மலிவான பொருள்!!!

மலிவான பொருள்!!!

ஓரு தடவை துருக்கி மன்னர் – காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அவருடைய பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்றும் சென்றது.

சமையல்கார குழுவின் தலைவன் காட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளில் முனைந்தபோது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது.

சமையற்காரத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான்.

” என்ன சமாச்சாரமஞ் என்று மன்னர் விசாரித்தார்.

சமையல் குழுத்தலைவன் நடுங்கிக்கொண்டே தான் உப்பு எடுத்து வர மறந்துவிட்ட செய்தியைச்
சொன்னான்.

மன்னர் சமையல் குழுத் தலைவனைக் கடுமையாகக் கண்டித்தார். பிறகு தனது வீரர்களில் ஒருவனை அழைத்து நீ குதிரை மீதேறி அண்மையிலிருக்கும் கிராமத்திற்குச் சென்று யார் வீட்டிலாவது கொஞ்சம் உப்பு வாங்கிவா என உத்திரவிட்டார்.

அப்போது முல்லா முன்னால் வந்து மன்னரை வணங்கினார்.

” என்ன முல்லா ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்று கேட்டார் மன்னர்.

ஆமாம் மன்னவா படை வீரனிடம் கொஞ்சம் காசு கொடுத்து அனுப்புங்கள், குடிமக்களிடம் உப்பு இனாமாகக் கேட்க வேண்டாம் என்றார் முல்லா.

ஏன் குடிமக்கள் ஒரு கை உப்பை இலவசமாகக் கொடுக்க கூட முடியாத நிலையில் இருக்கிறார்களா என மன்னர் ஆச்சரியந்தோன்றக் கேட்டார்.

மன்னர்பெருமானே நான் சொன்னதன் உட் பொருளைத் தாங்கள் விருப்பம் அறிந்தால் மக்கள் ஒரு மூட்டை உப்புகூட இனாமாகக் கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு உங்கள்மீது இருந்த மரியாதை போய்விடும் என்றார் முல்லா.

” ஏன்?” என்று கேட்டார் மன்னர்.

ஏன்ன காரணத்தினால் நாம் உப்பு கேட்கிறோம் என்று மக்களுக்குத் தெரியாது. உப்பு மிகவும் மலிவான பொருள். பரம ஏழை வீட்டிலும் உப்புக்குப் பஞ்சமிருக்காது. மன்னரிடம் உப்பு இல்லாமல் இல்லை. உப்பு கேட்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவர் நிலை கேவலமாகிவிட்டது என்று தான் மக்கள் உங்களைப்பற்றி நினைப்பார்கள். பின்னர் அவர்கள் உங்களை எவ்வாறு மதிப்பார்கள்? அதனால் நமக்குத் தேவையான உப்பின் விலை மதிப்புக்கு அதிகம் பொருளை உப்பு தருபவருக்கு கொடுத்துவிட்டு உப்பை வாங்கிவரச் சொல்லுங்கள் என்றார் முல்லா.

அவர் சொன்ன தத்துவம் சரிதான் என்று துருக்கி மன்னருக்குத் தோன்றியது. ஆகவே பணம் கொடுத்தே உப்பை வாங்கிவருமாறு படை வீரனுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top