Home » சிறுகதைகள் » சொல்லப் பயந்த தெய்வம்!!!
சொல்லப் பயந்த தெய்வம்!!!

சொல்லப் பயந்த தெய்வம்!!!

அம்மன் சந்நிதிகளில் ஏராளமான மரக்கிளை, காய்,கனிகளால் பரப்பி வைத்து அம்பிகையை அலங்காரம் செய்வர். இதற்கு சாகம்பரி அலங்காரம் என்று பெயர்.

சாகம்பரியைப் பற்றி ஆதிசங்கரர் தன்னுடைய முதல் நூலான கனகதாரா ஸ்தோத்திரத்தில் கீர்தேவதேதி என்னும் பாடலில் சாகம்பரீதி எனக் குறிப்பிடுகின்றார். ஸ்ரீ தேவீ பாகவதம் சாகம்பரி தேவியைப் பற்றி விரிவாகவே குறிப்பிடுகிறது.அந்த சாகம்பரி தேவியைப் பற்றிய அபூர்வமான விபரத்தைப் பார்க்கலாம். 

மன்னர் ஒருவர் நல்ல விதமாக ஆட்சி செய்து வந்தார். திடீரென்று ஒரு சமயம்….. அந்நாட்டில் பயிர் பச்சைகள் எல்லாம், பாதி, முக்கால் வளர்ந்ததும் கருகத் தொடங்கின. என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தும், பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. மன்னர் வருந்தினார். வேத விற்பன்னர்களிடம் போய், துயர் தீர வழிகாட்டுமாறு வேண்டினார்.

அதற்கு அவர்கள், மன்னா! சாகம்பரி தேவியைப் பூஜை செய்! அவள் தான் இந்த பயிர், பச்சைக்கெல்லாம் அதிகாரி. முழு மனதோடு அவளை நோக்கித் தவம் செய்! அவள் அருள் புரிவாள். உன் துயரம் தீரும், என்று வழிகாட்டினார்கள். வழி தெரிந்த பின், மன்னர் சும்மா இருப்பாரா? மனம் முழுவதையும் சாகம்பரி தேவியின் திருவடிகளில் பதித்து தவம் செய்தார். தவத்தின் பயனாக…. சாகம்பரிதேவி காட்சி அளித்தாள்.

அவள் திருவடிகளில் விழுந்து வணங்கிய மன்னர், தாயே! நீ இங்கிருந்து பயிர்களைக் காத்து நல்ல விளைச்சல் அளிக்க வேண்டும், என்று வேண்டினார். சாகம்பரி தேவியும் சம்மதித்தாள். ஆனால், நிபந்தனை ஒன்றையும் விதித்தாள்.

மன்னா! நான் இங்கிருந்து உன் வேண்டுகோளை நிறைவேற்றுவேன். ஆனால், உன் நாட்டில் யாராவது இல்லாதது பொல்லாததுமாக கோள் சொன்னால், அங்கு நான் இருக்க மாட்டேன், என்றாள். மன்னர் ஒப்புக் கொண்டார்.

நாடு வளம்பெற்று எங்கும் பயிர்கள் செழித்து வளர்ந்தன.

ஆனால் ஒருநாள்…  மன்னர் கனவில் தோன்றிய சாகம்பரிதேவி,உன் தேசத்தில் மக்கள் ஆங்காங்கே கோள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்… என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மன்னர், தாயே! யார் அது என்று சொல்வாயாக என்று வேண்டிக் கொண்டார்.

அதற்கு சாகம்பரியோ,யார் என்பதை நான் சொல்லிவிட்டால், கோள் சொன்ன பாவத்திற்கு ஆளாகி விடுவேன். ஆகையால் சொல்ல மாட்டேன். என்று பதில் சொன்னாள். அதோடு கனவு கலைந்து விட்டது.

கோள் சொல்லும் பாவத்திற்குப் பயந்து தெய்வமே மறுத்து விட்டது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கோள்சொல்வதை கைவிட்டால் பெரும் பாவங்களும், பிரச்னைகளும் கூட நம்மை விட்டு விலகிப் போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top