Home » சிறுகதைகள் » நீர் இறைத்த திருடர்கள்!!!
நீர் இறைத்த திருடர்கள்!!!

நீர் இறைத்த திருடர்கள்!!!

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.
இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், “அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்” என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.
“அதற்கு என்ன செய்யலாம்?” என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.
“வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்” என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.
அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் ‘தொப்’பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.
திருடர்களும், “தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.
பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், “அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்” என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.
சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.
இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், “நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்” என்று பேசிக் கொண்டு சென்றனர்.
அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, “நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!” என்று கூறினான்.
திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top