறினார் “ இந்த ஒரு வித்தையை மட்டும் உனக்குக் கற்றுத்தராமல் இருந்ததால் நான் காப்பாற்றப்பட்டேன்” “என்றார்.

“குருவே என்னை  மன்னித்து விடுங்கள்  அந்தக் கலையை எனக்குக் கற்றுத் தாருங்கள். என்று வேண்டினான். நான் அறிந்து கொண்டது சொற்பமே எனக்கு வில்வித்தைகளை கற்றுத் தந்த என் குருவானவர் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறார். நீ அவரிடம் சென்று வா” என்றார்.

குரு சொல்லை வேதவாக்காகக் கொண்டு வில்வீரன் குருவினுடைய குருவைத் தேடிப் போனான். வயோதிக குரு நூறு வயதைத் தாண்டிப் பழுத்த கிழம். முதுகு கூனலாகி உள்ளவரா வில்வீரர் ஆச்சர்யப்பட்டான். “நான் ஒரு வில்வித்தைவீரன் உங்கள் சிஷ்யந்தான் உங்களை தரிசித்து வரும்படி அனுப்பினார்” என்றான்.

 

அந்தக்கிழவர் கண்களை உயர்த்தினார். அவனைப் பார்த்து சிரித்தார். “கையில் இன்னும் வில்லும் அம்பும் வைத்திருக்கிறாய் எப்படி வில்வீரனாக இருக்க முடியும் எந்தக் கலையிலாவது பூரணத்துவம் அடைந்துவிட்டால் இப்படி அனாவசிய சுமையைச் சுமக்க வேண்டியதில்லை. வில்வித்தையை பூர்ணமாக கற்றபின் வில்லும் அம்பும் எதற்காக? அவை பயிற்சிக்காக மட்டுமே தேவை” என்றார்.

வீரன் அதிர்ச்சியடைந்தான் வில் வித்தையில் பூர்ணத்துவம் இன்னும் தான் அடையவில்லை என்பதை உணர்ந்தான். மிகவும் பணிவாக “சுவாமி என்னை மன்னியுங்கள் மேற்கொண்டு நான் என்ன வித்தை கற்க வேண்டியுள்ளது” என்றான். அந்தக்கிழவர் “சரி என்னுடன் வா” என்று அவனை ஒரு மலை சிகரத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கிருந்து கீழே பல ஆயிரக்கணக்கான அடி ஆழமுள்ள பாதாளம் கிழவர் மேலும் முன்னேறிச் சென்றார். விளிம்புவரை சென்று திரும்பிப் பார்த்தார். வீரன் தொலைவிலேயே நின்றுவிட்டான். “ஏன் நின்றுவிட்டாய் வா வா என்னைத் தொடர்ந்து வா” என்று இன்னும் நகர்ந்தார். கிழவனின் கால் விரல்கள் விளிம்புக்கு வெளியே தொங்கின.

கூன் வளைந்த உடலும் தலையும் பள்ளத்தை நோக்கித் தொங்கின. வீரனைப் பார்த்து “மகனே ஏன் அவ்வளவு தொலைவிலே நின்று விட்டாய் என் அருகில் வா” என்றார். அவனோ “எனக்குத் தலை சுற்றுகிறது. பயமாக இருக்கிறது. நீங்கள் எப்படி அங்கு  நிற்கிறீர்கள் ஒரு வினாடி தவறினால் படுபாதாளத்தில் அல்லவா விழ வேண்டியிருக்கும் எனது உடல் நடுங்குகிறது என்னால் முடியாது” என்று கூறினான் வில்வித்தை வீரன்.

“மனம் இவ்வளவு சஞ்சலப்படும்போது உன் குறி தவறாமல் இருப்பது சாத்தியமில்லை பயம் இருக்குமிடத்தில் வீரம் இருக்க முடியாது எதைக் கண்டு பயப்படுகிறாய் பயம் இருக்கும் வரை மனதில் நடுக்கம் இருக்கவே செய்யும் வித்தையில் பயம் இருக்கும் வரை அது முழுமை பெறவே பெறாது. அச்சம் உள்ளவரை வெற்றியும் கிட்டாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top