Home » சிறுகதைகள் » பித்தம் தெளிய மருந்து
பித்தம் தெளிய மருந்து

பித்தம் தெளிய மருந்து

பைத்தியங்களுக்கென்றே தனியாக ஒரு வைத்தியசாலை வைத்து நடத்தும் டாக்டர் குருநாதனைப் பற்றிப் பொதுமக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. பைத்தியங்களுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவரை நன்றாகத் தெரியும். டாக்டருக்கு ஐம்பது வயதுக்குமேல் ஆகிவிட்டது. என்றாலும் அவரிடம் இளமை, உற்சாகம், உழைப்புத்திறன், நேர்மை இவ்வளவும் இருந்தன. மேல்நாட்டு வைத்தியம், சித்தம், ஆயுர்வேதம், யுனானி, மனோதத்துவம் இப்படிப் பலதுறைகளிலும் உள்ளவர்கள் எப்படிப் பைத்தியங்களுக்குச் சிகிச்சை செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, நோயாளிகளுக்கு ஏற்ற முறையில் வைத்தியம் செய்து, வெற்றிமேல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் அவர்.

வெற்றி பெருகப் பெருக அவருடைய ஆஸ்பத்திரியில் கூட்டமும் பெருகியது. எங்கிருந்தெல்லாமோ விதம் விதமான பைத்தியங்களை அவரிடம் கொண்டுவந்து சேர்த்தார்கள். பணமும் புகழும் பெருகின. பணத்தால் தமது மருத்துவ மனையின் வசதிகளைப் பெருக்கிக் கொண்டார். புகழைப்புறக்கணித்து ஒதுக்கித் தள்ளினார்.

ஆயிரக்கணக்கான மனிதர்களுக்குச் சுயசிந்தனையைத் திருப்பிக் கொடுத்த அவர் புகழ் ஆசையையும் ஓர் அப்பட்டமான பைத்தியக்காரத்தனம் என்றே கருதினார். பணக்காரப் பைத்தியங்களைச் சேர்ந்த பலர் அவருக்கு விருந்துகள் நடத்தி, மாலைகள் போட்டு, பாராட்டுப் பத்திரங்களும் பரிசுகளும் கொடுப்பதற்குத் துடியாய்த் துடித்தார்கள்.

” இந்தப் பைத்தியக்கார வேலைகளையெல்லாம் என்னிடமே வைத்துக் கொள்ளாதீர்கள்! பணம் அதிகமாக இருந்தால் என்னுடைய ஆஸ்பத்திரிக்கு இன்னொரு அறை கட்டிக்கொடுத்துவிட்டுப் போய்ச் சேருஙகள்” என்று பதிலளிப்பார் அவர்.

பணம்,பெண்,புகழ்-இவைகளால் விளையும் பேராசைகளாலும் நிராசைகளாலுமே அதிகப்படியான பைத்தியங்கள் அங்கு கூடுகின்றன என்பதை அவர் அநுபவத்தால் கண்டவர்.

டாக்டரின் முக்கியமான நண்பர்களில் ஒருவர், உளநூல் பேராசிரியர் மாணிக்கம். உளநூல்களைப் படித்துவிட்டு வகுப்பில் பாடம் நடத்துவதோடு பேராசிரியர் தம்முடைய பணியை நிறுத்திக்கொள்ளவில்லை. மக்களின் உள்ளப் பண்புகளை அவர்களிடம் நெருங்கிப் பழகி ஆராய்ந்தார். டாக்டர் குருநாதன் போன்றவர்களிடம் விவாதித்தார். அவரே புதியதோர் நூல் எழுதுவதற்காகச் செய்திகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்.

குருநாதனின் பைத்திய ஆஸ்பத்திரி அவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்பட்டது. இரண்டு நண்பர்களுமே ஒருவரின் கூட்டுறவால் ஒருவர் பயன்பெற்று வந்தனர்.

அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. காலை நேரத்தில் வழக்கம் போல் வைத்தியசாலையின் தோட்டம் மலர்களோடும் இலைகளோடும் அழகாக விளங்கியது. தோட்டத்துக்குள் இருந்த மருத்துவமனைக் கட்டிடங்களைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொணடிருந்தார்கள் பணியாட்கள்.

அபாயகரமான பைத்தியங்களை மட்டிலுமே அறைகளுக்குள் அடைத்து வைத்திருந்தார் டாக்டர். மற்றவர்களுக்கு அங்கே தோட்டத்திற்குள் உலவுவதற்கோ, சேஷ்டைகள் செய்வதற்கோ, சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கோ எல்லா உரிமைகளும் உண்டு. செடி கொடிகளைப் பிடுங்கித் தலைகீழாக சிலர் நட்டு வைத்ததிலிருந்து, அத்தகையவர் களைக் கண்காணிப்பதற்காகமட்டிலும் அங்கங்கே சில காவற்காரர்கள் இருந்தார்கள்.

பேராசிரியர் மாணிக்கம் மருத்துவ மனைக்குள் நுழைந்தபோது, காண்பதற்கரிய பல அபூர்வக் காட்சிகள் அவருக்கு வழியிலேயே காத்திருந்தன. ஒருவர் தலைகீழாக நின்று சிரசாசனம் பழகிக்கொண்டிருந்தார். இன்னொருவர் விளக்குக் கம்பத்தைப் பார்த்து அதனிடம் சினிமா வசனமும் சிங்காரப் பாட்டும் பாடிக்கொண்டிருந்தார்.

அடுத்தாற்போல் தென்பட்ட காட்சி ஒன்று பேராசிரியரை அதே இடத்தில் நிற்கச் செய்துவிட்டது. சிறியதோர் மரக் கிளையில் நாற்பது வயதுக்கு மேலான ஓர் பணக்காரப் பைத்தியம் தனது மிடுக்குப் பார்வையுடன் உட்கார்ந்திருந்தது. சில்க் சட்டை, ஜரிகை அங்கவஸ்திரம், தங்கச்சங்கிலி, விரல்களில் மோதிரங்கள் அவ்வளவும் அப்படியே அதனிடம் இருந்தன.அது மரத்தின் மேல் மட்டும் ஏறி உட்கார்ந்திரா விட்டால் அதைப் பைத்தியம் என்றே சொல்ல முடியாது.

மரக் கிளைக்கு அடியில் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன, இன்னும் சில பைத்தியங்கள். கிளையிலிருந்து குச்சி ஒன்றை ஒடித்து, அதனால் அடிமரத்தைத் தட்டிச் சத்தமுண்டாக்கி, கூட்டத்தின் கவனத்தைத் தன் பக்கம் அது திருப்பப் பார்த்தது.

“டப,டப,டப்…!பட,பட,பட்…! இதனால் சகலவிதமான ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்… தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்…”

பேராசிரியரை அது உற்றுப் பார்த்துவிட்டு, “ஸார், நீங்களும் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று அழைத்தது. பேராசிரியருக்கு அந்தக் காட்சியைக் காண மிகவும் பரிதாபமாக இருந்தது.. என்றாலும் ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டவராதலால் அவரும் அருகில் நெருங்கிச் சென்றார்.

“மஹா ஜனங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்,…….அந்த இன்ஸ்பெக்டர் எத்திராஜ் சொல்வது போல் நான் ஒரு ‘பிராட்’ பேர்வழி இல்லை! ….நான் மகா…மகா….யோக்கியன்.நான் எப்படி மகா யோக்கியனாய் ஆனேன் தெரியுமா?……..ஐந்தாவது வயதில் அரிச்சந்திர புராணம் படித்தேன். அப்போதே சத்தியம் தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டேன்!”

கூட்டம் கை தட்டியது. பைத்தியம் ஜரிகை விசிறி மடிப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டு மேலே உளறியது:-

“ஆறாவது வயதில் ராமாயணம் படித்து ராமன் ஆனேன். எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை என்று சத்தியம் செய்தேன்!… அப்புறம் ஏழாவது வயதில் கொடைவள்ளல் குமணன்! பத்தாவது வயதிற்குள் பத்தாயிரம் புத்தகம் படித்துப் பகவத் கீதையையும் கரைத்துக் குடித்தேன்!”

குபீர் என்று கூட்டத்தில் சிரிப்பொலி கேட்டது. உருட்டி விழித்துப் பார்த்தது உயரத்தில் உட்கார்ந்திருந்தது.

“சொல்லுங்க! சொல்லுங்க! அஞ்சாவது வயசிலே அரிச்சந்திர அவதாரம், ஆறாவதிலே ராமாவதாரம், இப்போ அனுமார் அவதாரம்..” “குறுக்கே பேசாதே!” என்று அதட்டிவிட்டு, தன்னுடைய பிறப்பு வளர்ப்பின் பிரதாபங்களை மேலும் மேலும் அள்ளிவிட்டுக் கொண்டிருந்தது அது.

“பகவத் கீதையில் உள்ள கர்ம காண்டத்தைப் படித்துவிட்டுத் தான் நான் கர்மயோகியானேன். நான் உழைத்துத் தொழில் செய்து, கடை வைத்துச் சம்பாதித்தேன்;…சத்தியமாய்ச் சொல்லுகிறேன்: என் பிள்ளை குட்டிகளின்மேல் ஆணையாகச் சொல்லுகிறேன்! தொழிலில் ஒரு திருட்டுப் புரட்டுக் கிடையாது! தில்லுமுல்லுக் கிடையாது! நான் ‘பிராட்’ பேர்வழியில்லை; உத்தமன்; சத்தியவந்தன்;… மகா…மகா…மகா யோக்கியன்!”

“அரிச்சந்திர மகாராஜா! வாங்க, உங்களை டாக்டர் கூப்பிடுகிறார்” என்று சொல்லி, ஒரு ஆள் வந்து மரத்திலிருந்து அதை இறக்கிவிட்டுக் கூட்டிக்கொண்டு போனான்.

பேராசிரியர் யோசனையுடன் மெதுவாக நடந்தார். “இந்த மனிதனுக்கு எதனால் இப்படிச் சித்தப் பிரமை ஏற்பட்டிருக்கிறது?” என்ற கேள்வி அவர் உள்ளத்தில் எழுந்தது.

அவருடைய பேச்சுக்களின் சாரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தபோது, ஒரே ஒரு விஷயத்தைத் தான் அவர் பல வார்த்தைகளில், திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது. அவர் ஒரு மகா, மகா….மகா யோக்கியர்!

யோக்கியராக இருந்தவருக்கு அப்படி என்ன தொல்லை வந்துவிட்டது? யோக்கியர்களாக இருப்பவர்கள் யாரும் தங்கள் யோக்கியத் தன்மையைத் தம் பட்டம் அடித்துக் கொள்வதில்லையே! இவர் மட்டும் ஏன்?”

பேராசிரியர் மாணிக்கம் சிந்தனையுடன் நடந்தார்.

சிகிச்சை அறையில் டாக்டர் குருநாதன் அந்த நோயாளிக்கு ஊசி போட்டுவிட்டு வெளியில் வந்தார். மயக்கம் தெளிந்தவுடன் சில மருந்துகளை அவருக்குக் கொடுக்கும்படி நர்ஸிடம் கூறினார். பிறகு அவரது அவசர அலுவல்கள் முடிந்த பின்பு, இருவரும் தனி அறையில் உட்கார்ந்து பேசத் தொடங்கினார்கள்.

டாக்டர் அறை அழகோடும் குளுமையாகவும் இருந்தது. மெல்லிய திரைத் துணிகளும், குலுங்கிச் சிரிக்கும் பூந் தொட்டிகளும், மிருதுவான சோபாக்களும், அந்த அறையின் அழகில் ஓர் தனித் தன்மையைச் சுட்டிக் காட்டின. சன்னல்கள் வழியே தோட்டத்துக் காற்று வீசிக் கொண்டிருந்தது.

“இந்த நோயாளியின் பேச்சுக்களை நானும் கேட்டுக் கொண்டிருந்து விட்டுத்தான் வருகிறேன்” என்று ஆரம்பித்தார் பேராசிரியர்.

“ஓ! இந்த அரிச்சந்திரனைப் பற்றிச் சொல்கிறீர்களா? இவர் பெயர் ராமச்சந்திரன்! சொத்து சுகம் ஒன்றிலும் குறைவில்லை.எல்லா வசதிகளும் எப்படியோ கிடைத்து விட்டன. மனிதர் உணர்ச்சி வசப்படாமல், உள்ளதை இனி மேலாவது நல்லபடியாக வளர்த்துக்கொண்டு வாழலாம். ஆனால்,பாவம் போலிப் பெருமை! பொய்க் கௌரவம்!”

“சத்தியவந்தன் என்று கூறிக்கொண்டாரே!”

டாக்டர் மெல்லச் சிரித்துவிட்டு,”கோளாறு இப்போது அந்த இடத்தில் தான் இருக்கிறது! சத்தியம் எங்கே இருக்கிறது? சத்தியம் எங்கே இருக்கிறது என்பதை அவருக்கே நாம் சுட்டிக்காட்ட முடியுமானால், பிறகு அவரது சித்தப் பிரமை தன்னால் நீங்கிவிடும்” என்றார்.

” நோயாளியின் வாழ்க்கையையும், அதன் சிக்கல்களையும் தெரிந்து கொள்ளாமல்தான் நான் வைத்தியத்தில் இறங்குவதில்லையே! வக்கீலிடமும் டாக்டரிடமும் உண்மையைச் சொல்லாதவர்கள் அவர்களுக்கே நன்மை செய்து கொள்வதில்லை. இந்த மனிதருடைய அந்தரங்கக் காரியதரிசியிடமிருந்து விவரங்களைத் தெரிந்துகொண்டேன்.”

ஆராய்ச்சி மனத்தின் ஆவலுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார் பேராசிரியர். டாக்டர் பேசினார்.

‘அண்டர் வோல்ட்’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அந்தக்’கீழ் உலக’த்துடன் தொடர்புள்ள மனிதர் இவர்.

” கீழ் உலகமா?”

” ஆமாம், சாதாரணமாக மனிதர்களின் கண்ணொளி படாத ரகசிய உலகம் ஒன்று இருக்கிறதே, உங்களுக்குத் தெரியாதா? கௌரவக் குறைவான காரியங்களைச் செய்கிறவர்கள் பகிரங்கமாகவா செய்வார்கள்? ரகசியத்தில் தீமைகளைச் செய்துகொண்டு, பகிரங்கமாய்ப் பகழ் வேட்டையாடுகிறவர்கள் எங்கும்தான் இருக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர்!”

“என்ன!” – அரிச்சந்திரன், ராமன், குமணன், தரும புத்திரன் எல்லோரும் பேராசிரியரின் நினைவுக்கு வந்தார்கள்.

“திருட்டுப் பொருள்களை உருமாற்றி மலிந்த விலையில் விற்கும் சிலர் இருக்கிறார்கள். பெரிய பெரிய நவரத்தினங்கள் கூட இவர்களிடம் கிடைப்பதுண்டு! – உலகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு போலீஸ் காவல் வைக்க முடியுமா? ஆனால் கடவுள் என்னவோ அந்தப் போலீஸ் காவலை ஒவ்வொருவரிடத்திலும் வைத்துத்தான் இருக்கிறார்.”

“இவருக்கு வந்து…” என்று டாக்டரிடம் கதையைக் கேட்டார் பேராசிரியர். “ஒரு முறை இவர் போலீசில் வசமாக அகப்பட்டுக் கொண்டார். சட்ட திட்டம் சாமர்த்தியங்கள் பலிக்கவில்லை. எல்லா விஷயங்களும் முடிவடைந்துவிட்டன. ஆனால் இவரை மட்டிலும் அந்த வரட்டுப் பெருமை விடவில்லை. வருகிறவர்கள் போகிறவர்களிடமெல்லாம் தாம் அரிச்சந்திர னுக்கு வாரிசு, தர்மபுத்திரருக்குத் தமையன் என்று சொல் லிக்கொண்டிருந்தாராம். பலன் ? …பாவம்!”

“குணப்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?”

“மருந்தால் மட்டும் முடியுமென்று நான் சொல்லவில்லை; கடவுளும் கைகொடுக்க வேண்டும். கடவுள் கை கொடுக்கும் போது அந்த மனிதரும் கை நீட்டி அதைப் பற்றிக் கொள்ள வேண்டும்.”

பேராசிரியருக்குத் தெளிவாகப் புரியவில்லை. “மத்தி யானம் சாப்பிட்டுவிட்டு, நாம் இருவருமே அவரிடம் பேசிப் பார்ப்போம்” என்றார் டாக்டர்.

மதியச் சாப்பாடு டாக்டரின் வீட்டிலேயே முடிந்தது. சிறிது நேரம் இருவரும் இளைப்பாறினார்கள். பிறகு பேரா சிரியருடன் தம்முடைய அலுவல் அறைக்கு வந்து, அந்த நோயாளியையும் அழைத்து வரச் செய்தார் டாக்டர்.

அவர் வருவதற்கு முன்பே அவருடைய குரல் அறைக் குள் நுழைந்தது : –

“அநியாயம் ஸார்! அக்கிரமம் ஸார்!…அந்த இன்ஸ் பெக்டர் எத்திராஜை நம்பாதீர்கள் ஸார்! என்னுடைய கௌரவம் என்ன, பெருமை என்ன….என்னைப் போய்……”

“மிஸ்டர், ராமச்சந்திரன், இப்படி உட்காருங்கள்” என்றார் டாக்டர். “நீங்கள் இங்கே வந்து எவ்வளவு வரு டங்கள் ஆகின்றன தெரியுமா?”

ராமச்சந்திரன் விழித்தார். அங்கு வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை என்று அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. முற்பகலில் டாக்டர் வேறு ஊசி போட்டிருந்ததால், பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகத் தோன்றியது.

“ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன! அதற்குள் உலகத்தில் ஒரு பெரிய யுத்தம் வந்து, உலகமே தலைகீழாக மாறிப்போய் விட்டது. சாஸ்திரம், புராணம், சட்டதிட்டங்கள் எல் லாமே மாறிவிட்டன.”

“ஓ! அப்படியா…. இருக்கும், இருக்கும்!” என்றார் நோயாளி.

“அரிச்சந்திரன், ராமன், தர்மன் இவர்களுக்கெல்லாம், பிழைக்கத் தெரியாத அப்பாவிகள் என்று இப்போது பெயர். சத்தியத்தைக் காப்பாற்ற எவனாவது தன் மனைவியை அடிமையாக விற்பானா? அவனுடைய சரித்திரத்தைப் படிப் பவர்களுக்கு இப்போதெல்லாம் ஐந்து வருட ஜெயில் தண் டனை!”

“உண்மையாகவா?”

“எல்லாமே தலைகீழ் என்கிறேன். நம்ப மாட்டீர்கள் போலிருக்கிறதே!- முன்பெல்லாம் பஞ்சமா பாதகம் என்று சொல்வார்களே, அதை யெல்லாம் திறமையோடு செய்கிற வர்களுக்குத் தான் இப்போது நாட்டிலே நல்ல பெயர்!”

முதன் முறையாகப் புன்சிரிப்புச் சிரித்தார் நோயாளி.

“ஒவ்வொரு கெட்ட காரியத்தையும் செய்வதற்கு எவ் வளவு சாமர்த்தியம், உழைப்பு, கவனம் வேண்டியிருக்கிறது? உண்மையை எல்லோரும் சாதாரணமாய்ச் சொல்லி விடலாம். பொய் சொல்லுவதற்குத்தானே தகுதியும் திறமையும் வேண்டும்! ஒரு பொய்யை நிரூபிக்க ஒன்பது பொய் தேவைப் படுகிறதல்லவா? ஒன்பது பொய்களையும் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லித் தொலைக்கக் கூடாது. அதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன!”

“டாக்டர் ஸார்! என்னுடைய அருமை உங்கள் ஒரு வருக்குத் தான் தெரிகிறது” என்று மகிழ்ச்சியோடு கூறினார் ராமச்சந்திரன்.

“என்னை விட இவருக்குத்தான் அதிகம் தெரியும்!” என்று பேராசிரியர் மாணிக்கத்தச் சுட்டிக் காட்டினார் டாக்டர். “இவர் உள நூல் பேராசிரியர். உங்கள் முகத்தை ஒரே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தால் போதும். உங்களுடைய எல்லா ரகசியங்களையும் உங்களிடமே சொல்லிவிடுவார்.”

பயத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தார் நோயாளி.

“பயப்படாதீர்கள்! வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பொய், களவு, சூது முதலிய எல்லா விஷயங்களையும் திறமை யோடு கையாளுவது எப்படி என்ற அனுபவங்களை இப்போது நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளத் துடியாய்த் துடிக்கிறார் கள். சிறந்த அனுபவங்களை வெளியிடுபவர்களுக்கு ஓர் பெரிய பரிசு கொடுக்கப் போகிறார்களாம்! ‘நோபல்’ பரிசை விடப் பெரிய பரிசு!- நீங்கள் விரும்பினால் உங்களுக்கு இவரே அந்தப் பரிசை வாங்கிக் கொடுத்துவிடுவார்.”

“ஸார், ஸார், குறித்துக் கொள்ளுங்கள் ஸார்! இப் போதே சொல்கிறேன், குறித்துக் கொள்ளுங்கள் ஸார்!.. அதையெல்லாம் எப்படி எங்கே நான் கற்றுக்கொண்டேன், அதற்காக நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பதையெல் லாம்…”

“சொல்லுங்கள்!” என்று குறித்துக்கொள்ளத் தொடங் கினார் பேராசிரியர்.

புகழ் ஆசையால் தூண்டப் பட்ட மனிதர், தம்முடைய ரகசியச் செயல்களின் பிரதாபங்களைச் சுவையோடு வர்ணித் துக்கொண்டு போனார். உளநூல் ஆசிரியரின் உள்ளம் தனக்குள்ளே மிகவும் வேதனை அடையத் தொடங்கியது. அப்பாவி மக்களின் வாழ்க்கையில் அவரால் ஏற்பட்டிருந்த துன்பங் களை நினைத்துப் பார்க்கவே அவர் நெஞ்சு நடுங்கியது.

இடையிடையே, அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் எப் படிப்பட்ட கொடுமைக்குள்ளாகி யிருப்பார்கள் என்று அவரையே கேட்டார் பேராசிரியர். கேள்விகளுக்குப் பதி லளிக்கத் தொடங்கியபோதுதான், அவர் பாடு பெரும் பாடாகப் போய்விட்டது.

விவரங்களைச் சொல்லிவரத் துவங்கிய நேரத்திலிருந்து சொல்லி முடியும் நேரத்திற்குள்ளாகவே அந்த மனிதரிடம் சிறிது சிறிதாக மாறுதல்கள் தெரிந்தன. ராமச்சந்திரனின் கண்களில் புத்தொளி மலரத் தொடங்கியது; சொற்களில் தடுமாற்றமில்லை; புத்தி சுவாதீனமுள்ளவராக அவர் மாறிக் கொண்டு வந்தார்.

தொடங்கிய பேச்சு முடிவதற்குள் அவருடைய குரல் தழுதழுத்தது. கண்களில் நீர் பெருகியது. அவர் விம்மி னார்; விக்கினார்; தேம்பித் தேம்பி அழுதார்.

அவருடைய மன அழுக்கெல்லாம் கண்ணீரில் கரைந்து உருகிவருவதை வியப்போடு கவனித்த பேராசிரியருக்கு இப் போது பெருமிதம் உண்டாயிற்று.

“ராமச்சந்திரன்! உங்களுக்குக் குணமாகிவிட்டது, ராமச்சந்திரன்!” என்றார் டாக்டர். இப்படிச் சொல்லிக் கொண்டே மெதுவாக அருகில் இருந்த ஓர் மின்விசையை அழுத்தினார்

இனியதோர் பாடல் உருக்கமான குரலில் ஒலிக்கத் தொடங்கியது.

“பித்தம் தெளிய மருந்தொன் றிருக்குதாம் சத்தியமென்றுள்ளே! சத்தியமென்றுள்ளே!”
ராமச்சந்திரனுடைய கரங்களிரண்டும் குவிந்தன.மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தார் அவர்.

பேராசிரியருக்கு ஏதோ ஒரு விசித்திர உலகத்தில் இருப் பதுபோல் தோன்றியது.

“உலகத்தையே மனிதன் ஏமாற்றி விடலாம். ஆனால் அவனுடைய உள்ளத்துக்குள் ஒளிந்திருக்கும் சத்தியமூர்த்தி யான ஒரே ஒருவனை மட்டும் அவனால் ஏமாற்ற முடியாது. அவனையே ஏமாற்ற நினைக்கும்போதுதான் உமக்குச் சித்தம் கலங்கிவிட்டது. ஆனால் அவன் கருணை வடிவானவன்; எதையும் மன்னிக்கக் கூடியவன்!”

குனிந்த தலை நிமிராமல் அறையை விட்டு நடந்தார் ராமச்சந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top