Home » பொது » சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6
சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6

6. ஆளவந்தாரும் திருவரங்கமும்

ஆளவந்தாரின் பாட்டனார் நாதமுனி என்னும் வைணவப் பெருந்தகை. யமுனைத்துறைவன் என்ற பூர்வ பெயருடன் விளங்கிய ஆளவந்தார் ஒருமுறை கோலாகலர் என்ற வடக்கத்தி புலவரின் திக்விஜயத்திலிருந்து மதுரை மாநகரைக் காப்பாற்றியதால் அரசன் அளித்த பாதி ராஜ்யத்தை அரசாண்டு வந்தார். நாதமுனிகள் தமது இறுதி காலத்தில் தன் பெயரன் எல்லாம்வல்ல இறைவனை நாடாமல் உலக இன்பங்களில் மூழ்கிஇருப்பது கண்டு மனம் வருந்தி மணக்கால்நம்பி என்ற சீடரை அனுப்பினார்.

மனக்கால்நம்பியும் ஆளவந்தாரிடம் அவருடைய தன்மைக்கேற்ப ஒரு பெருநிதி இருக்கும் இடத்திற்கு கூடி செல்வதாகக் கூறி ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து சென்று எம்பெருமான் முன் கொண்டு நிறுத்துகிறார். அந்தக் கருணைப்பெருநிதியைக் கண்ட யமுனைத்துவரின் கண்கள் வேறு எந்த நிதியையும் நாடாமல் இருந்தது. பின்னர் ஸ்ரீரங்கம் மடத்தினை கட்டி காப்பாற்றும் பொறுப்பை வகிக்கிறார். வைணவக் கோட்பாடுகளை நிறுவுகிறார்.

காஞ்சிபுரத்தில் வசிக்கும் ராமானுஜர் புதியதாக துவைத கோட்பாடுகளை விளக்கிவருவது குற்த்து அவரைக் காண ஆவல்கொள்கிறார். ஆனால் ராமானுஜர் யாதவப்பிரகாசரின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைக் கண்டு மனம் வாடுகிறார். பின்னர் தனது சீடர்களில் ஒருவரான பெரியநம்பியை அனுப்பி ராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்துவர பணிக்கிறார். பெரியநம்பியும் ஆறு மாதங்கள் இராமானுசருடன் ஒரே வீட்டில் குடியிருந்து அவருக்குள்ள வேத ரகசியங்களையும் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார்.

ராமானுஜரின் நல்ல நேரமா போதாத நேரமா தெரியவில்லை பெரியநம்பியும் அந்தண குலத்தைச் சேர்ந்தவர் இல்லை. செட்டி குலத்தைச் சேர்ந்தவர். இவருடைய இல்லாளிடம் தஞ்சமாம்பாள் பேதம் பாராட்டி நடந்துகொள்ளவே ராமானுஜர் முழுவதுமாக துறவறம் மேற்கொள்கிறார்.

வரதராஜப்பெருமானின் சன்னதிமுன் சென்று “இறைவா எம்பெருமானே ! இன்றுமுதல் நான் உனக்கு அடிமை. இந்த அடிமையைக் கடைத்தேற்றவேண்டியது இனி உன் பொறுப்பு” என்கிறார்.

காவியுடை அணிகிறார். திரித்தண்டம் ஏந்துகிறார். கோவிலுக்கு முன்பிருக்கும் குளத்தில் அக்னி வளர்த்து பொருளாசையையும் பெண்ணாசையையும் துறப்பதாக சங்கல்பம் செய்து கொள்கிறார்.

ஆளவந்தாரின் மறைவுக்கு பின்பு ராமானுஜர் பெரியநம்பியை தனது ஆச்சாரியராகக் கொள்கிறார். பெரியநம்பியிடம் நியாச தத்துவம், கீதார்த்த சங்க்ரஹம்,பஞ்சசாத்திர ஆகமம் ஆகிய நூல்களைப் பயில்கிறார்.

அதன் பிறகு சற்று தொலைவில் இருந்த திருக்கோட்டியூர் சென்று அங்கு ஆச்சாரியராக விளங்கும் திருகோட்டியூர் நம்பியிடம் சீடனாக சேர்ந்து பாடம் பயிலச் செல்கிறார்.

திருகோட்டியூர்நம்பி அவ்வளவு எளிதில் ராமானுஜரின் விண்ணபத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பதினோரு முறை நிராகரிக்கிறார்.

ஒருநாள் இரவில் எம்பெருமானே கனவில் தோன்றி ராமனுஜரை சீடனாக ஏற்றுக் கொள்ளச் சொல்லியும் கூட ஒப்புக்கொள்ளாமல் எம்பெருமானிடம் திருமந்திரத்தை கற்றுக் கொள்ளும்சீடன் சிறந்த ஒழுக்க சீலனாகவும் தவ வலிமை உடையவனாகவும் இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். “எல்லா தகுதிகளும் ராமானுஜனிடம் இருக்கிறது. அவனை நீ சீடனாக ஏற்றுக் கொள்” என்று எம்பெருமான் ஆணையிடுகிறார்.

அதன்பிறகே திருகோட்டியூர்நம்பி ராமானுஜரை சீடனாக ஏற்றுக்கொள்கிறார். எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கும் முன்னர் “இந்த மந்திரத்தின் பெருமை அந்த வைகுந்தனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. உன்னைத் தவிர வேறுயாருக்கும் இந்த மந்திரத்தை கேட்கும் தகுதி கிடையாது. இந்த மந்திரத்தை கேட்டவுடன் அவன் இறந்தபின்பு வைகுந்தப்பதவியை அடைவது உறுதி”.

இதைச் செவியுற்றதும் ராமானுஜருக்கு ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. அந்த எட்டெழுத்து மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் திருக்கோட்டியூர்நம்பியிடம் கற்றுக் கொண்டார். பிறகு ஒருநாள் திருகோட்டியூரில் குடிகொண்டிருந்த எம்பெருமான் ஆலயச் சுவரில் ஏறி அமர்ந்துகொண்டு “எம்பெருமானின் பரம பக்தர்களே ! அனைவரும் இங்கே வாருங்கள். இந்த அற்ப மானுடப் பிறவி முடிந்தபின்னர் நீங்கள் வைகுந்தம் செல்ல நான் உங்களுக்கு ஒருமந்திரத்தை சொல்லித் தருகிறேன்” என்று அழைத்தார்.

மக்கள் பெருந்திரளாக அந்த கோவிலின் மதில் அருகில் கூடினார்கள். எந்த மந்திரத்தை மிகவும் ரகசியமாகவும், தவம் செய்தும் ஆச்சாரியானிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி திருக்கோட்டியூர்நம்பி ராமானுஜருக்கு சொல்லி கொடுத்தாரோ அந்த எட்டெழுத்து மந்திரத்தை அனைவரும் அறியும் வண்ணம் உரக்கக் கூவினார். ஊர்ஜனங்களும் அந்த எட்டெழுத்து மந்திரத்தை கூறி மனதில் ஆனந்தம் அடைந்தனர்.

இதைக் கேள்வியுற்ற திருக்கோட்டியூர்நம்பி ராமானுஜர் மேல் அடக்கமுடியாத சினம் கொண்டார்.  “எவ்வித பக்தி சிரத்தையுமில்லாமல் போவோர் வருவோருக்கெல்லாம் இந்த மந்திரத்தை உபதேசித்த உனக்கு அந்த நரகத்தில்தான் இடம் கிடைக்கும்” என்று சீறியருளினார்.

அதற்கு ராமானுஜர் “நான் ஒருவன் நரகம் சென்று இந்த மந்திரத்தினால் இந்த மக்கள் வைகுந்தம் புகுவார்கள் என்றால் எனக்கு அதில் உடன்பாடுதான்” என்றார்.

இதைச் செவியுற்றதுமே திருக்கோட்டியூர்நம்பி தனது சினத்தை முற்றிலும் மறந்து “ ராமானுஜா! இன்றுமுதல் நான் உனக்கு ஆச்சாரியன் இல்லை. நீதான் எனக்கு ஆச்சாரியான்” என்று கூறுகிறார். இதனை மறுத்த ராமானுஜர் அங்கிருந்து திருவரங்கம் செல்கிறார்.

திருவரங்கத்தில் பெரியநம்பியிடம் சிலகாலம் பாடம் பயில்கிறார். ஆளவந்தாரிடம் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும்பொருட்டு ஸ்ரீபாஷ்யதிற்கு வியாக்கியானம் எழுதுகிறார்.ஆளவந்தாரின் பிரதம சீடர்களான பெரியநம்பி, பெரியதிருமலைநம்பி, திருகோட்டியூர்நம்பி, திருமலையாண்டான், திருவரங்கப்பெருமாளரையர் ஆகியோரிடம் பாடம் பயின்றார். ராமானுஜரின் அறிவுக்கனல் சுடர்விட்டு பிரகாசித்தது. அவருடைய புகழ் எட்டு திக்கும் பரவியது.

ராமானுஜர் திருவரங்கமடத்தின் பொறுப்பையேற்கிறார். அந்தக் கோவிலின் தலைமை அர்ச்சகருக்கு இதுவரையில் காணிக்கை கணிசமாக வந்து கொண்டிருந்தது. ராமானுஜர் பொறுப்பேற்றதும் கோவில் நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். எனவே தலைமை அர்ச்சகரின் வரும்படி கணிசமாகக் குறைந்தது. எனவே ஒருநாள் ராமானுஜரை தனது இல்லத்தில் உணவருந்த கூப்பிட்டு உணவில் விஷம் கலந்து கொன்றுவிடலாம் என்று திட்டம் தீட்டுகிறார். அர்ச்சகரின் மனைவியும் கணவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் உணவு சமைத்து அதில் விஷமும் கலந்து விடுகிறார்.

உணவு உண்ண ராமானுஜர் வருகிறார்.அவருடைய கல்மிஷம் இல்லாத முகத்தைப்அந்த அம்மையார் பார்க்கிறார். அதில் தகிக்கும் ஞானப் பிரகாசம் அவரை வெட்கமுறச் செய்தது. இந்த ஞானிக்கா நாம் விஷம் கலந்த உணவை கலந்து கொடுக்க போகிறோம் என்று வருத்தமுருகிறார். தன் கணவருக்குத் தெரியாமல் அன்னத்தில் விஷம் கலந்த விஷயத்தை கூறிவிடுகிறார். அந்த உணவை சாப்பிடாமல் ராமானுஜர் சென்று விடுகிறார். வேறு எவரிடமும் இதைப் பற்றி கூறாமல் உள்ளுக்குள்ளே புகைந்து கிடந்தார்.

தனது திட்டம் தன் மனைவிமூலம் சர்வநாசம் அடைந்தது தெரிந்த தலைமை அர்ச்சகர் மறுநாள் எம்பெருமான் சன்னதியில் அளிக்கப்படும் தீர்த்தத்தில் விஷம் கலந்து வைத்துவிடுகிறார். தீர்த்ததைப் பெற்றுக் கொள்ளும் ராமானுஜர் அதனைப் பருகியதும் ஒருவித உன்மத்த நிலையை அடைகிறார். அந்த விடம் அவருக்கு ஊறு விளைவிக்கவில்லை. மாறாக அவருடைய பேரானந்தத்தை வெளிக்கொணர்ந்தது.

அங்குகூடியிருந்த பக்தர்கள் அனைவரும் அந்த இளையபெருமாள் இலக்குவனனே நேரில் வந்து தரிசனம் தந்ததைப்போல ஆனந்தம் கொண்டனர். தலைமை அர்ச்சகர் அப்பொழுதுதான் ராமானுஜரின் மகிமையை உணர்ந்து கொண்டார். கண்ணில் நீர்மல்க மன்னிப்பு கேட்டார். ராமானுஜர் அவரை மன்னித்து தனது மேன்மையைப் பறைசாற்றினார்.

(தொடர்கிறது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top