Home » விவேகானந்தர் » எதையும் சாரா ஆன்ம இன்பம்!!!
எதையும் சாரா ஆன்ம இன்பம்!!!

எதையும் சாரா ஆன்ம இன்பம்!!!

சில மீனவப் பெண்கள் ஒருநாள் கடும்புயலில் மாட்டிக் கொண்டனர். வேறு வழியின்றி ஒரு பணக்காரனின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். அவன் அவர்களை அன்புடன் வரவேற்று, உணவு கொடுத்து, தங்கவும் இடமளித்தான். இந்த இடம் அழகிய பூக்கள் மலர்ந்திருந்த ஒரு தோட்டத்தின் நடுவே இருந்தது.

பூக்களிலிருந்து வீசிய நறுமணம் அந்த இடம் முழுவதையும் நிறைத்திருந்தது. ஆனால் அந்த நறுமணச் சொர்க்கத்தில் படுத்த மீனவப் பெண்களுக்குத் தூக்கம் வரவில்லை. ஏதோ ஒன்றை இழந்துவிட்டதுபோல் அவர்களுக்குத் தோன்றியது.

அவர்களின் மனம் வேதனையில் ஆழ்ந்தது. கடைசியில் ஒருத்தி எழுந்து, மீன்கூடைகள் வைத்திருந்த இடத்திற்குச் சென்றாள். அவற்றை எடுத்துவந்து, தாங்கள் படுத்திருந்த இடத்திற்கு அருகில் வத்தாள். அவ்வளவுதான், பழக்கமான நெடியை அனுபவித்த உடனே அவர்கள் ஆழ்ந்து உறங்கிவிட்டனர்.

இந்த உதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் மேலும் தொடர்கிறார்: இந்த உலகமே நமது மீன்கூடை. இன்பத்திற்காக நாம் அதைச் சார்ந்திருக்கக்கூடாது…புற உலகிலுள்ள எதையும் சாராத, உண்மையான, தனிப் பேரானந்தம் நம்முள் ஏற்கெனவே உள்ளது…ஆன்மாவின் இயல்பு ஆனந்தம், மாறாத அமைதி.

அதை நாம் பெறவேண்டியதில்லை…அது எதன் தொடர்பாலும் வருவதில்லை அது நம்மிடம் என்றும் உள்ளது..அது பேரானந்தம்…இன்பத்தை ஏன் உலகில் தேடவேண்டும். அப்படி என்ன இன்பத்தைத்தான் உலகம் தந்துவிடமுடியும்? சேற்றில் விளையாடும் குழந்தைகளுக்குக் கிடைக்கின்ற சில கண்ணாடி மணிகளைப் போல் ஏதோ அற்பமான சிலவற்றைத்தான் அது நமக்குத் தரமுடியும்.

அவற்றையும் நாம் இழக்கிறோம், மீண்டும் தேடுகிறோம். ஆனால் ஆன்மிகமும் இறைவனும்தான் எல்லையற்ற ஆனந்தம்….நாம் ஆன்மாவில் நிலைபெற்று, உலகின் காட்சிகளைப் பூரண அமைதியுடன் பார்க்கவேண்டும். இவை வெறும் குழந்தை விளையாட்டு, நம்மை பாதிக்கக்கூடாது…நன்மையும், தீமையும் நமது அடிமைகள்; நாம் அவற்றிற்கு அடிமையல்ல…என்றென்றும் ஆனந்தத்தில் திளைத்திருப்பது இறைவனின் இயல்பு. நாமும் இறைவனாக இருப்போம். இதயத்தை கடல்போல் விரிவுபடுத்திக் கொள்.

உலகின் சிறுமைகள் அனைத்தையும் கடந்து அப்பால் செல். தீமையிலும் உனக்குப் பேரானந்தப் பைத்தியம் ஏற்படட்டும். ஓர் ஓவியத்தைப் பார்ப்பதுபோல் உலகத்தைப் பார், அதில் காணப்படும் எதுவும் உன்னை பாதிக்காது என்பதை அறிந்துகொண்டு அதன் எழிலை அனுபவித்து மகிழ்.

சேற்றுக்குழியில் குழந்தைகள் கண்டு களிக்கும் பாசிமணிக்கு ஒப்பானது இந்த உலகம். எதிலும் ப்ற்றுக்கொள்ளாமல் அமைதிப் பார்வையுடன் இந்த உலகைப் பார். நன்மை, தீமை இரண்டும் ஒன்றே, அவை இரண்டும் இறைவனின் திருவிளையாடல் என்பதையும் தெரிந்து கொள். அனைத்திலும் மகிழ்ச்சி அடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top