மகாவீரர்!!!

மகாவீரர்!!!

சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர். ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. தன்னுடைய 32 வயதிலேயே மனித வாழ்க்கையின் உனையை உலகத்திற்கு எடுத்துரைத்த ‘வர்த்தமானரை’ நினைவு கூறும் வகையில், உலகெங்கும் உள்ள ஜைனர்கள் அவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதியை, ஒவ்வொரு வருடமும் ‘மகாவீரர் ஜெயந்தியாக’ கொண்டாடுகின்றனர். சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டு இல்லறவாழ்வினைத் துறந்து, துறவறம் மேற்கொண்ட மகாவீரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: கி.மு. 599

இடம்: குண்டா, வைசாலி, பீகார் மாநிலம், இந்தியா

பணி: மத குரு 

இறப்பு: கி. மு. 527

நாட்டுரிமை: இந்தியன்

 

பிறப்பு

‘வர்த்தமானர்’ என்ற இயற்பெயர்கொண்ட “மகாவீரர்” கி.மு. 599 வருடம், இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலிக்கு அருகிலுள்ள “குண்டா” என்ற இடத்தில் சித்தாத்தர் என்பவருக்கும், திரிசாலாவுக்கும் மகனாக ஒரு அரசக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர்கள் இட்டப் பெயர் “வர்த்தமானர்” ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை

அரசக் குடும்பத்தில் பிறந்ததால், மிகவும் செல்வாக்காக வளர்க்கப்பட்டார். இருப்பினும் அச்சிறுவயதிலே ஆன்மீகநாட்டம் கொண்டவராகவும், தியானத்திலும், தன்னறிவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். பின்னர் யசோதரை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இல்லறவாழ்க்கையை நடத்தி வந்தார். சமணத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர், பிறகு இல்லற வாழ்விலிருந்து விலகி, தன்னுடைய முப்பதாவது வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் மேற்கொண்டார்.

மகாவீரரின் ஆன்மீகப் பயணம்

மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட மகாவீரர் அவர்கள், “சாலா” என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அவர் “மகாவீரர்” என அழைக்கப்பட்டார். மகாவீரர் என்றால், ‘பெரும்வீரர்’ என்று பொருள் ஆகும். தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பிய மகாவீரர், இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார்.

வெறும் கால்களில், துணிகள் ஏதும் இன்றி, அவர் போதித்த போதனைகளைக் கேட்க அனைத்துத்தரப்பு மக்களும் திரண்டது மட்டுமல்லாமல், சமண சமயம் இந்தியாவெங்கும் தீவிரமாக பரவத்தொடங்கியது. இதனால், சமண மத குருமார்கள் வரிசையில் மகாவீரர் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகப் போற்றப்பட்டார். இவரே சமண சமயத்தில் தோன்றிய கடைசி தீர்த்தங்கரும் ஆவார்.

மகாவீரரின் போதனைகள்

இருபத்திநான்கு தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர் என சமணர்களால் போற்றப்படும் மகாவீரரின் போதனைகள், அன்பையும், மனிதநேயத்தையும், அகிம்சையையும் போதிக்கும் உன்னத கோட்பாடுகளாக விளங்கியது. மகாவீரர், ‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும், அது, தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக “கர்மா” என்னும் வினைப் பயன்களை அடைய நேரிடும்’ என போதித்தார். இதிலிருந்து விடுபட, மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ போன்றவற்றை கடைப்பிடித்தால், ‘சித்த நிலையை அடையலாம்’ எனவும் போதித்தார்.

மேலும், ‘எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், உண்மையை மட்டும் பேசுதல், திருடாமை, பாலுணர்வு இன்பம் துய்காதிருத்தல், பணம் பொருள் சொத்துகள் மீது ஆசை கொள்ளாமல் இருத்தல்’ என ஐந்து பண்புகளும் ஜைன மதத்தின் உறுதிமொழிகளாக விளங்கின. உண்மையை சொல்லப்போனால் மகாவீரர் அகிம்சையை தன்னுடைய கொள்கையாக போதித்த மாபெரும் சீர்த்திருத்தவாதியாக போற்றப்படுகிறார்.

இறப்பு

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகாட்ட வேண்டும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையும், கொல்லாமையுமே அறநெறி எனக் காட்டி அகிம்சை வழியையும், அன்பு வழியையும் மக்களுக்கு உணர்த்தி, சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்த மகாவீரர் கி. மு. 527ல் பீகாரிலுள்ள “பாவா” என்னும் இடத்தில் தன்னுடைய 72வது வயதில் காலமானார்.

பொன்மொழிகள்

ஜீவன் கர்மங்களை உருவாக்குவதில் சுதந்திரமாகச் செயல்படுகிறது. ஆனால், அந்தக் கர்மங்கள் செயல்பட வரும் போது ஜீவன் அந்தக் கர்மங்களுக்கு அடிமையாகி விடுகிறது. உதாரணமாக, ஒருவன் மரத்தில் ஏறும் போது பிறர் உதவியின்றி தானாக ஏறிவிடுகிறான். ஆனால், அவன் தவறிக் கீழே விழும் போது பிறர் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கஷ்டம், கஷ்டம்! அறிவிலியான நான் நற்பாதையை அறியாத வரையில் கொடிய சம்சாரக் கட்டில் நெடுங்காலம் சுற்றி அலைந்தேன். இது என் அறியாமையாகும்.

பித்த ஜூரம் உள்ளவனுக்கு இனிப்பும் கசப்பாக இருப்பது போன்று, தீயகாட்சி உடையவனுக்கு அறம் பிடிப்பதில்லை. ஏனென்றால், தீயகாட்சி உடையவனுடைய நோக்கம் நேர்மைக்கு எதிராக இருப்பதால் அவன் அறத்தை ஏற்பதில்லை.

தீயகாட்சி உடையவனிடம் கோபம் முதலிய குற்றங்கள் மிகுதியாக நிறைந்திருக்கின்றன.ஆதலால், அவன் ஜீவன் – உடல் ஆகிய இரண்டையும் வேறுபாடின்றி ஒன்றாகக் கருதுகிறான். அவன் பேதைமை உள்ளவனாவான். (ஜீவன் அதாவது ஆத்மா வேறு;உடல் வேறு என்று உணர்வது விவேகியின் செயலாகும்)

விருப்பும் வெறுப்பும் கர்மத்திற்கு ஆணி வேர். கர்மம் மோகத்தால் (ஆசையால்) உண்டாகிறது. அது பிறப்புக்கும் இறப்புக்கும் மூல காரணமாகும். பிறப்பதும் இறப்பதும் துன்பத்திற்கு அடிப்படை காரணம் என்று பெரியோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.

வலிமையுள்ள கொடிய எதிரி செய்யாததை விருப்பு – வெறுப்பாகிய குற்றம் செய்துவிடுகிறது.

இந்த உலகில் பிறப்பு, இறப்பு, முதுமை ஆகியவற்றால் துன்பப்படும் ஜீவனுக்கு சுகமே கிடையாது. எனவே, துன்பமில்லாத முக்தியே ஏற்றது.

பற்றின்மையை ஏற்படுத்தும் செயல்களைச் செய்ய வேண்டும். பற்றின்மை உலக துன்பத்திலிருந்து விடுதலை பெற்றுத் தருகிறது. பற்றோ எண்ணற்ற காலம் வரை துன்பக் கடலில் உழலச் செய்கிறது.

முக்தி பெறுவதற்குரிய வழியாக இருப்பது ஐம்புலனடக்கம். ஐம்புலன்களை அடக்குவதன் மூலம், மனதால் ஏற்படும் குற்றங்களை நாம் ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

அறம் சிறந்த மங்கலப் பொருளாகும். கொல்லாமை, ஒழுக்கம் ஆகியவை அறத்தின் இலட்சணம் ஆகும். எவருடைய மனம் எப்போதும் அறத்தில் ஈடுபாடு கொண்டிருக்கிறதோ, அந்தத் தூயவர்களைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

பொருள்களில் இயற்கைப் பண்பே அறமாகும். அது பொறுமை முதலியவற்றின் அடிப்படையில் பத்து வகை பிரிவுகளைக் கொண்டது. நற்காட்சி, நல்ல ஞானம், நல்லொழுக்கம், ஜீவ தயை (கருணை) ஆகியவை சேர்ந்தது அறம் எனப்படும்.

முற்றிலும் பொறுமை, நேர்மை, உண்மை, தூய்மை, கருணை, மாசற்ற ஒழுக்கம், தூயதவம், பற்றின்மை, ஒரு சிறிதும் ஆசைப்படாமல் இருத்தல், இடைவிடாத ஆன்ம ஈடுபாடு ஆகிய இந்தப் பத்தும் ஒரு வகையில் அறம் எனப்படும்.

தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் ஆகியவர்களால் கொடிய துன்பங்கள் ஏற்படும் போது கோபம் கொள்ளாமல் அமைதியாகப் பொறுத்துக் கொள்வதுதான் உத்தம லட்சணம் என்ற குறைவற்ற முழுமையான பொறுமையாகும்.

பொன்மொழிகள்

பிறர் மனம் நோகாத வகையில் இதமாகவும், மென்மையாகவும் பேசுங்கள். அதனால் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.
பாவச்செயல்கள் துன்பத்தையே தரும். செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்காமல் ஒருவன் சொர்க்கம் செல்ல முடியாது.
உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம், சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம்.
அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாத துறவியை விட சிறந்தவன்.
கவனமுடன் செயலாற்றுங்கள். நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்.
மனம் அமைதியுடன் இருந்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அந்த நிலையில் தான் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும்.
அடக்கத்துடன் வாழ்பவன் இந்த பிறவி மட்டுமில்லாமல் மறுபிறவியிலும் இன்பமுடன் வாழ்வான்.
பிறரின் இகழ்ச்சியைக் கண்டு கோபம் கொள்ளாமலும், சண்டையிடாமலும் பொறுப்பவனே அறிஞன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top