Home » விவேகானந்தர் » நீயே அது!!!
நீயே அது!!!

நீயே அது!!!

ஒரு தேவன் மற்றும் ஒரு அசுரனும் ஆன்மாவைப் பற்றி அறிவதற்காக் முனிவர் ஒருவரிடம் பல வருடங்கள் கல்வி பயின்றனர். இறுதியில் ஒரு நாள் அம்முனிவர் அவர்களிடம், நீங்கள் தேடும் ஆன்மா நீங்களே எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

அசுரனின் இயல்பே அறிவீனமும், மடத்தனமும்தானே. எனவே அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை. உடலே ஆன்மா என்று பூரண திருப்தி அடைந்துவிட்டான். தேவனும் முதலில் இந்த உடலே ஆன்மா என நினைத்தான்.

அவன் தூய இயல்பு படைத்தவன், ஆதலால் சிறிது சிந்தித்த பின்னர், முனிவர் கூறியதன் பொருள் இதுவாக இருக்காது, அதற்குமேல் ஏதோ பொருள் இருக்கவேண்டும் என புரிந்து கொண்டான். எனவே முனிவரிடம் திரும்பச் சென்று, சுவாமி, இந்த உடலைத்தான் ஆன்மா என்றீர்களா? ஆனால் எல்லா உடல்களும் அழிந்து போவதை நான் காண்கிறேனே! ஆன்மா மரணமற்றது அல்லவா? என்று கேட்டான். கண்டு பிடி, நீயே அது என்று மீண்டும் முனிவர் கூறினார்.

இப்போது அந்த தேவன் பிராணனே ஆன்மா என்று புரிந்து கொண்டான். ஆனால், தான் சாப்பிட்டால் பிராண சக்தி வலிமையுடன் இருப்பதையும், சாப்பிடாவிட்டால் அது பலவீனமடைவதையும் சில நாட்களில் கண்டு கொண்டான்.

எனவே திரும்பவும் முனிவரிடம் சென்று, சுவாமி, பிராணனையா ஆன்மா என்று சொன்னீர்கள்? என்று வினவ, அவர் திரும்பவும், நீயே அது, கண்டுபிடிஎன்றார். இப்போது தேவன் யோசிக்கலானான். ஆன்மா என்பது ஒருவேளை மனமாக இருக்கலாமோ? ஆனால் மனதின் எண்ணங்களும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே.

எனவே மாறுகின்ற மனம் ஆன்மாவாக இருக்க முடியாது என்று கருதிய அவன் திரும்பவும் முனிவரிடம் சென்று, சுவாமி, மனம் ஆன்மாவாக இருக்க முடியாது என நினைக்கிறேன். நீங்கள் அதையா சொன்னீர்கள்? என்று கேட்டான். அவரோ மறுபடியும், நீயே கண்டுபிடி என்று கூறிவிட்டார். தேவன் வீடு திரும்பினான். இறுதியில் தீவிர ஆராய்ந்து, தான் உடலல்ல, மனதல்ல, பிராணனல்ல, அவைகளுக்கு அப்பாற்பட்ட ஆன்மா.

அது பிறப்பு, இறப்பு இல்லாதது; அதனை ஆயுதங்கள் வெட்ட முடியாது, தீ எரிக்க முடியாது, தண்ணீர் நனைக்க முடியாது, காற்று உலர்த்த முடியாது. அது ஆதி அந்தம் இல்லாதது; அசைக்கமுடியாதது, தொடுதற்கரியது, எல்லாம் அறிந்தது, எல்லாம் வல்லது; என்பதையெல்லாம் தெரிந்து கொண்டான். உடலை நேசித்ததால், பாவம் அசுரன், உண்மையை அறியவில்லை.

இந்த உபநிடதக் கதையை மேற்கோள் காட்டி, சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: நமது குறிக்கோள் ஆன்ம முக்தியே. அதற்குக் குறைந்த எதுவுமல்ல. நாம் இயற்கையின் எஜமானர்களாக இருக்க வேண்டும்; அடிமைகளாக அல்ல. உடலோ, மனமோ நம்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது.

உடம்புதான் என்னுடையதே தவிர, நான் உடலுக்குரியவன் அல்ல என்பதை மறக்கக்கூடாது. மனிதனே மிகச் சிறந்த உயிர். மனிதன் மட்டுமே ஆன்மநிலையை எய்தமுடியும், தேவர்களாலும் முடியாது. மனித வாழ்க்கையின் லட்சியம்தான் எவ்வளவு உயர்ந்தது என்பது புரிகிறதல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top