Home » விவேகானந்தர் » எது மாயை?
எது மாயை?

எது மாயை?

புராணக் கதை ஒன்று இருக்கிறது. ஒருமுறை நாரதர், ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து, பகவானே, மாயையை எனக்குக் காட்டுங்கள் என்றார். சில நாட்களுக்குப் பின்னர், கிருஷ்ணர் நாரதரைத் தன்னோடு ஒரு பாலைவனத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வெகு தூரம் பயணித்ததால் தாகம் ஏற்படவே, அவர் நாரதரை எங்கிருந்தாவது சிறிது தண்ணீர் கொண்டு வர சொன்னார்.

நாரதர் ஒரு வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார். அழகான இளமங்கை ஒருத்தி கதவைத் திறந்தாள். அவளது அழகில் மயங்கிய அவர் தண்ணீரை மறந்தார், பகவானை மறந்தார். அனைத்தையும் மறந்து அந்தப் பெண்ணுடனேயே தங்கிவிட்டார். காலப்போக்கில் அவர்களுக்குத் திருமணம் ஆகி குழந்தைகளும் பிறந்தன. மனைவி, மக்கள், நிலபுலங்கள், ஆடு, மாடு இவற்றோடு அவர் ஆனந்தமாக வாழ்ந்து வந்தார். இப்படிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன.

ஒரு நாள் திடீரென பெரிய வெள்ளம் வந்தது. அது கிராமத்துள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கியது. மனிதர்களும், விலங்குகளும் அதில் அடித்துச் செல்லப்பட்டனர். நாரதரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். மனைவியை ஒரு கையிலும், இரண்டு குழந்தைகளை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு, தோளில் ஒரு குழந்தையை சுமந்து கொண்டு, அந்த பயங்கர வெள்ளத்தைக் கடக்க முயன்றார்.

வெள்ளத்தின் வேகத்தில் தோளிலிருந்த குழந்தை அடித்துச் செல்லப்பட்டது. நாரதர் துயரத்தால் கதறினார். அந்தக் குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில், கையில் பிடித்திருந்த குழந்தைகளிலும் ஒன்று வெள்ளத்தில் சென்றுவிட்டது. கடைசியில், அவர் கெட்டியாகப் பிடித்திருந்த அவருடைய மனைவியையும் வெள்ளம் அடித்துச் சென்றது. அவர் மட்டும் கரை ஒதுங்கினார். தனது துர்பாக்கியத்தை நினைத்துக் கதறலானார் அவர்.

அப்போது, திடீரென, நாரதரே, தண்ணீர் எங்கே? உனக்காக அரைமணி நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். என்ற குரல் கேட்டது. அரைமணி நேரமா? என்று நாரதர் அதிர்ச்சியோடு கேட்டார். பன்னிரண்டு நீண்ட ஆண்டுகள் அவர் மனத்தில் ஓடி மறைந்துவிட்டன. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அரைமணி நேரத்தில் முடிந்துவிட்டன.

இக்கதையைக் கூறி சுவாமி விவேகானந்தர் மாயை என்றால் என்ன என்பதை விளக்குகிறார்: நாம் எல்லோரும் ஏதாவது ஒருவிதத்தில் இந்த மாயையில் சிக்கியிருக்கிறோம். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் சிரமமான, கஷ்டமான விஷயம்…அது எதையும் விட்டுவைப்பதில்லை.

இந்த அலையைத் தடுக்கவோ, கணநேரம் பிடித்து வைக்கவோ யாராலும் முடியாது. அப்படியானால் இதிலிருந்து வெளியேற வழியே இல்லையா? விடிவே கிடையாதா என்றால் உண்டு என்கிறது சமயம். இந்த மாயையின் பிடியிலிருந்து முக்திக்கு வழி காட்டுவதே சமயங்களின் பணி..

சுதந்திரம் உங்கள் சொந்த இயல்பு. மாயை உங்களை ஒருபோதும் கட்டவே இல்லை. இயற்கை உங்களை ஆள முடியாது. இயற்கை உங்கள் கழுத்தை நெரிப்பதாகக் கனவு கண்டு நீங்கள் ஒரு குழந்தையைப் போல் பயந்தீர்கள்.

உங்கள் குறிக்கோள் இந்த பயத்திலிருந்து விடுபடுவதுதான். இந்தக் குறிக்கோளை அறிவுபூர்வமாக மட்டுமல்லாது அனுபவபூர்வமாகவும் பெறவேண்டும். அப்போதுதான் நாம் சுதந்திரர் என்பதை உணர்வோம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top