Home » சிறுகதைகள் » நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை!!!
நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை!!!

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை!!!

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.

 தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். இராமனையும் கேலி செய்தார். ” இராமா! போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது?” இராமனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.” அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை கூடப் பயன் படாது.” என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். மன்னருக்குக் கோபம் வந்தது.” என்ன இப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?” “

வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன்.””அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம்.”என்று பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர் இருவரும் . அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை “தொபுகடீர்” என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார்.”இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? “” அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள்.”

ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார் அரசர்.”இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா?” என்றார் அரசர் வருத்தத்தோடு. “அரசே!, நோய்வாய்ப்பட்டு வயோதிக நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள்.

இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பராமரிக்கும் செலவும் குறைவு. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது.எனவேதான் இப்படிச் செய்தேன்.என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. ” என்றான். மன்னரும் அதை ஒப்புக்கொண்டு தெனாலிராமனின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top