Home » சிறுகதைகள் » போஜராஜனும் சிம்மாசனமும்!!!
போஜராஜனும் சிம்மாசனமும்!!!

போஜராஜனும் சிம்மாசனமும்!!!

விக்கிரமாதித்தன் கதை

போஜராஜனும் சிம்மாசனமும்

போஜராஜன் தருமாபுரி என்ற நகரத்தை நீதி நெறி வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தான். மக்கள் அவனுடைய ஆட்சியைப் புகழ்ந்தனர்.

ஒரு சமயம் அரசன், அமைச்சன் நீதிவாக்கியன் மற்றும் பரிவாரங்கள் சூழ, வேட்டைக்குச் சென்று, திரும்பி வந்து கொண்டிருக்கும்போது வழியில் களைப்பாறுவதற்காக ஓர் இடத்தில் எல்லோரும் தங்கினார்கள்.

அங்கே, அருகில் இருந்த கம்பங்கொல்லையைச் சரவணப் பட்டன் என்பவன் பரண் அமைத்துக் காவல் புரிந்து வந்தான். அவன் பரண்மீது இருந்தபடியே வேட்டைக்காரர்களை அழைத்து, “இங்கே உள்ள வெள்ளரிக்காய்களையும் கம்பங்கதிர்களையும் நீங்கள் பறித்துச் சாப்பிடுங்கள்” என்று உபசரித்தான்.

அவர்கள் அதைக் கேட்டதும் மகிழ்வுற்று, வெள்ளரிக் காய்களையும் கம்பங்கதிர்களையும் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது, பரண்மீது இருந்து கீழே இறங்கி வந்த சரவணப்பட்டன் வேட்டைக்காரர்களைப் பார்த்து இது என்ன அக்கிரமம்? இப்படியா பயிர்களை அழிப்பது? இதைக் கேட்க ஆள் இல்லையா? என்று கூச்சல் போட்டான்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த போஜராஜன் அமைச்சனைப் பார்த்து, “அவன் பரண்மீது இருந்தபொழுது, அவனாகவே எல்லோரையும் அழைத்துச் சாப்பிடும்படி சொன்னான். கீழே இறங்கி வந்ததும் அக்கிரமம் என்று அலறுகிறானே, இது என்ன வேடிக்கை?” என்றான்.

அமைச்சன் வியப்படைந்து, “அதில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது! அவன் பரண்மீது இருந்தபோது பேசியதற்கும், கீழே இறங்கி வந்து பேசுவதற்கும் வேறுபாடு உள்ளது. ஒருவேளை அந்தப் பரண்கீழே ஏதேனும் இருக்கக்கூடும். அதைச் சோதனை செய்தால் உண்மை தெரிய வரும்” என்றான்.

போஜராஜன் உடனே சரவணப்பட்டனை அழைத்து, எமது ஆட்கள் உன்னுடைய கொல்லையிலுள்ள பயிர்களை எல்லாம் அழித்துவிட்டதாகக் கூக்குரல் இட்டாய் அல்லவா? அதற்காக, வேறு கொல்லையும் வேண்டிய பொருளும் தருகிறேன். இந்தக் கொல்லையை எங்களுக்குக் கொடுத்துவிட உனக்குச் சம்மதமா? என்று கேட்டான்.

அரசனே கேட்கும்போது மறுக்க முடியாமல், சரவணப்பட்டன் அதைக் கொடுக்கச் சம்மதித்தான்.

பிறகு, கம்பங்கொல்லையை போஜராஜன் அரசுக்குச் சொந்தமாக்கிக் கொண்டான். சரவணப்பட்டனுக்கு வேறு கொல்லையும் பொருளும் கொடுக்கப்பட்டது.

பரண் அமைக்கப்பட்டிருந்த நிலத்தின் கீழே ஆழமாகத் தோண்டுமாறு உத்தரவிட்டான் அரசன்.

சிறிது அளவு தோண்டிய உடனே, ஒரு அழகான சிம்மாசனம், தங்கத்தால் செய்யப் பெற்று, நவரத்தினங்கள் இழைக்கப்பட்டு, கண்களைக் கூசும்படியான ஒளியுடன் திகழ்ந்தது. அதன் பீடத்தை அடைவதற்கு முப்பத்து இரண்டு படிக்கட்டுகள் அதில் இருந்தன. ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு பதுமையாக முப்பத்து இரண்டு பதுமைகள் இருந்தன. அதில், ஒவ்வொரு பதுமைக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டப்பட்டிருந்தது.

மேற்படி புதுமையான சிம்மாசனத்தை மிகவும் கவனத்தொடு, பத்திரமாக, தருமாபுரி அரண்மனைக்கு எடுத்துச் செல்லுமாறு கட்டளை இட்டான் அரசன்.

பின்னர், அதைச் சுத்தப்படுத்தி, சபா மண்டபத்தில் வைக்கும்படி செய்து, அரச குருவை அழைத்து, அந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி நடத்துவதற்கு, ஒரு நல்ல நாளைக் கூறும்படி கேட்டான்.

குறிப்பிட்ட நல்ல நாளில், அமைச்சர் பிரதானியர் புடைசூழ மங்கள வாத்தியங்கள் முழங்க, சிம்மாசனத்தில் அமர்வதற்காகப் போஜராஜன் முதல் படிக்கட்டில் வலது காலை எடுத்து வைத்தான்.

(போஜராஜன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்று திரும்பும்பொழுது முப்பத்து இரண்டு படிக்கட்டுகளை உடைய புதுமையான சிம்மாசனத்தைக் கண்டு எடுத்தான். அதில், அவன் அமரப்போகும் பொழுது பதுமைகள் கதை சொல்லத் தொடங்கின. அவை யாவும் விக்கிரமாதித்தனைப் பற்றியவை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top