Home » விவேகானந்தர் » விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 15
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 15

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 15

சுவாமிஜியின் எண்ணத்தை நிறைவேற்ற சீடர்கள் தயங்கினர். அவர்களில் சிலர் விவேகானந்தரிடம், சுவாமி! இந்த நாட்டிலுள்ள உயர்வகுப்பினர் சமையலறையிலேயே பாகுபாடு பார்ப்பவர்கள். தாங்கள் சாப்பிடுவது கூட தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தெரியக்கூடாது என நினைப்பவர்கள். இவர்களிடம் போய், பிற வகுப்பினரும் வேதம் கற்க வேண்டும் என சொன்னால் நிலைமை என்னாகும் என தெரியாதா? இதெல்லாம் முடிகிற விஷயமா? என்றனர். சுவாமிஜிக்கு கோபம் வந்துவிட்டது. முடியாது என்ற வார்த்தையையே நீங்கள் சொல்லக்கூடாது. உங்களால் முடியாவிட்டால், நான் அதைச் செய்கிறேன், என கடிந்து கொண்டார். சீடர்களே! இந்த தேசத்து மக்கள் அறியாமையில் மூழ்கிக்கிடக்கின்றனர். எளியவர்கள் வலியவர்களின் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். தங்களைக் காப்பாற்ற வேண்டுமென அவர்கள் தீனக்குரலில் கத்துவது போல் எனக்கு தோன்றுகிறது. எனவே சீடர்களே! நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய முன்வாருங்கள். மக்கள் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை, என்றார்.

சுவாமிஜியின் எந்த அறைகூவலும் சீடர்களின் காதில் விழவில்லை. அவரது சீடர்கள் குருபாயிக்கள் என அழைக்கப்பட்டனர். குருபாயிக்கள் அனைவருமே ஒதுங்கிக்கொண்டாலும், சுவாமிஜி தனியாகவே நின்று மக்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்தார். கல்கத்தாவை விட்டு கிளம்பி தனது கருத்துக்களை எடுத்துச் சொல்ல விரும்பினார். தனது லட்சியங்களைப் பட்டியலிட்டார். நான்கு பிரதான லட்சியங்கள் அவருடையது.

1. மேல்நாட்டு நாகரீகத்தில் மூழ்கிக்கிடக்கும் இந்தியர்களுக்கு மத உணர்வை ஊட்டுவது.
2. இந்தியர்களை இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு செல்ல விடாமல் தடுப்பது.
3. காலத்துக்கு ஒத்துக்கொள்ளாத இந்து மத ஆசாரங்களை ஒதுக்கித்தள்ளுவது.
4. தகுதியுள்ள அனைவரும் வேதம் கற்பது. இந்த லட்சியங்களை நிறைவேற்ற புறப்பட்டு விட்டார் சுவாமிஜி. 1889ல் கல்கத்தாவிலிருந்து புறப்பட்ட அவர், பீகாரிலுள்ள வைத்தியநாதம் என்ற ஜோதிர்லிங்கத்தலத்துக்கு சென்றார். அங்கிருந்து அலகாபாத் சென்றார். அதன் அருகிலுள்ள காசிப்பூரில் பவஹாரி என்ற மகான் வாழ்வதாகக் கேள்விப்பட்டு அவரைக் காணச்சென்றார். பவஹாரியை போன்ற தீவிர ஆன்மிகவாதிகளை காண்பதே அரிது. மிளகு தோலும், வேப்பிலையுமே அவருக்கு ஆகாரம். அற்பமான உணவையும் அளவோடு உண்பவரை பவஹாரி என்பர்.

அதே நேரம் அவர் சமைப்பதும் உண்டு. அந்த உணவை சுவாமிக்கு படைத்து பின்னர் துறவிகளுக்கு தானம் செய்துவிடுவார். இவர் பூமிக்கடியில் தான் பலகாலம் தங்கியிருப்பார். எங்கே இருக்கிறார் என்றே தெரியாது. அவர் இறந்திருப்பாரோ என்று அவரைக் காண வருபவர்கள் நினைக்கும் சமயத்தில் திடீரென மேலே வருவார். அந்த அளவுக்கு மூச்சடக்கி, பேச்சடக்கி இருந்தவர் சுவாமி. ஒரு கட்டத்தில் தன்னை காணவரும் பக்தர்களை பார்ப்பதையும் தவிர்த்து வந்தார். இப்படிப்பட்ட மகானின் தரிசனம் தனக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் மனதில் இருந்தாலும், விவேகானந்தர் அவரைப் பார்ப்பதற்காக காசிப்பூர் வந்துவிட்டார். அவ்வூரில் சுவாமிஜியின் நண்பரான சதீஷ் சந்திர முகர்ஜி என்பவர் இருந்தார். அவரது இல்லத்தில் தங்கிய விவேகானந்தர் பவஹாரியின் தரிசனத்துக்காக காத்துக் கிடந்தார். அப்போது, அவ்வூர் மக்களை கவனித்தார் சுவாமி. பெரும்பாலானவர்கள் மேல்நாட்டு மோகத்தில் மூழ்கிக்கிடந்தனர். அவரது மனம் வெதும்பியது. மனம் வெதும்புபவர்கள் தங்களால் பேச முடியாத நிலையில் எழுத ஆரம்பித்து விடுவது வழக்கமான ஒன்றுதான். சுவாமிஜியும் எழுதினார்.

கல்கத்தாவில் வசிக்கும் குருபாயிக்களில் (சீடர்) ஒருவரான பிரதமதாசருக்கு, நான் தங்கியிருக்கும் ஊரில் எல்லாமே நல்லதாக இருக்கிறது. மக்களிடமும் பண்பு இருக்கிறது. ஆனால், மேல்நாட்டு நாகரீகத்தில் அவர்கள் மூழ்கிவிட்டனர். அவர்களைப் போலவே உடையணிகின்றனர். அந்த நாட்டில் எப்படி வாழ்வார்களோ அப்படியே காப்பி அடிக்க முயல்கின்றனர். இந்த வாழ்க்கை முறையை நான் எதிர்க்கிறேன். இது இந்த நாட்டை எங்கோ கொண்டு போய்விடுமோ தெரியவில்லை. வெளிநாட்டினர் இவர்களைக் கெடுத்து விட்டனர். உலகம் என்றாலே பொருட்களையும், போகங்களையும் அனுபவிக்கும் கூடாரம் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டனர். யாராவது காவி உடை அணிந்து வந்தால், அவர்களை ஏளனக் கண்களுடன் பார்க்கின்றனர். சுகப்பிரம்ம முனிவர் போன்றவர்கள் பிறந்த இந்த நாட்டில், இப்படி ஒரு கேவலமான நிலையா? வெளிநாட்டு மோகத்தில் சிக்கிவிட்ட இந்த இதய பலவீனர்களை காசி விஸ்வநாதன் தான் காப்பாற்ற வேண்டும், என்று கடிதம் எழுதினார். இதன்பின் அவர் என்ன நோக்கத்திற்காக காத்திருந்தாரோ அது நிறைவேறியது. பவஹாரியின் தரிசனம் கிட்டியது.

என்ன அற்புதமான தேஜஸ் இவரது முகத்தில்! நான் பாக்கியசாலி என்பதால் தான் இவரது அருளைப் பெற்றேன். இவர் ஆச்சரியப்படத்தக்க வாழ்க்கை வாழ்கிறார். இவரைப் பார்த்தபின், ஆன்மிக சாதனைகள் புரிவதில் நான் சிறு கல்லைக்கூட தூக்கிப் போடவில்லை என்பது புரிகிறது, இப்படி சிந்தித்தார் விவேகானந்தர். அவரை நேரில் சந்தித்து, தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டினார். இவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் கூட பவஹாரி அவரிடம், எனக்கு என்ன தெரியும் உனக்கு உபதேசம் செய்ய?என்றார். எவ்வளவு பணிவு பாருங்கள். ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் சுவாமியிடம் சொன்னார். நீ இன்னும் சிலகாலம் இங்கே தங்கியிரு, என்று. சுவாமி மீண்டும் அவரை சந்திக்க முயன்றார். ஆனால், திடீரென ஒருநாள் இடுப்பில் வலி ஏற்பட்டு அவரால் நடக்க முடியாமல் ஆயிற்று. அப்போது பவஹாரி பக்தர்களிடம், அந்த இளைஞனை எங்கே? என்றார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என பக்தர்கள் சொன்னதும், மறுநாள் முதல், அந்த இளைஞனுக்கு உடல்நிலை சரியாகி விட்டதா? என கேட்பார். அப்படி ஒரு அன்பை விவேகானந்தர் மீது வைத்து விட்டார் பாபா. இந்த சமயத்தில் ரிஷிகேஷத்தில் தங்கியிருந்த ராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவரான அபேதானந்தர் மலேரியா காய்ச்சலால் அவதிப்படுவதாக தகவல் அறிந்த விவேகானந்தர், நான் அங்கு வர வேண்டுமா? என தந்தி கொடுத்தார். இங்கே எல்லாப் பற்றையும் துறந்த மகான் பவஹாரி, எங்கிருந்தோ வந்த ஒரு இளம்துறவி மீது பற்று வைத்து உடல்நிலை பற்றி விசாரிக்கிறார். விவேகானந்தரோ, தனது மடத்து சீடர் ஒருவர் நோய்வாய்ப்பட்டது பற்றி கவலை படுகிறார். எல்லாவற்றையும் துறந்து, இறப்பைப் பற்றியும் கவலைப்படாத இவர்கள் இப்படி ஒருவர் மீது ஒருவர் பற்று வைக்கலாமா? இந்தக் கேள்விக்கு விடை என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top