Home » பொது » சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5
சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5

5. மனைவி அமைவதெல்லாம்

தஞ்சமாம்பாள் வைதீக குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய தந்தை சிறந்த வேதநெறியில் ஒழுகிய அந்தணர். அந்தக் காலத்தில் ஜாதியில் ஏற்ற தாழ்வு பெரிய அளவில் பார்க்கப் பட்டது. அந்தணர் அல்லாத வேற்றுஜாதி மனிதர்களுக்கு உணவு வழங்கினால் மீண்டும் அடுப்பு சமையல் பாத்திரங்களை கழுவிய பின்பே வீட்டு மனிதர்களுக்கு புதிதாக சமைக்க வேண்டும் என்ற நெறி கடைபிடிக்கப்பட்டது. தனது தந்தை இல்லத்தில் வளர்ந்த தஞ்சமாம்பாள் புகுந்த வீட்டிலும் அதே நெறியைப் பின்பற்றுகிறார். ஆனால் ஸ்ரீராமானுஜர் அவதார புருஷன் அல்லவா?

இராமானுஜருக்கு ஸ்ரீமன் நாராயணன் ஒருவன்தான் பரம்பொருள் மற்ற அனைத்து ஜீவராசிகளும் அவனுடைய அடிமைகள். இன்னும் சொல்லப் போனால் மகாவிஷ்ணு ஒருவர்தான் ஆண் மற்ற அனித்தும் யோனிகளே என்ற தீவிர விசிஷ்டாத்வைதக் கொள்கையில் ஊறித் திளைத்தவர். எனவே அவர் கண்களுக்கு ஏழை, செல்வந்தன், குடிப்பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதங்களில்லை. எனவே மனைவி இவ்வாறு பேதம் பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் வெதும்புவர். இந்த வேதனை அறச் சீற்றமாக வெளிக்கிளம்ப இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருகச்சி நம்பி என்பவர் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்த வேலாள குலத்தைச் சேர்ந்த பெருமகனார் ஆவார். எப்படிப்பட்ட கைங்கரியம் என்கிறீர்கள்? எந்தக் காலத்திலும் வரதராஜப் பெருமான் வெப்பத்தால் வாடக் கூடாது என்பதற்காக வெட்டிவேரினில் விசிறி செய்து அந்த விசிறியை நன்றாக குளிர்ந்த நீரில் நனைத்து அந்த விசிறியை அசைத்து எம்பெருமானுக்கு குளிர்ந்த காற்றினை வீசும் கைங்கரியம்.

இதுபோன்ற தொண்டுகளை எம்பெருமானுக்கு செய்வதால் தொண்டனுக்கு ஏற்படும் ஆனந்தத்தைப் போல ஓர் ஆனந்தம் வேறு எதுவும் இருக்கமுடியாது. நமது சைவ புராணத்தில் கூட குங்கிலிக்கலய நாயனார், சிறுத்தொண்டர் போன்றவர்களின் இறைத்தொண்டும் இத்தகையதே. ஏன் ஸ்ரீ ராமானுஜர்கூட இப்படி ஒரு கைங்கையத்தை வரதராஜப் பெருமாளுக்கு செய்து வந்தார். அதற்குக் காரணமானவர் திருக்கச்சிநம்பி அவர்கள் தாம்.

வேட்டுவ தம்பதிகள் எந்தக் கிணற்றடியில் ராமானுஜரை பத்திரமாகக் கொண்டு சேர்த்தார்களோ அன்றிலிருந்து அந்தச் சால கிணற்றிலிருந்து குடங்களில் நீர்சுமந்து எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கு நீர் கொடுப்பது அவருடைய நித்திய கைங்கரியங்களில் ஒன்று. சரி நாம் இந்த திருக்கச்சிநம்பி விஷயத்திற்கு வருவோம்.

திருக்கச்சி நம்பியின் முகத்தில் எப்போதும் அமைதியும் அன்பும் குடிகொண்டிருக்கும். சதா சர்வ நேரமும் வரதராஜப் பெருமாளை மனம் தியானித்தபடியே இருக்கும். எம்பெருமானுக்கு சபரியைபோல தீங்கனிகளை தேடி தேடி எடுத்து வந்து கொடுப்பது வழக்கமாகக் கொண்டிருந்தார். இறைவன்பால் அவருக்கிருந்த பற்றினைப் பார்த்த அனாவ்வரும் அவர் அந்த வைகுண்ட வாசனால் நேரிடையாக காஞ்சிக்கு அனுப்பப்பட்டவர் என்றே நம்பினார்கள்.

ஒருமுறை அவருடைய பேரொளியின் வெளிச்சம் தாங்காமல் அவர் இறைவனுக்கு தொண்டு செய்பவர் அவரிடம் சாதிபேதம் கூடாது என்று இராமானுஜர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கப் போனார் . திருகச்சிநம்பி இராமானுஜரை தடுத்துவிட்டார்.

“ அந்தணகுலத்தில் பிறந்த நீங்கள் உங்களினும் கீழான குலமான வேளாள குலத்தில் பிறந்த என்னை வணங்கக் கூடாது”

“ என்னை பொறுத்தவரை அந்த நாராயணனுக்குத் தொண்டு செய்யும் அனைவரும் உயர்ந்த குலத்தை சேர்ந்தவர்கள்தான் “ என்று இராமானுஜர் எவ்வளவோ சொல்லி பார்த்தார்.ஆனால் திருகச்சிநம்பி உள்ளம் மாறவில்லை.

இந்த திருக்கச்சி நம்பிதான் ஸ்ரீரங்கத்தில் வேதவித்துவாகவும் சிறந்த வைணவராகவும் விளங்கிய ஆச்சாரியரான ஆளவந்தாருடன் ஒரு தொடர்பினை ஏற்படுத்த காரணமாக இருந்தவர்.

ராமானுஜர் யாதவப்பிரகாசரிடமிருந்து வெளியில் வந்த பிறகு தானே பாடங்களை கற்றுக் கொள்வது என்றிருந்தார். இருபினும் உரிய குரு கிடைக்கவில்லையே என்ற மனவருத்தம் அவரிடம் மிகுந்து காணப்பட்டது. சிறந்த வைணவ பக்தரான திருக்கச்சி நம்பியிடம் தன்னை மாணாக்கனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். இறைவன்பால் பற்றுள்ள தனக்கு இராமானுஜர் அளவிற்கு கல்வியறிவு கிடையாது என்பதை வெள்ளிடைமலையாக ஒப்புக் கொண்டு திருக்கச்சி நம்பி மறுத்துவிட்டார்.

“ ஒன்றுசெய் ராமானுஜம் . தினமும் சாலக்கிணற்றிலிருந்து நீர்கொண்டுவந்து வரதராஜபெருமானின் திருமஞ்சனதிற்கு அளித்து வா.நல்லது நடக்கும் நீ விரும்பிய ஆச்சாரியார் உன்னைத் தேடி வருவார் “ என்றார். இராமனுஜரும் அன்றிலிருந்து சாலக் கிணற்றிலிருந்து குடங்களில் நீர் கொண்டு வரதராஜபெருமாளுக்கு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.

அப்படி இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில்தான் ஸ்ரீரங்கத்திலிருந்து வரதராஜப்பெருமானை தரிசிக்க வந்த ஆளவந்தார் இராமானுஜரை பார்க்கிறார். சத்யம் ஜ்ஞானம் அனத்தம் பிரம்மம் என்ற உபநிடத மந்திரத்திற்கு அற்புதவிளக்கம் அளித்தவர் இந்த இராமானுஜர் என்பது தெரிந்தது. இராமானுஜரின் திவ்ய தோற்றமும், அவருடைய அறிவுப்பிரகாசமும் ஆளவந்தாரை மயக்கியது என்றால் மிகையில்லை. அதன்பிறகு அவர் கொண்ட தீர்மானமும் அதனால் நிகழ்ந்தவைகளையும் குறித்துப் பின்னால் பார்க்கலாம். இப்போது திருக்கச்சி நம்பியிடம் தஞ்சமாம்பாள் தனது குலப்பெருமையை காட்டி அவமதித்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

ஒருமுறை இராமானுஜர் திருக்கச்சி நம்பியை தனது இல்லத்திற்கு அழைத்து அமுதுபடைக்க வேண்டும் என்று பிரியப்பட்டார். தஞ்சமாம்பாளின் குணத்தை அறிந்து வைத்திருந்த திருக்கச்சிநம்பி ஆனமட்டும் இராமானுஜரின் கோரிக்கையை மறுத்துப்பார்த்தார். இராமானுஜர் விடுவதாக இல்லை.முடிவில் இராமானுஜரின் பிடிவாதத்தினால் அவருடைய இல்லத்தில் உணவருந்த ஒப்புக் கொண்டார்.

இராமானுஜர் தன் மனைவியிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். தஞ்சமாம்பாளும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அறுசுவை உணவை சமைத்தார். இராமானுஜர் திருகச்சிநம்பியை அழைத்துவர அவருடைய ஆசிரமத்திற்கு விரைந்தார். இராமனுஜரின் மனைவியின் நோக்கத்தை அறிந்த திருக்கச்சிநம்பி வேறொரு பாதைவழியாக இராமானுஜரின் இல்லத்தை அடைந்தார். தஞ்சமாம்பாள் அவரை இராமானுஜர் வரும்வரையில் காத்திருந்து உணவு அருந்த அழைத்தாள்.

திருகச்சினம்பியோ தனக்கு அவசர வேலையிருப்பதாகவும் சீக்கிரம் உணவு பரிமாறுமாறுதஞ்சமாம்பாளை கேட்டுக் கொண்டார். அந்த அம்மையாரும் அவருக்கு தலைவாழையிலை போட்டு அறுசுவை உணவு பரிமாறினார். உணவை உண்டதும் திருக்கச்சி நம்பி தானே இலையை எடுத்து வெளியில் எறிந்துவிட்டு தான் சாப்பிட்ட இடத்தை சாணம் போட்டு மெழுகினார். பிறகு கிளம்பிச் சென்றார். இதுவாவது பரவாயில்லை. இதற்குப் பிறகு தஞ்சமாம்பாள் நடந்துகொண்டது கொடுமையானது. எஞ்சியிருந்த உணவை பணிப்பெண்ணிற்கு கொடுத்துவிட்டு அடுப்பையும் சமையல் கூடத்தையும் மீண்டும் கழுவி சுத்தம் செய்து அதன்பிறகே புது உணவு சமைத்து இராமானுஜருக்காகக் காத்திருந்தார்.

இராமானுஜர் வருகிறார்.

இராமானு: அங்கே ஆசிரமத்தில் திருக்கச்சி நம்பியைக் காணவில்லை. அவர் இங்கே வந்திருந்தாரா?

தஞ்சா: ஆமாம் வந்திருந்தார்.

இராமானு: ஆஹா அப்படியா சங்கதி. நீ அவரை இருக்க சொன்னாயா?

தஞ்சா: நீங்கள் வரும்வரையில் காத்திருக்கச் சொன்னேன்.

இராமானு: அதற்கு அவர் என்ன சொன்னார்?

தஞ்சா: அவசரவேலையிருக்கிறது என்பதால் சீக்கிரம் உணவு பரிமாற சொன்னார்.

இராமானு: நீ ஒழுங்காகப் பரிமாறினாயா?

தஞ்சா: நானும் பரிமாறினேன் . அவரும் திருப்தியாக உணவு அருந்தி விட்டு சென்றார்.

இராமானு: சரி சரி எனக்கு பசிக்கிறது. இலையைப் போடு . சாப்பிடவேண்டும்.

தஞ்சா:: கொஞ்சம் இருங்கள் சாதம் உலையில் கொதிக்கிறது .

இராமானு: நீ ஒருவருக்காகவா சமைத்தாய் ? அவர் சாப்பிட்ட மிச்சம் இருக்குமே அதைப் பரிமாறு.

தஞ்சா: அவர் சாப்பிட்ட மிச்சத்தை நீங்கள் ஏன் சாப்பிடவேண்டும்? அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். உங்களுக்கு முழுவதும் புதிதாகவே அன்னம் சமைத்திருக்கிறேன்.

இராமானு: பேரருளாளனின் உண்மை பக்தர் அவர். அவரையா கீழ்க்குலம் என்று பேதம் பார்க்கிறாய்? வேண்டாம் தஞ்சமாம்பாள். உன்னிடம் பரமபக்தர்களிடம் பேதம் பார்க்கும் குணம் அதிகம் இருக்கிறது. அது உன்னை நாசம் செய்துவிடும்.

உண்மையில் அந்த சாதிபேதம் பார்க்கும் குணம் தஞ்சமாம்பாளை அழித்தது என்றே சொல்லலாம்.மீண்டும் ஒருமுறை ஆளவந்தாரின் சீடரான பெரியநம்பியிடமும் இவ்வாறே நடந்துகொள்ள நேரிட அதுகண்டு பொறுக்காமல் இராமானுஜர் தஞ்சமாம்பாளை அவருடைய பிறந்தவீட்டில் கொண்டு விட்டு துறவு மேற்கொள்கிறார்.

இறுதிவரையில் தஞ்சமாம்பாள் தனது கணவரின் பேரன்புமிக்க பேதமற்ற விசாலமான மனதைப் புரிந்துகொள்ளாமல் சாதிப்பெருமையில் உழன்று தனது வாழ்வைக் கெடுத்துகொண்டார். இராமனின் பெருமையை உலகறியச் செய்ய ஒரு கைகேயி தேவைப்பட்டதுபோல இராமானுஜரின் பெருமையை உலகறியச் செய்ய தஞ்சமாம்பாள் போன்றோர் தேவைப்பட்டனர் என்றுதான் மனதை சமாதானம் செய்து கொள்ளவேண்டியிருக்கிறது.

(தொடர்கிறது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top