Home » படித்ததில் பிடித்தது » இந்துஸ்தான் புரட்சிப்படை!!!
இந்துஸ்தான் புரட்சிப்படை!!!

இந்துஸ்தான் புரட்சிப்படை!!!

கல்கத்தா நகரின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்த நகரம் சிட்டகாங். 1929 ஆம் ஆண்டில் சிட்டகாங் நகரில் வாழ்ந்த வந்த சில இளைஞர்கள் இந்திய தேசத்தின் விடுதலைப் போரில் மிகுந்த ஆர்வம் கொண்டார்கள். புரட்சியை ஏற்படுத்தி அதன்மூலம் இந்தியாவிற்கு விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. புரட்சியை ஏற்படுத்த ஒரு அமைப்பு வேண்டுமல்லவா? எனவே புரட்சி எண்ணம் கொண்ட இந்த இளைஞர்கள் இந்துஸ்தான் புரட்சிப் படை எனும் ஒரு தீவிரவாத அமைப்பை துவக்கினார்கள். இப்படையின் தளபதியாக இருந்து செயல்பட்டவர் சூரிய சென் எனும் புரட்சிக்காரர். இவர் ஆரம்பப்பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர். இவ்வமைப்பில் பதினாறு முதல் இருபது வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் சுமார் அறுபத்தி நான்கு இளைஞர்கள் உறுப்பினராய் இணைந்து செயல்பட்டார்கள்.

18.04.1930ல் இந்துஸ்தான் புரட்சிப்படையினர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டனர். இப்படையினர் சிட்டகாங் நகரத்தில் இருந்த காவல் நிலையம், தபால் தந்தி அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவற்றை திடீரென தாக்கி கைப்பற்றிக் கொண்டார்கள். சீரிய திட்டத்தின் மூலம் சிட்டகாங் நகரை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தார்கள். பின்னர் சிட்டகாங் நகரில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடிகள் இறக்கப்பட்டு இந்திய தேசிய மூவர்ணக் கொண்டி சிட்டகாங் நகரெங்கும் பறக்க விடப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இந்த புரட்சிப்படையின் ஒற்றுமை நீடிக்கவில்லை. புரட்சிக்காரர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இப்படை இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. இதை அறிந்துகொண்ட பிரிட்டிஷ் இராணுவம் கடுமையான தாக்குதலை இப்படையினருக்கு எதிராகத் தொடுத்தது.

சுமார் மூன்று ஆண்டுகள் தளபதி சூரியா சென் தலைமறைவாக வாழ்ந்தார். .ஆனால் 1933ஆம் ஆண்டில் சூரியா சென் பிரிட்டிஷ் படையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் தூக்கிலிடப்பட்டார். இந்துஸ்தான் புரட்சிப் படையை பிரிட்டிஷ் இராணுவம் அழித்து விட்டது. இந்தப் புரட்சி சிட்டகாங் புரட்சி என அழைக்கப்பட்டது.

30.01.1930 அன்று இந்தியாவெங்கும் பூரண சுதந்திர தினத்தை அனுசரிக்க வேண்டுமென்று திட்டமிடப்பட்டது. கல்கத்தா நகரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் தலைவராக சுபாஷ் செயல்பட்டார். சுபாஷை கைது செய்யமுயற்சித்த பிரிட்டிஷ் அரசு ஏற்கனவே நிலுவையில் இருந்த ஒரு வழக்கை இப்போது கையில் எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக விசாரிக்க ஆரம்பித்தது. இந்த வழக்கு மிக விரைவாக முடிக்கப்பட்டு சுபாஷிற்கு ஒரு வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. சுபாஷ் இதன் காரணமாக 23.01.1930 அன்று கைது செய்யப்பட்டார். ஒரு வருட கடுங்காவல் தண்டனையைப் பெற்ற சுபாஷ் ஒரு அறிக்கையை விடுத்தார்.

“என் மீது ஆத்திரம் கொண்ட பிரிட்டிஷ் அரசு சுதந்திர தினத்தை நாம் அனுசரிக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் பழைய வழக்கை இப்போது எடுத்து எனக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்திருக்கிறது.

நான் வெளியே இல்லாவிட்டால் 30 ஆம் தேதி நாம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின விழா வெற்றிகரமாக நடக்காது என்று பிரிட்டிஷ் அரசு கனவு காணுகிறது. வங்காள மக்களாகிய நீங்கள் இந்த சுதந்திர தினவிழாவை வெற்றிகரமாக நடத்திக் காட்டுங்கள்”.

சுபாஷ் அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். மக்கள் மனதில் சுபாஷின் இந்த உரை ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. மக்கள் 30ஆம் தேதி பூரண சுதந்திர தினத்தை மூவர்ணக் கொடியேற்றி மிகச்சிறப்பாகக் கொண்டாடி பிரிட்டிஷ் அரசாங்கத்தை திகைக்க வைத்தனர். சுபாஷ் சிறைக்குள்ளேயே சுதந்திர தினத்தை மிகச்சிறப்பாகக் கொண்டாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top