Home » விவேகானந்தர் » பிரம்மானந்தர் கோயில்!!!
பிரம்மானந்தர் கோயில்!!!

பிரம்மானந்தர் கோயில்!!!

பிரம்மானந்தர் கோயில்!

நாம் முதலாவதாகக் காண்பது பிரம்மானந்தர் கோயில், ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப் புதல்வராகக் கருதப்பட்ட சுவாமி பிரம்மானந்தர் ராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் தலைவர். ராஜா மஹாஜ், ராக்கால் மஹராஜ் என்றெல்லாம் அழைக்கப்படுபவர். 1922 ஏப்ரல் 10 ஆம் நாள் மறைந்த அவரது திருமேனியை எரியூட்டிய இடத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

அவரது சீடரான சியாம் கோஷ்(இவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான நவகோபால் கோஷின் புதல்வர்) முழுச்செலவான ரூ40,000 ஐயும் ஏற்றுக்கொள்ள, இரண்டு ஆண்டுகளில் கோயில் கட்டப்பட்டது. 1924 பிப்ரவரி 7, பிரம்மானந்தரின் பிறந்த நாளன்று மஹாபுருஷ்ஜி கோயில் பிரதிஷ்டையை நடத்தி வைத்தார்.

கோயிலினுள் பிரம்மானந்தரின் சலவைக்கல் திருவுருவம் உள்ளது. தமது முற்பிறவியில் இவர் ஸ்ரீகிருஷ்ணரின் சிறுவயதுத் தோழனாக இருந்தார் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதுண்டு. எனவே இவரது சிலைக்குக் கீழே பால கோபாலனின் ஒரு சிறிய சிலை வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி முதலான சில விசேஷ நாட்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு இங்கே சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கோயிலின் கோபுர முகட்டிலும் மஹாவிஷ்ணுவின் ஆயுதமான சக்கரம் அழகு செய்வதைக் காணலாம்.

கோயிலின் மாடியில் பிரம்மானந்தரின் கட்டில் முதலான பொருட்கள் வைக்கப்பட்டு அவரது பள்ளியறையாகப் பயன்படுத்தப்படுகிறது. அவரது ஜெயந்தி நாளன்று இங்கே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சாரதா தேவி கோயில்!

அடுத்ததாக நான் காண்பது சாரதா தேவி கோயில், அருள்மிகு அன்னை, அழகிய மரப்பீடம் ஒன்றில், என்றென்றும் தாம் போற்றுகின்ற கங்கையைப் பார்த்த வண்ணம் எழுந்தருளியுள்ளார். அன்னைக்கு வலது புறம் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் உள்ளது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யையும் ஆன்மீகத்தில் மகோன்னத நிலைகளை அடைந்த வருமான கோபாலேர்-மா அன்னைக்கு அளித்தது இந்தப் படம். அன்னைக்கு இடது புறம் பாணேசுவர சிவலிங்கம் உள்ளது. இதுவும் தினசரி பூஜிக்கப்படுகிறது.

உலகில், அதாவது நம்மில், சக்தியை விழித்தெழச் செய்வதற்காகத் தோன்றியவர் அன்னை ஸ்ரீசாரதா தேவி என்றார் சுவாமிஜி, அவர் கூறுகிறார் அன்னை ஸ்ரீசாரதாதேவி யார், அவரது வாழ்க்கையின் பொருள் என்ன என்பதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ள வில்லை…. சக்தி இல்லாமல் உலகிற்கு முன்னேற்றம் கிடையாது.

நமது நாடு அனைத்து நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? பலமிழந்து கிடப்பது ஏன்? நம் நாட்டில் சக்தி அவமதிக்கப்படுவதுதான் காரணம். இந்தியாவில் அந்த மகாசக்தியை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வதற்கே அன்னை தோன்றியுள்ளார். அவரை ஆதாரமாகக் கொண்டு அன்னை கார்க்கிகளும் மைத்ரேயிகளும் உலகில் தோன்றுவார்கள். அந்த மகாசக்தியான அன்னை ஸ்ரீசாரதாதேவியின் திருமேனிக்கு எரியூட்டிய இடத்தில் இந்தத் திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. எனவே இது ஒரு சக்தி பீடமாகத் திகழ்கிறது.

அன்னை மறைந்தபிறகு, சிதை மூட்டுவதற்காகப் பலவேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. கடைசியில், மஹாபுருஷ்ஜி இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கூறினார். அன்னை இந்த இடத்தில் கங்கையை நோக்கி அமர்ந்து, என்றென்றும் மனித குலத்தின்மீது நிலைத்த சாந்தியைப் பொழிவார். கோயில் கங்கையை நோக்கியிருந்தால் அது கம்பீரம் பொலிந்து தோன்றும் என்று துரீயானந்தரும் கருத்து தெரிவித்தார். கோயில்களுள், அன்னையின் கோயில் மட்டுமே கங்கையை நோக்கி அமைந்துள்ளது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: நூலின் ஆசிரியரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடருமான மஹேந்திர நாத் குப்தா (ம) அன்னையிடம் மாறாத பக்தி கொண்டவர், அன்னையின் மறைவை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. மிகுந்த மனத்துயரில் ஆழ்ந்திருந்த அந்த நாட்களில் அவர் கனவொன்று கண்டார்.

அதனை பக்தர் ஒருவருக்கு எழுதினார்; அன்று அன்னை என் கனவில் வந்து என்னிடம் நான் இறந்து போனதை அன்று நீ கண்டாயே, அது வெறும் மாயை! இதோ பார், நான் அதே உருவில் அப்படியே இருக்கிறேன் என்று கூறினார். மஹாபுருஷ்ஜி ஒருமுறை, அன்னை உண்மையில் ஆதிசக்தியே ஆவார். இந்தக் கோயிலில் அவர் நிரந்தரமாக வாழ்கிறார் என்று கூறினார். சாரதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர், அன்னைக்கு நீண்ட காலம் சேவை செய்தவர்.

அவரது பெருமுயற்சி காரணமாக ஓர் ஆண்டிற்குள் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. அன்னை மறைந்த அதே ஆண்டில் (1920) அவரது பிறந்த நாளான டிசம்பர் 31-ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது. 1921-டிசம்பர் 21 அன்னையின் 68-ஆம் பிறந்த நாளன்று பிரதிஷ்டையும் நிறைவேறியது.

பாதையின் வலது புறம் இரண்டு தேவதாரு மரங்கள் நிற்கின்றன. மடத்து நிலம் வாங்கியபோதே இவை உள்ளன. அதாவது இந்த மரங்களின் வயது 100 க்கும் மேல். பேலூர் படகுத் துறைக்குச் செல்வதற்கான வாசல் இந்தப் பாதைக்குத் தென்மேற்கில் தெரிகின்றது.

சுவாமிஜியின் நாட்களில் இதுதான் மடத்தினுள் வருவதற்கான முக்கிய வாசலாக இருந்தது. சுவாமிஜி இரண்டாம் முறை தமது மேலைநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு பேலூர் மடத்திற்கு வந்து சேர்ந்தபோது இரவு வேளையாக இருந்தது.

முன்பாக மடத்தில் அவர் தெரிவிக்கவும் இல்லை. வாசலில் யாரும் காத்திருக்காத அந்த நிலையில் வாசலில் ஏறிக் குதித்து உள்ளே சென்றார் அவர். அந்த நாட்களில் இந்த வாசல் இவ்வளவு பெரியதாக இல்லை! 1911-இல் அன்னை தமது தென்னிந்திய பயணத்தை முடித்துவிட்டு பேலூர் மடத்திற்கு வந்தபோது இந்த வாசலில்தான் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விவேகானந்தர் கோயில்!

விவேகானந்தர் கோயில் இரண்டு அடுக்குள் உடையது. மாடியில் பிரணவக் கோயில், கீழே விவேகானந்தர் கோயில். கோயில் கட்டும் காலத்தில் இந்த இடம் பள்ளமாக இருந்ததால் கீழ்க்கோயில் நிலமட்டத்திற்குக் கீழே உள்ளது. சுவாமிஜியின் திருமேனியை எரித்த இடத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. சுவாமிஜியே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.

1902 ஜூலை 1; சுவாமிஜி மறைவதற்கு மூன்று நாட்கள் முன்பு. மாலைவேலையில் அவர் பிரேமானந்தருடன் கங்கைக் கரையில் நடந்துகொண்டிருந்தார். திடீரென்று பிரேமானந்தரை அழைத்து இந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, நான் உடம்பை விட்ட பிறகு அதனை இந்த இடத்தில் எரியுங்கள் என்று கூறினார். அதே இடத்தில்தான் விவேகானந்தர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

ஓர் ஆச்சரியமான உண்மை என்னவென்றால், விவேகானந்தர் கோயில் கட்டுவதற்குத்தான் மிக அதிக காலம்-சுமார் 21 ஆண்டுகள் பிடித்தது. நன்கொடைகளுக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேண்டுகோள் விடப்பட்டது.

ஆனால் பணம் வரவில்லை. சுவாமிஜி மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1907 ஜனவரியில் தான் பணி ஆரம்பிக்கவே செய்தது. ஆனாலும் பணி மிகவும் மந்தமாகவே நடைபெற்றது. பணி முற்றுப்பெறாத நிலையில், 1909 ஜனவரியில் விவேகானந்தரின் ஜெயந்தி நாளில் அவரது திருவுருவப் படம் ஒன்று அலங்கரிக்கப்பட்டு கோயிலினுள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.

சுவாமிஜி மறைந்து ஆண்டுகள் 10 கழிந்தும் திருக்கோயில் பணியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதுவும் இல்லாததைக் கண்டபோது, 1912 ஜனவரி கடைசியில் பிரம்மானந்தர். மராட்டா என்ற பத்திரிக்கையில் (லோகமான்ய பால கங்காதர திலக் ஆரம்பித்தது.) சற்று காட்டமாக ஆனால் வேதனையுடன் சுவாமிஜி மறைந்து ஆண்டுகள் 10 கழிந்துவிட்டன.

அவரது மறைவு பாரத நாட்டிற்கே ஒரு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை. மக்கள் அதுபற்றி தங்கள் வேதனையை வெளிப்படுத்தவும் செய்துள்ளார்கள். ஆனால் நவீன பாரதத்தின் இந்த தேசபக்தத் துறவிக்காக ஒரு நினைவுச் சின்னம் நம்மால் எழுப்ப முடிந்ததா? இது வெட்கத்திற்குரிய விஷயம். இந்தியர்களின் கையாலாகாத்தனத்திற்கு ஒரு நிதரிசனமான எடுத்துக்காட்டு என்று எழுதினார். அதனாலும் பெரிய பலன் எதுவும் விளையவில்லை.

சுவாமிஜி மிகவும் பழக்கமானவரான மிசஸ் லெக்கட்டின் நன்கொடையிலும் சுவாமிஜியின் சிஷ்யையான சகோதரி நிவேதிதையின் மேற்பார்வையிலும் ஜெய்பூரில் உருவாகியது சுவாமிஜியின் சலவைக்கல் திருவுருவம். முதலில் சிறிய அளவில் ஒரு சிலை செய்வதாகத்தான் ஏற்பாடாகியது.

பின்னர் மிசஸ் லெக்கட் அதனைத் தற்போதைய அளவில் பெரியதாக மாற்றினார். அதனைக் கேள்விப்பட்டதும் நிவேதிதை, இந்தப் பெரிய அளவில் சுவாமிஜியின் திருவுருவம் மிகவும் கம்பீரமாக அமையும். அது விவேகானந்தர் கோயிலுக்கே ஒரு தனிப்பொலிவை அளிக்கும். வரும் காலங்களுக்கு இந்தக் கோயில் ஒரு தனிச் சிறப்பாக அமையும் என்று எழுதினார்.

திருவுருவப் பணிபற்றி நிவேதிதை எழுதுகிறார். சலவைக் கல்லை வைத்து, அதற்கு முன்பாக நைவேத்தியம் சமர்ப்பித்து, ஓர் எளிய பூஜை செய்தார் சிற்பி, அதன்பின்னர் அந்தக் கல்லினுள் அடங்கியுள்ள சுவாமிஜியைக் குறித்து, சுவாமிஜி! தங்களை எழுந்தருளச் செய் என் கைகளுக்கு ஆற்றல் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

அதன்பிறகே வேலை ஆரம்பித்தார். அவர் மதியவுணவிற்காகச் சிறய இடைவெளி தவிர தினமும் காலை 8 முதல் இரவு 7.30 வரை வேலை செய்கிறார். வேலை நமக்குத் திருப்தியாக அமையுமானால் மட்டுமே பணம் பெற்றுக்கொள்வதாகவும், இல்லைவிட்டால், முன்பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகவும் அவர் என்னிடம் கூறினார்

சுவாமிஜியின் இந்தச் சலவைக்கல் திருவுருவில் 1913-இல் கோயிலில் எளிமையான அளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினசரி பூஜையும் அப்போதே ஆரம்பமாகியது. ஆனால் கட்டிடத் திருப்பணி மேலும் தொடர்ந்து 1923 இறுதியில் தான் நிறைவுற்றது.

இந்த நீண்ட 16 ஆண்டுகளில் நாடெங்கிலும் விவேகானந்தரின் புகழ் பேசுகின்ற, அவரது பணியைப் பாராட்டுகின்ற பல கூட்டங்கள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கானோர் அவரது பெயரில் ஜெய த்வனி எழுப்பினர். பல்லாயிரக்கணக்கானோர் பேலூர் மடத்திற்கு வந்தனர். முற்றப்பெறாத நிலையிலிருந்த அவரது கோயிலுக்குச் சென்று. பக்திப் பரவசத்துடன் அவரை வழிபட்டுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top