Home » படித்ததில் பிடித்தது » புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்!
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்!

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்!

எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும்,தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும்.

செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.

நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி
பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்

ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது-

மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது மனிதனுடைய வலது மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கும். வலது மூளை கற்பனை சக்திக்கும், ஆக்க அறிவிற்கும் (Creativity) காரணமாக இருப்பதால், படிப்பதால் நன்மை விளைகிறது.

மேற்கண்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தால் எல்லாவற்றையும் காட்சியில் பார்த்துவிடுவதால் மூளைத் தூண்டலுக்கு அங்கு வாய்ப்பில்லை.

நல்ல நூல்களைப் படிப்பதால் விளையும் நன்மைகள்

1.திருவள்ளுவர் ‘வழுக்குகின்ற இடத்தில் ஒரு ஊன்றுகோலைப் போல சான்றோர் சொல் பயன்படும்’ என்று கூறுகிறார்.

2. இந்த உலகில் பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களுடையவாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது ‘ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப்போவதற்குமுன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியை படித்துவிட்டுத்தான் படுக்கச்செல்கிறேன்’ என்று கூறியுள்ளனர். இவ்வாறு படிக்கும் பழக்கம் பல புதியவிசயங்களை தெரிந்து கொள்ளவும் நமக்கு நானே மேலும் மேலும் தூண்டுதல் செய்து கொள்ளவும் பயன்படும்.

3. ஒரு அறிஞர் சொல்கிறார், “Life is a Learning Process”. அப்படிப் பார்க்கும்போது வாழ்க்கை முழுதும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

4. ஜப்பானியரின் கைசன் என்னும் கொள்கை சொல்கிறது ‘தொடர்ச்சியாக வளர்ச்சியடைய வேண்டும்’ அதாவது அறிவில் – தொழிலில் வளர்ச்சியடைய மேலும் மேலும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும்.

5. நாம் சார்ந்திருக்கும் துறையில் என்னென்ன புதுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொண்டே இருக்கவேண்டும். அதன் எதிர்காலம் அதன் மார்க்கெட் நிலவரம், போட்டியாளர்களுடைய செயல்கள், அரசின் வணிகக் கொள்கைகள் என்பது பற்றியெல்லாம் விழிப்புணர்வு வர, செய்திகளைத் தெரிந்து கொண்டே இருக்கவேண்டும்.

6. மற்றவருடைய அனுபவங்களையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்கிற போது அவை வளர்ச்சிக்கு வழிகாட்டுபவையாக இருக்கும்.

7. மனித மனம் ஓர் நிலம். அந்த நிலத்தில் ஒன்றும் பயிர் செய்யவில்லையென்றால்புல்- பூண்டுகள் முளைத்து விடும். அந்த நிலத்தில் விதைகளை தொடர்ந்து தூவிக்கொண்டே இருக்க நல்ல நூல்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

8. நல்ல நூல்களைப் படித்த பின் அவற்றை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். சந்தித்து உரையாடும்போது பேச வேண்டிய விசயத்தை பேசி முடித்தப்பின் படித்த நூலில் உள்ள சிறப்பம்சத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த சந்திப்புக்கு பின் ‘உங்களுடைய சந்திப்பு பல நல்ல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்து’ என்ற நல்ல உணர்வை அது நண்பரிடம் ஏற்படுத்தும்.

9. என்னுடைய பயிற்சியின் போது சில அன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் “நூல்கள் வாங்கிவிடுவேன் ஆனால் படிக்கத் தவணை செய்கிறேன். என்ன செய்வது?’

பதில்: ‘நூலை எடுத்து முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அமைதியாக பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டும் அதற்கு இப்பொழுது நேரமில்லை’ என்று சிலர் தள்ளிப் போடுகின்றனர். அதற்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் பகுதியில் அதன் சுருக்கம் இருக்கும். அதைப் படியுங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடு போடப்பட்டோ அல்லது பெரிய எழுத்திலோ உள்ள முக்கிய வரிகளைப் படியுங்கள். நேரம் கிடைக்கும் போது முதலில் படித்த அத்தியாயத்தை படியுங்கள்.

ஹென்றி ஃபோர்டு சொல்லுவார், “எந்தப் பெரிய வேலையையும் பகுதி பகுதியாக பிரித்துச் செய்து விட்டால் வேலை எளிதில் முடியும்

அடுத்து, படிக்கும்போது வேறு நினைவுகள் வந்து கவனம் சிதறினால் விரல் வைத்துபடியுங்கள் பின் சிறிது சிறிதாக விரலை வேகமாகக் கொண்டு சென்று படியுங்கள்.படித்து முடித்ததற்கு பிறகு வருகிற பயன்களை எண்ணிப் பார்த்து படியுங்கள்.

நிறைவுரை

பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். ஆக்கஅறிவு (Creativity) மிகும். உரையாடும் போது மற்றவர்களால் மதிக்கப்படுவோம்.எல்லோராலும் வேண்டப்பட்டோராக மாற முடியும்.

நம் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்குத் தக்கபடி நூல்களை வாங்கி கொடுப்போம். வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் அமைப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top