Home » விவேகானந்தர் » கடமையே கடவுள்!!!
கடமையே கடவுள்!!!

கடமையே கடவுள்!!!

ஒரு துறவி நெடுங்காலம் காட்டில் ஒரு மரத்தடியில் தவமியற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தார். மேலே மரக்கிளையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த காகமும், கொக்கும் அவரது உக்கிரப் பார்வையினால் எரிந்து சாம்பலாகின. தனது தவ ஆற்றலைக் கண்டு துறவிக்கு மிக்க மகிழ்ச்சி.

சிறிது நேரத்திற்குப் பின்னர் அவர் அருகிலுள்ள கிராமத்தில் ஒரு வீட்டின் முன் பிச்சை கேட்டு நின்றார். கொஞ்சம் பொறு என வீட்டினுள் இருந்து ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. அப்போது அத்துறவி, ஓ, என்னைக் காக்க வைக்கும் இப்பெண்மணிக்கு எனது தவ வலிமை தெரியவில்லை என எண்ணினார். இப்படி அவர் நினைத்ததுதான் தாமதம், வீட்டின் உள்ளிருந்து, ஓ மகனே, இங்கிருப்பது காக்கையுமல்ல, கொக்குமல்ல என்ற குரல் வெளிப்பட்டது.

துறவி அதிர்ந்து போனார். கடைசியில் அப்பெண்மணி வெளியில் வந்தபோது, துறவி அவளது கால்களில் வீழ்ந்து, எப்படி அவர் தனது எண்ணங்களை அறிந்தார் எனக் கேட்டார். அதற்கு அவள், மகனே, எனக்கு உன்னைப் போல் யோகமோ, தவமோ எதுவும் தெரியாது. எனது நோயுற்ற கணவருக்குத் தவறாது எனது பணிவிடைகளை மனப்பூர்வமாகச் செய்து கொண்டிருக்கிறேன்.

திருமணத்திற்கு முன் என் பெற்றோர்களுக்கு என் கடமையைச் செய்தேன். கடமைகளைச் செய்து வந்ததாலேயே எனது ஞானக்கண் திறந்துவிட்டது. இதற்கு மேலும் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினால், அருகிலுள்ள நகரத்தில் வியாபாரம் செய்யும் ஒரு இறைச்சி வியாபாரியைக் கேட்டுத் தெரிந்து கொள் எனக் கூறினாள்.

துறவியும் அப்பெண்மணி குறிப்பிட்ட இறைச்சி வியாபாரியைத் தேடிக் கண்டுபிடித்தார். அடக் கடவுளே, அசுரன் போல் தோன்றும் இவனிடமிருந்தா நான் உயர்ந்த விஷயத்தைத் தெரிந்து கொள்வது என அவர் நினைத்தார். அதற்குள், துறவியைக் கண்ட அந்த இறைச்சி வியாபாரி, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? சிறிது பொறுங்கள், எனது வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான்.

இங்கே என்ன நடக்கப் போகிறதோ என நினைத்தவாறே அமர்ந்திருந்தார் துறவி. நெடுநேரம் கழிந்தது. வியாபாரியின் வேலை முடிந்ததும், அவன் துறவியை அழைத்துக் கொண்டு தனது இல்லத்திற்குச் சென்றான்.

அவர் அமர இருக்கை ஒன்றை அளித்து விட்டு, வீட்டிற்குள் சென்று அவனது வயது முதிர்ந்த பெற்றோர்களைக் குளிப்பாட்டி, உணவளித்து, அவர்கள் மனம் மகிழும்வண்ணம் அவர்களுக்கு எல்லா சேவைகளையும் செய்தான், பின்னர் துறவியிடம் வந்தான். துறவி அவனிடம் ஆன்மாவைக் குறித்தும், கடவுளைப் பற்றியும் கேள்விகள் கேட்டார்.

அந்த இறைச்சி வியாபாரி அதற்கு அளித்த விளக்கங்களே வியாதகீதை என மகாபாரதத்தில் உள்ளது. பின்னர் துறவி அந்த வியாபாரியிடம், ஏன் இந்த இழிதொழிலைச் செய்கிறாய்? எனக் கேட்டபோது, அவன் அவரை நோக்கி, கடமைகளுள் எதுவும் இழிந்ததோ, கேவலமானதோ இல்லை.

என்னுடைய பிறப்பு என்னை இந்தச் சூழலில் வைத்துள்ளது. நான் பற்றின்றி எனது தொழிலைச் செய்து எனது பெற்றோர்களுக்குத் தொண்டு செய்கிறேன். எனக்கு தவமோ, யோகமோ தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் எனது கடமைகளைப் பற்றின்றி செய்தல் ஆகும் என்றான்.

இக்கதையைத் தொடர்ந்து, சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைப் பற்றின்றி செய்தலாகும். அப்படிச் செய்வதன்மூலம் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்நிலையை அடைந்துவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top