Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 15

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 15

ஆத்மா சுவர்க்கத்தில் தனது காரண சரீரமாகிய ஊடகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்குப் பூவுலகத்துக்குத் திரும்பவேண்டுமென்ற “தாகம்” ஏற்படுகிறது.
இந்நிலை சமஸ்கிருதத்தில் “திருஷ்னா” என்றும், பாளியில் “தன்ஹா” என்றும் குறிப்பிடப்படுகிறது. மனிதன் பூரணத்துவ நிலையை எய்தும் வரை, தனது ஆசைகளை அழித்து கர்மாவில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் வரை பிறந்து இறந்து கொண்டேயிருப்பான்.
ஒவ்வொரு பிறப்பும் முடிவடைந்தவுடன் நமது கர்மவினைகள் ஒரு செயலற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அவை நாம் பிறப்பெடுக்கும் வேளையில் நம்மை வந்தடைகின்றன. நமது கர்மவினைக்கேற்ப நமது குணச்சிறப்புகள், உணர்வுகள், மனப்பாங்குகள், மனோசக்திகள் எல்லாம் அமைந்து விடுகின்றன. நாம் புக வேண்டிய கர்ப்பாயசமும் நமது கர்மாவுக்கு ஏற்பவே நிர்ணயிக்கப்படுகிறது.
விஞ்ஞானத்தின் அடிப்படைத் தத்துவங்களாக காரணங்களும் விளைவுகளும் (Cause and effect) ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிரடைச் செயலும் (Equal and Opposite) இருப்பதுபோல், கர்ம நியதிக்கும் அவை அடிப்படைக் கோட்பாடுகளாக அமைகின்றன. ஒவ்வொரு செயலுக்கும் சிந்தனைக்கும் சமமான பிரதிபலன் விளைகின்றது. ஒவ்வொரு பிறப்பிலும் நாம் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்கு நாமே தான் காரணகர்த்தாக்கள்.
கடந்த பிறப்புகளில் நிறைய தர்மம் செய்த பயனை இப்பிறவியில் செல்வந்தனாக வந்து அனுபவிக்கின்றோம். நாம் முன்னர் செய்த பாவவினைகளுக்குப் பிரதிபலனாக இப்பிறப்பில் நோய், பிணி, வறுமை ஆகியவற்றால் துன்பப்படுகிறோம்.
பிரபஞ்சத்தில் எந்த நிகழ்வும் தற்செயலாகவோ விபத்தாகவோ நடைபெறுவதில்லை. எல்லாம் ஒரு ஒழுங்குமுறையில் தான் நடைபெறுகின்றன.
நாம் முன்னர் செய்த காரியங்களுக்கும், இன்று செய்பவற்றுக்கும் இனிமேல் சந்திக்கப்போகும் இன்பதுன்பங்களுக்கும் நிச்சயமான ஒழுங்குமுறையான தொடர்பு உண்டு. இதுதான் கர்மநியதியின் தத்துவம்.
“உலகம் ஒரு கணக்கியல் சமன்பாடு (Mathematical Equation). ஒவ்வொரு இரகசியமும் வெளிப்படுத்தப்படுகின்றது.
ஒவ்வொரு குற்றமும் தண்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு புண்ணியச் செயலுக்கும் பிரதிபலன் அருளப்படுகின்றது. ஒவ்வொரு தீங்கும் நிவர்த்தி செய்யப்படுகின்றது. எல்லாம் அமைதியாகவும் நிச்சயமாகவும் நடைபெறுகின்றன” என்று அமெரிக்க தத்துவஞானி எமேர்சன் தனது “Compensation” என்ற நூலில் கூறியுள்ளார்.
கர்ம நியதிகளின் அடிப்படையில் தான் பழியெதிர்ச்செயலாக (Retribution) தண்டனைகள் அனுபவிக்கிறோம். நமது சுயநலமற்ற சேவைகளுக்கு இழப்பீடுகளாக (Compensation) அல்லது கைம்மாற்றுக்களாக நாம் நலன்களை அடைகிறோம்.
உலகப் புகழ்ப்பெற்ற சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் அதுவும் சுவாச உறுப்புகளில் சத்திரசிகிச்சை செய்பவர் கடுமையாக சிகரெட் புகைப்பதை கண்ணுற்ற அவருடைய நண்பர், “நீங்களே இப்படிப் புகைத்துத் தள்ளுகிறீர்களே!?” என்று கேட்டாராம்.
அதற்கு அந்த வைத்திய விற்பன்னர் கூறிய பதில் மேல்நாட்டு அறிஞர்களுக்கும் கர்மாவில் நம்பிக்கையுண்டு என்பதை வெளிப்படுத்துகிறது. அதாவது “இந்துக்களும் பௌத்தர்களும் நம்பும் கர்ம தத்துவத்தில் எனக்கும் அசையாத நம்பிக்கை உண்டு” என்று அவர் கூறினாராம்.
கர்மாவில் நம்பிக்கை உண்டென்பதால் எதையும் செய்யலாம் எப்படியும் வாழலாம் என்று எண்ணுவது அறிவுடைமை அல்ல. இருப்பினும் நம் சிந்தனைகள் செயல்களெல்லாம் நமது கர்ம வினைகளுக்குத் தொடர்பிசைவாகவே நடைபெறுகின்றன என்பதை மறுக்க இயலாது.
நல்ல சுகதேகியாகவும், நல்ல சூழ்நிலையில் வாழ்ந்தவராகவும் உள்ள தாயின் கர்ப்பத்தில் பிறந்த குழந்தைக்கு காரணத்தைக் கண்டுபிடிக்க இயலாத நோய்கள் பிறவிக்கூறாக இருப்பதையும் புற்றுநோய் வருவதையும் பார்த்து வைத்தியர்கள் குழப்பமடைகிறார்கள்.
இதற்கான காரணங்கள் அக்குழந்தையின் கர்மவினைகளில் காணப்படும். நாளாந்த வாழ்க்கையில் நாம் கர்மாவின் வினோதசெயற்பாடுகள் நேரிடையாகக் காணக்கூடியதாயிருக்கின்றது.
எல்லா நற்குணங்களும் கடவுள் பக்தியும் நிரம்பிய மனிதர்கள், மிகக்கொடியவர்கள் அனுபவிக்கவேண்டிய துன்பங்களை அனுபவிப்பதையும், கொடியவர்களும் கொலைஞர்களும் வாழ்வில் எல்லாவித சுகங்களையும் பெற்றுக் களிப்புற்றிருப்பதையும் காண்கிறோம்.
கர்மாவின் மர்மமான செயற்பாடுகளை நாம் புரிந்துகொண்டால் அதற்கு விடை அவர்களின் முற்பிறப்புகளிலும் அவர்கள் இவ்வுலகுக்குத் தம்முடன் கொண்டுவந்த “கர்ம அறுவடை” யிலும் தங்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ளுவோம்.
தேசங்களும் மனித இனங்களும் இயற்கையினாலும் மனித செயற்பாடுகளினாலும் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவற்றுக்கும் கர்மாவே அடிப்படையாகவுள்ளது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கின்ற நாடு, இனம், குடும்பம் எல்லாம் அவனுடைய கர்மாவுக்கு ஏற்பவே நிர்ணயிக்கப்படுகின்றது.
மறுபிறப்பையும் கர்மாவையும் அடிப்படைத் தத்துவங்களாகக் கொண்டது இந்து சமயம்.
“பழுதுபட்ட ஆடைகளை களைந்துவிட்டு மனிதன் புதியவைகளை அணிந்து கொள்வது போன்று ஆன்மா பழைய உடல்களை நீத்துப் புதியன புகுகிறது” என்கிறது கீதை (அத் 2 – சு 22).
மறுபிறப்பு பற்றிய தெளிவுகளை அடுத்துப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top