Home » விவேகானந்தர் » விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 14
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 14

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 14

சுவாமிஜி அங்கிருந்து ஹரித்துவாருக்கு கிளம்பினார். செல்லும் வழியில் ஹத்ராஸ் என்ற ஊர் வந்தது. அங்கே இறங்கிய சுவாமிஜி, ரயில் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த ஓரிடத்தில் அமர்ந்து தியானம் புரிந்தார். ஸ்டேஷன் மாஸ்டர், அவர் தியானம் புரியும் இடத்திற்கு வந்தார். அவரது பெயர் சரத்சந்திரா. பல்வேறு மாநில மக்களை ரயில்வே ஸ்டேஷனில் சந்திப்பவர். இந்தி, பெங்காலி மிகவும் அத்துப்படி. இனிமையாகப் பேசும் இவர் தைரியசாலியும் கூட. இவ்வளவு சிறிய வயதில் இப்படி ஒரு இடத்தில் தியானம் செய்கிறாரே… என்றெண்ணியபடியே அவரருகே சென்றார். அவர் செல்லவும், விவேகானந்தர் கண் விழிக்கவும் சரியாக இருந்தது. ஆஹா…இவை கண்களா! தீப்பிழம்புகளா! இவ்வளவு காந்தசக்தியுடன் நம்மை ஈர்க்கிறதே. ஆன்மிக இன்பத்தில் லயிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நிறைய இருந்தது. அதை அடையத்தான், இப்படி ஒரு குருவை ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறானோ! அவர் விவேகானந்தரிடம், வணக்கம் சுவாமி. இப்படி ஒரு இடத்தில் தாங்கள் தியானம் செய்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இங்கே வந்தேன்.

உங்கள் முகத்தைப் பார்த்தால் நீங்கள் பசியாய் இருப்பது எனக்கு புரிகிறது. வாருங்கள். என் வீடு அருகில் தான் இருக்கிறது. தாங்கள் பசியாறலாம், என்றார். விவேகானந்தர் அவரிடம், அன்பனே! நான் உன் வீட்டுக்கு வந்தால், நீ எனக்கு என்னென்ன தருவாய்? என்றார். சரத்சந்திரா பரவசப்பட்டவராய், என்ன பலகாரம் இருக்கிறது என எனக்குத் தெரியாது. ஆனால், என் இதயத்தை அவற்றில் கலந்து தருவேன், என்றார். அவரது வார்த்தைகள் சுவாமிஜியை உருக்கிவிட்டன. ஆம்…இன்று நம் வீட்டுக்கு எத்தனையோ விருந்தினர்கள் வருகிறார்கள். பணக்காரர்கள் என்றால் ஒருவகை விருந்து, ஏழைகள் என்றால் இன்னொரு வகை..சிலருக்கு தண்ணீர் கூட தரப் படுவதில்லை. சிலர் அடித்தும் விரட்டப்படுகிறார்கள். வருபவர்களுக்கு என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை மனதார தருகிறோமா என்பதே முக்கியம். சுவாமிஜியும், சரத்தும் வீட்டிற்குச் சென்றனர். இருந்ததைச் சாப்பிட்டனர்.

சிலகாலம் தன்னுடன் தங்கும்படி சரத் கேட்டுக்கொண்டார். அதை ஏற்ற சுவாமிஜியை சந்திக்க ஆன்மிக ஆர்வலர்கள் பலர் வந்தனர். அவர்களுக்கு நல்ல போதனைகளைச் செய்தார் சுவாமிஜி. நாட்கள் கடந்தன. விவேகானந்தர் அங்கிருந்து புறப்பட முடிவு செய்தார். சரத்சந்திரர் அழுதே விட்டார். உங்களைப் பிரிவதா? அது இனி நடக்கிற காரியமா? நீங்கள் எங்கு சென்றாலும் நானும் வருவேன், என அடம்பிடித்தார். சுவாமி அவரைத் தேற்றினார். சரத்! நான் மிகப்பெரிய பணி ஒன்றைச் செய்வதற்காக நாடெங்கும் அலைகிறேன். என் குருநாதர் பரமஹம்சர் என்னிடம் ஒரு பெரிய பணியை ஒப்படைத்துள்ளார். இந்த தேசம், பஞ்சத்தோடும், நோயோடும் போராடுகிறது. இதற்கு விடிவு காண வேண்டுமானால், அது தன்னுள் மறைந்திருக்கும் ஆன்மிக விஷயங்களை வெளிக்கொணர வேண்டும். ஆன்மிகத்தால் நமது தேசம் அகில உலகத்தையும் வெற்றி கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த பணிக்காக நான் சென்று கொண்டிருக்கிறேன். நீ இங்கேயே இரு, என்றதும் சரத்சந்திரர் குழந்தை போல் அழுதுவிட்டார். அது முடியாது சுவாமி. நான் உங்களோடு வந்தே தீருவேன்.

என் பணியை ராஜினாமா செய்து விடுகிறேன். இனி ஆன்மிகப்பணியே என் முழுப்பணி, என்று கதறினார். சரத்! உன் உணர்வை மதிக்கிறேன். நான் ஒரு சன்னியாசி. பிøக்ஷ எடுத்து சாப்பிடுபவன். அது உன்னால் முடியுமா? என்றார். சற்றும் யோசிக்காத சரத்சந்திரர், அந்த நிமிடமே பணியை ராஜினாமா செய்தார். ஒரு பிச்சைப் பாத்திரத்துடன் ஸ்டேஷனுக்கு சென்றார். தனக்கு கீழ்ப்பட்ட பணியாளர்களிடமே பிச்சை கேட்டார். சரத்சந்திரரின் உள்ள உறுதியைப் புரிந்து கொண்ட விவேகானந்தர் அவருக்கு தீøக்ஷ கொடுத்து தனது சீடராக்கிக் கொண்டார். அவருடன் இமயமலை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். இமயத்தின் பனிபடர்ந்த பகுதிகளில் ஏறும்போது, சரத்சந்திரர் மிகவும் சிரமப்பட்டார். சில இடங்களில் வழுக்கியது. அப்போது, அவரது பாதணிகளைக் கூட சுவாமிஜி வைத்துக்கொண்டார். சீடன் என்பதற்காக அவரை அடிமைப்படுத்த சுவாமிஜி விரும்பவில்லை. ரிஷிகேஷத்தை அடைந்த அவர்கள் அங்குள்ள சன்னியாசிகளுடன் வசித்தனர். அங்கு வசிப்பது அவ்வளவு எளிமையாய் இல்லை. எனவே மீண்டும் ஹத்ராசிற்கே இருவரும் திரும்பி விட்டனர். வந்ததும் சுவாமிக்கு காய்ச்சல் பீடித்தது. இதையறிந்த கல்கத்தா சீடர்கள், சுவாமியை உடனே அங்கு வரும்படி கடிதம் அனுப்பினர். மேலும் சில அலுவலகப் பணிகளையும் கவனிக்க வேண்டும் என சொல்லியிருந்தனர்.

நகர முடியாத சுவாமிஜி, தனக்கு பதிலாக சரத்சந்திராவை கல்கத்தாவுக்கு அனுப்பி நிலைமையைச் சொல்லச் சொன்னார். சரத்சந்திராவை அன்புடன் வரவேற்ற கல்கத்தா சீடர்கள், அவரை சதானந்தர் என்று அன்புடன் அழைத்தனர். சுவாமிஜியும் சில காலம் கழித்து ஊர் வந்து சேர்ந்தார். இதன்பிறகு சுவாமிஜி, தான் நாட்டில் கண்டவற்றையெல்லாம் மனதிற்குள் தொகுத்துக் கொண்டார். சீடர்களை அழைத்து, அன்பர்களே! நாம் ஒரு வேதபாடசாலை ஒன்றை உருவாக்க வேண்டும். ஏனெனில், வேதம் படித்தவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட தொழிலின் அடிப்படையில் அவர்களெல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும் ஒரு பிரமை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக நாட்டில், ஒரு பிரிவினர் அடிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மக்களில் இன்னாருக்கு இன்ன தொழில் என்று நிர்ணயித்ததை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், அதைக் காரணம் காட்டி பிறதொழில் செய்வோர் நசுக்கப்படுவதை ஆதரிக்க முடியாது. தரம் தாழ்ந்தவர்கள் என்று கருதப்படும் இப்பிரிவினரை, மற்ற மதத்தினர் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே, இந்து மதத்தை விட்டு மக்கள் பிரிந்து விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே இந்துக்கள் காலத்துக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படியானால் தான் இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க முடியும், என்றார். சீடர்களுக்கு சுவாமியின் உயர்ந்த நோக்கமும், இதற்காக பலரது எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதும் புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top