Home » சிறுகதைகள் » புத்திசாலித்தனம்!!!
புத்திசாலித்தனம்!!!

புத்திசாலித்தனம்!!!

விக்கிரமாதித்தன் கதை

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!

மஹாசேனன் என்ற அரசன் உஜ்ஜயனியை ஆண்டு வந்தான். அவனுடைய தேசத்தில் தேவசர்மா என்ற ப்ராமணன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு குணாகரன் என்ற ஒரு மகன். அவன் தன்னுடைய பொழுதை சூதாட்டத்தில் உற்சாகமாக கழித்தான். தனக்கு கிடைத்த பொருளனைத்தையும் சூதாட்டத்தில் இhந்து வந்தான். அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்து அவனை குடும்பத்தை விட்டு அகற்றி துரத்திவிட்டனர்.

அவன் அந்த தேசத்தைவிட்டு வெளியேறி தொலைதூரத்தில் சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு வெறிச்சோடிக்கிடந்த ஒரு கோவிலில் ஒரு யோகியைக் கண்டான். மாலைப்பொழுது அவர் த்யானத்தில் ஆழ்ந்திருந்தார். அவருடைய பார்வைக்காக குணாகரன் வெகு நேரம் காத்திருந்தான். நிஷ்டையிலிருந்து கலைந்து யோகி தன் எதிரே பயபக்தியுடன் நின்று கொண்டிருந்த குணாகரனைக் கண்டார். அவனைப் பார்த்துக் கேட்டார், “நீ யார்? குணாகரன், “நான் ப்ராமணன்.

வேறு தேசத்திலிருந்து வந்திருக்கிறேன்.” யோகி “நீ சாப்பிட்டு விட்டாயா? என்று கேட்டார். அவன் “எனக்கு பசியாக இருக்கிறது” என்று பதிலளித்தான் யோகி “அதோ அந்த மண்டை ஓட்டில் சமைத்த உணவு இருக்கிறது. அதை நீ சாப்பிடலாம்” என்றார். குணாகரன், “மண்டை ஓட்டில் இருப்பதை நான் சீண்டமாட்டேன்” என்று கூறினான்.

யோகி சிந்தனையிலாழ்ந்து விட்டு பிறகு சில மந்த்ரங்களை உச்சரித்து ஒரு யக்ஷணியை வரவழைத்தார். அழகான தேவதை வடிவத்தில் ஒரு யக்ஷணி அங்கு தோன்றினாள். அவள் யோகியைப் பார்த்து, “மஹானே! நான் உங்கள் அடிமை! உங்களுடைய கட்டளைக்காகக் காத்திருக்கிறேன்” என்றாள். யோகி “இந்த ப்ராமணனுக்கு தேவையான ஆஹாரத்தைக் கொடுப்பாய்” என்று கட்டளையிட்டார். அவள் சம்மதித்து குணாகரனை அழைத்துச் சென்றாள்.

தன்னுடைய மந்த்ர பலத்தால் அவள் ஒரு மாளிகையை நிர்மாணித்தாள். குணாகரனை அதனுள் அழைத்துச் சென்று அவனுக்கு ஒரு சிறப்பான விருந்தை அளித்தாள். விருந்திற்கு பிறகு நல்ல தாம்பூலம் உட்கொண்டான். யக்ஷணி அவனுக்கு சிறந்த பட்டாடை, ஆபரணங்களை அளித்து அவன் அவைகளை தரித்துக் கொண்டான். அவன் மீது நல்ல வாசனை திரவியங்கள், நறுமணமிக்க சந்தனம் பூசிவித்தாள். அவள் இனிய குரலில், பாடி நடனமாடி அவனை மகிழ்வித்தாள். அவளுடன் அவனுக்கு அன்றிரவு இன்பமாகக் கழிந்தது.

பொழுது விடிந்தது யக்ஷணி மறைந்து விட்டாள். மாளிகையையும் காணவில்லை. குணாகரன் தனித்திருந்தான்.சோகம் மேலிட்டவனாய் அவன் யோகியை அணுகினான். அவர், “ப்ராமணா! ஏன் இடிந்து போய் இருக்கிறாய்? என்று கேட்டார். குணாகரன், “பெரியவரே! அந்த யக்ஷணி இல்லாமல் நான் உயிர் வாழ முடியாது” என்றான். யோகி, “அவள் மானிடப் பிறவி அல்ல. ப்ரபஞ்சத்தில் உலவி வரும் யக்ஷர்களை சேர்ந்தவள்.

யாகம் யக்ஞம் அல்லது யோக சாதனை மூலம் தான் அவளை வரவழைக்க முடியும்” என்றார். குணாகரன், “அப்படியானால் தாங்கள் எனக்கு அந்த வழிமுறையை கற்பியுங்கள். நான் சிரத்தையுடன் கற்றுக் கொள்கிறேன்” என்றான்.

யோகி “ப்ராமணா நான் உனக்கு ஒரு மந்த்ரத்தை உபதேசிக்கிறேன். நீ அதை கவனமாக மனதில் வாங்கிக் கொண்டு ஜலத்தின் மத்தியில் நின்று கொண்டு பகல் இரவு வித்யாஸம் பார்க்காமல் ஜபித்துக் கொண்டிரு. வேறு எதிலும் கவனம் செலுத்தாது இதில் ஒன்றிலேயே கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

குணாகரன் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்தான். பிறகு அவன் யோகி சொன்னவாறு குளத்திலிறங்கி த்யானத்தில் ஆழ்ந்தான். நீண்ட நேரம் கடந்தும் யக்ஷணி தோன்றவில்லை. அவனுக்கு சில்லறை காட்சிகளாக சில உருவங்கள் மட்டும் காட்சியளித்தன.

அவன் ஏமாற்றம் மிகுந்து யோகியிடம் சென்றான். அவரிடம் தனக்கு நேர்ந்த தோல்வியைப் பற்றி கூறினான். அவர், “இப்போது நீ அக்னியில் ப்ரவேஸிக்க வேண்டும்” என்றார். அவன் மிரண்டுவிட்டான். ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “நான் என் குடும்பத்தினர்களையும், உறவினர்களையும் பார்த்துவிட்டு வருகிறேன். பிறகு தாங்கள் சொன்னபடி செய்கிறேன்” என்றான்.

பிறகு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு அவன் தன் வாழ்ந்திருந்த தேசம் நோக்கிச் சென்றான். ஒருவாறு அவன் தன் குடும்பத்தை அடைந்ததும், அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியடைந்து அவனைக் கட்டித் தழுவினர். சிலர் மகிழ்ச்சியால் அழுதனர். அவனுடைய தந்தை, “குடும்பத்துடன் வாழ வேண்டிய நீ எவ்வாறு மனைவி மக்களை திரும்பிப் பார்க்காமல் இருந்து விட்டாய்? இது பெரிய குற்றமல்லவா? என்றார்.

அதற்கு அவன், “தாய் தந்தை மனைவி, மக்கள் எல்லாம் தாற்காலிக உறவு. கார்யங்களை உத்தேசித்து நடைபெறும் யக்ஞங்களிலும் எனக்கு ஆர்வமில்லை. நான் வணங்கும் தெய்வத்தை என் மனதில் தவிர வேறு எங்கும் காண முடியவில்லை. என்னுடைய த்யானத்தில் தான் அந்த “ஜோதி”யை காணமுடிகிறது. நான் மீண்டும் அந்த வனத்திற்கே செல்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

குணாகரன் யோகியை அடைந்து தான் அக்னிப்ரவேஸம் செய்ய போவதாக கூறினான். அதன்படி அவன் அக்னியில் ப்ரவேஸித்தான். அவன் எதிர்பார்த்த மந்த்ரசித்தி கிடைக்கவில்லை. அவனுடைய ஏமாற்றத்தைக் கண்ட யோகி தானும் முயற்சித்துப் பார்ப்பதாகக் கூறி தன்னுடைய மந்த்ர பாகத்தைச் சொல்லி பார்த்தார். அவருடைய முயற்சி தோல்வி கண்டது.

இந்தக் கட்டத்தில் கதை கூறுவதை நிறுத்திவிட்டு வேதாளம், “அரசே! குணாகரனுக்கு த்யானத்தில் முழுகவனமில்லை. யக்ஷணி அவன் முன் தோன்றவில்லை. அதற்கு வேதாளம், “குரு கட்டளையிட்டதன் பேரில் அவன் அக்னியில் ப்ரவேஸித்தானே! அதற்காகயாவது அவள் தோன்றியிருக்க வேண்டுமே! என்றது.

அதற்கு அரசன், “த்யானத்தில் ஈடுபட குரு கட்டளையிட்டும் அவன் நடுவில் குடும்பத்தினரை சென்று பார்த்து வந்தது முழுமையான த்யானம் நடைபெறாமல் போய்விட்டது முக்கிய காரணம். வேதாளம், அப்படியானால் யோகி தான் முயன்றும் அவருக்கு யக்ஷணி தோன்றாமல் போனது ஏன்? என்று கேட்டது.

அதற்கு அரசன், “மந்த்ரத்தின் பலம் ரஹஸ்யமாக இருக்க வேண்டும். முழு கவனம் செலுத்த தகுதி இல்லாத ஒரு மாணாக்கனுக்கு அந்த யோகி மந்த்ர ரஹஸ்யத்தை வெளியிட்டதால் அந்த யக்ஷணி யோகி மேல் கோபம் கொண்டதால் அவருடைய முயற்சி பலிதமில்லாமல் போய்விட்டது. ஒருவனுடைய புத்திசாலித்தனம் அவனுடைய செயலில் வெளிப்படும்” என்றான்.

ஆக யோகியும், குணாகரனும் தங்கள் செயல்பாடுகளில் வெளிப்படுத்திய பலவீனம் அவர்களுக்கு தோல்வியை தந்தது என்பதை விக்ரமாதித்யன் சூக்ஷ்மமாக வெளிப்படுத்தினான். அவனுடைய மௌனம் கலையவே வேதாளம் மீண்டும் அங்கிருந்த முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top