Home » பொது » சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8
சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8

8. மதமேறிய மன்னன் 

நமது தேசத்தின் இருகண்களாகக் கருதப்படுபவை சைவமும், வைணவமும் ஆகும்.  இரண்டுமே அடிப்படை தத்துவத்தில் வேறுபட்டிருப்பதாலும், இரு சமயத்தினரிடமும் சகிப்புத்தன்மையும் பரஸ்பரம் விட்டுகொடுக்கும் தன்மையும் உள்ளன. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அத்தைகைய சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து காணப்பட்டது. என் சமயம்தான் உயர்ந்தது என்ற கொடியை இரு சமயத்தினரும் ஓங்கிப் பிடித்தனர்.

சைவம் தனது நெறியில் ஓங்கி இருக்கும் வேளையில் வைணவம் அடக்கிவாசிப்பதும், மாறாக வைணவம் ஓங்கியிருக்கும் வேளையில் சைவம் அடங்கியிருப்பதும் சகஜம். ஆட்சியாளர்கள் இதற்குள் தலையை கொடுக்காமல் போனால் விபரீதம் எதுவும் நிகழாது. மாறாக மன்னனுக்கு மதமேறிவிட்டால் அவ்வளவுதான் மாற்று சமயத்தினரின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

அப்படி ஒரு மன்னனாவே கிரிமிகண்டன் என்ற மன்னன் விளங்கினான்.காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு சோழ மன்னன் ஆண்டுவந்தான். கிரிமிகண்டன் என்பது அவனுடைய பெயர். சைவ சமயத்தின் மீது மாறாப் பற்றுடையவன். இதன்காரணமாக வேறு எந்த மதமும் தனது தேச எல்லைக்குள் செழிப்பதை அவனால் அனுமதிக்க முடியவில்லை.

அணுக்கத்தொண்டர்கள் 74 பேருடன் ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த விசிஷ்டாத்வைத தத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வைணவ மதம் தழைத்து வருவதைக் கண்டு பொறுக்காத அந்த கிரிமிகண்டன் ராமானுஜருக்கு ஏகப்பட்ட இன்னல்களை அளித்து வந்தான். இறுதியில் அவரது உயிரை மாய்த்திடவும் திட்டமிட்டான்.

ராமானுஜரிடமும் அவருடைய பிரதம சீடரான கூரத்தாழ்வாரிடமும் ‘ சிவனே உயர்ந்தவர். சிவனைவிட உயர்ந்த கடவுள் இல்லை ‘ என்ற வாக்கியத்தை எழுதி வாங்கிவிட்டால் அவர்கள் இருவரையும் மன்னித்துவிட்டுவிடலாம் அவ்வாறு அவர்கள் இருவரும் மறுக்கும்பட்சத்தில் அவர்களைக் கொன்றுவிடலாம் என்று நாலூரான் என்ற வைணவத்தைச் சேர்ந்த அமைச்சனின் தலைமையில் திட்டம் தீட்டினார்கள்.

ஒரு பெரிய படையே ராமானுஜரை பிடித்துவர அவருடையமடம் இருக்கும் ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட்டது. இதற்கு நடுவில் இந்தச் செய்தி ராமானுஜரின் சீடர்களின் செவிகளை எட்டியது. அவர்கள் ராமானுஜரை காப்பாற்றத் தயாரானார்கள். வருகின்ற வீரகளுக்கு யார் ராமானுஜர் யார் கூரத்தாழ்வான் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இருவரும் தங்கள் அடையாளங்களை மாற்றிக் கொள்வது என தீர்மானமாயிற்று.

இதற்கு ராமானுஜர் இறுதிவரையில் ஒப்புகொள்ளவில்லை. ஆனால் அவருடைய சீடர்கள் ஸ்ரீ வைணவம் இந்த தமிழக மண்ணில் தழைக்க வேண்டுமென்றால் இதனைத் தவிர வேறுவழியில்லை என்று மன்றாடி கேட்டனர். முடிவாக ராமானுஜர் இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். கூரத்தாழ்வான் அணித வெள்ளை வேட்டியை ராமானுஜரும், ராமானுஜரின் காவியுடையை, திரிதண்டத்தை கூரத்தாழ்வானும் அணிந்து கொண்டனர்.

ராமானுஜர் தனது தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கினார். இவருடன் 45 அணுக்கத் தொண்டர்கள் உடன் சென்றனர். ஐந்து நாட்கள் நெடிய பயணத்திற்கு பின்பு சோழ எல்லையைக் கடந்தனர்.

இதற்கு நடுவில் ராமானுஜரைப் பிடித்துவர ஏவப்பட்ட வீர்கள் கூரத்தாழ்வானை ராமானுஜர் என்று நினைத்துப் பிடித்து சென்றுவிட்டனர். அவருடன் பெரியநம்பியும் , கூரத்தாழ்வானின் மகளான அத்துழாயும் உடன்சென்றனர்.

அவையில் பண்டிதர்களுக்கு நடுவில் சிவனே உயர்ந்த தெய்வம் என்று எழுதிக் கொடுக்குமாறு கிரிமிகண்டன் ஆணையிட்டான். ராமானுஜரின் வைணவப்பாசறையில் வளர்ந்த புலியல்லவா கூரத்தாழ்வான்? அரசனின் ஆணையை ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

“இந்தச் சபையில் உள்ள பண்டிதர்களை உனது வாதத்தின் மூலம் ஜெயித்துவிடு. நீ நாராயணனே பெரியகடவுள் என்பதை நிறுவவேண்டும். உன்னால் முடியவில்லை என்றால் உன் தலை துண்டிக்கப்படும்” என்றார் மன்னர்.

வாதம் தொடங்கியது. ஒருதலைப்பட்ச வாதத்தால் கூரத்தாழ்வாரால் எதிர்வாதம் செய்ய முடியாமல் போனது. கொக்கரித்து எக்காளமிட்ட சைவப்பண்டிதர்கள், கூரத்தாழ்வாரிடம் “சிவனைவிட வேறு சிறந்த பொருள் இல்லை.சிவாத் பாதாம் நாஸ்தி” –அதாவது சிவனே பெரியவர் என்ற வாசகத்தை எழுதிக் கொடுத்து கையொப்பமிட சொன்னார்கள்.

அதற்கு கூரத்தாழ்வார் “த்ரோனமச்தி தாதா: பரம் அதாவது மரக்கால் சிவத்தை விடப் பெரியது” என்றார். இங்கே துரோணம் என்பதும் சிவம் என்பதும் அந்தக் காலத்தில் நெல் அளக்க பயன்படும் பழங்காலக் கருவிகள். துரோணம் அளவில் பெரியது என்பதால் துரோணம் சிவத்தைவிடப் பெரியது என்ற சிலேடை மொழியில் பாடினார். அரசனும் அரசவையினரும் ஆத்திரமுற்றனர்.

ராமானுஜர் ஒருமுறை கிரிமிகண்டனின் சகோதரிமேல் ஏறியிருந்த பிரம்மராக்ஷசை விரட்டியிருப்பதால் ராமானுஜரைக் கொல்ல வேண்டாம் என்று கருதி.   (அதாவது ராமானுஜர் போல இருக்கும்) கூரத்தாழ்வாரை கண்களை மட்டும் கூரிய வாளால் குத்திவிட்டு அனுப்பிவிடச் சொல்லிவிடுகிறான். பெரியநம்பியும் அத்துழாயும் துடி துடிக்க, கூரத்தாழ்வாரின் கண்கள் பிடுங்கப்படுகின்றன. ஆச்சாரியாருக்காக தனது கண்களைக் கொடுப்பதற்கு கூரத்தாழ்வார் அச்சமில்லாமல் நின்றார்.

அதன்பிறகு மூவரும் காட்டுவழியில் திருவரங்கம் ஏகினர். வழியில் மூப்பின் காரணமாக பெரியநம்பி இறந்து விடுகிறார். காட்டிலேயே அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் கிரிமிகண்டன் தீர்க்க முடியாத நோய் ஒன்றினால் இறந்தான். அவன் சிறந்த சிவபக்தனாக இருந்தும் வைணவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். சிவனும் விஷ்ணுவும் பரம்பொருளின் இரண்டு வடிவங்கள் என்பதை அறியாமலே இறந்துவிட்டான்.

(தொடர்கிறது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top