Home » பொது » சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1
சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1

ஸ்ரீ ராமானுஜர்

(தோற்றம்: பொ.யு.பி. 1017, சித்திரை- திருவாதிரை)

(முக்தி: பொ.யு.பி. 1137, மாசி மாதம் , சுக்கில தசமி திதி)

1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்

பரம்பொருளின் காலத்தை எவ்வாறு நம் சிற்றறிவினால் கணக்கிட முடியாதோ அவ்வாறே இந்து சமயத்தின் காலத்தையும் நம்மால் கணிக்க முடியாது.

வேதம் அநாதியானது. கல்பங்களுக்கும், மன்வந்திரங்களுக்கும், யுகங்களுக்கும் அப்பாற்பட்டது. இந்தச் சாதாரண பட்டறிவினால் வேதங்களையும், வேதாங்கங்களையும், உபநிடதங்களையும் அறிந்து கொள்வது என்பது கிணற்றில் வசிக்கும் தவளை அந்த கிணற்றை சாகரம் என்று நினைத்துக் கொள்வது போல.

அந்த சாகரத்திலிருந்து கிடைத்த இரண்டு நல்முத்துக்கள் . ஒன்று சைவம்;  மற்றொன்று வைணவம்.

ஆதி சிவனே அனைவரது ஆத்மாவிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்பது சைவம். வேதங்கள் மூலம் அறியப்பட்ட சிவன் பின்னர் பத்தி, பசு, பாசம் என்ற சைவ சித்தாந்த தத்துவத்தின் மூலம் விளக்கப்படுகிறான்.

நாராயணனே சர்வ வியாபி; ஆதிமூலம். வேதத்தை அறிவது ஸ்ரீமன் நாராயணனை அறியும் முயற்சியாகும் என்பது ஸ்ரீ வைஷ்ணவம்.

எனவே வேதம் என்று தோன்றியதோ அன்றே சைவமும், வைணவமும் தோன்றி விட்டன. ஒரு இந்துவின் இரண்டு கண்கள் சைவமும் வைணவமும் என்றால் அது மிகையில்லை.

இஸ்லாமியருக்குப் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் தங்களுடன் தங்கள் கிறிஸ்தவ மதத்தையும் கொண்டுவந்தனர்.  ஊர் ஊராக மதம் பரப்புவதை பன்னெடுங்காலமாகச் செய்துவந்த மேலைநாட்டினருக்கு நமது பாரத மண்ணில் இரண்டு கண்களாக தழைத்தோங்கி வரும் சைவமும்,  வைணவமும் அடிமுடி காண முடியாத நிலையில் இருப்பது, அவர்கள் சிந்தனையை கொதிக்கச் செய்தது.

உலகில் உள்ள மற்ற மதங்களுக்கு காலநிர்ணயம் உள்ளதுபோல ஹிந்து மதத்திற்கு இல்லாமல் இருப்பது அவர்களை யோசிக்க வைத்தது. ஹொரேஸ் ஹெமேன் என்ற வரலாற்றியலாளர் 1840-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் உரையாற்றும்போது இந்தியச் சமயங்களில் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்தி அவற்றை உண்மை என்று நிறுவி இந்திய அறிவாளிகளை கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொள்ளும்பொருட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். என்ன ஒரு அயோக்கியத்தனம் பாருங்கள்.

1874-ஆம் ஆண்டு வெப்பர் என்பவர்  ‘கிருஷ்ண ஜன்மாஷ்டமி பண்டிகையின் தோற்றத்தைப் பற்றிய ஓர் ஆராய்ச்சி’ என்ற கட்டுரையை வெளியிடுகிறார். ஹாப்கின்ஸ், கென்னெடி, மாக்னிகல் போன்றவர்கள் பெருவாரியாக ஸ்ரீ வைணவத்தின் தோற்றத்தை ஆராய்வதில் ஆர்வம் காட்டினார்கள். ‘இந்தியச் சமயங்கள் ‘ என்ற நூலில் ஹாப்கின்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்து  சமயத்தின் கொள்கைகளை மறுக்க வேண்டுமானால் நுட்பமான வாதத் திறமையும் ஆழ்ந்த அறிவும் வேண்டும்.”

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரோமாபுரியில் கீழைநாட்டு அறிஞர்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் கட்டுரை வாசித்த பிரஜேந்திர நாத் என்ற இந்தியப் பெருமகனார் “ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு விலை மதிப்பற்ற சில கூறுகளை வழங்கும் தகுதி வைணவத்திற்கு உண்டு என்று வாதிட்டார். அவருடைய வாதங்கள் பெரும்பாலும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டன. பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘கிருஷ்ண சரித்திரம்’ என்ற ஆராய்ச்சிநூல் மிகவும் முக்கியமான நூலாகும்.

பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்ட போதிலும் வைணவத்தின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது இறுதியான விஷயம். நமக்குக் கிடைக்கபெறும் ஆவணங்களும், இலக்கியச் சான்றுகளும் புராணவழிச் செய்திகளும் வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். எல்லா ஆராய்ச்சி முடிவுகளு இறுதியில் வந்து சேரும் இடம் ஸ்ரீ வைணவத்தின் தோற்றம் அநாதியானது என்பதாகும்.

அத்துணை சிறப்புவாய்ந்த ஒரு சமயம் தனது அற்புதமான கோட்பாடுகளாலும் பல ஆன்மிகத் தலைவர்களின் வழிநடத்துதலினாலும் பல யுகங்களையும் கடந்து தழைத்தோங்கி வருகின்றது.

வேத வியாசர், கிருஷ்ண சைதன்யர்,  ஆதி சங்கரர், ஸ்ரீ ராகவேந்திரர், பன்னிரு ஆழ்வார்கள் என பல மகான்களின் போற்றுதலில் வைணவம் வளர்ந்தாலும்,  ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ வைணவத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.

‘வைதீகம்’ என்ற பெயரில் மேட்டுக்குடி மக்களிடம் சிக்கிக் கிடந்த வைணவத்தினை பாமரனும் பின்பற்றும் வண்ணம் அவர் மாற்றிய தொண்டு மிகப் பெரியது.

கீழ்க்கண்ட நன்னெறிகளை ஒரு மடத்தின் தலைவராக இருந்துகொண்டு தொண்டாற்றிய ஸ்ரீ ராமானுஜர் 120 ஆண்டுகள் இந்த மண்ணுலகில் வாழ்ந்து அருள்பாலித்தவர்.

  • லக்குமினாதனான ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள்.
  • எம்பெருமானை மற்ற தேவதைகளுக்கு சமாக பாவிக்கக் கூடாது. அது பகவத் அபசாரமாகும்.
  • கல்வியினால் அகந்தை, செல்வத்தினால் அகந்தை, குடிப்பிறப்பினால் அகந்தையின்றி இருக்க வேண்டும்.
  • நல்ல நெறிமுறையில் எப்பொழுதும் நம்மால் அடுத்தவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்க வேண்டுமோ அவ்வளவு உதவியாக இருக்க வேண்டும்.
  • உலக விஷயங்களில் ஆசையின்றி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

குரு எனப்படும் ஆச்சாரியானின் வழிநடத்தலோடு பரமனின் இணையடி நிழலை அடையலாம் என்றுதான் எல்லா சமயங்களும் கூறுகின்றன. குரு பரம்பரை என்று சைவ மதமும்,  ஆச்சாரியப் பரம்பரை என்று ஸ்ரீ வைணவமும் கூறுகின்றன.

இங்கே ஆச்சாரியனின் பங்கு தனிச்சிறப்புடையது. ஆச்சாரியன் தான் முதலில் நன்னெறியில் நடக்க வேண்டும். நன்னெறி என்பது நமது சனாதன தர்மம்; தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது.  தனது சமயக் கொள்கைகளை பாரத கலாசாரம் முன்வைப்பதைப் போன்று வேறு எந்த சமயமும் முன்வைக்கவில்லை என்றே கூறலாம். ஆச்சாரியனின் ஒழுக்கம் மிக உயர்ந்த ஒழுக்கமாக போற்றப்படுகிறது.

ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு மனிதன் தனது மகனை அழைத்து வந்தார். மகனுக்கு அளவுக்கு அதிகமாக இனிப்பு உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் அதனை மாற்ற அவனுக்கு புத்திமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

பரமஹம்சர் அந்தத் தந்தையிடம் பத்து நாட்கள் கழித்து அவர் மகனை அழைத்து வரும்படி கூறினார்.பிறகு அந்தச் சிறுவனிடம் இனிப்பு உண்பதால் உண்டாகக் கூடிய தீமைகளை விளக்கிவிட்டு “இனிமேல் அதிகமாக இனிப்பு உண்ணாதே’’ என்று கூறினார்.

சிறுவனின் தந்தை “இந்த அறிவுரையை பத்து நாட்களுக்கு முன்பே கூறியிருக்கலாமே ?’’  என்று கேட்க, அதற்கு பரமஹம்சர்    “ பத்து நாட்களுக்கு முன்பு எனக்கு இனிப்பு உண்ணும் பழக்கம் இருந்தது. என்னிடம் அந்தப் பழக்கத்தை வைத்துக் கொண்டு இந்தச் சிறுவனுக்கு புத்திமதிகூற எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என் இனிப்பு உண்ணும் பழக்கத்தை விட்டொழிக்க எனக்கு பத்து நாள் காலாவகாசம் வேண்டியிருந்தது. அதனால் தான்’’ என்றாராம்.

-இது ஒரு உதாரணம்தான். தனது  ‘விசிஷ்டாத்வைத’க் கொள்கையை நிலைநாட்ட ராமானுஜருக்கு தனது குருவையே எதிர்வாதம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதுமட்டுமல்ல, இரண்டு முக்கிய காலகட்டங்களில் தனது கொள்கைக்காக அந்நியர்களின் சூழ்ச்சியால் உயிருக்கு ஆபத்து நேர்ந்து அதன்பின் எம்பெருமானின் திருவருளால் ராமானுஜர் உயிர் தப்பி 120 ஆண்டுகள் இந்த பூவுலகில் எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்தவண்ணம் ஸ்ரீ வைஷ்ணவத்தை அனைவரும் பின்பற்றும் வண்ணம் பல வழிமுறைகளை ஏற்படுத்தினார்.

(தொடர்கிறது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top