Home » விவேகானந்தர் » பழைய கோயில்!!!
பழைய கோயில்!!!

பழைய கோயில்!!!

மாமரத்திற்கு வடக்கில் மாடிக்குச் செல்லும் படிகள் காணப்படுகின்றன. அவற்றின் வழியாகச் சென்றால் பழைய கோயிலை அடையலாம். அங்கே இரண்டு அறைகள் உள்ளன. இடது பக்கம் இருக்கின்ற அறை தான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலாகத் திகழ்ந்தது. ஆரம்பத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் புனித அஸ்தி (ஆத்மா ராம் என்று வழங்கப்பட்டது) , ஒரு கலசத்தில் இங்கே பூஜிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் வைக்கப்பட்டு, 1938 ஜனவரி 14 வரை சுமார் 40 வருடங்கள் பூஜை நடைபெற்றது. அன்னை சுவாமிஜி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களுள் பெரும்பாலோர் இங்கே வழிபட்டுள்ளனர். தற்போது இங்கே நாம் காண்கின்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் பெரிய படம், அன்னை, சுவாமிஜி மற்றும் பிரம்மானந்தரின் படங்கள் மிகவும் பின்னாளில் வைக்கப்பட்டவையாகும்.

வலது பக்கம் அறை மஹாபுருஷ்ஜியின் அறை என்று அழைக்கப்படுகிறது. ஆரம்ப நாட்களில் இது ஸ்ரீராமகிருஷ்ணரின் பள்ளியறையாக இருந்தது. சுவாமிஜி தமது உடலை உகுத்த நாளில் இந்த அறையில்தான் சுமார் மூன்று மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சி வருமாறு: 1902 ஜூலை 4 காலை 8. 30 மணிக்கு சுவாமிஜி கோயிலுக்குச் சென்றார். அங்கே தியானத்தில் ஆழ்ந்தார் ஆழ்ந்தார். 9.30 மணியளவில் தினசரி பூஜைக்காகப் பிரேமானந்தர் வந்தார்.

உடனே சுவாமிஜி அவரிடம் தமது ஆசனத்தை அடுத்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் பள்ளியறையில் விரித்துவிட்டு, அந்த அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை எல்லாம் மூடிவிடுமாறு கூறினார். மற்ற நாட்களிலும் அவர் அந்த வேளையில் தியானம் செய்வதுண்டு; ஆனால் கதவுகளும் ஜன்னல்களும் திறந்தே இருக்கும்.

அன்று அந்த மூடிய அறையில் சுமார் மூன்று மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் சுவாமிஜி. பின்னாளில் கோயில் தற்போதைய இடத்திற்கு மாற்றப் பட்ட பிறகு, மஹாபுருஷ்ஜி பயன்படுத்திய கட்டில் முதலிய பொருட்கள் இந்த அறையில் வைக்கப்பட்டன. ஸ்ரீராமகிருஷ்ணரின் பள்ளியறை மஹா புருஷ்ஜியின் அறை ஆகியது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் சன்னிதிக்கு வலது பக்கம் வராந்தா ஒன்று உள்ளது. அங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் நடப்பதை மஹாபுருஷ்ஜி ஒரு காட்சியில் கண்டார். ஒரு மழைநாளில் சாரல் தெறித்து அந்த வராந்தாவில் அங்கங்கே நீர் தேங்கி நின்றது. அதனைத் துடைத்துச் சுத்தம் செய்யத் தவறிய இளந்துறவி ஒருவரிடம் அவர் கூறினார். என்னப்பா, என்ன சேவை செய்கிறாய் நீ! தினமும் மாலை வேளையில் ஸ்ரீராமகிருஷ்ணர் அந்த வராந்தாவில் நடப்பதை நான் காண்கிறேன். நீர் தேங்கிக் கிடப்பதால் அவர் நடக்கச் சிரமப்படுகிறார். அவரது திருப்பாதங்கள் நனைகின்றன.

என் மகனே! அவருக்கு எந்தச் சிரமமும் ஏற்படாதபடி வேலை செய். நமது எல்லாமே அவர்தான். அவர் மகிழ்ந்தான் உலகமே மகிழ்கிறது. கோயிலிலிருந்து வெளியே வந்து வாசலில் நின்றால் எதிர் மாடிக்குச் செல்வதற்கான ஒரு சிறிய கதவைக் காணலாம். சுவாமிஜி தமது அறையிலிருந்து இந்த வழியாகக் கோயிலுக்கு வருவது வழக்கம்.

நாம் இறங்கி வருகின்ற மாடிப்படிகளும் புனிதத்தில் குறைந்தவை அல்ல. சுவாமிஜி தமது உடலை உகுத்த நாளில் ஸ்ரீராமகிருஷ்ணரின் பள்ளியறையில் சுமார் மூன்று மணி நேரம் தியானித்த பிறகு வெளியே வந்தார். அவரது வரலாற்றைப் பார்ப்போம்.

கதவுகளைத் திறந்து வெளியே வந்த சுவாமிஜி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். கரிய நிறத்தவளா காளி என் அன்னை! என்ற அழகிய பாடலைத் தமது இனிய குரலில் பாடியபடியே படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கினார். ஏதோ தொலைதூர வெளி ஒன்றில் சஞ்சரிப்பவர் போல் காணப்பட்டார் அவர்.

பழைய கோயிலுக்கு அருகிலுள்ள கட்டிடம் (தற்போது பேலூர் மடத்து மேனேஜர் சுவாமிகளின் அலுவலகம் இயங்குகின்ற கட்டிடம்) ராமகிருஷ்ண இயக்கத்தின் தூய துறவியர் எண்ணற்றோரின் புனித வாழ்க்கையுடன் தொடர்பு உடையது. ஆரம்ப நாட்களில் மடத்தில் இந்தக் கட்டிடம் மட்டுமே இருந்தது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்களில் ஏறக் குறைய அனைவரும், ராமகிருஷ்ண இயக்கத்தின் குருமார்களுள் சுவாமி விசுத்தானந்தர் வரையுள்ள முதல் எட்டுபேரும், உயர் ஆன்மீக அனுபூதி நிலைகளில் திளைத்த துறவியர் பலரும் வாழ்ந்த இடம் இது. எனவே அந்தக் கட்டிடம் புனித நினைவுகளின் ஆலயமாகிறது.

அந்தப் புனிதர்களுக்கு மானசீகமாக நமது அஞ்சலியைச் செலுத்தி அவர்களின் ஆசிகளை வேண்டுவோம். இந்தக் கட்டிடத்திற்கும் பழைய கோயிலுக்கும் இடையிலுள்ள பகுதியில்தான் (தற்போது ஓரிரு அலுவலங்கள் இங்கே இயங்குகின்றன) ஆரம்ப நாட்களில் துர்க்கா பூஜை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top