Home » சிறுகதைகள் » நல்லாயிருக்கு!!!
நல்லாயிருக்கு!!!

நல்லாயிருக்கு!!!

சாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள்.

ஆனால் இன்றைக்கு அவன் முகம் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டவன்…”போயிட்டுவாறன்” என்று சொல்லிவிட்டு உணவைப்பற்றி எதுவுமே சொல்லாமல் உடனேயே வெளியே கிளம்பிவிட்டான்.

‘ஏதாவது சொல்லுவான்’ என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவளின் முகம் சட்டென்று வாடிப்போனது. அவன் கிளம்பியதிலிருந்து இவளுக்கு எந்தவேலையும் ஓடவில்லை. ‘தன் சமையல் சரியில்லையோ?’ என நினைத்தவள், அந்தக் கவலையில் தானும் சாப்பிட மறந்துபோனாள்.

மாலை அவன் மீண்டும் வீட்டுக்கு வந்ததும்… சோர்வாக உட்கார்ந்திருந்த அவள் பக்கத்தில் போய் அமர்ந்தவன்…

“என்ன மேடம்… ரொம்ப சோகமா இருக்கிறமாதிரி இருக்கு… என்னாச்சு?” என குறும்புப் புன்னகையோடு வினவினான். அவள் “ஒன்றும் இல்லை” என ஒற்றைவார்த்தையில் சொல்லிவிட்டு “இரவுக்கு என்ன சமைக்க?” என கேட்டபடியே எழுந்தவளின் கரத்தினை எட்டிப் பற்றியவன்…

அவன் புதிதாய் வாங்கிவந்த ஒருசோடி தங்க வளையலை அவள் கையில் மாட்டியபடியே, “இது எதுக்காகத் தெரியுமா? இன்னிக்கு மேடத்தோட ஸ்பெஷல் சமையலுக்கு…!” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை ஆவலோடு பார்த்தான்.

அவள் முகம் மகிழ்ச்சியில் திளைக்கும் என எதிர்பார்த்தவனுக்கு… அவள் கண்கள் கலங்கியது ஏனென்று புரியவில்லை. “என்ன ஆச்சு?” என அவன் வினவும் முன்பே,

அவன் மாட்டிவிட்ட அந்தத் தங்க வளையல்களை கழற்றி அவன் கரங்களுக்குள் மீண்டும் வைத்துவிட்டு, அவள் சொன்ன வார்த்தைகள்…

“நீங்கள் சாப்பிட்டிவிட்டு ‘நல்லாயிருக்கு’ என்று சொல்லுற அந்த ஒற்றை வார்த்தைக்கு இந்த தங்கவளையல் என்ன… எந்தத் தங்கக் குவியலும் ஈடாகாது… ! எனக்கு இதெல்லாம் வேணாம் ! ”

அவள் அதைச் சொல்லுபோதே அவள் கண்கள் கலங்கி, குரல் தளுதளுக்கத் தொடங்கியது.

இப்பொழுதுதான் அவனுக்கு எல்லாமே புரிந்தது… தான் இதுவரை நாளும் விட்ட தவறும் கூட-

கலங்கியவளின் கரங்களை காதலோடு பற்றி… தன் அருகே இழுத்து அணைத்தவன்,

” மன்னிச்சுக்கோம்மா ….உண்மையிலேயே நல்லா இருந்திச்சு…! இனி அதை அப்பப்பவே சொல்லுறன். இப்ப ஓகேவா…?”

என சொல்லியபடியே மீண்டும் அந்த ஜோடி வளையல்களை அவள் கரங்களில் அணிவித்தான்.
இப்பொழுது மறுப்பேதும் சொல்லாத அவள் முகத்தில் உதிர்ந்த புன்னகையும் அத்தனை அழகாய் இருந்தது.

“நல்லாயிருக்கு…” என்ற அந்த ஒற்றைவார்த்தைதான் உங்களுக்காக பாடுபடும் மனைவி எதிர்பார்க்கும் அதியுயர் விருது.

அந்த உயரிய விருதினை அவ்வப்போதே கொடுத்துவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top