Home » பொது » கந்தபுராணம்!!!
கந்தபுராணம்!!!

கந்தபுராணம்!!!

ஓம் முருகா சரணம்

கந்தபுராணம்

சம்ஸ்க்ருதத்தில் பதிணெண் புராணங்கள் உள்ளன:

சைவம், பவிஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், மத்ஸயம், கூர்மம், பிரம்மாண்டம், காருடம், நாரதீயம், வைஷ்ணவம், பாகவதம், பிரம்மம், பத்மம், ஆக்னேயம், பிரம்மகைவர்த்தனம் என்பவற்றுள் ஸ்கந்தபுராணம் என்ற மஹாபுராணமும் ஒன்று.

“முருகப்பெருமானின் திருவரலாறாகிய கந்தபுராணத்தைக் காதலுடன் இப்புவியில் படிப்போர், கேட்போர், நினைப்போர் யாவரும் இந்திரனைப் போலத் தலைமைத்துவமும் இன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்து இறுதியில் பரமானந்த நிலையாகிய சிவபதப் பேறும் பெறுவர்”

என்று நூற்பயனை விதந்து உரைக்கிறது இப்பாடல்:

“இந்திராகிப் பார் மேல் இன்பமுற்றினிது மேவிச்
சிந்தையில் நினைந்த முத்தி சிவகதி அதனில் சேர்வர்
அந்திமில் அவுணர் தங்கள் அடல் கெடமுனிந்த செவ்வேள்
கந்தவேள் புராணம் தன்னைக் காதலித்தோதுவோரே”

பெருமை மிக்க இப்புராணத்திலுள்ள ஆறு பெரிய சங்கிதைகளுள் ஒன்று சங்கரசங்கிதை. இச்சங்கிதையிலுள்ள பதின்மூன்றாயிரம் ஸ்லோஹங்களால் ஆக்கப்பெற்றது சிவரஹஸ்ய காண்டம் என்ற உயர்ந்த பகுதி. இதில் ஏழு காண்டங்கள் உள்ளன. அவ்வேழு காண்டங்களுள் முதன்மையான ஆறு காண்டங்களை இணைத்து அழகுத் தமிழில் ‘கந்தபுராணம்’ என்ற ஞானக்களஞ்சியமாக தந்திருக்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

பொ.பி 12, 13ம் நூற்றாண்டுகளில், தமிழகத்தின் காஞ்சியில், குமரகோட்டம் முருகன் ஆலய அர்ச்சகராகத் திகழ்ந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகனே ‘திகட சக்கர’ என்று முதல் அடியெடுத்துக் கொடுக்க 10345 அருந்தமிழ்ச் செய்யுள்களால் கந்தபுராணத்தை அவர் ஆக்கியிருக்கிறார்.

‘உபதேச ரத்னாகரம்’ என்று போற்றப்படும் கந்தபுராணம் காப்பிய இலக்கணங்கள் மிக்கதாக, சித்தாந்தக் கருத்துக்களின் செறிவுடையதாக, தத்துவார்த்த உண்மைகள் பொருந்தப் பெற்றதாக அமைந்திருக்கிறது. தமிழ்க் கந்தபுராணத்தின் தமிழ் நடையும் வியந்து நயந்து உண்ண வேண்டியது.

முருகப்பெருமானாலேயே ஆணையிடப்பெற்று, அவனாலேயே தினமும் பரிசீலனை செய்யப்பெற்றது. ஆயினும், அரங்கேற்றத்தில் அறிஞர் முன்றலில் இலக்கணச் சந்தேகம் உண்டானது. அப்போது கந்தவேட் பெருமானே சிறுவடிவு தாங்கி வந்து, தன்னால் அங்கீகரிக்கப்பெற்ற நூல் அது என்று யாவரும் அறிய சந்தேகம் நீக்கினார். மிகத் தெளிவாக ‘இறையாணை’ பெற்ற நூல் கந்தபுராணம் என்பது சைவத்தமிழ் மக்களின் நம்பிக்கை.

அரிய தத்துவப்புதையல்

கந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.

கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன்.

அவனது மனைவியராகப் புராணம் இரு தேவியரைக் காட்டும். அவளுடைய வலது பக்கம் விளங்குபவள் வள்ளி. அவள் இச்சா சக்தி. மண்ணுலகில் பிறந்து வளர்ந்தவள். தமிழ்மகள். வேடுவனான நம்பிராஜன் புதல்வி. அத்தேவி இகலோக சுகத்தைத் தருவாள். அத்தேவியை முருகன் காந்தர்வ விவாகம் செய்து கொண்டான்.

முருகனின் இடது பக்கம் எழுந்தருளுபவள் தேவசேனா. விண்ணுலகில் பிறந்தவள். தேவராஜனின் புதல்வி. கிரியாசக்தி. அவளை இறைவன் கற்பு முறையில் பிரம்ம விவாகம் செய்தான். முருகனை வழிபடுவோருக்கு அத்தாய் பரலோக வாழ்வில் இடம்தருவாள்.

முருகனின் மூன்றாவது சக்தி வேல். முருகனின் கரத்தில் விளங்குகிறது. வெற்றியைத் தருவது. ஞானமே வடிவெடுத்த ஞானசக்தி அது.

‘வெல்’ என்ற வினையடியில் தோன்றியது ‘வேல்’. அது ஞானமே உருவானது. ஆழந்து அகன்று கூர்மையாகி அறிவின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. செவ்வேட் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் சேவற்கொடி அஞ்ஞான இருளகற்றி ஞானஒளி வரக் கூவுகிறது. (கொக்கு- மாமரம், அற- அறுத்த, கோ- நம் அரசே) வாகனமான மயில் ஆசை என்ற பாம்பை அடக்கி பிரம்மசக்தியாக ஓம்கார ரூபமாக விளங்குகிறது.

முருகன் கைவேலுக்கு உரிய சிறப்பு வேறு எப்படைக்கும் இல்லை. தமிழ் இந்துக்களில் பலருக்கு ‘வேலாயுதம்’ என்றே பெயர் இருக்கிறது. இப்படி எவரும் வேறு எந்தப் படைக்கலனையும் தங்கள் பெயராகக் கொள்வதாகத் தெரியவில்லை. இலங்கையிலுள்ள பிரபல யாழ். நல்லூர் போன்ற பல முருகன் ஆலயங்களில் கருவறையில் முருகனின் திருவுருவத்திற்குப் பதிலாக வேலாயுதமே விளங்கிடக் காணலாம்.

‘அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த அன்பால்
எந்தை கண்ணின்றும் வந்த இயற்கையால் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் சொன்ன தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டு உளக்கவலை தீர்த்தோம்’

என்று தேவர்களின் வாக்காக வேலாயுதத்தைக் கந்தவேளாகவே கண்டு போற்றியதாகக் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.

இறையருள் துணையுடன் ஆணின் விந்துவும் பெண்ணின் நாதமும் கலந்து குழந்தையாகிறது. (அருணகிரிநாதர் ‘நாத விந்து கலாதீ நமோ நம’ என்று இதனைத் திருப்புகழில் பாடுவார்.) இறைவனிடமிருந்து வந்த நாமெல்லோரும் இறுதியில் இறைவனையே சென்றடைய வேண்டும். அழிவின் பின்னர் சூரபத்மன் நாதவுருவாகச் சேவலாக மாறி இறைவனின் கொடியாகவும் விந்துருவுருவாக மயிலாக மாறி முருகனின் வாகனமாயும் மாறியது இதை வெளிப்படுத்துகின்றது என்பர். அவனையே அடைந்து அவனருளாலே அவன் தாள் வணங்குதலே முக்தி. இதனைப் பெற்றான் சூரன். இச்சம்பவத்தை ‘சூரன் பெற்ற பேறு’ என்று கொண்டாடுவார்கள்.

ஆன்மாக்கள் நல்லறிவை நாடித் தவிக்கும் போது இறைவனே குருவாக வந்து அருள்வான் என்பதை சிவனார் சனகாதி முனிவர்கள் நால்வருக்கு உபதேசித்தமை சுட்டுகிறது.

சிவனார் காமனை எரித்ததும் காலனைக் காலால் உதைத்ததும் அவர் காமத்தையும் மரணத்தையும் வென்றவர் என்பதையும், அவர் அடியார்களுக்கும் இவற்றால் துன்பமில்லை என்பதையும் உணர்த்தி நிற்கிறது.

இறைவனை இகழ்ந்து அவனை அவமதிப்பவர்கள் மிகுந்த அல்லல்களை அநுபவிப்பர் என்பதை தக்கன் யாகத்தை இறைவன் அழித்தமை காட்டுகின்றது.

கந்தபுராணத்தில் தாரகன், சிங்கன், சூரபத்மன் என்ற மூன்று அசுரச் சகோதரர்களின் கதை கூறப்படுகின்றது. தாரகன் உலகமே உண்மை என்று வாழ்ந்தவன். சைவசித்தாந்த நிலையில் அவனை “மாயா மலத்திற்கு” உவமிப்பர். சிங்கன் கன்மத்திற்குக் கட்டுப்பட்டவன்; அவனைக் “கன்ம மலத்திற்கு” உவமிப்பர். சூரபத்மன் “ஆணவ மலம்”. இறுமாப்பே அவன் இயல்பு.

இம்மூவரையும் முறையே அழித்தமை ஞானம் எனும் வேல் கொண்ட வேந்தனால் மட்டுமே இயல்பாகச் செய்ய வல்ல பெருஞ்சிறப்பு.

‘தன்னைத் தான் காதலாகில் எனைத் தோன்றும்
துன்னற்க தீவினைப் பால்’

என்பது வள்ளுவர் மொழி.

அதாவது ‘நீ உன்னை விரும்பி, உனக்கு நன்மையை விரும்பி, தீவினை ஏதும் செய்யாமல் இருப்பாயாக’ என்று அறிவுறுத்துகிறார். சூரனோ எல்லா விதத் திறனும் அறிவும் உடையவனாய் இருந்தும், இறையருள் பெற்றவனாய் இருந்தும், தீவினை செய்து தன்னைத் தானே அழித்துக் கொண்டமை வள்ளுவர் வாக்கிற்குத் தக்கச் சான்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top