Home » பொது » வெள்ளையனை மிரட்டிய வீர சகோதரர்கள்
வெள்ளையனை மிரட்டிய வீர சகோதரர்கள்

வெள்ளையனை மிரட்டிய வீர சகோதரர்கள்

சாபேகர் சகோதரர்கள்

தாமோதர் சாபேகர்                           லகிருஷ்ண சாபேகர்                    வாசுதேவ் சாபேகர்

(பலிதானம்: 1898, ஏப். 18)             (பலிதானம்: 1899, மே 12)             (பலிதானம்: 1899, மே 8)

“வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே” என்ற வசனம் 23ஆம் புலிகேசி திரைப் படத்தில் நடிகர் வடிவேலு பேசுவார். இந்த வசனம் நமக்கு சிரிப்பு ஏற்படுத்துவதற்காக இருக்கலாம். சிந்திக்கவும் செய்யவேண்டிய வசனம் இது. ஏனென்றால் இன்று வரலாறு மாற்றியும் திரித்தும் எழுதப்பட்டுள்ளது.

‘சாபேகர் சகோதரர்கள்’ என்று மூன்று போராளிகள் இருந்துள்ளனர். வீர சாவர்க்கருக்கே உணர்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியவர்கள் அவர்கள்.

தாமோதர் ஹரி சாபேகர், பாலகிருஷ்ண சாபேகர், வாசுதேவ சாபேகர் ஆகியோரே அந்த மூன்று சகோதரர்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்தது என்ன? அதற்கு இவர்கள் செய்தது என்ன? என்பதைப் பார்ப்போம்.

புனேயில் 1896-ஆம் ஆண்டு பிளேக் நோய் பரவியிருந்தது. 1897-இல் தீவிரமாக பரவி மக்கள் அதிவேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் ராணி எலிசபெத்துக்கும் வைரவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஆங்கில அரசாங்கம் அந்த வைரவிழாவுக்கு அதிக முக்கியம் கொடுத்த அதே வேளையில் பிளேக் நோயால் செத்துக்கொண்டிருந்தவர்களை பற்றியோ நோயைத் தடுப்பதைப் பற்றியோ கவலை இல்லாமல் இருந்தது.

பிளேக் நோய் பரவுவதையும் அதை கட்டுப்படுத்தாத ஆங்கில அரசாங்கத்தையும் எதிர்த்து பத்திரிகைகள் எழுதின. ‘கேசரி’ பத்திரிகையில் பாலகங்காதர திலகர் அவர்கள் சுதந்திர எழுச்சியூட்டும் பல கட்டுரைகளை எழுதிவந்தார். அதைத் தொடர்ந்து, ஆங்கில அரசாங்கம், சார்லஸ் ராண்ட் என்பவரை பிளேக் கமிஷனராக நியமித்தது.

பால கங்காதர திலகரின் எழுத்து பல இளைஞர்களை எழுச்சிக்கொள்ள செய்தது. அப்படி எழுச்சி கொண்டவர்ககள் சபேகர் சகோதரர்கள்.

பிளேக் நோயின் கொடுமை போதாதென்று, சார்லஸ் ராண்ட் செய்த கொடுமை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பிளேக் நோயை கட்டுப்படுத்துவதாக கூறி, ஊரையே தீயிட்டு கொளுத்துவது, பெண்களைக் கொடுமைப்படுத்துவது என பல அராஜகங்களை செய்த ராண்டின் மீது மக்கள் கோபம் கொண்டனர். சாபேகர் எப்படியாவது ராண்ட்டை பழிவாங்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அதற்கான திட்டங்களைத் தீட்டினர்.

இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் வைர விழாவை கொண்டாட்டம் 22-6-1897 அன்று ஆங்கிலேய அதிகாரிகளால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கேளிக்கைகளும், கொண்டாட்டங்களும் நள்ளிரவு வரை நீடித்தது.

விழா முடிந்த பின் அதிகாரிகள் அவரவர் மனைவிகளுடன் கோச் வண்டிகளில் ஏறி கிளம்பினர். இதற்காகவே காத்துக்கொண்டிருந்த சாபேகர் சகோதரர்கள், நண்பர்களும் ஆளுக்கொரு வண்டியில் ஏறிக் கொண்டனர்.

பாலகிருஷ்ண சாபேகர் லெப்டிணன்ட் அயர்ஸ்ட்டை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.

தாமோதர் சாபேகர் சார்லஸ் ராண்ட் வந்த வண்டியில் ஏறி ராண்ட்டை துப்பாக்கியால் சுட்டார்.

இந்தத் தாக்குதலில் அயர்ஸ்ட் உடனடியாக பிணமானாலும், ராண்ட் சில நாட்கள் உயிருக்குப் போராடிய பின் ஜூலை 1897-இல் மரணமடைந்தார்.

இந்தத் தாக்குதலை முடித்த பின் சாபேகர் சகோதரர்களும் தாக்குதலுக்கு உதவி புரிந்த மற்ற நண்பர்களும் தப்பிவிட்டனர். அவர்கள் ஊருக்குள்ளேயே சுற்றித் திரிந்தனர் என்றாலும் அவர்களை போலீஸாரால் பிடிக்கமுடியவில்லை.

இவர்களை காட்டிக்கொடுப்போருக்கு ரூ. 20,000/ பரிசு என ஆங்கில அரசாங்கம் அறிவிப்பு செய்தது. இவர்கள் கூடவே இருந்த கணேஷ் திராவிட் என்பவன் பணத்துக்கு ஆசைப்பட்டு இவர்களை காட்டிக்கொடுத்துவிட்டான். 1897 ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று தாமோதர் சாபேகர் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தலை மறைவாகி விட்டனர்.

நீதிமன்றத்தில் தாமோதர் சாபேகர், ராண்ட் மற்றும் அயர்ட்ஸ் ஆகியோரை தான் மட்டுமே சுட்டதாக சொன்னார். 1899 பிப்ரவரி 3-ஆம் தேதி தாமோதர் சாபேகருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதியைப் பார்த்து,  “நீங்கள் என்னைத் தூக்கிலிட்டு சாகடிக்கலாம்; ஆனால், என் ஆன்மாவிற்கு மரணமில்லை மீண்டும் இந்த பாரத நாட்டில் பிறப்பேன். மறுபடியும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடுவேன்” என வீரத்துடன் சொன்னார்.

திலகரின் முயற்சியால் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் திறமையாக வாதாடியும் தூக்கு உறுதிசெய்யப்பட்டது. 1898 ஏப்ரல் 18-ஆம் தேதி எரவாடா சிறையில் தாமோதர சாபேக்கர் தூக்கிலடப்பட்டார்.

பாலகிருஷ்ண சாபேகர் காட்டுப்பகுதியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். பாலகிருஷ்ண சாபேகர் 1899-இல் தாமாகவே முன்வந்து சரணடைந்தார்.

இந்த நேரத்தில் சாபேக்கர் சகோதரர்களில் மூன்றாமவரான வாசுதேவ சாபேகர் புனாவில் கைது செய்யப்பட்டார்.

ஒரு ஆங்கில அதிகாரி, பாலகிருஷ்ண சாபேகருக்கு எதிராக சாட்சியம் அளித்தால் உன்னை ஜாமீனில் விடுதலை செய்கிறேன் என ஆசை காட்டினார். வாசுதேவ சாபேகர் மனதில் ஒரு திட்டம் உதித்தது. அதாவது, அண்ணன் தாமோதர் சாபேகரைக் காட்டிக் கொடுத்த கணேஷ் திராவிட் மற்றும் அவனது சகோதரன் ராமச்சந்திர திராவிட் ஆகியோரை எப்படியும் பழிவாங்கியே தீருவது என முடிவுதான் அது. உடனே, ஆங்கில அதிகாரியிடம், சரி நான் நான் ஒப்புக் கொள்கிறேன் என சொல்லி ஜாமீனில் வெளியே வந்தார் வாசுதேவ சாபேகர்.

வெளியே வந்த வாசுதேவ் சாபேகர், 1899 பிப்ரவரி 9 அன்று தன் நண்பர்களும், மாணவர்களுமான வினாயக் ரானடே, காண்டே ராவ் சாத்தே ஆகியோர் ஒன்று கூடினர். மாறுவேடம் அணிந்துகொண்டனர். கணேஷ் திராவிட் சகோதரர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

போலீஸ்காரர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்கள் இருவரையும் உடனே காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல உத்தரவு என கூறினர். திராவிட் சகோதரர்கள் இருவரும் உடனே அவர்களுடன் புறப்பட்டனர்.

வீட்டைவிட்டு இறங்கி கொஞ்சதூரம் தான் நடந்திருப்பார்கள். காட்டிக் கொடுத்த திராவிட் சகோதரர்கள் இருவரையும் சுட்டுத் தள்ளினர்.

மறுநாள் காலையில் வீட்டில் இருந்த வாசுதேவ் சாபேகர் கைது செய்யபட்டார். மகாதேவ வினாயக் ரானடேவும் கைது செய்யப்பட்டார்.  அண்ணனைக் காட்டிக் கொடுப்பதாகச் சொல்லி ஜாமீனில் வந்த வாசுதேவ் செய்த செயலைக் கண்டு கோபத்தில் இருந்தனர் ஆங்கில அதிகாரிகள்.

காவல் நிலையத்திற்குக் அழைத்துவரப்பட்ட வாசுதேவ சாபேகர் எந்தவித சலனமோ, வருத்தமோ இன்றி புன்னகையுடன் வந்தார். வந்தவர் சும்மா வரவில்லை துப்பாக்கியோடு வந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் போலீஸ் அதிகாரியை நோக்கிச் சுட்டார். அந்த அதிகாரி மயிரிழையில் உயிர் தப்பினார். காவல் நிலையத்தில் கைதியாக அழைத்து வரப்பட்டவரின் துணிச்சலான இந்த செயலைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே புரியாது திகைத்தனர். இருவரையும் கைது செய்து வழக்குத் தொடுத்தனர்.

இவர்களுக்காக புகழ் பெற்ற வழக்கறிஞர்களை கொண்டு வாதாடச் செய்தார் திலகர். நீதிமன்றம் வாசுதேவ் சாபேகருகும், மகாதேவிற்கும் தூக்கு தண்டனை வழங்கியது. .சாத்தேவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆங்கில அதிகாரி சார்லஸ் ராண்ட் கொலை வழக்கிலும் பாலகிருஷ்ண சாபேகருடன் வாசுதேவ் சாபேகர், விநாயக் ரானடே ஆகிய இருவரையும் சேர்த்துக் கொண்டனர். இந்த வழக்கிலும் இவர்களுக்குத் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றமும் 1899 மார்ச் 31-ஆம் தேதி தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

1899, மே 8 அன்று வாசுதேவ் சாபேகரும், மே 10 அன்று விநாயக் ரானடேவும், 1899, மே 12 அன்று பாலகிருஷ்ண சாபேகரும் தூக்கிலிடப்பட்டனர்.

இச்செய்திகள் அனைத்தும் நாளிதழ்களில் பரபரப்பாக வெளிவந்துக் கொண்டிருந்தது. சாபேகர் சகோதரர்களின் தியாகம், சாவர்க்கரின் தேசபக்கதியை மேலும் வலுப்பெற செய்தது.

‘சாபேகர் சகோதரர்கள் போன்று, மகாதேவ் போன்று, விஷ்ணு போன்று தானும் தன் வாழ்கையை தியாகம் செய்ய வேண்டும்’ என்று சாவர்க்கர் முடிவெடுத்தார்.

வரலாறு படைத்த இவர்களின் சாகசங்களை மறைக்கப்பட்டுள்ளது. சாபேகர் சகோதரர்களைப் போன்று சுதந்திரத்திற்காக போராடிய பலரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வெளிகொண்டுவர வேண்டியது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top